தமிழ்இனிது-41 --நன்றி - 02-04-2024 இந்து தமிழ் திசைகாட்டி நாளிதழ்பேச்சுத் தமிழின் பேரழகு!

பல்நோக்கு மருத்துவமனை, சரியா?

            தமிழ்நாடு அரசு, “ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை”  என்று பெயர்  வைத்துள்ளது. ஆனால், தனியார் பலரும் “பல்நோக்கு மருத்துவமனை” என்று வைத்துள்ளனர்! இதுதான் குழப்பம்.

“பல்நோக்குத் திட்டங்கள்“ பற்றிய செய்திகளையும் பார்க்கலாம். பத்தாம் வகுப்பு புவியியல் பாட நூலில் “இந்தியா - பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்”(பக்-169) என்றே உள்ளது! இதுபோல Multy purpose Projects, Multy Speciality Hospital  பல உள்ளன. தமிழில் மட்டும் -பல்நோக்கு என- ஏன் பல்லை நோக்க வேண்டும்? “பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்“ என்றால் குழப்பமே இல்லாமல்  ‘பல்லை நோக்கும் ஆய்வாளர்’ என்று பொருள் வருமே! பிறகு, பல்மருத்துவர் என்னாவது?!

எனவே, “பலநோக்கு“  என்பதை, பல வேறுபட்ட மருத்துவமும் செய்யக் கூடிய எனும் பொருளில்-  “பன்னோக்கு”  என்பதே சரி. இன்னும் எளிமையாகப் புரிய வேண்டும் என்றால், “பல நோக்கு” என்று பிரித்தே போடலாம். அல்லது, மற்ற பல்வேறு அரசுத் துறைகளில் உள்ளது போல “ஒருங்கிணைந்த” எனும் சொல்லைப் பயன்படுத்தினால் கூடுதல் நலம்.  

நோன்பு திறப்பா, துறப்பா?

இஃப்தார் எனில், ரமலான் மாத நோன்பு நோற்கும் இஸ்லாமியர், நோன்பு முடித்து மாலையில் அனைவரும் இணைந்து உணவருந்துவது. ஆனால் சுவரொட்டி சிலவற்றில் “நோன்பு துறப்பு” என்றும் வேறு சிலவற்றில் “நோன்பு திறப்பு” என்றும் போட்டிருப்பதுதான் குழப்பம்.   

ஒருநாள் உண்ணா நிலையை முடித்து -துறந்து- உண்பது எனில்,  தமிழில் “நோன்பு துறப்பு“ என்பதே சரி. பிறகு “திறப்பு” எப்படி வந்தது? “நோன்பு“ என்பதை வழக்கில் ”நோம்பு” என்கிறோம் அல்லவா? அப்படித்தான்! “நோன்பு துறப்பு“ என்பது எழுத்துத்தமிழ். “நோம்பு திறப்பு“ என்பது பேச்சுத்தமிழ். “நோம்புக் கஞ்சி” குடித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் தனிச் சுவை! மதம்கடந்த அன்பின் சுவை!

ஆமா’ல்ல? எனில், ஆமாவா? இல்லையா?

         பேச்சு வழக்கில் இப்போது பலரும் பயன்படுத்தும் சொல் “ஆமா’ல்ல?“ என்பது! அதாவது ஆமா, இல்லை!  இதன் பொருள் ஆமாம் என்பதா? இல்லை என்பதா? என்று யாரும் குழம்புவதில்லை, அந்தச் சூழலில் அது தெளிவாகவே புரிந்து விடும். இதில் ஆமா(ஆம்ஆம்), இல்லை எனும் இரு சொற்களும் எதிர் எதிர்ச் சொற்கள்! அது எப்படி ஒரே தொடரில் இணைந்து வருகின்றன? அதுதான் பேச்சுத் தமிழின் பேரழகு!   

            ‘அவனுக்கு எப்படி இது தெரிந்தது?’ ‘அவள் எப்படி இதை ஒத்துக் கொண்டாள்?’ போலும் உரையாடலில், அவர்கள் முன்பு நினைத்திராத ஒன்று புதியதாகத் தெரிய வரும்போது, இப்படி வரும். ஆங்கிலத்தில் இரண்டு எதிர்ச்சொல் சேர்ந்தால் ஒரு நேர்ப்பொருள் (Two Negatives Make a positive) வருவது போல! அட, ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்! சொல்லுக்கான பொருள் அகரமுதலியில் இருந்தாலும், பயன்படுத்தும் சூழலில்தான் அது முழுமையாகப் புரியும். சூழல் புரியாமல் செய்வது எதுவும் தவறாகி விடுவது போல, சூழல் புரியாமல் எழுதுவதும், பேசுவதும் கூடத் தவறாகி விடும்! அரசியலில் மட்டுமல்ல, பேச்சு வழக்கிலும் கூட இதெல்லாம் உண்டு’ல்ல?!  

---------------------------------------------------------- 

ஒரு பின்னிலை விளக்கம் 

இக்கட்டுரையின் இறுதிச் சொல்லை, இன்றைய இந்து-தமிழ் நாளிதழில் வந்திருப்பது போல “சகஜமப்பா” என்றுதான் எழுதி அனுப்பி விட்டேன். பிறகுதான் இக்கட்டுரையின் இறுதிச் சிறுதலைப்புக்கும் ஏற்ப இப்படி மாற்றலாமே என்று சற்றுத் தாமதாகவே அவர்களுக்கும் தெரிவித்தேன், அதற்குள் அச்சாகி விட்டது போல. சரி நமது வலையில் திருத்தி விடுவோம் என்று இப்படி மாற்றிவிட்டேன். இது நான் செய்த மாற்றம்தான். மாற்றியது நல்லாருக்கா? இல்ல இந்து தமிழில் வந்ததே நல்லாருக்கா? நண்பர்கள் சொல்லுங்களேன்... - நா.மு.,

---------------------------------------------------------

 

8 கருத்துகள்:

 1. அருமையான தகவல்கள் ஐயா! ‘பல்நோக்கு மருத்துவமனை’ எனும் சொல்லாடல் பற்றிய எனது போன மாதப் புலம்பலுக்கு இந்த வாரம் ஆறுதலளித்தமைக்கு நனி நன்றி!

  "நோன்பு திறப்பு" என்றுதான் சிறு வயதிலிருந்து செய்திகளில் படித்தும் கேட்டும் வருகிறேன். இது தவறு என்பதை அறிந்து அதிர்ச்சியாக இருக்கிறது! நோன்பை நிறைவு செய்வதுதான் நிகழ்ச்சியின் நோக்கம் என்றால் ‘நோன்பு நிறைவு விழா’, ‘நோன்பு முடிப்பு விழா’ எனலாம். குழப்பமில்லாமல் போகும்.

  "ஆமால்ல" எனும் பேச்சுமுறைத் தமிழழகு பற்றிய விளக்கம் சுவை! இப்படிப்பட்ட விளக்கங்கள் எளிய மக்களிடம் இத்தொடரை எடுத்துச் செல்லும் என நம்புகிறேன்.

  சகஜமப்பா, உண்டுல்ல ஆகிய இரண்டுமே நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் கடைசிச் சொல்லில் திருப்பம் வைப்பது சுவைதானே? அவ்வகையில் "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற அந்தத் தேய்வழக்கை (Cliche) விட இது கூடுதல் சுவைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஏப்ரல் 02, 2024

   வழக்கம் போல உங்கள் பின்னூட்டமே படிக்க ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் புதிய புதிய தகவல்களைத் தருவதாகவும், எழுதும் என்னை உற்சாகமூட்டுவதாகவும் உள்ளது. நன்றி நண்பா

   நீக்கு
 2. தமிழின் இன்னொரு அழகை திறந்து காட்டியமைக்கு நனிநன்றி. தமிழைத் துறக்க வைக்கும் வணிக-கல்விச் சூழலில் இப்படியான கட்டுரைகள் வந்து தமிழார்வத்தைக் கூட்டட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஏப்ரல் 02, 2024

   அதிலென்ன சந்தேகம்? பெரும் பெரும் இலக்கணப் புலவர்களை விடவும் மொழியை நூற்றாண்டு கடந்து கொண்டு செல்லும் சாதாரணப் பாமரத் தமிழர்கள்தாம் என்றும் தமிழ்வளர்ச்சியின் மையம். அவர்களின் பேச்சு வறட்டுத் தத்துவங்களை விட்டு வாழ்வியலைக் கொண்டிருப்பதால் அதன் அழகே அழகு! “பன்னாட்டு, கண்ணாடி போட்ட சிகை அலங்காரக் கடையைக் கடந்து போகும் கிராமத்துச் சிறுமியின் பேரழகு” என்பது போல ஒரு கவிதை படித்தது நினைவுக்கு வருகிறது. பேச்சுத் தமிழ்தான் தமிழின் உயிர்நாடி மற்றும் அதன் முக்கியத்துவம் அறிந்துதான் தொல்.இலக்கணத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனார், “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி” என்று வழக்கை முன்னே வைத்திருக்கிறார்!

   நீக்கு
 3. நோன்பு திறப்பு இல்லை நோன்பு துறப்பு என்பதே சரி....
  ரமலான் மாதத்தில் தங்களுடைய அறிவுறுத்தல் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்புதன், ஏப்ரல் 03, 2024

   ஆம் நண்பரே. பிரபல பேச்சாளரும் பேராசிரியருமான சகோதரி பர்வீன் சுல்தானா விகடன் முகநூல் கேள்வி பதிலில், துறப்பு என்பதுதான் சரி என்றாலும் “நோன்பைத் துறக்க விரும்ப முடியாதில்லையா? எனவே திறப்பு என்பதே சரியாக இருக்கும்” என்று கூறியதாக நண்பர் ஒருவர் இணைப்பை அனுப்பியிருந்தார். இதில் துறப்பு என்பது நிலையானதல்ல. அன்று துறந்து அடுத்த நாளே தொடங்குவதுதானே? இதுதான் தமிழர் வாழ்வியல்! இந்துக்களில் கூட “இன்னிக்கு அமாவாசை, விரதம் விட்டுட்டுத்தான் வர முடியும்” என்று சொல்வதைப் பார்க்கலாமே. அன்று ஒருநாள் தான் என்பதால் விடுவதும் துறப்பதும் சரிதானே? வழக்கில் திறப்பு என்பதையும் நாம் தவறுகாணமுடியாது என்பதையும் சொல்லிவிட்டேன். சரிதானே?

   நீக்கு
 4. வெகு காலமாக தெரிந்து கொள்ள முயன்ற பல்நோக்கு பல்நோக்கு பலநோக்கு விவரம் அறிந்தேன் நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான விளக்கம். நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு