‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’ நூலுக்கு பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் எழுதிய மதிப்புரை-
பேராசிரியர் ச.மாடசாமி |
முத்துநிலவன் எழுத்து-தொண்டை கட்டி உள்ளொடுங்கிய எழுத்தல்ல. கணீரென்று
சத்தமிட்டு ஒலிக்கும் எழுத்து அவர் எழுத்து. ஆம்! எழுத்து பேசுகிறது. முத்துநிலவனின் புத்தகம் பேசுகிறது.
முத்துநிலவனுக்கு ஒற்றை முகமல்ல. அவர் கவிஞர்; கட்டுரையாளர்; பேச்சாளர்; சமூகசிந்தனையாளர்; எல்லா வற்றுக்கும்
மேலாக ஓர் ஆசிரியர்.
ஆசிரியப் பணியில் இருந்த காலத்தில் மாணவர்கள் என் வீடு நிறைந்து இருப்பார்கள். அவர்கள் வீடு வராத நாள் இல்லை.நான்
தூக்கிச் சுமந்த இந்தப் பெருமிதம் முத்துநிலவனின் புத்தகத்தின் முன் உடைந்து
சிதறியது.’ முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’ வாசித்தபின் நான் எத்தனை மாணவர்களின் வீடுகளுக்குப் போயிருக்கிறேன்
என்று குற்றவுணர்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அபூர்வமாய் ஒன்றிரண்டு வீடுகள்
ஞாபகத்துக்கு வருகின்றன.
முத்துநிலவன் தம் மாணவர்களைப் பார்க்க வீடுவீடாகப்
போகிறார். அவர் மாணவர் வீடு தேடிப்
போகும் அனுபவங்கள் என்னை மயக்குகின்றன. வகுப்பறை ஆசிரியரைத் தன் வீட்டு வாசலில் பார்ப்பது மாணவர்க்கு எவ்வளவு பெரிய ஆனந்தம்!
கூல்டிரிங்க்ஸ் வாங்க ஓடும் தினேஷ், கையில் இருந்த விளக்குமாற்றை மறைத்து வரவேற்கும் கவிதா,ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்து வரவேற்கும் இணையதுல்லா,வீதியில் பார்த்ததுமே ‘அய்யா! வீட்டுக்கு
வாங்கய்யா!’ என்று வரவேற்கும்
விஜயலட்சுமி, தேய்த்துக் கொண்டிருந்த பாத்திரங்களைப் போட்டுவிட்டு ஓடி வந்து அழைக்கும் அபி என ஒவ்வொருவராக நம்முன் வந்து நிற்கிறார்கள்.மறக்கமுடியாத
பிள்ளைகள்.
மாணவர்களின் வீடு தேடிப்போன அனுபவத்தை முத்துநிலவன்விவரிப்பது நெஞ்சைத் தொடும் ஒரு கவிதை.
“பார்த்தது என்னவோ பத்து,இருபது
குழந்தைகளைத்தான். ஆனால் படித்ததென்னவோ, பலபுத்தகங்களில்
கிடைக்காத வாழ்க்கைப் பாடம்”.
கடுங்கோபத்தையும் அதன் விளைவாகப் பெருத்த மனச் சோர்வை யும் உண்டாக்குகின்றன இன்றைய கல்விக்கூடங்கள். பாடத்திட்டம், பாடம் நடத்தும் முறை,வெற்றியைக்
குறிவைத்து நடக்கும் சித்திரவதை, அவ்வப்போது வகுப்பறையில் தோன்றும் வன்முறை, அதற்குக் காரணங்களாகவும் தீர்வுகளாகவும் ஆசிரியர்களும்
அதிகாரிகளும் முன்மொழியும் அபத்தங்கள்- எல்லாமே நம்மைத் துன்புறுத்துகின்றன.
‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’ நூலிலும் இந்தக் கவலை பரவிக் கிடக்கிறது. மாணவர்களின் பன்முக ஆற்றல்களுக்கு இடமும் மதிப்பும் இன்றி தேர்வு வெற்றி ஒன்றே கொண்டாடப்படுவது
குறித்து முத்துநிலவன் கவலை கொள்கிறார். விமர்சனங்களை வைக்கிறார். அதற்கப்பால், இந்தக் கேவலத்தைக் கேலிக்குள்ளாக்கிச் சிரிக்கவும் செய்கிறார். அது முத்துநிலவன் ஸ்பெசல்!
“பாடமே இது பொய்யடா!-வெறும்
மார்க்அடைத்த பையடா!” என்பது
முத்துநிலவனின் புதுப்பாட்டு.
தேர்வு முடிவுகள் வந்ததும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் எழுப்பும்
வெற்றிக் கூச்சல்கள் சகிக்க முடியாதவை.கூச்சல்கள் எல்லாக் குற்றங்களையும் மறைத்து
விடுகின்றன. தோலுரிக்கிறார் முத்துநிலவன்.
’தனியார் பள்ளிகள் சாதனை!பின்னணி என்ன?’என்பது அருமையான ஆய்வுக் கட்டுரை.தனியார் பள்ளி மோகங்கொண்டோர் பிடிவாதங் களையும் அசைக்கக் கூடிய விதத்தில் கட்டுரை அமைந்து இருப்பது தனிச்சிறப்பு. கட்டுரையைப் படித்துவிட்டு
முத்துநிலவனுக்கு வந்த கடிதங்கள் ஏராளம். அவற்றுள் முக்கியமானது சுவாதி செல்வா என்ற தலைமை ஆசிரியர் எழுதிய கடிதம்.
“எங்கள் பள்ளியில் 5 மாணவர்கள்
மனவளர்ச்சி குன்றியவர்கள். என் பள்ளிக்கு நான் எப்படி முழுதேர்ச்சி தெரிவிக்க முடியும்? என் உதவி ஆசிரியர்களை நான் எப்படி கடிந்துகொள்ள முடியும்?அவர்கள் நன்றாகப்
பாடு படுகிறார்கள். நான் நல்ல தலைமை ஆசிரியர்.என் கடமையை நிறைவாகச் செய்கிறேன். மாணவர்கள் என்மீது கொள்ளைப் பிரியம் வைத்துள்ளார்கள். அது போதும்!” என்கிறார் சுவாதி
செல்வா. தெளிவும் திடமும் நிரம்பிய வார்த்தைகள். நல்ல முயற்சிகளும் நல்ல உள்ளங்களும்
ஒரு நூலின் வழி இப்படி இணைவது எத்தனை அற்புதம்!
தமிழ்ப் பாடத்திட்டம் குறித்து நெடுநாளாகவே நான் குமுறி வந்திருக்கிறேன். மூடநம்பிக்கைகளின் சேமிப்புக் கிடங்காக அது இருப்பது ஒரு காரணம்; மாணவர்களோடு உரையாட விரும்பாத ஓர் ‘அகங்கார மொழி’யில் அது தயாரிக்கப்படுவது மற்றொரு காரணம். ஆனால், ஆசிரியர்கள்
பொதுவாகப் பாடங்கள் பற்றிக் கவலை கொள்வ தில்லை.(மாணவன் சன்னல் வழியே பார்த்துக் கொண்டு இருந்தால்
கவலையும் கோபமும் கொள்வார்கள்). ’பாடப் புத்தகத்தில் என்ன இருக்கு?’ என்பதுதான் பலரின் பொதுவான அபிப்பிராயம்.
பாடப்புத்தகத்துக்குள் ஒழுங்கீனத்தின் விதைகள் ஊன்றிக் கிடப்பதைக் கண்கள் காணத் தவறுகின்றன. போகட்டும். முத்துநிலவனின் கறார்க் கண்களுக்கு அவை தப்பவில்லை.
‘தமிழறிவு,பகுத்தறிவு,சமூக உணர்வு சார்ந்த செய்திகளைத்தமிழ்ப்பாட நூல்கள் சரிவரத் தருவதில்லை-என்பது முத்துநிலவனின்மையமான குற்றச்சாட்டு. புராணக் குப்பைகளை அடைக்கும் சாக்குப்பையாகத் தமிழ்ப் பாடத்திட்டம் இருப்பதைத் தெள்ளத் தெளிவான
உதாரணங்களுடன் அவர் நிரூபிக்கிறார்.
எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ள குறிப்பு இது. “மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்து அருளிய அறுபத்துநான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் திருவிளையாடல்புராணம்.”
திருவிளையாடல் புராணம் வரலாற்று நூலாம்!கொடுமை! ‘திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார். ஆண்டுக்கு ஒரு பாட்டாக 3000 பாடல் எழுதினார்’ என்று இலக்கிய வரலாற்றில் விடைஎழுதி மதிப்பெண் வாங்கிய என் பள்ளிப் பருவ வாழ்க்கை நினைவுக்கு வந்தது.
திருவிளையாடற் புராணத்தை வரலாற்று நூல் என விவரிக்கும் காமெடி ஒரு
பக்கம்; பாரதிதாசன் குடும்ப
விளக்கில் அமைந்த சுயமரியாதைச் சிந்தனைகளை யெல்லாம் விட்டுவிட்டு “ஒரு பெண் காலையில் எழுந்து செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன?” என்று கேள்வி
கேட்டு பாரதிதாசனையும் பெண்ணையும் ஒரே நேரத்தில் அவமதிக்கும் ’தேர்வுத்தனம்’ இன்னொரு பக்கம்!
ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பாடத்துக்குள் நுழைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம் தனிக்கதை!
எல்லாக் கூத்துக்களையும் விவரிக்கிறது ‘தமிழ்ப் பாட நூல்களில் தமிழ்’ என்ற கட்டுரை.
இன்று வகுப்பறை வன்முறை குறித்துத் தாறுமாறாகப் பேச்சு கேட்கிறது. ஓர் அடிதடி நடந்து விட்டால் “நீதிபோதனை வகுப்பு வேண்டும்“ என்று சிலர் கருத்து உதிர்க்கிறார்கள். நீதிபோதனை வகுப்பில் என்ன சொல்வார்கள்? புராணக் கதைகளையும் பக்திக் கதை
களையும் பேசி மாணவர்களைக் கொல்வார்கள்.
உண்மையில் தீர்வுஎன்ன? ஆசிரியரும் வகுப்பறையும் காலத்துக் கேற்ற புதிய ரூபம் எடுப்பதிலும், வகுப்பறை மாணவர் களிடம் கட்டற்ற
நேசத்தை வெளீப்படுத்துவதிலுமே-வன்முறைக்கு எதிரான தீர்வு இருக்கிறது. முத்துநிலவன் இன்னும் எளிமையாகத் தீர்வை முன்வைக்கிறார். மாணவர்களைத் ‘தொட்டுப் பேசுங்கள்’ என்கிறார். ”சிறுவர்களைத்
தொட்டு ஆதரவாகப் பேசினால், தவறு செய்த மாணவன் நெகிழ்ந்து விடுவது உறுதி’ என்கிறார்.
நூலின் முகமாக அமைந்த கட்டுரை ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே’ என்பது. அக்கட்டுரையின் சாராம்சமான வரிகள் இவை:
”சாதாரணமான மதிப்பெண்களோடும் அசாதாரண மான புரிதல் களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு வா மகளே!”இது வேண்டுகோளா? இல்லை.
இது முழக்கம். மனித உறவுப் புரிதல்கள் பலவீனப்பட்டு- எத்தனைமார்க்? எத்தனாவதுரேங்க்? என்ற புள்ளிவிவரக் கணக்குகளின் கை ஓங்கிக் கிடக்கும் வகுப்பறைக்கு எதிரான முழக்கம்.
கல்வி குறித்த நூல்கள்கல்வியாளர்கள்,ஆசிரியர்கள் வீட்டுஅலமாரிகளில் மட்டும் கிடந்து என்ன பயன்?
நூல்கள் பெற்றோர்களைத் தேடி நடக்க வேண்டும். எளியோர் வீடுகளின் முன் போய் நிற்க வேண்டும்.
முத்துநிலவனின் எழுத்து இதைச் சாத்தியமாக்கும்.’ பேசும்எழுத்து’ நிச்சயம் நடக்கும்.’முதல் மதிப்பெண்
எடுக்க வேண்டாம் மகளே!’ அந்த நம்பிக்கையின் தொடக்கம்.
-பேராசிரியர்
ச.மாடசாமி - aruvi.ml@gmail.com
நல்லதொரு மதிப்புரை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
அண்ணா,
பதிலளிநீக்குபேராசிரியர் மாடசாமி அய்யா மீது எனக்கு என்றுமே பெருமதிப்பு உண்டு! அவர் எழுதும் நூல்கள் எல்லாம் ஒரு சிறந்த ஆசிரியாராக பணியாற்றவேண்டும் என்ற வேகம் கொண்டா வாசக உள்ளங்கள் தவறவிடகூடாதவை! அத்தகு மேதை நம் நூலை பாராட்டி இருக்கிறார் என்றாலும் கல்வி சிந்தனையில் நீங்களும் அவரும் இணையானவர்கள் தான் என்பதே இந்த வாசகியின் கணிப்பு! அவரது எனக்குரிய இடம் எங்கே? நூலைப்போல இந்த மு.ம.எ.வே.மகளே காலத்தை தாண்டி நிலைத்து நிற்கும் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை!
அய்யா,
பதிலளிநீக்குஉங்களின் இந்த நூலும் இனி வரப்போகும் நூல்களும் உங்களை பேசும் !
எனது புதிய பதிவு : மதமாற்றம் மனமாற்றமாகுமா ?
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post_21.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.
நன்றி
சாமானியன்
வணக்கம் சகோ
பதிலளிநீக்குஇதை விட வேறென்ன வேண்டும்...மிகச்சரியான மதிப்புரை...நான் பெரிதும் மதிக்கும் மாடசாமி அய்யாவின் எண்ணங்கள் அனைத்தும் குழந்தைகளை நோக்கி...அருமை
தங்கள் நூலினைப் பற்றிய பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் நூல் விமர்சனம், ஒரு நல்லதொரு சொற்பொழிவைப் போல படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.
பதிலளிநீக்குத.ம.1
அண்ணா, தங்களின எழுத்துபேசும்என்றஉண்மை யைக் கூறியவிதம்அனைவரும் ஈர்க்கும் வகையில்இருந்தது ஐயாவின் பேச்சு(பேசுவது போலவே இருந்தது)பலமுகமங்கள் கொண்டஎங்கள் அண்ணா வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு