எனது காதல் கடிதம் - பகுதி -3

  எனது காதல் கடிதம் - பகுதி-3

  
                         
                        (முதலிரண்டு பகுதிகளைப் பார்க்காதவரகள் இணைப்புக்குச் செலல -
                                      முதல் பகுதி -http://valarumkavithai.blogspot.in/2014/04/blog-post_26.html
                                              இரண்டாம்பகுதி - http://valarumkavithai.blogspot.in/2014/04/2.html  

           எவனுக்குப் பிள்ளையை
                                    எவள் பெற்றால் என்ன? – அவள்
தவறாமல் எனக்கு இன்பம்
                                    தருகின்றாள் அதுபோதும்!’                     -51

என்றிருந்த காலத்தின்
                                    பின்வந்த கோலமே
இன்றிருக்கும் பெண்ணடிமை
                                    எழுந்துவந்த அலங்கோலம்!                  -52

திருமணம் தோன்றியது  ஏன்?

நிலத்தைப் பயன்படுத்தி
                                    நிலையாக வாழ்ந்தபோது
உழுதல் முதலான
                                    உடல்உழைப்பு வேலைகளை               -53

ஆடவரே செய்துவர
                                    அவனுக்குத் துணையாக
ஆடுகளை மாடுகளை
                                    அடுக்களையைப் பெண்பார்த்தாள்!    -54

உற்பத்திக் கருவிகளை
                                    உருவாக்கும் பொறுப்பெல்லாம்
தன்பக்கம் வந்ததனால்
                                    தலைமையை ஆண்எடுத்தான்           -55

அதுவரையும் பெண்எவளும்
                                    ஆண்எவர்க்கும் அடிமையில்லை!
அதிகாரம் வந்தவுடன்
                                    அடக்குமுறை வந்தாச்சு!                     -56

உணவுக்கும் எஞ்சிநின்ற
                                    உபரி பெருகியதும்
தனக்குப்பின் அவையெல்லாம்
                                    தன்குழந்தைக்கே வேண்டும்               -57

என்னும் உணர்வின்மேல்
                                    எழுந்ததுதான் பெண்ணடிமை!
தன்னுடனே உறவாடும்
                                    தாரம்வேறு யாரோடும்                         -58

உறவாடத்தடை செய்தான்!
                                    அது நடந்தால், அவன்வழியே
பிறந்துவிடும் குழந்தைக்குப்
                                    போய்விடுமே இவன்சொத்து!              -59

என்பதனால் பத்தினியாய்
                                    இவள்இருக்க வேண்டுமென்றான்
என்பதனால் அவன்மட்டும்                
                      இருந்த்தில்லை ஒருக்காலும்!               -60

கற்பு  பலவகை! அத்தனையும் அடிமைமுறை

ஒருதார முறை இவ்வாறு
                                    ஒருவான பின்னும் இவன்
பிறபெண்கள் தொடர்பு இருந்தால்
                                    பெருமைக்கே அறிகுறி என்று             -61

இலக்கணமும் இலக்கியமும்
                                    இவன்நியாயப் படுத்தியவை!
தலைக்கற்பும் இடைக்கற்பும்
                                    தனித்தனியே விளக்கிவைத்தான்!      -62

இவன் திடுமென்று இறந்து விட்டால்
                                    இன்னொருவன் மறுபடியும்
இவளை மணந்து கொண்டால்
                                    இவன்சேர்த்த சொத்துக்கள்                 -63

பிறக்கும்அவன் பிள்ளைக்கும்
                                    போகுமென எண்ணி, இவன்
இறந்தால் உடன்கட்டை
                                    ஏறல்தலைக் கற்பு என்றான்                   -64
கணவன் இறந்ததும் மனைவியை உடன்கட்டை ஏற்றும்  “சதி” நிகழ்ச்சி

( இந்த நிகழ்வை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்டு
 “குமுதம்“ இதழில் வெளிவந்த எனது சிறுகதை “கன்வார்“
படிக்க  - http://valarumkavithai.blogspot.in/2013/12/blog-post_3773.html )
---------------------------------------------------------------------------------------------------------------- 
இருக்கும் கொடுமையில்
                                    இறப்பதே நல்லதெனக்
கருதவைத்த கொடுமை!ரூப்
                                    கன்வார்கள் கதைஅறிவாய்!                     -65

இவன்இறந்த பின்னு ம்அவள்
                                    இறக்காமல் இருந்தாலும்
அவளேதன் உணர்வுகளை
                                    அழித்தல் இடைக் கற்பு என்றான்!         -66

கவர்ச்சியாய் அவள் இருந்தால்
                                    காண்பவன் மணந்துகொள்வான்
கவர்ச்சியைக் குலைப்பதற்கே
                                    கழுத்துமூக்கை மூளியாக்கு!                    -67

பூவைத்துப் பொட்டுவைத்து
                         பொலிவாக அவள்இருந்தால்
தேவைக்குப் பிறன்யாரும்
                         தேடிவந்து விடுவானே?                            -68

வந்துவிட்டால் இவன் சொத்தை
                         வளைத்துப்போய் விடுவானே!
எந்தஉணர்வு அடிப்படையாய்
                         இருக்கிறது பார்த்தாயா?                           -69

தான்சுரண்டிச் சேர்த்தபணம்
                         தன்பின்தன் பரம்பரைக்குத்
தான்சேர வேண்டும்எனும்
                         தன்னலமே கற்பு முறை!                        -70

சொத்துரிமை தந்தால்
                         சுதந்திரமாய் விடுவாளே!
கொத்தடிமை போல் அவளைக்
                         கூண்டில் அடைத்துவைக்க                    -71

முடியாதே என்று மிக
                         முன்னேற்பாடாய் வீட்டுப்
படிதாண்டாப் பத்தினியாய்ப்
                         பண்பாடு சொல்லி வைத்தான்             -72

இப்போது சொத்துரிமை
                         இருவருக்கும் இருந்தாலும்
எப்படிச் சமம் வளரும்?
                         இருக்கிறதே பண்பாடு!                             -73

எழுதிய சட்டம்எனில்
                         எடுத்தெழுதி மாற்றிடலாம்
எழுதாத சட்டமாய்
                         ஏற்றிவைத்தான் இலக்கணத்தில்!      -74

கண்ணகிபோல் வாழ்வதுதான்
                         கற்புடைய வாழ்வுஎனில்
என்னசுகம் பெண்ணுக்கு?
                         எதற்கிந்த இலக்கியங்கள்?                    -75 

----------------------------------------------------------------------------------------

5 கருத்துகள்:

  1. கிஸ் ...தப்பு ...நச் என்று கடைசியில் முடித்து விட்டு ,நிறைந்தது என்பதற்கு அடுத்து என்ன ஒரு கேள்விக்குறி ?மீம்ண்டும் தொடரும் எண்ணம் உள்ளதா ?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    ஆகா....ஆகா.. தங்களின் கவிதை மழை என்னை நனைத்து விட்டது .....நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. எனக்கென்னமோ உங்களின் சிந்தனை வரிசையில் இருப்பதாகவே தோன்றுகிறது... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. எப்படி திட்டமிட்டு பெண்ணை அடிமையாக்கி இருக்கின்றனர்... :(

    பதிலளிநீக்கு
  5. அருமையாகவும், எளிய முறையிலும் உள்ளது ஐயா
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு