தமிழ் இனிது-42


தமிழ்மரபு உயிர்ப்போடு உள்ளதா?

சிந்தாமல்  சிதறாமல்..

இது தேர்தல் நேரம். “தமிழனுக்கு வாயெல்லாம் பல், பல்லெல்லாம் சொத்தை“ என்ற கந்தர்வன் கவிதைதான் நினைவுக்கு வருகிறது. வாக்குக் கேட்போர், “உங்கள் வாக்குகளை, சிந்தாமல் சிதறாமல் எங்களுக்கே போடுங்கள்” என்கிறார்கள். நீர்மப் பொருள்தான் வழிந்து சிந்தும் (எண்ணெய் தரையில் சிந்தும்), திடப்பொருள் உடைந்து சிதறும் (கண்ணாடி உடைந்து சிதறிவிட்டது). எனில், சிந்தவும் சிதறவும் நமது வாக்கு என்ன, திரவப் பொருளா? திடப்பொருளா? அப்படிப் பேசிப் பழகிவிட்டார்கள்! வாக்களிப்பது ஒவ்வொருவரின் வாழ்க்கைக் கடமை! வாய்ச்சொல்லில் உண்மை தேர்வது வாழ்க்கைக் கடன்!   

மக்கள் தமிழ் கொச்சையல்ல!

         பேச்சுத் தமிழைக் கொச்சை(vulgar) என்று சொல்வது தவறு. உலக மொழி அனைத்திலும் பேச்சுமொழி, எழுத்துமொழி இரண்டும் உண்டு. எழுத்து இல்லாத மொழிகள் பேச்சுமொழியால் மட்டுமே  வாழ்வதுண்டு. நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தும், ஆங்கில எழுத்துகளைக் கொண்டே எழுதப்படுகின்றன! எழுத்திலக்கியம் வந்த பின்னரே இலக்கணம் உருவாகும். ‘எள்ளில் இருந்து எண்ணெய் எடுப்பது போல, இலக்கியத்தில் இருந்தே இலக்கணம் உருவாக்கப்படும்‘

இலக்கணத்தின் முன்னோடி பேச்சுவழக்கே என்பதால்தான் தொல்காப்பியத்துக்குப் பாயிரம் (அணிந்துரை) தந்த பனம்பாரனார் “வழக்கும் செய்யுளும்” என்று வழக்கை முன்னே வைத்தார்! இப்போது, பன்னாட்டுப் பண்பாட்டுக் கலப்பாலும் பிறமொழியாளர் வாழ்வியல் தொடர்பாலும் நுழையும் வேற்றுமொழிச் சொற்களை ‘இழுத்துப் பிடித்து’ தமிழ் இலக்கண மரபைக் காப்பதும் பேச்சுமொழி வழக்கே!  “உயிர் மெய்யல்லன மொழிமுதல் ஆகா” என்னும் இலக்கணம் அறியாத படிக்காத கிராமத்துக் கிழவி, ப்ரியா(Priya)  என்பதை பிரியா என்பது எப்படி? அப்படி, தமிழ் எழுத்துகளில் மொத்தம் 24எழுத்துகள்தான் மொழியிறுதியில் வரும் என்னும் நன்னூல் படிக்காத பாமரர் ஒருவர் Road என்பதை ரோடு என்பதும், Nut-என்பதை நட்டு என்பதும் எப்படியெனில் அதுதான் தமிழரின் வாழ்வு, பண்பாடு, உச்சரிப்பு முறையின் மரபு! இதுபோல, படித்தவர்கள் கலப்பதும், படிக்காதவர்கள் தவிர்ப்பதுமான நுட்பத்தால் தான் தமிழ்மரபு இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது!

ஆனால், வரம்பின்றிப் பேச்சுமொழியை ஏற்றால் அதுவே புதிய மொழி தோன்றவும் காரணமாகிவிடும். இன்னும் சில நூற்றாண்டுகளில் சென்னைத் தமிழ் வேறொரு கிளை மொழியாக உருவெடுப்பது உறுதி! கொங்குத்தமிழ், நெல்லைத்தமிழ் சற்றே தாமதமாகலாம். எனவே, இலக்கணமாக அச்சுறுத்தாமல், பள்ளிக் குழந்தைகளுக்கு வாழ்வியல் மொழிநடையைக் கற்பிக்கும் தேவை உள்ளது.  

எழுத்துப் பேணும் தமிழ் உறவுகள்!

         ஔவையின் ஆத்திசூடியில் “ஙப்போல் வளை“ என்றொரு தொடர் வரும். இதற்கு, “வாழ்க்கையில் முன்னேற ஏற்றம், இறக்கம், வளைவு உயர்வு அனைத்தையும் கற்க வேண்டும்“ என்று, ங எழுத்தின் அமைப்பைக் கொண்டு விளக்குவதுண்டு.  மாற்றிச் சிந்தித்தால், தமிழின் நுட்பத்தைப் புரிந்து சொல்லலாம்!

ங வருக்கத்தில் 12எழுத்துகள் உள்ளன. அதில், இந்த ங என்னும் எழுத்தைத் தவிர மற்ற 11எழுத்தும் பயன்படுவதில்லை! ங என்னும் ஓர் எழுத்து, மற்ற 11எழுத்துகளையும் காப்பாற்றி வருவது போல, “உடல் நலமற்ற, மூத்த, குறையுள்ள மனிதரை, நாம்தான் காப்பாற்ற வேண்டும்” என, எழுத்தின் வழி வாழ்வியல் கற்பிக்கலாமே! தமிழ் இனிது!

------------------------------------ 

(வெளியீட்டுக்கு நன்றி-09-04-2024 இந்து தமிழ் நாளிதழ்)

10 கருத்துகள்:

 1. நு ப்போல் வளை அர்த்தம் தெரியாமல் இருந்தது கற்றுக் கொண்டேன் நன்றி தோழர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்புதன், ஏப்ரல் 10, 2024

   இதை நான் சொல்வதால் எனது சிந்தனை என்று நினைக்க வேண்டாம். ஏற்கெனவே பலரும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றைப் பார்க்கும் முன் கல்லூரிக் காலத்திலேயே எனக்கும் தோன்றியதால் எழுதினேன். அறிஞர்கள் மட்டுமின்றி ஓரளவு சிந்தித்தாலே தோன்றும் கருத்துத்தான் இது.

   நீக்கு
 2. சிந்தாமல் சிதறாமல் விளக்கம் ங விளக்கம் அளித்த ஐயாவிற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்புதன், ஏப்ரல் 10, 2024

   நன்றி நண்பரே. இன்னும் கொஞ்சம் கவனமாக உள் நுழைந்தால் பெயரையும் இடலாமே?

   நீக்கு
 3. சுவையான விளக்கங்கள் ஐயா!

  சிந்தவும் சிதறவும் வாக்கு என்ன திடப்பொருளா, திரவப்பொருளா? சிந்திக்க வைத்த கோணம்!

  இன்னும் சில நூற்றாண்டுகளில் சென்னைத் தமிழ் தனி மொழியாகி விடும் என்கிற உங்கள் கருத்தில் மதிப்புடன் மாறுபடுகிறேன். நான் பார்த்த வரையில் சென்னைத் தமிழில் இப்பொழுது அவ்வளவாக யாரும் பேசுவதில்லை ஐயா! படிக்காதவர்கள் மட்டும்தான் அப்படிப் பேசுகிறார்கள். படித்தவுடனே அல்லது படித்தவர்களுடன் கலந்து பணியாற்ற, வாழத் தொடங்கியவுடனே தமிங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். கல்வி குறித்த விழிப்புணர்வு மட்டுமின்றி ஆங்கில வழிக் கல்வியும் நாளுக்கு நாள் பெருகி வருவதால் சென்னைத் தமிழ் தனி மொழியாக வாய்ப்பு இல்லை என்பதே என் பணிவன்பான கருத்து. மற்றபடி இலக்கணம் எனும் பெயரில் அச்சுறுத்தாமல் தமிழை வாழ்வியல் மொழியாகக் கற்பிப்பது என்கிற உங்கள் கருத்தில் என்றும் நான் உவப்புடையவனே என்பதைத் தாங்கள் நன்கறிவீர்கள்!

  "ஙப்போல் வளை" எனும் ஆத்திசூடிக்குத் தாங்கள் தந்த விளக்கம் நெக்குருக வைத்தது! ஏற்கெனவே சொன்னதுதான் என்றாலும் மீண்டும் சொல்கிறேன், தங்கள் பொதுவுடைமைப் பார்வையே தமிழ் மீது இப்படிப் புதுப் புது வெளிச்சங்களைப் பாய்ச்சுகிறது! மகிழ்ந்து வியக்கிறேன் உங்களை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்புதன், ஏப்ரல் 10, 2024

   கருத்துக்கு நன்றி நண்பரே. ஆனால், “எந்தக் கொம்பனும் தமிழைக் காப்பாற்ற வேண்டியதில்லை! அது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் வல்லமை உடையது” என்று ஜெயகாந்தன் பேசியதை நேரில் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அது அவரது வழக்கமான பேச்சு பாணி. ஆனால், ஆயிரம் ஆண்டுக்கு முன் வடமொழியும் வட்டார வழக்குகளும் சேர்ந்துதான் கன்னடம் தெலுங்கு, மலையாள மொழிகள் ஒரு சில நூற்றுாண்டுகள் இடைவெளியில் ஒவ்வொன்றாகக் கிளைத்தன. தமிழில் வடமொழி பேரளவில் கலந்துவிடாமல் தனித் தமிழியக்கம் வந்து காத்துநின்றது. சென்னைத் தமிழ் அப்படி உருவாகி விடாது என்பதற்கு எந்த உறுதியும் யாரும் தரவியலாது. பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் வீட்டில் அவரவர் வழக்கையே பேசுகிறார்கள். அதுதான் நிற்கும். எனினும் எச்சரிக்கை தேவை என்பதே என் கருத்து. தங்கள் கருத்துப் படி நடக்காத நிலை, என் கருத்து தவறு என்னும் நிலை வந்தால் அதை விட வேறு மகிழச்சி என்ன இருக்கும்?

   நீக்கு
  2. கண்டிப்பாக ஐயா அப்படி அது நடவாமல் போனால் நம் இருவருக்குமே மகிழ்ச்சிதான்!

   நீக்கு
 4. "ஙப்போல் வளை" மிகச் சிறப்பு தோழர்

  பதிலளிநீக்கு
 5. மிகவும் அருமை. நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 6. ”படித்தவர்கள் கலப்பதும், படிக்காதவர்கள் தவிர்ப்பதுமான நுட்பத்தால் தான் தமிழ்மரபு இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது!” உண்மை! படிக்காதவர்கள் தவிர்ப்பதை நகைப்பதுதான் நடக்கிறது, நான் கூட அறியாமல் செய்திருக்கிறேன் பள்ளி பருவத்தில்!

  ங - ”உடல் நலமற்ற, மூத்த, குறையுள்ள மனிதரை, நாம்தான் காப்பாற்ற வேண்டும்” என, எழுத்தின் வழி வாழ்வியல் கற்பிக்கலாமே! ” உங்கள் உள்ளத்தின் கண்ணாடியாக இவ்வரிகள்!

  தமிழ் இனிது!

  பதிலளிநீக்கு