எனது காதல் கடிதம்

        (கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடாக வந்த, 
         எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பிலிருந்து...) 
ஓவியத்திற்கு நன்றி
நவயானா பதிப்பகம் லோகோ
ஓவியர் திரு “சந்ரு“ மற்றும்  “ஆழம்“ இதழ்

முன்னுரை:
            நான் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப் புலவர் நான்காண்டுப் படிப்பில் 3ஆம் ஆண்டு படிக்கும்போது எழுதி, அப்போது (1978-79) டெல்லியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையனின  அறிவியக்கம் திங்களிதழில் ஓராண்டுக் காலம் தொடராக வந்த நெடுங்கவிதை இது.100கண்ணிகள்.
 பின்னர் கவிஞர் மீரா அவர்களின் வெளியீடாக வெளிவந்த எனதுபுதிய மரபுகள் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றது. இத்தொகுப்பு மதுரைக் காமராசர் பல்கலையின் எம்.ஏ.தமிழ் இலக்கிய வகுப்பிற்குப் பாடநூலாக 1995முதல் பதினைந்தாண்டுக்கும் மேலாக இருந்து வருகிறது 

           1975-78ஆம் ஆண்டுகளில் திருவையாறு அரசர் கல்லூரியில் படித்தபோதுபேராசிரியர் தி.வே.கோபாலய்யர் எனும் பழந்தமிழ்க்கடல்’ எனது முதல் இரண்டாண்டுகளுக்குக் கல்லூரி முதல்வராக இருந்தார்.
           பாரதிப்பித்தன் எனும் பெயரில் நவீன இலக்கியம் எழுதிக்கொண்டுகலைஇலக்கியப் பெருமன்றத்தின் தஞ்சைமாவட்டத் தலைவராகவும் இருந்த பேராசிரியர் சொ.சண்முகானந்தம் அவர்கள் 3ஆம், 4ஆம் ஆண்டுகளுக்கு முதல்வர்களாக வந்தார்.

இதை மிகப் பெரிய பேறாக இன்னும் நினைத்து மகிழ்ந்து வருகிறேன்.
            1979இல் ஆசிரியப் பயிற்சி முடித்து, 1980இல் தமிழாசிரியராக நான் புதுக்கோட்டைக்கு வந்தபிறகு, பாலா எனும் ஆங்கிலம் படித்த உயர் தமிழ் விமரிசகரும்கந்தர்வன் எனும் மக்கள் படைப்பாளியும் என்னுள் செலுத்திய பாதிப்பும் சேர்ந்து இந்நான்கு ஆளுமைகளின் கலவையே இன்றைய முத்து நிலவன்!
             சங்க இலக்கிய ஆய்வு நூல்களை அய்யா தி.வே.கோ. அவர்களிடத்தில் பார்த்து-படித்து-தோய்ந்து ஆழ்ந்துபோயிருக்கிறேன். எழுத்துதீபம்தாமரையுடன் அப்போதுதான் கோவையிலிருந்து வந்த வானம்பாடி இதழ்களை அய்யா பாரதிப் பித்தன் அவர்களின் வீட்டில் பார்த்துப் படிக்கும் மிகப் பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
            திருவையாற்றிலேயே வசித்த நண்பர் வைகறை வாணன் (தற்போது சென்னையில் பொன்னி புத்தக வெளியீட்டாளராக அரிய பல நூல்களின் பதிப்பாளராக இருக்கிறார்) மிகப்பெரிய இதழ்-நூல் காதலர். அவர் எங்கள் கல்லூரியில் எனக்கு 4 ஆண்டுகள் முன் படித்தவர் அவரோடு கைலாசம் எனும் நூல் சேகரிப்பாளரும் எங்கள் குழுவில் இருந்தார்...
            இன்னொரு பக்கம் 
தமிழ்க்குடிமகன் அவர்களை மாநிலத் தலைவராகவும் முனைவர் இரா.இளவரசு அவர்களைப் பொதுச் செயலராகவும் கொண்டு இயங்கி வந்த தமிழியக்கம்எனும் தனித்தமிழியக்கத்தின் திருவையாறு அரசர் கல்லூரி கிளைத்தலைவர்களாக இருந்த அண்ணன் செந்தலை ந.கவுதமன் (ஆம்! தற்போதும் இடையறாது இயங்கி வரும் சூலூர் பாவேந்தர் பேரவை இயக்குநர்தான்), இளமுருகன் ஆகியோர் கல்லூரியில் எனக்கு இரண்டாண்டு மூத்தவர்கள்.

           நா.முத்து பாஸ்கரன் எனும் எனது இயற்பெயரை தனித்தமிழியக்க வழக்கப்படி- நா.முத்துநிலவன் என மாற்றியவர் செந்தலை ந.கவுதமன் அண்ணா அவர்கள்தாம்.

            பழந்தமிழ்ப் படிப்பு, நவீன இலக்கியப் படிப்பு, நவீன இதழ்கள் படிப்பு... என என் கல்லூரி வாழ்க்கையே படிப்பைத் தூண்டுவதாக அமைந்த்து நான்பெற்ற பேறு!

            முன்சொன்ன பேராசிரியர் இருவர்க்கும் நான் செல்லப்பிள்ளை போல
இருவரின் வீடுகளுக்கும் சென்று படித்துஅவர்களுடனே விவாதிக்கும் வாய்ப்பின் வளர்ச்சியே இன்றைய முத்துநிலவன்.

            ஆனால், “அவசர நிலைக் கால ஆண்டுகளின் மாணவர் போராட்டம்   அய்யா தி.வே.கோ.அவர்களுக்கெதிராக நடந்தபோது நான் மாணவர்சங்கத்தின்   துணைச்செயலர். அரசு நடவடிக்கையின்படி அய்யா பேராசிரியராகத் தரம் இறக்கப்படநானும்ஒரு காரணமாக இருந்ததும் தவிர்க்க இயலாமல் நடந்தது.
           பின்னர் எனது மூன்றாமாண்டுக் கல்லூரி வாழ்க்கையின் போது,நாகையிலிருந்து வந்து முதல்வர் பொறுப்பேற்றவர்தான் பாரதிப்பித்தன். அன்றைய அவசர நிலையின் போது தடைசெய்யப் பட்டிருந்த மாணவர் போராட்டத்திற்குத் தலைமை ஏற்ற காரணத்தினால்நான் கல்லூரியிலிருந்து நீக்கப்படஎன்னை மீண்டும் கல்லூரியில் சேர்க்க வலியுறுத்தி திருவையாற்றில் காங்கிரஸ் அ.தி.மு.க. தவிர்த்த அனைத்துக்கட்சிகளின் பொதுக்கூட்டம் நடந்தது!முத்துநிலவன் மேல் கைவைத்தால் திருவையாறே திரண்டு எழும் --எனக்கு அப்போது அது முழுமையாகப் புரியவில்லை!

          நான்காண்டு மாணவர்களும் சேர்ந்து மூன்றாமாண்டு படித்த என்னை மாணவத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அறிவித்து, வெற்றி ஊர்வலம் போக என்னைச் சில மாணவ-நண்பர்கள் தூக்கிக் கொண்டு போக.. எதிரே வந்த கல்லூரி முதல்வர்  கூடிநின்ற மாணவர்களைக் கலைந்து போகச் சொல்லிக்கொண்டே-
            ‘தேர்தல் சடட விரோதமானது இது ரத்து செய்யப்படுகிறது’ என அறிவிக்கமாணவ-நண்பர்கள்- கூட்டம் வெறுத்துப் போய் நிற்க
          நானும் மௌனமாக நிற்கிறேன்.
          ஒருவன் சத்தமாகக் கேட்கிறான் :அப்படின்னாயார்தான் மாணவர் தலைவர்?  நீங்களே ஒரு வழி சொல்லுஙகள்
          முதல்வர் : வேறு வழிகடந்த ஆண்டில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்தான் இந்தஆண்டின் கல்லூரி மாணவர் தலைவர் என்று அரசு விதி வகுத்திருக்கிறது. தேர்தல் எல்லாம் கிடையாது” 
          இதை முதல்வர் பாரதிப்பித்தன் சொல்லி முடித்தவுடன் மாணவர்களிடம் இருந்து வென்ற பெரும் கூச்சல் விசில் சத்தம்!  மகிழ்சசிக் கூத்தாட்டம்!
          மாணவர்கள் ஓடிவந்து என்னை மீண்டும் தூக்க..வெற்றி ஊர்வலம் தொடர்ந்தது... முதல்வருக்கு ஒன்றும் புரியவில்லை.அருகில் இருந்த பேராசிரியரிடம் கேட்கிறார்…‘ஏன் திரும்பவும் அவனையே தூக்கிட்டு ஊர்வலம் போறாங்க?
தேர்தல்தான் ரத்துன்னு சொல்லிட்டமே!
         சிரித்தபடி பேராசிரியர் மெதுவாக முதல்வரிடம் சொல்கிறார்...
         ‘சார்… அவன்தானே போன வருடம் முதல் மதிப்பெண்.. சுற்றறிக்கைப் பலகையில் போனவாரம்தானே போட்டோம்?’
         முதல்வருக்கும் சிரிப்பு வந்து விட அவன முதல்வர் அறைக்கு வந்து என்னைப் பாக்கச் சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டுப் போகிறார்…  

         கல்லூரிக் காலத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான கவிதை, கட்டுரை,பேச்சுப் போட்டிகளில் மாநில அளவில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட முதல்பரிசுகள்... 
         குறிப்பிட வேண்டிய இரண்டு 
         1976ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த போட்டி முதற்பரிசுக் கோப்பையைக் கவிக்கோ திரு.அப்துல் ரகுமானிடம் வாங்கியதும்,
         அதே ஆண்டில் காரைக்குடியில் நடந்த போட்டியில் முதற்பரிசு பெற்றதால், அப்போது நடந்த கவியரங்கில் அய்யா முடியரசன் தலைமையில் கவியரங்கேறியதும்.
          அந்த பொன்மாலைப் பொழுதுகளில் நடந்தது சிலவாக, கற்பனை கலந்தது பலவாக எழுதப்பட்டதே இத்தொடர்...
          இந்த்த் தொடர் வந்த இதழ்களின் தொகுப்பின் அருமையறியாத என் நண்பன் ஒருவன் இவற்றைத் தொலைத்துவிட்டு சாதாரணமாகச் சொல்ல... படைப்புஇழப்பின் வலியறியாத அவனது நட்பைப் பின்னர் தொலைத்துவிட்டேன்..
          இருபது ஆண்டுக் கழித்துச் சென்னை அறிவியக்க அலுவலகம் சென்று ஒருநாள் முழுவதும் உழைத்து, இந்த்த் தொடரின் நகலைக் கையாலேயே எழுதி எடுத்துக் கொண்டுவந்து தந்த என் அருமைத் தோழர். திருக்கோகர்ணம் மின்சாரக்கவி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு எனது நெஞ்சு நெகிழும் நன்றியுடன்...
இதோ அந்தத் தொடர் கவிதை.... 

          அந்தப் பொழுதுகளில் இலங்கையிலிருந்து கிடைத்த கவிஞர் வரதபாக்கியான் அவரகளின், “ஒரு தோழனின் காதற் கடிதம் எனும் சிறு நூலே இதற்கான உந்து சக்தி என்பதையும் நன்றியுடன் சொல்வதுதான் நாகரிகம் 

அன்று (1978-79இல்) வெளிவந்த அதே வரிகளுடன்
எந்த மாற்றமும் இல்லாமல் இப்போது உங்கள் முன்--- 
-----------------------------------------------------------------------------------------------


அன்பே!, என் ஆசை
                அத்தானே! வாங்கய்யானு
முன்பே ஒரு கடிதம்
                முந்தா நாள் போட்டேனே?                    -1

இங்கே உமக்காக
                ஏங்கி நா கிடக்குறப்ப
அங்கே என்னய்யா
                அம்பூட்டு வேலை!யின்னு                     -2

நீ போட்ட காயிதமும்
                நேத்தே கிடைச்சுதம்மா!
பூ போட்ட கைக்குட்டையப்
                பொத்தி பொத்தி வச்சிருக்கேன்!          -3

உள்மனசில் வேர்க்குறப்ப,
                உன்கையால் அதை எடுத்து
சில்லுன்னு துடைக்கிறதா
                சிலுத்துக்கிறேன், அலுத்துக்கிறேன்!-4

அந்தப்பெருங் கூட்டத்திலும்
                ஆருக்கும் தெரியாமே
சந்திச்சுக் கண்சொன்ன
                சங்கதிய மறப்பேனா?                               -5

மணிக்கணக்காப் பேசிநின்னு
                மனசால நாமஒண்ணா
இணைஞ்சிருந்தோம்: ஆனாலும்
                இடையில்வந்த பிரிவாலே                     -6

விட்ட பெருமூச்சு
                வெப்பத்துல நெஞ்சுமுடி
பட்டுக் கருகிப் போயி
                பலநாளாகக் கெடந்தேனே!                       -7

காதல் மனுசருக்கு
                கட்டாயந் தான்எனினும்
காதல்தான் வாழ்க்கையா?
                கணநேரம் நினைச்சுப்பாரு!                       -8

காதல்எனும் வார்த்தை, இப்போ
                ‘கண்றாவியாகிப் போச்சு!
ஊதா  நிறமாகி
                ஊர் சிரிக்கும் சொல்லாச்சு!                       -9

சினிமாக் காதலுன்னா
                சீக்கிரமா வரும், போகும்
மனுசக் காதலர் நாம்
                மனசுவிட்டுப் பேசவேணும்!                     -10


உன்னை வர்ணிக்க மாட்டேன்! 

இன்னும்கேளு என்தாயீ!
                என்காதல் நினைப்பையெல்லாம்
சொன்னாச் சிரிப்புவரும்,
                சொல்லாட்டி வெறுப்பு வரும்!                -11

உன்னை ஒரு பொம்மையாட்டம்
                உட்கார வச்சிகிட்டு
கண்ணையே பார்த்துக்கிட்டும்
                கன்னத்தைக் கிள்ளிவிட்டும்                   -12

சொல்லிச் சொல்லி ரசிக்காத
                சோத்து முண்டம் நானில்லை!
பிள்ளைகளா? செயற்கையான
                பேச்செல்லாம் நமக்கெதுக்கு?                 -13

அழகுன்னும் மென்மையின்னும்
                அடுக்கிவச்சுச் சொன்னதெல்லாம்
புலமையில்ல தாயீ!
                பொடி! மயக்கப் பொடி தாயீ!                 -14

பொண்ணுகள வர்ணிக்கப்
                புலவருக பலவாறாச்
சொன்னதெல்லாம் சொல்லிப்பாரு!     
                சொத்த அத்தி! கிள்ளிப்பாரு!                -15

அன்னம், புறா,   கிளி, மயிலு,
                அழகு நிலா பூ, குயிலு
சொன்னகதை கோடி வச்சான்
                சும்மாவா பாடிவச்சான்?                          -16

மென்மையின்னா பெண்மையின்னு
                மெதுவாகச் சொல்லிவச்சு
உண்மையான அவள் பலத்தை
                உணராமல் பண்ணிவச்சான்!                 -17

நாலுகுணம் சேர்ந்தவள் பெண்ணல்ல

நாலுகுணம் பொண்ணுக்குன்னு
                நல்லகதை பண்ணி வச்சான்
ஆளுங்குணம் ஆணுக்குன்னு
                அடக்க, வலை பின்னி வச்சான்!    -18

அச்ச முன்னா  எதப்பாத்தும்
                ‘அய்யோனு பயப்படணும்!
மிச்சமென்ன பயந்தாங்குளி’!
                மிக வசதி! அடங்கிடணும்’!                    -19

நாண முன்னா? ஆம்பளைய
                நகங்கடிச்சு தலைகுனிஞ்சு
கோணக்கண்ணால் பாக்குறதாம்!
                குறுக்குவழி மடக்குறது!                          -20

அந்தரங்கம் தெரிஞ்சவனை
                ஆசையுள்ள அத்தானை
சந்திக்கும் போது, வந்தா
                சரியான குணம் வெட்கம்!                     -21

வேத்துஆளு பார்த்தாலும்
                வெக்கப்பட வேணுமின்னா
தூத்தேறி! அந்தவெக்கம் -
                துப்புக்கெட்டது! தூக்கி எறி!                  -22

தப்புச்செய்யா வெட்கமின்னா
                தாராளமா அதுவேணும்!
ஒப்புக்கொண்டா ஆம்பளைக்கும்!
                ஒசந்தவெக்கம் வேணுமல்லோ?        -23

அப்புறமும் பொண்ணுக்குத்தான்
                அந்தவெக்கம் வேணுமின்னா
ஒப்புறானே! அதுபொண்ணை
                ஒடுக்கத்தானே? அது எதுக்கு?               -24

இப்படித்தான், பொண்ணுகளை
                எதுக்குமே நிமிர்ந்திராம
சொல்படியே நடக்கவைக்கும்
                சூழ்ச்சிகள்தான் நாலுகுணம்!                 -25


                            (தொடரும்..)
-----------------------------------------------------

15 கருத்துகள்:

 1. பெயரில்லாசனி, ஏப்ரல் 26, 2014

  வணக்கம்
  ஐயா.

  கவிதையில் சொற்சுவைகள் துள்ளி விளையாடுகிறது... கவியை 3 தடவை இரசித்துப்படித்தேன் .. அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா.


  என்பக்கம்கவிதையாக
  எப்போதுஒளிரும் வசந்தகாலம்......


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரூபன். என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?
   நலம்தானே? காதல்னா மட்டும் வரும் இளைஞர் படையா? உங்க வயசுக்கும் ரசிக்க முடிஞ்சா மகிழ்ச்சிதான்

   நீக்கு
 2. மாணவர் தேர்தல் வெற்றி காட்சி ஆஹா ...ஆஹா..
  காட்சியை கண்முன் கொண்டுவந்தேன். மைதிலி ஹாப்பி அண்ணாச்சி:)))
  கடிதத்தை தொடங்கிய விதமே சூப்பர். அதிலும் வெட்கத்தை பற்றி விவரித்திருகிரீர்கள் பாருங்கள் ,,,எப்படி சொல்ல அப்படி ஒரு மகிழ்ச்சி!! ஒன்று தெரிகிறது எழுத எழுத உங்கள் எழுத்துக்கு இளமை கூடிகொண்டே வருகிறது! இது மிகை புகழ்ச்சியோ, முகஸ்துதியோ அல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகைப் புகழ்ச்சியல்ல... அன்பின் மிகை. ஆனால், அந்தக் காட்சி என் கருத்தைவிட்டு மறையவில்லை. நம் தமிழகத்தின் பெரிய பெரிய தலைவர்களுக்கும் கூட இப்படி ஒரு கல்லூரிக்கால நிகழ்வு இருந்திருக்குமா என்று தெரியவில்லை... என் வாழ்வில் நடந்த ஓர் அரிய நிகழ்வு என்றே நினைனக்கிறேன்... நீயும் ரசித்தது மிக்க மகிழ்ச்சிப்பா.

   நீக்கு
 3. அன்புள்ள புலவர் பெருந்தகையீர் வணக்கம்.
  தங்கள் பாட்டுப்புலமையைக் கண்டு வியப்புறுகின்றேன்.
  ஓர் அன்பு வேண்டுகை.
  பேசுவதை விடுத்து , தாங்கள் மரபுப்பூங்காவில் நின்று பாவியம் புனைய வேண்டும்.

  அதற்கான ஆற்றல் தங்களிடம் உள்ளது.

  அன்புள்ள
  மு.இளங்கோவன்
  புதுச்சேரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதத்தான் பெரிதும் விரும்புகிறேன்... ஆனால் பேசத்தானே அழைக்கிறது தமிழ்உலகம்? எனவே எனது எல்லைக்குள் இருந்துகொண்டே இயன்றதைச் செய்கிறேன். தொடர்வோம் தங்கள் அன்பிற்கும் பகிர்வுக்கும் நன்றி அய்யா.

   நீக்கு
 4. // உன்னை வர்ணிக்க மாட்டேன்... // ஆகா...

  அசத்துறீங்க ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஒரு காலம் அய்யா... கார்காலம்! மேகமாய்க் கவிமழையும் காதல் மழையும் பொழிந்த காலம். பசுமை நிறைந்த நினைவுகளே..

   நீக்கு
 5. பசுமை நிறைந்த நினைவுகளுடன்
  துள்ளலான படைப்பு..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 6. சரளமாக வந்து விழும் வார்த்தைகள் சட்டென ஒத்திகொல்கிரஹு நெஞ்சில். பெண்ணையும் மதிக்கும் பேராண்மை பொங்குகிறது ஐயா கவிதையில்

  பதிலளிநீக்கு
 7. உங்கள் கல்லூரிக் காலத்தைப் பற்றிச் சொல்லி, ஆசிரியர்களை நினைவு கூர்ந்து..அந்த தேர்தல் வெற்றி காட்சி மிக அருமை..மறக்கவே முடியாத உணர்வல்லவா? 1978லேயே இப்படி ஒரு சீரிய கருத்துள்ள கவி படைத்த உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
  கவிதை நன்று..எதெல்லாம் சொல்லி பெண்களை அடக்கப் பார்த்தனரோ அவற்றை வெளிச்சம் போட்டதற்கு நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 8. அதை நான் 1975ஆம் ஆண்டு, திருவையாற்றில் தோழர்கள் கைலாசம், வைகறை வாணன் ஆகியோர் வழியாகப் பெற்றுப் படித்தேன். அந்த மூல நூல் என்னிடம் இல்லையே! ஒருவேளை தற்போது சென்னையில் பொன்னி பதிப்பகம் நடத்தும் தோழர் வைகறை வாணனிடம் இருக்கலாம் கேட்டுப் பாருங்கள். எனது எண்ணிற்கு வந்தால் அவரது எண் தருகிறேன் - 94431 93293

  பதிலளிநீக்கு