அய்யா காமராசர் பிறந்தநாள் !

புதுக்கோட்டை – ஜூலை,16
      தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த காமராசர் விழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன், எதிரிகளைப் பழிவாங்கும் அரசியல் உலகில் வித்தியாசமானவர் காமராசர், அவர், தன் கட்சிக்குள் தன்னை எதிர்த்து நின்று தோற்றுப் போனவர்களைத் தனது அமைச்சரவையில் முக்கியமான பொறுப்புக் கொடுத்த அரசியல் நாகரிக முன்னோடி என்று பெருந்தலைவர் காமராசருக்குப் புகழாரம் சூட்டினார்.
பள்ளித் தலைமை ஆசிரியர்  பன்னீர்செல்வம் தலைமையேற்க, தாளாளர் அருட்தந்தையார்  ராபர்ட் தனராஜ், நாட்டு நலப்பணித் திட்டத்தைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் துரை.திரவியம் வாழ்த்துரை வழங்கினார்.
நன்றி - தினமலர் நாளிதழ்
வள்ளலார் மாணவர் இலக்கியமன்றத்தைத் தொடங்கி வைத்தும், பள்ளிவளாகத்தில் மரக்கன்றுகளை நட்டும், முன்னதாக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்க்குப் பரிசளித்தும் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது – 
எழுபத்திரண்டு ஆண்டுகளே இந்த மண்ணில் வாழ்ந்த காமராசரை அவரது நூற்றுப் பன்னிரண்டாம் ஆண்டுப் பிறந்த நாளிலும் மக்கள் நினைவு வைத்துப் போற்றக்காரணம் அவரது அரசியல்கடந்த மனிதப்பண்புகள்தான். அன்றைய முதல்வர் ராஜாஜிக்குப் பின்னர் யார் முதல்வராவது என்று கட்சிக்குள் நடந்த தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற சி.சுப்பிரமணியத்தையும், அவருக்குத் துணையாக இருந்த பக்தவத்சலத்தையும் தான்அமைத்த அமைச்சரவையில் முக்கியமான பொறுப்புகளைத் தந்த பெருந்தன்மையால்தான் காமராசர் இன்றும் போற்றப்படுகிறார்
அமைச்சரவை அமைத்த விதத்தில் அவர் அரசியல் நாகரிகத்தைக் காட்டினார்.
கட்சிக்குள் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன் மொழிந்த பக்தவத்சலம் இருவரையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்
     அவரைப் படிக்காத மேதை என்கிறார்கள் ஏனென்றால், பலமொழி தெரிந்த அவர், பள்ளிப் படிப்பைக் குறைவாகத்தான் படித்தார். ஆனால் பெரும்படிப்புப் படித்த படிப்பாளிகளைவிடவும் மக்களைப்பற்றிக் கவலைப்பட்டு, மக்களுக்காகவே தன் வாழ்கயை அர்ப்பணித்தவர் அவர். அவருக்கு முன், வெறும் ஏழு சதவீதமாக இருந்த பள்ளிப்பிள்ளைகளின் வரவை முப்பத்தேழு சதவீதமாக உயர்த்திய சிந்தனையாளர் அவர். வெறும் ஏட்டுப் படிப்பல்ல, மக்களைப் பற்றிய சமூகஉணர்வே சிறந்த சிந்தனை என்று செய்துகாட்டியவர் அவர்.
ஒரு நாட்டு முன்னேற்றத்திற்குக் கல்வி அவசியம் என்று தன்காலத்தில் சுமார் 27,000 பள்ளிகளைத் தமிழ்நாடெங்கும் திறந்திருக்காவிட்டால் இன்றுள்ள பெரும் படிப்பாளிகள் எல்லாம் பட்டதாரிகளாக உயர்ந்திருக்க முடியாது. கல்விமட்டும் அல்ல, பாரதி சொன்னதுபோல “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்“ என்று, தமிழ்நாடெங்கும் ஏராளமான அணைகளைக் கட்டி, நீர்ப்பாசனத் திட்டங்களைக் கொண்டுவந்து வேளாண் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் அவர்தான்.
கல்வி, உழவுக்கு அடுத்தபடியாகத் தொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தந்த நுட்பமானவர் அதனால்தான்,  பெருந்தொழில் வளர்ச்சியோடு, வேலை வாய்ப்பைப் பற்றிச் சிந்தித்து திருச்சி பாரத மிகுமின் தொழிலகம் (பெல், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் உள்ளிட்ட ஏராளமான தொழில்களைத் கொண்டுவந்தார்.
முகஅழகை முக்கியமென்று நினைக்கவைக்கும் விளம்பரங்கைளைப் பார்த்து, அழகு பற்றியே கவலைப்படும் இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ளக் காமராசரிடம் ஒரு பெரும் தன்னம்பிக்கை இருந்த்து! அழகு, நிறத்தில் அல்ல, அன்பில்தான் இருக்கிறது என்பதை உணரவைத்த கருப்பழகர் அவர்தான். கருப்புக் காந்தி (காலா காந்தி) என்றழைக்கப்பட்ட அவர்தான் இரண்டுமுறை இந்தியப் பிரதமராகும் வாய்ப்பை மறுத்து, முதலமைச்சர் பதவியையும் துச்சமென நினைத்து மக்கள் தொண்டே முக்கியமாக்க் கொண்டு தலைவர்களை உருவாக்கிய பெருந்தலைவராக (கிங் மேக்கர்) உயர்ந்தார். அதனால்தான் அவர் பெருந்தலைவர்!
இவ்வாறு கவிஞர் முத்துநிலவன் உரையாற்றினார்.
முன்னதாக “கல்விக்கண் திறந்த காமராசர்“ எனும் எதார்த்த நாடகம் நடைபெற்றது, மாணவர்களின் உரை, பாடல், கவிதை, நடனம் முதலான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் ரவிச்சந்திரன் உரையாற்றினார்.
தமிழாசிரியர்கள் கலைச்செல்வி வரவேற்க, பாண்டிச்செல்வி நன்றிகூறினார். தனபால் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்களும், நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் வள்ளலார் இலக்கியமன்றப் பொறுப்பாளர்களும் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 
(நன்றி –தினமணி, தினமலர் நாளிதழ்கள்
       16-07-2014 திருச்சிப்பதிப்பு,       
நன்றி - தினமணி நாளிதழ்

பழைய பதிவுதான், நான்கு வருடம் முந்திய பதிவு, ஆனால், இன்றைய அரசியல், அரசுத் தலைவர்களைப் பார்க்கும்போது, அய்யா காமராசரை நினைக்காமலும், நெட்டுயிர்க்காமலும் இருக்க முடியவில்லையே!

---------------------------------------------------------------------------------- 
படம் – ஓவியஆசிரியர் திரு.தனபால்,தூய மரியன்னை மேநிப.புதுக்கோட்டை)

2 கருத்துகள்:

  1. தன்னிகரில்லாத் தலைவனைப் பற்றி எக்காலத்தும் பொருந்தும் பதிவு.

    பதிலளிநீக்கு
  2. அன்று தோற்றது நாம் தான்... இன்று வரை வெற்றி பெறவில்லை... இனி வாய்ப்பும் இல்லை...(!?)

    பதிலளிநீக்கு