(நன்றி -இந்துதமிழ்-30-4-2024) |
“எண்ணும் எழுத்தும்”என்றால் என்ன?
‘எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள்’ -குறள்-392. இதற்கு, எண் - கணிதம்,
எழுத்து -இலக்கியம் என்றே பலரும் விளக்குவர். ஆனால், கலைஞர், ஆர். நல்லக்கண்ணு,
கவிஞர் இன்குலாப் முதலானோரின் ஆசிரியர் சி.இலக்குவனார், ”எண் எனப்படும் அறிவியலும்(Science), எழுத்து எனப்படும் கலையும்(Arts), வையத்தில் வாழ்வார்க்கு இரண்டு கண்கள்” என்று பொருள் சொல்லி வியக்க வைக்கிறார்!
இப்போது உயர் கல்விப் பிரிவுகள் பலவாயினும், அடிப்படை இரண்டுதான்!
“ஆனால், ‘Science அறிவியல் அல்லவா? அது எப்படி எண் கணக்கில் வரும்?”
என்றால், அறிவியலும் கணக்கின் அடிப்படையில் வந்தது தானே? தண்ணீரை அறிவியல் H20
என்கிறது. இருபங்கு ஹைட்ரஜன் ஒருபங்கு ஆக்சிஜன்! ஆக,
அறிவியலின் அடிப்படை கணக்கே என்பதால் எண்ணறிவு அடிப்படையாகிறது! “எண்ணும்
எழுத்தும்”தான் அடிப்படைக் கல்வி என்பது, இப்போது கலை,அறிவியல் (Arts and Science)
கல்லூரிகளுக்கும் பொருந்தும் அல்லவா! இதுதான் குறள் நுட்பம்!
கண்டிப்பாகவா? கனிவாகவா?
கண்டிப்பாக, உறுதியாக, நிச்சயமாக எனும் சொற்களை ஒன்றாகவே நினைக்கிறோம். ஆனால் இட
வேறுபாட்டால் பொருள் மாறுவதுண்டு. நண்பரிடம் ஓர் உதவி கேட்ட போது அவர்,
“கண்டிப்பாகச் செய்கிறேன்” என்றார். நான், “ஏன் கண்டிப்பாக? கனிவாகவே செய்யலாமே?”
என்றதும் அவர் சிரித்து விட்டார்! இந்த இடத்தில், உறுதியாக என்னும் பொருளில் அவர்
சொன்னாலும், கண்டிப்பு எனும் சொல்லுக்கு “கடிதல்” எனும் பொருளும்
உண்டல்லவா? ‘குற்றங் கடிதல்’ என்றொரு அதிகாரமே திருக்குறளில் உள்ளதே! குழந்தைகள்
வளர்ப்பில் தண்டிப்பை விட, கனிவும், தேவையெனில் கண்டிப்பும் தானே நல்ல
பலனளிக்கும்?
படுத்துவது ஏன்?
‘கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்’ (You are requested) என்பது ஆங்கில வழிச்
சிந்தனை! இந்தச் செயப்பாட்டு வினையில் ஒரு அந்நியத்தனம் கலந்த அதிகார தோரணை
இருக்கும். உயர் அலுவலர்கள் தமக்குக் கீழுள்ள ஊழியரிடம் “கேட்டுக் கொள்கிறேன்”
என்று சொல்ல முடியாத மேட்டிமைத்தனம், அடிமைத் தனத்தின் மறுபக்கம்!
எழுத்தர்களில் கீழ்நிலை, உயர்நிலை, ஏவலர்(பியூன்) -LDC, UDC, OA- எனும் பணி
நிலைகளைப் பின்னர் முதுநிலை உதவியாளர்(Senior Asst), இளநிலை உதவியாளர்(Junior
Asst), அலுவலக உதவியாளர்(OA) என்று மாற்றிய காரணமும் சரிதான். எனினும் செயப்பாட்டு
வினை மாறவில்லை!
இப்போது, திருவிழா மற்றும் மரண அறிவிப்புகளில், “கேட்டுக் கொள்ளப் படுகிறோம்”
என்கிறார்கள்! தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் நடக்கும் புகழ்பெற்ற விவாத அரங்கில்
– ஏப்-14அன்று - “பரப்பப் பட்டிருக்கிறது” “தெரியப் படுகிறார்கள்” என்றெல்லாம் வந்ததைப்
பற்றி வருந்தினார், திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரி முதல்வர் முனைவர்
வ.கிருஷ்ணன் அவர்கள். தமிழர்களே! இப்படித் தமிழைப் ’படுத்த’லாமா!
நன்பகலா? நண்பகலா?
வெக்கை அடிக்காத நல்ல பகல் ஆயினும், அது நன்பகலாகாது! நண்பகல் என்றே சொல்ல
வேண்டும்! நள்-நடு. நள்ளிரவு என்னும் எழுத்துமொழி, பேச்சில் ‘நடுச் சாமம்’
ஆகிறது. யாமம்-சாமம்-இரவு. நள்ளிரவில் கூவுவது சாமக் கோழி ஆனது! “நள்ளென்
யாமத்தும் பள்ளி கொள்ளான்“-நெடுநல்வாடை-186. ஆக, என்ன தான் நல்ல இரவாக இருந்தாலும்
அது நல்லிரவு ஆகாது! நள்ளிரவு என்பதே சரி.
-----------------------------------------------------------------------------
அருமையான விளக்கம்...வாழ்த்துகளுடன்
பதிலளிநீக்குநன்றியும் வணக்கமும் அய்யா
நீக்குநடைமுறையில் பிள்ளையாகப் பயன்படுத்துகின்ற சொற்களுக்கான நல் விளக்கம் அருமை ஐயா. படுத்தலில்லாது பயன்படுத்துதல் வேண்டும் என்ற கருத்து மிக அருமை ஐயா.
பதிலளிநீக்குபிள்ளையாக? .... ஓ..பிழையாகவா? இந்தக் கணியில் தட்டச்சு செய்தவுடன் திரும்பப் பார்க்கவில்லையென்றால் இப்படித்தான்..
நீக்குநன்றி சகோதரி
தமிழைப் போலவே இனிமையான தகவல்கள் ஐயா!
பதிலளிநீக்குஎண் பற்றிய மொழிப்போராளி இலக்குவனார் ஐயாவின் விளக்கம் வியப்பு. கணிதம் பற்றி இதே போல் சில கருத்துக்கள் ஆங்கிலத்திலும் உண்டு. Mathematics is the "King of all Arts", "Queen of all Sciences", and "Mother of Engineering & Technology" என்பர். காரணம் இவை எதுவுமே கணிதம் இன்றி அமையாதவை.
கண்டிப்பு பற்றிய உங்கள் விளக்கம் நகைநயமிக்கது! இப்படி இடத்துக்கேற்பப் பொருள் வேறுபடுவதை வைத்துத் தமிழில் உள்ள நகைச்சுவைத் துணுக்குகள் கணக்கில் அடங்காதவை. இதுவும் இனி பரவும் என நம்புவோம்!
கேட்டுக் கொள்ளப்படுவது, அறியப்படுவது என ஆங்கிலத்தால் தமிழில் பிறவினை படும் பாடு சொல்லி முடியாதது. "பரப்பப்பட்டிருக்கிறது" என்பது கூடத் தேவலாம். ஆனால் "தெரியப்படுகிறார்கள்" என்றெல்லாம் ஊடகங்களிலேயே பேசுகிறார்கள் என்றால் காலக்கொடுமை!
"என்னதான் நல்ல இரவாக இருந்தாலும் அது நல்லிரவு ஆகாது! நள்ளிரவு என்பதே சரி" - சுவைத்தேன்.
நன்றி நண்பா! கண்டிப்பாக.. கனிவாக.. இந்தத் தொடர் பரவியிருப்பதை நண்பர்களின் கருத்துப் பகிர்வின் வழி அறிந்து மகிழ்கிறேன்.
நீக்குஆகா! நானும் பல இடங்களில் கண்டிப்பாகச் செய்கிறேன் எனும் பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன். இனிமேல் கனிவாகவும் உறுதியாகவும் செய்கிறேன் அண்ணா.
பதிலளிநீக்குபண்ணு தமிழ் போல படுத்துத் தமிழ் வந்துவிட்டது போலவே!! கவனம் கொள்ள வேண்டிய ஒன்று.
தமிழ் இலக்கியத்தோடு பொது அறிவையும் சேர்த்து ஊட்டும் உங்கள் பணி போற்றத்தக்கது. நன்றி அண்ணா தமிழ் இனிது!
நன்றி கிரேஸ். பண்ணித் தமிழ் என்பதைத்தான் குறிப்பிடுகிறாய் என்று நினைக்கிறேன். அதுவும் படுத்தும் தமிழும்தான் புதிய தமிழ்க்கேட்டினெ் இளைய வரவுகள்! என்னா அக்குறும்பு!
நீக்குமுத்துநிலவன் அவர்கள் தமிழ்வளர்க்க வளர்கிறார்கள்.வாழ்க அவர்தம் தமிழ்த் தொண்டு.
பதிலளிநீக்குதமிழுயரத் தானுயர்வான் தமிழன்,
நீக்குதமிழயரத் தானயர்வான் - பா.தா.
அருமை அருமை அருமை ஐயா
பதிலளிநீக்குநண்பகல் நன்றி ஐயா
பதிலளிநீக்கு