ஈஸ்வர அல்லா தேரே நாம்
---நா.முத்துநிலவன்---
சனவரி 30ஆம் தேதி, 1948ஆம் ஆண்டு, டெல்லி பிர்லாமந்திர் வழிபாட்டுக் கூட்டத்தில் நேருக்கு நேராக வந்து, கைகூப்பி வணங்கி விட்டு, நெஞ்சுக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டிச் சுட்டதும் “ஏ! ராம்!“ என மரண ஓலமிட்டுத் தரையில் சரிந்த அந்த மாமனிதரின்
152ஆம் பிறந்த நாள்
இன்று!
கோட்சே, காந்தியைப் படுகொலை செய்ததை நியாயப் படுத்தி வழக்காடினான். ஆனால், கோடி கோடி மக்களின் கண்ணீரே வரலாறானது!
“இத்தனை ஆண்டுகளாக எங்களிடம் பத்திரமாக இருந்த காந்தியை,
ஆறுமாதம் கூட உங்களால் பாதுகாக்க முடிய வில்லையே?” என்று
ஆங்கிலேயர் ஒருவர், இந்திய நண்பரிடம் கிண்டலாகச் சொன்னாராம். சுருக்கென்று தைக்கக்கூடிய
அம்புதான்! ஆனாலும் ஏன் இழந்தோம், எப்படி இழந்தோம் என்னும்
சிந்தனை இப்போது மிகவும்தேவை
இந்திய ஒன்றியத்தைச்
சுற்றியுள்ள பாகிஸ்தான், இலங்கை, பர்மா,
வங்கதேசம் முதலான நாடுகளில் அவ்வப்போது ராணுவம் ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்து அதிகாரம் செய்ததுண்டு!
இந்தியா
விடுதலை பெற்ற இந்த 75 ஆண்டுகளில் ஒருநாள் கூட ராணுவம்
ஆட்சிக் கட்டிலில் ஏறாத ரகசியம், மற்றவர் கண்டு மயங்கும்
அதிசயம், மக்களின் மத-சகிப்புத் தன்மையும்,
மதப்பற்றுக் கடந்த நாட்டுப் பற்றும், ஜனநாயக நம்பிக்கையும்
தானே? இந்த மகத்தான உணர்வுப் பெருக்கை மக்கள் மனத்தில் ஊற்றெடுக்க
வைத்ததில் அந்த மாமனிதர் காந்திக்கு நிகர் யாருண்டு?
“நான் ஒரு சனாதன இந்து” என்று
அறிவித்துக் கொண்டவர்தான் அவர். “சமூக அமைதிக்குச் சாதிப் பிரிவுகள் தேவை,
ஆனால் தீண்டாமை இருக்கக் கூடாது” என்றதற்கொரு
நீண்ட மரபு உண்டு!
அதன் வெளிப்பாடே காந்தி!
“பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவர்க்கும் சமய நம்பிக்கை உண்டு!
ஆனால் எச்சமயத்தையும் அவர் சிபாரிசு செய்யவில்லை! அந்தத் திருக்குறளின்
அறன்வலியுறுத்தல் அதிகாரத்தை தனது நண்பர் டால்ஸ்டாய் வழியறிந்து, அதன் மூலத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழ்மொழியைக் கற்று, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று தமிழில் காந்தியைக் கையொப்பமிட வைத்தது
இந்த அறக்கருத்துகள்தான்!! மதுரையில்தான் அவரது உலகப்
புகழ்பெற்ற அரையாற்றம் மாற்றம் நிகழ்ந்தது. அதன் நூற்றாண்டை
இந்த செப்-22ஆம் தேதி வரலாற்று நிகழ்வாகக் கொண்டாடி
நெகிழ்ந்தனர் காந்தி அன்பர்கள்.
“கருநிறம் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்…
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே” என்றார் பாரதி! அடுத்த வந்த பாரதிதாசன்-
“இமயம் வாழும் ஒருவன் இருமினால்,
குமரி வாழ்வோன் மருந்து கொண்டு ஓடுவான்” என்றார்.
அடுத்து வந்த
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ,
இன்னும் எளிமையாக-
“ஆருமேல கீறினாலும் ரத்தம் ஒன்னுதான்,
ஆகமொத்தம் எல்லாருமே பத்தாம் மாசந்தான்” என்பது
நெத்தியடி!
இவையெல்லாம் நமது நீண்ட நெடிய சங்கஇலக்கியம் தொட்டு, பக்தி இலக்கிய காலத்திலும், சித்தர் இலக்கியத்திலும் தொடர்ந்த உயர்பண்பாடு! இராமாவதாரம்
பாடிய கம்பர், சிவனைப் பற்றிய புகழுரைகளை நூறு இடங்களுக்கு
மேல் வைத்த நுட்ப வெளிப்பாடும் அந்த மரபுதான்!
“ஒன்றே குலமும் ஒருவனே
தேவனும்” எனும் திருமூலரின் வரிகள் அப்படியே “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்பதன் பொழிப்புரைதானே?
இந்த
மரபுதான்
தமிழ்மரபு, குறள்மரபு, சித்தர் மரபு, இந்திய
ஒன்றியத்தின் உலகப் புகழ்பெற்ற மதச் சசகிப்புத் தன்மையின் உயர் மரபு! இதுவே காந்தியின் மரபு!
தமிழ்நாட்டில் வாழும் இந்துக்கள், வேளாங்கண்ணி மாதாவுக்கு “நேர்ந்து” கொண்டு, மண்டிபோட்டு ஊர்ந்து போய் மெழுகுவத்தி ஏற்றுவது சர்வசாதாரணம்! நாகூர் தர்காவில் சர்க்கரை வாங்கி பாத்தியா ஓதி வணங்கிப் படுத்துறங்கும் இந்துக்கள் ஏராளம்! அல்லாபாண்டி என இந்துக்கள் நடத்தும் இஸ்லாமியத் திருவிழாவும் உண்டு! பிள்ளையார் கோவில் கட்ட நிதிஉதவும் இஸ்லாமியரும் உண்டு! புதுக்கோட்டை-மதுரைச்
சாலையில் இஸ்லாமிய
மன்னருக்கு
இந்து மக்கள் கட்டிய “காட்டுபாவா பள்ளிவாசல்” போன்ற வரலாறு தெரியாதோர்தான் மதக் கலவரங்களை நடத்துகிறார்கள்! பல்வேறு சாதி-மதம் சார்ந்த மக்கள் வாழும் இந்திய
ஒன்றியத்தில் மக்களைப் பிரித்து, அரசியல் அதிகாரத்தை ருசிக்கின்ற, ருசிக்கத் துடிக்கின்ற
சுயநலத் தலைவர்கள் உள்ள வரை, “அரசியலில் மதம் கலவாத, எளிய, காந்தி போலும் தலைவர் இல்லையே?” எனும் ஏக்கம் தொலையுமா என்ன?
ரகுபதிராகவ
ராஜாராம் பதீத பாவன சீதாராம் – பாடல், காந்தியின் வழிபாட்டுப் பாடலில் இஸ்லாமியர்கள்
தனிமைப் படுகிறார்கள் என்பதால், “ஈஸ்வர
அல்லா தேரே நாம்” எனும் வரிகளைக் காந்தி சேர்த்தார்.
ஈஸ்வரனும் அல்லாவும் ஒருவரே என்பதை இருமதத் தலைவர்களுமே ஏற்கவில்லை. ஆனால், இந்த
வரிகள் என்றென்றும் காந்தியை நினைவு படுத்துவதாக வரலாற்றில் நிற்கின்றன. மக்கள், சாதி-மதங்களின்
பெயரால் கலவரப்படும் போதெல்லாம் நினைவில் எழும் வரிகளிவை!
ராமராஜ்யம்
அமைப்பதுதான் தமது லட்சியம் என்று கூறினார் காந்தி. கோட்சேயின் வாரிசுகளும் ராமனின்
ஆட்சியை அமைப்பதுதான் தமது நோக்கம் என்கிறார்கள். ராமனை ஏற்காதவர்கள் இந்த
நாட்டில் வாழத் தகுதியற்றோர் என்றும் சிலர் பேசுகிறார்கள்! இப்படி ஒருபோதும் காந்தி பேசியதில்லை! அவரது நவகாளி யாத்திரையே இதற்குப் பதில் கூறும்.
காந்தியிடம் அம்பேத்கர், நேதாஜி, ஜோஷி,
நேரு, பெரியாரும் கூட முரண்பட்டு நின்றதுண்டு! நூறு விழுக்காடும்
பின்பற்றத்தக்க மனிதர் யாருண்டு? ஒவ்வொருவரிடமும் அறிவைப்
பெறுவதுதானே அனுபவம்? இந்திய வரலாற்றில் “ஒற்றை ஆள் ராணுவமாய்”
நின்ற காந்தியின் மக்கள் ஒற்றுமைப் பணிகளை மறக்க முடியுமா? அவர் இறந்தபின், இந்த நாட்டைக் காந்திநாடு
என்றழைக்க வேண்டும் என்றவர் தந்தை பெரியார். அது அந்த
நேரத்து உணர்வல்ல சிந்தித்து வெளிப்பட்ட சொற்கள்! அர்த்தம்
பெரிது!
காந்தியைப் பொறுத்தவரையில்
ராம், ரஹீம் இருவரும் ஒன்றுதான், “வாய்மை மற்றும்
நியாயம் என்ற கடவுளைத் தவிரவேறு கடவுளை நான் அங்கீகரிக்கவில்லை” என்றார் காந்தி.
கோட்சே தனது
வாக்கு மூலத்தில் “பகவத்கீதை தந்த உத்வேகம்தான் காந்தியைக் கொல்லத் தூண்டியது. கடமையைச்
செய்தேன், பலனை எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லியிருந்தான். பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கக் கோரும்
இன்றைய சூழலில்தான் காந்தியின்
“ஈஸ்வர்-அல்லா”வுக்கான தேவை இன்னும் இன்னும் அதிக அவசியமாகிறது!
கோட்சேவை நாயகனாக,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ். நாடு முழுவதும்
சிலை வைக்கப் போவதாகவும் சொன்னார். எனில், கதை நாயகன்
யார், எதிர் நாயகன் யார்?
மதச்சார்பற்ற
அரசியலில், மக்கள் ஒற்றுமை பேணுவதில் மிகப் பெரிய தியாக வரலாறுகளைக் கொண்டது நமது
இந்திய ஒன்றியம்.
காந்தி உயிர்தந்து
காப்பாற்றிய மதநல்லிணக்கம், மக்கள்ஒற்றுமை, ஆகிய கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே அவருக்குச்
செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
அண்ணல் காந்தி
எம்மதம் ஆயினும்,
அவர்தான் எங்கள் தாத்தா!
அன்னை தெரசா எம்மதம் ஆயினும்,
அவர்தான்
எங்கள் அன்னை!
அப்துல் கலாம் எம்மதம் ஆயினும்,
அவர்தான்
எங்கள் வழிகாட்டி!
--------------------------------------------------------------------------------------
நா.முத்துநிலவன், எழுத்தாளர், தமிழாசிரியர்(ப.நி), புதுக்கோட்டை
தொடர்புக்கு – muthunilavanpdk@gmail.com
--------------------------------------------------------------------------------------
30.1.48 டெல்லிபிர்லாமந்திர்
பிரார்த்தனைக்காகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்து மத்தியில் காந்தியின் நேருக்கு நேராக வந்துநின்று, கரம்கூப்பி அவரை வணங்கிய பிறகு, துப்பாக்கியை அவரது நெஞ்சுக்கு நேராக நீட்டி கோட்சே சுட்டதும் அந்தமனிதர், “ஏ!ராம்!“ என மரண ஓலமிட்டு தரையில் சரிந்த நாள்!
தங்களைப் போலவே எனக்கும் மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் ” தீண்டாமை இருக்கக் கூடாது, சாதிப்பிரிவுகள் வேண்டும்” என்ற கருத்தில் உடன்பாடில்லை. ஆனால் பாகிசுதான் இசுலாமிய நாடாக பிரிந்து விடுதலை பெற்ற வேதனை தாங்காமல்தான் இந்தியா விடுதலை பெற்ற நாளில் அவர் நவகாளி பயணம் மேற்கொண்டார். மத நல்லிணக்கம் சிதைந்து மக்கள் ஒற்றுமை குலைகிறதே என்ற கவலை, அவரது கடைசிக்கால நடவடிக்கைகளில் வெளிப்பட்டதை பெரும்பான்மைச் சமூகம் அறிந்து அவரை ஆற்றுப்படுத்த முனைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாசிசக் கும்பல் அவரைக் கொலைசெய்யப் பல முயற்சிகளை மேற்கொண்டு நாதுராம் கோட்சேயைக் கருவியாக்கி 1948 இதே நாளில் சுட்டுக் கொன்றார்கள்.
பதிலளிநீக்குஅதிலும் அந்தக் கொலைகாரன் கையில் அப்துல்லா என இசுலாமியப் பெயரைப் பச்சை குத்தி, மதமோதலை உருவாக்கி சிறுபான்மை இசுலாமியர் பலரும் கொல்லப்பட்டது இந்திய வரலாற்றில் மறக்க முடியாத பெரும் வேதனை.
ஆனால் இன்றையச் சூழலில் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியும் கொலைகாரனுக்கு நாடெங்கும் சிலை அமைக்கவும் ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி அமைப்புகள் தீவிரம் காட்டுவதும், அதனை ஆளும் தரப்பு வெளிப்படையாகவே ஆதரிப்பதையும் பார்க்க மதுக்கூரார் கருத்துப்படி மறுபடியும் அல்ல மீண்டும் மீண்டும் காந்தி கொல்லப்படுவார் என்பதுதான் உண்மை.
என்ன செய்வது பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
காந்தியடிகள் முன்மொழிந்த உறுதியாக பின்பற்றிய மதநல்லிணக்கம், மத ஒற்றுமை, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
பதிலளிநீக்குஇன்றைய ஆட்சிமுறை தொடர்ந்தால் நாளைய தலைமுறை புத்தகத்தில் இப்படி படிப்பார்களோ!!?
பதிலளிநீக்கு"நம் தேசப்பிதா கோடசே" என்று!!!!!!!
அதைப்பார்த்து கோடசே சிரிக்கக்கூடும் ரூபாய் நோட்டிலிருந்து,..
காந்தியடிகள் முன்மொழிந்த உறுதியாக பின்பற்றிய மதநல்லிணக்கம், மத ஒற்றுமை, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.//
பதிலளிநீக்குமிக சரியான வார்த்தைகள்
சாதீயம் ஒழிய வேண்டும் என்று கூக்குரல் இடுவோர் பலரும் உதட்டளவிலேயே இதைக் கூறுகின்றனர். உண்மையில் சாதீயத்தில் குளிர் காய்பவர்களேஒழிய வேண்டும் இருக்க வேண்ர்டும் என்று கூறுபவர்களின் முகமூடியாகவே காந்தியும் கோட்சேயும் சித்தரிக்கப் படுகிறார்கள். சொல் ஒன்று செயலொன்று என்று இல்லாமல் வாழ்ந்த சத்தியவான் காந்திஜி.சரித்திரம் காலம் கடந்து பேசப் படும்போது இன்றைய தீவிரவாதிகள் அன்றைய மகான்களாகப் பேசப் படலாம். உதாரணம் தேவை இருக்காது. தீவிர வாதியா தலைவனா என்பது அந்தந்த கால தேச வர்த்தமானங்கள் படி நிர்ணயிக்கப் படும்.
பதிலளிநீக்குதற்போது நாக்பூரில் இருக்கும் நண்பர் காஸ்யபன் சியாமளம் அவர்கள் எழுதிய தனி அஞ்சல் - kashyapan1936@gmail.com
பதிலளிநீக்குஅருமை நண்பர் முத்துநிலவன் " ஈஸ்வர் அல்ல தேரே நாம் " என்று ஒரு இடுகை இட்டிருந்தார் !
சபர்மதி ஆஸ்ரமம் சென்றிருந்த போது அங்கு காந்தி அடிகளின் பிடித்தமான பாடல்கள் பற்றிய குறிப்பினை படித்தேன் !"வைஷ்ணவ ஜனதோ" என்ற பாடலை குஜராத்தைச் சேர்ந்த நர்சி மேத்தா என்ற சித்தர் எழுதியது என்று தெரிந்து கொண்டேன் ! "ரகுபதி ராகவ" பாடலை பாடியவர் ,எழுதியவர் யார் என்பது பற்றி எழுதவில்லை !
சென்னை வந்ததும் கடைகடை யாக ஏறி பழைய காசட்டுகளை வாங்கி பார்த்தேன் ! 1931ம் ஆண்டு அகில இந்திய ரேடியோவில் பாடிய அந்த பாட்டின் காசெட்டு கிடை த்தது ! பாடியவர் பெயர் விஷ்ணு தாமோதர் பலூஸ்கர் என்று இருந்தது ! பாட்டை எழுதியவர் பெயர் தெரியவில்லை !
அதை விட முக்கியமான விஷயம் 1931 ம் ஆன்டு காசட்டில் "ஈஸ்வர அல்லா தேரே நாம் " என்ற வரிகள் இல்லை !
பலுஸ்கர் பற்றி தேட ஆரம்பித்தேன் ! தற்போது தீண் டாமை ஒழிப்பு முன்னணியில் செயல்படும் கணேஷ் அவர்கள் நாகபுரியில் விமானப்படையில் இருந்தார் ! அவரும் நானும் தேட ஆரம்பித்தோம் ! நாகபுரியில் உள்ள "இந்தியா அமைதிமையம்" (India pe ace centre) என்ற அமைப்பினை அணுகினோம் ! அதன் இயக்குனராக இருந்தவர் ஜான் செல்லத்துரை ! தமிழ் நாட்டின் சேரன்மாதேவி யைச் சேந்தவர் ! குஜராத்வித்யாபீடத்தீல் முனைவர் பட்டம் பெற்றவர் !
அவர் இதற்கு பதில் சொல்ல குஜராத் வித்யாபீடத்தை சேர்ந்த நாராயண தேசாய் ஒருவரால் தான் முடியும் என்று கூறினார் ! நாராயண் தேசாய் ,அண்ணல் காந்தியடிகளின் செயலாளராக இருந்த மகாதேவ் தேசாயின் மகன் ஆவார் ! சிறுகுழந்தயாக காந்தியடிகளின் மடியி ல் தவழ்ந்து அவர்காதை திருகி விளையாடியவர் நாராயண தேசாய் ! தேசாய்க்கு 2011 ல் தொண்ணூருவயது ! அவரை சந்திக்க முடியவில்லை ! நொந்து நூலாகிப்போன எங்களுக்கு டாக்டர் ஜான் அவர்கள் வேறொரு நண்பர் மூலம் தகவல் கிடைக்க உதவினார் !
"குஜராத் மாநில மக்கள் கிரமங்களில் உள்ள சொலவடைதான் இது !" என்றார் அந்த நண்பர் !
300 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த பிரிட்டிஷ் வியாபாரிகள் சூரத் நகரில் தங்கள் சரக்குகளுக்கான கிட்டங்கிகளை வைத்திருந்தனர் ! போர்பந்தர் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றவும் ,இறக்கவும் தொழிலாளர்கள் வந்தனர் ! இவர்களில் பார்சிக்கள், ஜைனர்கள், கிறிஸ்துவர்கள் இந்துக்கள்,முஸ்லீம்கள் என்று இருந்தனர் ! இவர்கள் பக்கத்து கிரா மங்ககளில் வசித்து வந்தனர் ! எந்த பண்டி கைகளையும் ஒன்றாக கூடி கொண்டாடி மகிழந்தனர் ! "அரே 1ஈஸ்வர் க்யாஹை ! அல்லா க்யாஹை ! சப்கோ சன்மதி தேவ் ! " என்று சொல்வார்கள் !
காந்தியின் தண்டியாத்திரியின் போது அவர் புறப்பட்டபோது அவரோடு வந்தவர்கள் 78 பேர் ! செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகியது ! அவர்களோடு ஏராளமான துறைமுக தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டனர் !
மாலை நேர பிரார்த்தனை கூட்டத்தில் விஷ்ணு தாமோதர் பலுஸ்கர் பாடுவார் !
அவர் "ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதாராம் " என்று பாடியதும் ,தொழிலாளர்கள்
"ஈச்வர அல்லா தேரே நாம்
சப்கோ சன் மதி தே பகவான் " என்று எதிர் பாட்டு பாடுவார்கள் !
இதனைக் கேட்டு மகிழ்ந்த அண்ணல் காந்தி அடிகள் இனிமேல் இந்தவரியையும் சேர்த்து பாடுமபோடி கேட்டுக் கொண்டார் !
எங்கள் தேடல் வெற்றிகரமாக முடிந்தது !!!
(சுதந்திர போராட்ட வீரரும் பார்வை அற்வருமான விஷ்ணு திகம்பர் பலூஸ்கர் பற்றி தனியாக எழுத வேண்டும்! எழுதுவேன் )
காந்தியடிகள் முன்மொழிந்த உறுதியாக பின்பற்றிய மதநல்லிணக்கம், மத ஒற்றுமை, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
பதிலளிநீக்குஉண்மையான வரிகள்....
நல்ல பகிர்வு ஐயா...
பின்னூட்டங்களும் நிறைய பேசுகின்றன.
மிக நன்று.ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.coeducation என்பதின் தமிழாக்கம் இருபாலர் என்பது சரியா?இருபாலார் என்றுதானே இருக்கவேண்டும்?பாலர் என்றால் சிறுவர் என்றுதானே பொருள்?
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை! ஐயா! மத நல்லிணக்கம், சாதி ஒற்றுமை இல்லாத வரையில் காந்தி கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருப்பார். இது வேதனையே!
பதிலளிநீக்குமில்லியன்களை தமிழ் இலக்கிய மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கும் சங்கநாதம்.இதனையே காந்தியும் எதிரொவித்தார்.அதனால்தான் கருத்துமுரண் கொண்ட பெரியாராலும் பாராட்டப்பட்டார்.தமிழர்களுக்கு காந்தி ஏற்புடையது காரணம் அவர் மதவாதிகள். மதவாதிகளுக்குக் காந்தி ஏற்புடையவரல்ல. காரணம் அவர் மதநல்லினக்கவாதி.
பதிலளிநீக்கு