இலவசத் திட்டங்கள் யாருக்காக?!

-நா.முத்துநிலவன்-

ஒருவர்க்கு நல்லது செய்ய நெனச்சா தினமும் மீன்பிடிச்சுக் கொடுக்காதே! மீன்பிடிக்கக் கற்றுக்கொடு -   சீனப்பழமொழி 
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில்வாக்காளர்களைக் கவர்வதற்காகஇலவசமாகடிவிகிரைண்டர்மிக்சிமின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி,  இதற்கு தடைவிதிக்கும்படிஉச்சநீதி மன்றத்தில்பொதுநல வழக்கு ஒன்று போடப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதி மன்றம், "தற்போதுள்ள சட்டத்தின்படிதேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அறிவிப்பதுலஞ்சம் கொடுப்பதற்கு சமமாகாது'  எனக்கூறிவழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது... 
தற்போது தமிழக அரசால் பள்ளிக்கல்வித்துறை வழியாக, மதியஉணவு,  சீருடை, புத்தகம், குறிப்பேடுகள், புத்தகப்பை, பேருந்துப் பயணச் சீட்டு, மடிக்கணினி முதலான பதினான்கு பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இது ஒருவகையில் நம் ஏழைக்குழந்தைகளுக்கான கல்வியைத் தூண்டக்கூடியதுதான். இதன் நல்விளைவு இன்னும் பத்தாண்டுகளில் வெளிப்படக்கூடும் என்றாலும்இலவசங்களின் சமூக விளைவு என்ன? யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதிலும், இந்த இலவசங்கள் யாருக்குப் பயன்படுகிறது என்பதும் மிகவும் முக்கியம்.
காமராசர், ஏழைக் குழந்தைகளுக்கு மதியஉணவு தந்தால் பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள் என்று பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச மதியஉணவுத் திட்டத்தை 1956இல் கொண்டுவந்தார். இரண்டே ஆண்டுகளில் பள்ளிமாணவர் எண்ணிக்கை ஐந்து லட்சத்திலிருந்து பத்துலட்சமானது. (வரலாற்றுச் சுவடுகள்“ –தினத்தந்தி பக்கம்422)  
எம்.ஜி.ஆர். இரண்டாவது முறையாகத் தமிழ்நாட்டு முதலமைச்சரானபோது காமராசரின் மதியஉணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, “சத்துணவுத் திட்டம் எனும் பெயரோடு 01-07-1982முதல் செயல்படுத்தினார். அப்போது, “என் மகனுக்கு நீ என்ன சோறு போடுவது? என் கைகளுக்கு வேலை கொடு, என் பிள்ளை வயிற்றுக்கு நான் சோறுபோட்டுக் கொள்வேன் என்று எழுந்த வீரவசனங்கள், கொஞ்சம் கொஞ்சமாக, “எல்லாருக்கும்தான் போடுறார், அப்பறம் என்பிள்ளைக்கு மட்டும் வேணாம்னா சொல்ல முடியும்? என முணகலாய முடிந்தது. எதிர்க்கட்சிகள் வாயடைத்தன.
பள்ளிக்குழந்தைகளுக்குச் சோறுபோடுவது இலவசத்தில் சேருமா என்னும் கேள்வி முக்கியமானது. தன் குழந்தைக்குச் சோறு போட வசதியில்லாத அப்பன்கள் இருக்கும் நாட்டில் சத்துணவைக் குறைசொல்ல முடியாதுதான். என் கேள்வி, தன் பிள்ளைக்குச் சோறு போட முடியாத தந்தைகளை உருவாக்கியது இந்தச் சமூகம் தானே? கொசுவை ஒழிக்க மருந்தடிப்பது இலவசமாகவே இருந்தாலும், கொசு உற்பத்தியாகும் சாக்கடையை ஒழிக்க எந்த முயற்சியும் எடுக்காமல், கொசுமருந்து அடித்ததற்கு நன்றி சொல்வதுமட்டும் சரியா? என்பதே என்கேள்வி.
ஒருவர் சத்துணவு இலவசம் என்று அறிவித்தால், அடுத்துவருபவர், அதை விடமுடியாத சமூக (அரசியல்?) சூழலைப் புரிந்துகொண்டு, அதோடு முட்டை இலவசம் என்கிறார், அடுத்தடுத்த ஆட்சிகளில் வாழைப்பழம், பயறுகள், வாரம் இரண்டு முட்டை என்று இலவசங்கள் வரிசைகட்டுகின்றன. கடைசியில் புலிவாலைப் பிடித்த கதையாகச் சிறுகதைகள் முடிவே இல்லாத தொடர்கதைகளாகின்றன.  
இலவசம் என்பதென்ன?
பேருந்தில், பணத்தைத் திருட்டுக் கொடுத்த ஒருவன், அழுது புலம்ப, வேறொருவன், பேருந்துக் கட்டணத்தைத் தந்துதவ, இவன் நன்றியோடு அவனை வாழ்த்தினானாம். அவன் தனக்குள் சொல்லிக் கொண்டானாம் எடுத்த நூற்றைம்பது ரூபாயில் இரண்டு ரூபாய் இலவசமாக்க் கொடுத்தால் திருட்டுக் கொடுத்தவன், திருடனையே வாழ்த்துறானே?!!!
இன்னொரு ருஷ்யக் கதை
திருடன் ஒருவன் இரவில் திருடவந்த வீட்டு மதில்சுவரைத் தாண்டிக் குதித்தானாம். வாசலில் நின்ற நாய் அவனை நிமிர்ந்து பார்த்ததாம். ஆனால் குரைக்கவில்லையாம். தைரியம் வந்த திருடன் மெதுவாக முன்னேறினானாம். அப்போதும் நாய் குரைக்கவில்லையாம். எதற்கும் இருக்கட்டும் என்று நாய்க்கு ரெண்டு பிஸகட்டை எடுத்துப் போட்டானாம் திருடன். உடனே நாய் தவ்விக் குதித்து திருடனைக் கவ்விப் பிடித்ததாம். அலறிக்கொண்டே திருடன் கேட்டானாம், “அறிவு கெட்ட நாயே, மொதல்லயே என்னப் பார்த்தும் குரைக்கல ஆனா நா உனக்கு பிஸ்கட் போட்டதும் என்னக் கடிக்கிறியே?“ அதுக்கு அந்த நாய் சொல்லிச்சாம் நீ திருட வந்தவனா இருப்பியோன்னு முதல்லயே சந்தேகமாத்தான் இருந்துச்சு. இருந்தாலும்  வந்தவுடனே எப்படித் திருடன்னு நெனக்கிறதுன்னு நா சும்மா இருந்தேன். எப்ப நீ எனக்கு இலவசமா ரொட்டியப் போட்டியோ அப்பவே நா தெளிவாத் தெரிஞ்சுகிட்டேன் என் வீட்டுல நீ திருடத்தான் வந்திருக்கேன்னு

