அது மட்டும் இல்ல கண்ணு!
அவனவனும் காதலிய
‘இத’மாக நினைக்கிறதும்
எடுத்தெடுத்துப் பேசுறதும் -26
தப்பில்ல! ஆனாலும்
தன் பேச்சில் அவள்அறிவை
ஒப்பாம, உயர்த்தாம
‘ஓகோ’ன்னு அழகைமட்டும் - 27
புகழ்ந்துவந்தா என்னாகும்?
புத்தியெல்லாம் மண்ணாகும்!
‘அழகிமட்டும் இல்லடிநீ
அறிவாளி யும்தானே?’ -28
சொன்னாக் கூட போதும்இப்ப!
‘சுர்’ருன்னு பேச்சுவரும்!
என்னா நினைக்கிற நீ?
“எல்லாம் சரி தாங்க, -29
கற்பு பற்றி உங்களோட
கருத்தென்ன?” என்றாயே,
“சொற் பொருளோ தாராளம்!
சொன்ன கதை ஏராளம்!” -30
உடம்பைப் பொறுத்ததா
உள்மனசைப் பொறுத்ததானு
திடம்மா ஒரு பயலும்
தெரிஞ்சுஎடுத்துச் சொன்னதில்ல! -31
கட்டின புருஷங்காரன்
கற்பிக்கும் வழி கற்பாம்!
கட்டினவன் தப்பு வழி
காட்டினா அதுகற்பா?” -32
“ஓகோ! அத்தானே!
ஒரு வார்த்தை சொன்னீரே!
மாகவிஞன் பாரதியை
மறுபடியும் படித்தீரே! -33
கற்புஎனவோர் கற்பனையாம்
கட்டுப்பாடு எல்லையினை
பற்பலவாம் சூழ்ச்சிகளுள்
படைத்தார் மிகச்சிறப்பாய் -34
கல்லானா லும், கணவன்
புல்லானா லும்,புருசன்
சொல்லிய இப் பழமொழியால்
சொர்க்கபுரி யாருக்கு? -35
படிப்பில் அறிவியலில்
பாராளும் திறனில், உடல்
துடிப்பில் அனைத்திலுமே
தோழியர்கள் இளைத்ததில்லை -36
ஏறி வெற்றிக் கொடியை
இமயத்தில் ஏற்றியதும்,
சீறிவரும் விமானத்தை
செலுத்தியதும் எத்தனையோ! -37
பெண்களங்கம் என்றிருந்த
பேச்சொழிய, முன்களத்தில்
விண்கலத்தைச் செலுத்துவதும்
வீரத்தைச் காட்டுவதும் -38
ஏராளமாய்ச் சான்றை
எடுத்தெறிய முடியுமே!
வேராழமான ஒரு
வேறுபாடும், தாயாகிப் -39
பிள்ளை பெறுகின்ற
பேறுதான், அதனாலே
தொல்லைதான் அவருக்கு!
துன்பமான இன்பம் அது?” -40
“என்அறிவுத் தோழியே!
இங்கே ஒரு சந்தேகம்
முன்வருமே! என்னிடத்தில்
முன்பேநீ கேட்டாயே? -41
போகப் பொருளாக்கி
பூட்டிவைத்துப் பெண்ணை, வெளிப்
போக விடாதிருக்கப்
போட்டதடை? ‘சொத்துரிமை’! -42
சொத்துரிமையும் பெண் அடிமையும்:
ஆதிப் பொதுவுடமை
அமைந்திருந்த போது, பெண்
சாதியினை ஆண் சாதி
சார்ந்திருந்த நிலை உண்மை! -43
குரங்கின் பரிணாமக்
குழந்தைகளின் பரம்பரைகள்
நிலத்தைப் பயிரிட்டு
நிலையாக வாழு முன்னே -44
அப்போது, பெண்ணடிமை
ஆண்உரிமை ஏதுமில்லை
இப்போது வந்த நிலை
எப்போது முதலாக? -45
ஆண்பெண் உறவுகளில்
அப்போது முறையில்லை!
தான்பெற்ற பிள்ளையைத்
தந்தவன்யார் என்றுஅந்தத் -46
தாய்க்கே தெரியாத
தனிக்காலம்! அப்போது
தாய்வழிச் சமுதாயம்!
தலைமையும் அவளுக்கே -47
எவருக்கு நம்சொத்தை
எழுதுவது? எனும் குழப்பம்
எவருக்கும் கிடையாது!
ஏனென்றால் தனியாக -48
எவருக்கும் சொத்துஏதும்
இல்லை! குழப்பமும்
எவருக்கும் கிடையாது
இதுஆதிப் பொதுவுடமை! -49
“வால்காவில் இருந்து கங்கை
வரை“ என்னும் மகத்தான
நூல்தரும் விவரங்கள
நுணுக்கமாப் படியம்மா! -50
-----------------------------(இன்னும் இரண்டு பகுதிகளில் நிறைவடையும்)
கூகுளில் தேடியபோது கிடைத்த மேற்காணும் படத்திற்கு நன்றி -
ஐஸ்வர்யா (முகநூல் சகோ.)
மாதஇதழில் வெளியிட்டமைக்கு நன்றி -
சாலை.இளந்திரையனாரின் “அறிவியக்கம்”-இதழ்கள்-1978-79)
///உடம்பைப் பொறுத்ததா
பதிலளிநீக்குஉள்மனசைப் பொறுத்ததானு
திடம்மா ஒரு பயலும்
தெரிஞ்சுஎடுத்துச் சொன்னதில்ல! ///
அருமை ஐயா
அருமை
கற்பு பற்றி என்ன விளக்கம் தந்தாலும் அது எப்படியும் பெண்ணடிமையில்தான் போய் முடியும் என்னும் தந்தை பெரியாரின் விளக்கம்தான் இது-வேறு சொற்களில். நன்றி அய்யா.
நீக்கு''.. தன் பேச்சில் அவள்அறிவை
பதிலளிநீக்குஒப்பாம, உயர்த்தாம
ஓகோ’ன்னு அழகைமட்டும் - 27
புகழ்ந்துவந்தா என்னாகும்?...'''
நல்ல சிந்தனை.. பிடித்தது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி சகோதரி. பெண்ணுக்கு எதிரியாகப் பெண்ணையே நிறுத்தும் இந்தச் சமூக அவலத்தின் சூழ்ச்சியை இருவருமாகச் சேர்ந்து எதிர்த்து முறியடிக்க வேண்டும என்பதே என் ஆசை. நன்றி.
நீக்குஆனாலும் அண்ணனின் காதலியும் நல்ல சிந்தனையாளராய் கவித்தொடுக்க தோதான கேள்வியை கேட்டு அசத்துகிறார்! கற்பு மற்றும் சொத்துரிமையில் எனக்கு ஒரு கருத்து அண்ணா, அதனை பற்றி பாடும் பெண்களிடம் கருத்துநிலவவே பாரதி, பெரியார் போன்ற ஆண்கள் தானே காரணம்! ஓங்கி ஒலிக்கட்டும் அண்ணா உங்கள் குரல்! தங்கையின் வாழ்த்துக்கள்(பெரியோரை சிறியோர் வாழ்த்தலாம், வாழ்த்த வயது தடை இல்லை என்று எப்போதோ படித்த ஞாபகம்)
பதிலளிநீக்குஅய்யய்யோ தங்கச்சீ! அது முற்றிலும் கற்பனைக் காதலி. பாரதி வாராய் என் கவிதைக் காதலி என்பானே அதுமாதிரி. மற்றபடி நான் விரும்பும் பெண்ணுரிமைக் கருத்துகளை விளக்கும் கடிதமாக இது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். 1978-79இல் தொடராக 12மாதம் அறிவியக்கம் மாத இதழில் வந்தது. சாலையார் அதுபற்றிப் பாராட்டியதெல்லாம் உன்னைவிட அதிகம்! அவரிடம் உண்மையை விளக்கவே சிரமப் பட்டேன். எனினும் அண்ணன் மேலுள்ள நம்பிக்கைக்கு நன்றிப்பா.
நீக்குஅட கம்பனின் சீதை, இளங்கோவின் கண்ணகி போல தான் அண்ணனின் காதலி என குறிப்பிட்டேன் அண்ணா! மற்றபடி நீங்க பதறுவதை பார்த்தால் ............சரிசரி:))))) அண்ணி என்னை டின்னு கட்டுறதுக்கு முன்னால எஸ்கேப் :)))
நீக்குஅதானே சொர்க்கபுரி யாருக்கு...?
பதிலளிநீக்குதுன்பமான இன்பம் இல்லையென்றால்...?
நீ அரிசி கொண்டுவா நான் உமி கொண்டு வர்ரேன். ரெண்டையும் கலந்து கலந்து, எங்கவீட்டுத் திண்ணையில உக்காந்து ரெண்டுபேரும் ஊதிஊதித் தின்போம். என்ன சரியா?
நீக்கு#“வால்காவில் இருந்து கங்கை
பதிலளிநீக்குவரை“ என்னும் மகத்தான
நூல்தரும் விவரங்கள
நுணுக்கமாப் படியம்மா! #
உங்கள் காதல் கவிதைப் படித்தாலே அந்த நூலின் சாரத்தை எளிதாய் புரிந்து கொள்ள முடிகிறதே !
என் மூத்த மகள் கருவாகியிருந்த நேரம் அந்த நூலைப்படித்தேன் என்னைப் புரட்டிப் போட்ட புத்தகம் அது! எனவேதான் என் மகளுக்கு “வால்கா“ என்று பெயரிட்டேன். தமிழில் மொழிபெயர்ப்பு நூல்களில் மிகஅதிக விற்பனை கண்டது அந்தநூல்தான் அய்யா.
நீக்குகற்பனை காதலாயினும் கருத்தினில் குறைவேதுமில்லை. அருமை! வாழ்த்துக்கள்... பதிவுக்கு நன்றி ஐயா.....
பதிலளிநீக்குஎதார்த்தம் கலந்த கற்பனை தானே எல்லாப் புனைவுகளும். சங்கஇலக்கியக் காதல் பாடல்கள் அப்படி உண்மையில் இருந்திருக்குமா என்று ஐயம் கிளம்பினாலும், இருநதால் நல்லாத் தான் இருந்திருக்கும் என்பதுதானே நல்ல பதில்?
நீக்குஇன்னொருபுரட்சிக் கவியாக பரிமளிக்கிறீர்கள் ஐயா
பதிலளிநீக்குமக்களிடமிருந்து கற்றதை மக்களுக்குத் தருவதுதானே ஒரு படைப்பாளியின் பணி? அந்த நிறைவு போதும் அய்யா. உங்களிடமிருந்தும் நான் நிறையக் கற்றுக்கொள்கிறேன் - உங்கள் பாராட்டும் உள்ளத்தையும் சேர்த்து. நன்றி அய்யா.
நீக்குபடிப்பில் அறிவியலில்
பதிலளிநீக்குபாராளும் திறனில், உடல்
துடிப்பில் அனைத்திலுமே
தோழியர்கள் இளைத்ததில்லை
நல்ல முயற்சி பெண்ணுக்காகவா ! மகிழ்ச்சி ! பேசுங்கள்...! பேசுங்கள்...! இன்னும் கேட்போம் காது குளிர. நன்றி வாழ்த்துக்கள்...!
மனித சிந்தனை மகத்தானது, எல்லாம் மாறும், எல்லார்க்கும் எலலாம் என எல்லாம் ஆகும்வரை எல்லாம் மாறும். மாறவேண்டிய பட்டியலில் பெண்ணடிமை முக்கியமானது சகோதரி. இலலாவிடில் எந்த முன்னேற்றமும் இல்லை.
நீக்குகல்வி என்று
பதிலளிநீக்குகண்ணகியை கற்றுத் தரும் உலகில்
சிந்து முதல் கங்கை வரையும்
வால்காவிலிருந்து கங்கை வரையும்
படித்துப் பாரென
பரப்புரை செய்யும் ஆசிரியரே
வாழ்த்துக்கள்
உங்கள் கவி படித்து சிலிர்த்தேன்...நகல் எடுத்து வைத்துக்கொண்டு பெண்ணைக் கீழாகப் பேசுவோருக்குக் கொடுக்கத் தோன்றுகிறது..
பதிலளிநீக்கு