வாங்கும் சக்தி குறைந்த மக்கள் இலவசத்தை வரவேற்கிறார்கள். அந்த மக்களின் வாங்கும் சக்தியை அதிகப் படுத்தத் திட்டமிடுவதுதானே சரியான மக்களுக்கான பொருளியல் சிந்தனையாக இருக்க முடியும்? அதைத் திட்டமிடுபவர் தானே மக்களை உண்மையாக நேசிக்கும் தலைவராக முடியும்? அதற்கான தொலைநோக்குத் திட்டங்களைத் தராமல், இலவசமாகவே எல்லாவற்றையும் தந்து மக்களையும் சிந்திக்கவிடாத அரசியல், சுயநல அரசியல் அல்லவா?

அஸ்திவாரம் சரியாகப் போடப்படாமல் அடுக்கு மாடி கட்டுவது போலத்தான் இலவச மடிக்கணினித் திட்டம் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 11ஆயிரம் கோடிகள் செலவளிக்கப்படும் இலவச திட்டங்களில் வருடந்தோறும் ஆயிரம் கோடிகளை ஒதுக்கி முதலில் அரசாங்க பள்ளிக்கூடங்களின் கட்டிடங்களைச் செப்பனிட்டாலே போதுமானது. அரசுப் பள்ளிகளின் மேல் நடுத்தரவர்க்கத்திற்கு இருக்கும் எரிச்சலைக் குறைத்து நம்பகத் தன்மையை அதிகரிக்க உதவும். – எனும் திருப்பூர் ஜோதிஜி அவர்களின் கருத்தை யார் மறுக்க முடியும்? 

இலவசங்களிலேயே பெரிய கொடுமை இலவச தொலைகாட்சிதான்! இந்த குப்பை பெட்டியால் யாருக்காவது எள்ளளவிலாவது நன்மை கிடைத்திருக்குமாசுமங்கலி கேபிள் மூலம் மாதசந்தா மற்றும் தொலைகாட்சி விளம்பர வருவாயினால் சன் தொலைகாட்சியினர் அடைந்த லாபமே இந்த இலவசத்தினால் பெற்ற பயன்.. இதுதான் என்னை பொருத்தவரை மிக (குறுக்கு)புத்திசாலித்தனமான விஞ்ஞான ஊழல்!  (நன்றி - எளியவைவலைப்பக்கம் - திரு.பந்து அவர்கள்)

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் (ஐம்பது விழுக்காடு தள்ளுபடி), என்னும் வணிக நோக்கங்களைப் புரிந்துகொள்ளும் மக்கள் இந்த இலவசங்களைப் புரிந்து கொள்ளாமலா இருப்பார்கள்? ஆனால், தற்காலிகப் பெருமூச்சுக்கு வேறு வழி? அல்லது சுயமரியாதை இயக்கங்கள் வளர்த்த சுய அவமரியாதை என்றும் கூறலாம். (இதில் பெரியாரைக் குற்றஞ்சொல்லத் தேவையில்லை, அவர் இவர் ஏற்கமாட்டார்)

ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், இடுபொருள் மானியம், விவசாயக்கடன் ரத்து பற்றியெல்லாம் தனியாக எழுத வேண்டும். பாதிக்கும் மேல், இவையெல்லாம் பணக்கார விவசாயிகளுக்கு அல்லது விவசாயத்திற்கே தொடர்பில்லாத  பணக்காரர்களுக்குத்தான் பயன்படுகின்றது.  
இலவசக் கண்ணொளித்திட்டம், இலவச சைக்கிள்ரிக்ஷாத்திட்டம் கொண்டுவந்த கலைஞரின் காலத்தில்தான் தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு ரத்தாகி அரசு கள்ளுக்கடைகளும், சாராயக் கடைகளும் (நம்பர் கடைகள்) அறிமுகமாயின. இவர்தான் பின்னர் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்கினார். எந்தக் காசிலிருந்து எது?  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
காமராசர் காலத்திலிருந்து இலவசமாக இருந்த கல்வி, சத்துணவு தந்த எம்.ஜி.ஆர். காலத்தில்தான் ஆங்கிலவழியில் வளர்ந்து- வணிகமயமானது. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாயிருந்த ஆங்கிலவழிப் பள்ளிகள்- புற்றீசல்போல் கிடுகிடுவென்று வந்ததும் 1978க்குப் பிறகுதான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
கலைஞரின் சாராயத்தை ஒழித்து“, டாஸ்மாக் கடைகளை அரசே ஏற்று நடத்த உத்தரவிட்ட ஜெயலலிதாதான் வீடுகளுக்குப் பயன்படும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மற்றும் மாணவர்களுக்கான அனைத்தும் இலவசம் என சிறப்புத் துறைஒதுக்கி, இலவசத்தை மக்கள் மயமாக்கினார். இவர் இலவசம்என்னும் சொல்லை ஒழித்து(?) அவற்றை விலையில்லாப் பொருள்என்று புதியநாமகரணம் சூட்டியதும் நடந்தது, இக்காலத்தில்தான் பல்லாயிரம் கோடியில் மது விற்பனையும் வளர்ந்தது!
தந்தைக்குச் சாராயம் தந்து
பிள்ளைக்குச் சத்துணவு போடும்
திட்டங்கள்“- என்று நான் அப்போதே எழுதினேன் (29-12-1985-கல்கி வாரஇதழ் கடைசி முழுப்பக்கத்தில் வெளியான எனது கவிதை)

இந்தப்பக்கம் வீட்டுக்கான பொருள் அனைத்தையும் இலவசமாக வழங்கிவிட்டு,அந்தப்பக்கம் மதுபான அரக்கனைக் கொண்டு, வாழ வேண்டிய பெண்களின் தாலியை அறுக்க வேண்டிய அவசியம் என்ன?  
 “அதிகமான ஆட்டோக்களில் எழுதப்பட்டுள்ளது,
  ஆனால்
  ஒரு மருத்துவ மனையில்கூட 
  எழுதப்படவில்லை-
  “பிரசவத்திற்கு இலவசம்  -  கவிதை முகத்தில் அறைகிறதே!  

இது கதையல்ல நிஜம்......
கந்தர்வன் கவிதை ஒன்று சொல்வார்
  “என்வீட்டிற்கு வந்த திருடன் / என் மனைவியின்
 முப்பது பவுன் நகையைக் / கொள்ளையடித்தான்,
 அப்படியெனில், இது - /  மூன்றாவது கொள்ளை ! 

 “வறுமை ஒழிப்புத் திட்டம்போடும் டில்லிக்காரர்களின் கரீபி உறட்டாவோ முழக்கத்திற்கு வயது ஐம்பதுக்குமேல்! வறுமைதான் ஒழியவில்லை. போகச் சொன்னால் போவதற்கு அது என்ன எருமையா? வறுமை! என்னும் முழக்கமும் இதிலிருந்துதான் வந்தது. வறுமையை ஒழித்து விடாமல், வறியவர்களை வைத்துக் கொண்டே வறுமைஒழிப்புசேவை செய்வதன் ஒரு பகுதிதான் இலவசத்திட்டங்கள். ரத்தம் குடித்தவர்களே ரத்ததான முகாம் நடத்துவது போல  என்பார் கவிஞர் சகாரா.
வீட்டிற்குத் தேவையான எல்லாம் இலவசமாகத் தரப்படும் நம் நாட்டில், நல்ல கல்வியும், நல்ல மருத்துவமும் தானே ஏழைகளுக்கு எட்டாக் கனியாகிவிட்டது? இதற்கு மாற்று யோசனை என்னவெனில், மற்ற எல்லாம் இலவசமாகத் தரப்பட வேண்டிய அவசியமே இருக்காது, கல்வியும் மருத்துவமும் இலவசமாகிவிட்டால்.

உனக்கு எதில் திறமையும் ஆர்வமும் இருக்கிறதோ அதில், உயர்கல்வி என்ன வேண்டுமானாலும் நல்லாப் படி அவ்வளவுக்கும் அரசே செலவுசெய்யும். உடம்பு சரியில்லையா? உறுப்பு மாற்று மருத்துவம் உட்பட அனைத்தையும் அரசே பார்த்துக்கொள்ளும் நன்றாக உழைத்து முன்னேறு என நம் அரசுகள் சொன்னால்...?

இப்போது உயர்கல்விபெற கற்க, செய்யும் செலவைத்தானே பின்னாளில் வட்டி போட்டு வசூல் செய்கிறார்கள்? ஒரு கோடி கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிப்பவன் பின்னால் நோயாளியின் கையைப் பிடிக்க ஓராயிரம் கேட்கமாட்டானா? மணமகளின் கையைப் பிடிக்கக் கார், பங்களா கேட்கமாட்டானா? இரண்டும் செலவை  வரவுவைக்கும் கணக்குத்தானே?

எல்.கே.ஜி.க்கே ஏராளம் செலவு செய்யும் தகப்பனைத் தவறு சொல்ல முடியாது, அவனது பாசமும், தன் குழந்தையின் எதிர்காலம் பற்றிய கவலையும் அப்படிச் செயல்படுகிறது. நல்ல கல்வி நல்ல பள்ளி நல்ல கல்லூரி நல்ல செலவு! என அவனது சமூகம் அவனுக்குக் கற்றுத்தந்திருக்கிறது, சுயநலமாகச் சிந்திக்கிறான்.

9ஆம் வகுப்பிலேயே நாமக்கல் பிராய்லர்பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட்டால் பின்னால் மருத்துவமோ, பொறியியலோ நிச்சயம் என்று நம்புகிறார்கள்! மோசமான பள்ளியில் படித்து, மதிப்பெண் குறைந்து பின்னால் பொறியியலுக்கு இருபதுலட்சம், அல்லது மருத்துவத்திற்கு ஐம்பது லட்சம் செலவு பண்ணுவதைவிட இப்போதே ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை வருடத்திற்கு 2லட்சம் செலவுஎன்பது குறைவுதானே? இதில் என்ன தவறு என்னும் சிந்தனை சர்வசாதாரணமாகிவிட்டது. இதைப் புரிந்துகொண்ட கல்வி வள்ளல்கள் ஏதோ சொர்க்கத்தின் திறவுகோலை அவனிடம் தருவதற்கான ஏற்பாடு போல அறிவுக் கண்ணைத் திறந்துவிடும் அவசரத்தில், பண்பையும், அன்பையும், மனஅமைதியையும் அந்தக் குழந்தையிட மிருந்து வழித்தெடுத்து, குழந்தையையும் வறுத்தெடுத்து அனுப்பிவிடுகிறார்கள்!

ஓர் ஏழைக் குழந்தை, பள்ளியில் படிக்கும்போது அவ்வளவும் இலவசம்பள்ளிப்படிப்பை முடிக்கும் -பன்னிரண்டாம் வகுப்பு- வரை பெற்றோர்க்கு எந்தச் செலவும் வைக்காமல் முடித்துவிடக் கூடிய தமிழகத்தில், மேற்படிப்புக்கு ஏன் படாத பாடு படவேண்டியிருக்கிறது?! கல்விக் கடன் கிடைக்கும் என்று கடனை உடனை வாங்கிச் சேர்க்க -சுமார் 50,000 முதல் 5லட்சம் வரை- புரட்ட முடிந்தவர்களின் பிள்ளைகள்தான் இப்போதும் உயர்கல்வியை எட்ட முடிகிறது! (கல்விக்கடனுக்கு அவர்கள் அலையும் அலைச்சல், அதனால் ஏற்படும் மன உளைச்சல் தனீ!)
பள்ளிப் படிப்புவரை எல்லாம் இலவசம் என்பதே, “உயர்கல்வி வள்ளல்களுக்கு நம்பிள்ளைகளைப் பிடித்துத்தரும் பின்வாசல் உதவிதானோ? என்று தோன்றுகிறது! அல்லது, “அவ்வளவும் இலவசமாக் குடுத்தாச்சு, இதுக்கே உன் பரம்பரையே நன்றியோட இருக்கணும், இதுக்கு மேல உன்னால முடிஞ்சா, காசு இருந்தா மேல படிச்சு அதிகாரியாப் போ (அதுதான் இருக்காதுன்னு தெரியுமே?) இல்லாட்டி இத்தோட நிறுத்தி பியூனாப் போய்க்கோ, பேராசை பெருநஷ்டம்பா!  என்று அசரீரி கேட்கிறதே!
முதலாளித்துவ வர்க்க-அரசியலின் மறைமுக ஏற்பாடு இது! உடல் உழைப்புத் தொழிலாளி வேணுமில்ல? அதுக்கு ரொம்பப் படிச்சா சரிவருமா? இலவசமாக் கிடைச்சா யானையக்கூட வாங்கிக்க ஆளு இருக்கும்போது வேறென்ன?
இலவச உயர்கல்வி, இலவச உயர்மருத்துவம் இரண்டை மட்டும் தருவதுதான் அரசின் கடமை, அதை விடுத்து, இவற்றைமட்டும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கி மற்ற அனைத்தும் இலவசமாகத் தருவோம் என்பது மக்களை முட்டாளாக்கவே!
மக்களை அடிமைகளாக்கும் கேவலமான பொருளாதார சூழ்ச்சியே இலவசங்கள் என்பதை அரசியல்வாதிகள் புரிந்துதான் வைத்திருப்பார்கள். அவர்கள் ஒன்றும் அறியாமல் செய்வதில்லை, எனவே, நியாயமான கோரிக்கைகளைப் போராடிப் பெறவேண்டுமே அன்றி இலவசமாக அல்ல. ஏற்பது இகழ்ச்சிஎன்பதை மக்கள்தாம் உணரவேண்டும். நம் பாவப்பட்ட மக்கள் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களிலிருந்து விடுபடவே இந்த நாசகரச் சூழ்ச்சியில் விழுகிறார்கள். எனினும் அரசியல்வாதிகளுக்கு இல்லாத தொலைநோக்கம் மக்களுக்கு வந்தாக வேண்டும். இல்லையேல், இன்னும் பலபத்தாண்டுகளுக்கு இலவச நரகம்தான், இணைப்பாக அடிமையெனும் அவமானம்.
இலவசம் என்பது-
அரசியல் லஞ்சம்!
ஆண்டவரோ ஆள்பவரோ கொடுக்கிறார்,
வாங்குவோர் அடிமை ஆகிறார்,
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
==========================================================  
வெளியீட்டுக்கு நன்றி – “காக்கைச் சிறகினிலே“ –ஏப்ரல்,2014
(கட்டுரையை முழுவதுமாக வெளியிடுவதில் பக்கச் சிக்கல் என்று “காக்கை“ நண்பர்கள் தெரிவித்ததால், இதன் சுருக்கப்பட்ட வடிவமே அச்சில் வந்துள்ளது 
மேற்கோள் தகவல்களுக்கு நன்றி: 
வலை நண்பர் திரு திருப்பூர் ஜோதிஜி.)

0000000000000000000000000000000000000000000 

17 கருத்துகள்:

 1. கொஞ்சம் பெரிதான கட்டுரையாய் இருந்தாலும் பல பதில் சொல்ல முடியாத அதே நேரத்தில் யோசிக்க வேண்டிய விசயங்களையும் உள்ளடக்கி வந்துள்ளது இக்கட்டுரை. பகிர்வுக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் “ஓவரா“த்தான் போய்ட்டமோ?
   (வடிவேல் மாதிரி?) சரி சுருக்க்க்கிறுவோம்...

   நீக்கு
 2. நீண்ட கட்டுரை என்றாலும் பலரும் ஆறிய வேண்டிய செய்திகள்!
  நாட்டின் இன்றைய உண்மை நிலை! அருமை! வாழ்க முத்து!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். தங்கள் அறிவுரையின் மறைமுகச் செய்தியாக எடுத்துக்கொண்டு கட்டுரையைக் கொஞ்சம் சுருக்கிவிட்டேன் அய்யா. நன்றியும் வணக்கமும்.

   நீக்கு
 3. இலவசம் பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். பலரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

  மதுக்கடைகளைத் திறந்து வளரும் சமுதாயத்தையே சீரழித்து விட்டார்கள். இனி மாதுக்கடைகள் திறந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை...

  சிறப்பான கட்டுரை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “இனி மாதுக்கடைகள் திறந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை...“ - அதுதான் அரசு அனுமதி பெற்றுப் பல மாநிலங்களில் நடக்குதே! இந்தக் கடைகள் சமாச்சாரம்தான் நம் சமூகக் கேட்டின் வெளிப்பாடு நண்பா. இது புரையோடிப் போன புண்ணுக்கு மருந்து போடாமல், சொறிந்து சுகம்காணும் சொல்ப (அல்ப) சுகவாசிகளின் சொர்க்கம் எனும் நரகக்குழி.

   நீக்கு
 4. ருஷ்யக் கதை ஒன்றே போதாதா...?

  கடனில் மன உளைச்சல் ரொம்ப ரொம்ப அதிகம்... ம்...

  மோகம் மடிய இனி வழியில்லை என்றே தோன்றுகிறது ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்தாண்டுகளுக்கு முன் நான் வாங்கிய கடனுக்கு வட்டிகட்டியே நொந்துபோனதில் நுரைத்து வந்ததுதான் “தற்கொள்ளை“ எனும் எனது கவிதை! இப்பத்தான் கொஞ்சநாளா கடனில்லா நிலை. (ஆனால் நம் சமூகக்க கடன்கள் ஏராளம்! முடிந்தவரை கட்டுவோம்

   நீக்கு
 5. ஒரு அரசு எதை இலவசமாக கொடுக்க வேண்டுமோ?! அதையெல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து பணக்காரர்களை மேலும் பணக்காரனாக மாற்றுகிறது,

  உண்மையில் இலவசமாக கொடுக்க வேண்டியது

  கல்வி
  மருத்துவம்
  குடிநீர்
  அனைவருக்கும் வேலைவாய்ப்பு

  இவையெல்லாவற்றையும் தட்டுபாட்டில் வைத்துவிட்டு ...................

  கட்சி நடத்துவதோ அல்ல

  ஆட்சி நடத்துவதோ

  இலவசத்தின் காட்சி

  இதை மாற்றுவது

  அரசியலமைப்பை மாற்றினால் மட்டுமே முடியும்

  மாற்றுவோம்

  மக்களால் முடியாதது ஏதுமில்லை

  பதிலளிநீக்கு
 6. கதையும் கட்டுரையும் யோசிக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
 7. மிக்க நன்றி. இந்த சமயத்தில் தேவையான கட்டுரையும் கூட.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கட்டுரை தந்த தகவல்கள் பெரிய உதவியாக இருந்தன அய்யா மிக்க நன்றி. படித்துவிட்டுக் கருத்துச் சொன்னதற்கும்.

   நீக்கு
 8. விரிவான விளக்கமான கட்டுரை. சிக்கலைச் சொல்லி அதை எப்படி அவிழ்ப்பது என்பதையும் சொல்லியிருக்கலாமோ? நீங்கள் குறிப்பிட்ட புலி வால்.. இலவசத்தை எப்படி நிறுத்துவது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முந்திய பின்னூட்டத்தில் திரு வேல்முருகன் அய்யா சொன்னது தான் நிரந்தரத் தீர்வு அய்யா.
   இதுவும் கடந்து போகும் ... போகவேண்டும் - ஆனால்,
   “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்“ நாம்தான் முன்கை எடுத்து நடத்த வேண்டும்.. விதைப்போம்...

   நீக்கு
 9. பள்ளி நிலையில் இலவசக் கல்வியை மக்கள் விரும்புவதில்லை . இலவசமாகக் கிடைப்பதில் தரம் இல்லை என்ற நம்பிக்கை வேரூன்றி உள்ளது. வேறு வழி இல்லாதவர்களுக்கு மட்டுமே இலவச பள்ளிக் கல்வி என்றாகி விட்டது. இலவசப் பொருட்களின் தரம் குறித்து அனைவரும் அறிவர்.அதனால் பாதகம் இல்லை. வேலை செய்யும் வரை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடலாம் அதனால் தேவைப்படாதவர்கள் கூட இலவச பொருட்களை வாங்க போட்டி போடுகிறார்கள். இலவசம் ஏதும் கொடுக்காமல் இருந்தால் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. அதற்கு பதிலாக இலவசம்தந்துதுவிட்டுப் போகட்டுமே என்று நினைப்போரும் உண்டு. எனக்குத் தெரிந்து இலவசங்களை எதிர்ப்போரும் இலவசங்களை உறுதியாக மறுக்க முன்வருவதில்லை.
  விரிவான அலசல் . அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது

  பதிலளிநீக்கு