‘தமிழ் இனிது’ தொடர் நிறைவடைகிறது, ---நண்பர்களுக்கு எனது வேண்டுகோள்!

 அன்பினிய உங்களுக்கு என் தோழமை வணக்கம்.

வாராவாரம் ஆரவாரமாக இல்லாவிட்டாலும் நமது “தமிழ்இனிது” தொடர்பான அவசியமான கருத்துகளை எனக்குத் தெரிவித்து வந்த நண்பர்களுக்கும், கருத்துத் தெரிவிக்கா விட்டாலும் தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும்  ஒரு செய்தி :

“தமிழ்இனிது“ தொடர் விரைவில் நிறைவடைகிறது! தொடரை வெளியிட்ட “இந்து-தமிழ்“ நாளிதழ் நிறுவனமே, இதே பெயரில் நூலாக்கி வெளியிட உள்ளனர். ஜூன்-4ஆம் தேதி 50ஆவது கட்டுரை வெளிவந்த பின் ஜூன் மாதமே அச்சிட்டுத் தருவதாகச் சொல்லியிருக்கின்றனர்! (ஜூலை முதல்வாரம் FeTNA அழைப்பை ஏற்று நான் அமெரிக்கா போகும்போது எடுத்துச் செல்ல விருப்பம்!)

இன்று - 07-5-2024 செவ்வாய் - 46ஆவது கட்டுரை வந்துள்ளது. அடுத்த கட்டுரையை அனுப்பிய பின்னரே முந்திய கட்டுரையை எனது வலையில் ஏற்றுவது எனும் என் வழக்கத்தின்படி 47ஆவது கட்டுரையை இன்று முற்பகல் அனுப்பிவிட்டேன். அந்த வகையில் -

இன்னும் 3கட்டுரை எழுதி அனுப்ப வேண்டியுள்ளது.

இதுவரை எழுதியதில் விடுபட்ட, வெளிவர வேண்டும் என்று நினைக்கின்ற, நிறைவாகச் சொல்ல வேண்டிய, நடைமுறைச் சொற்கள் அல்லது தமிழ் தொடர்பான குறிப்புகளை நண்பர்கள் அனுப்பலாம்.  

தமிழ் இனிது – 06-06-2023- முதல் கட்டுரையிலேயே தமிழ் ஒரு ஜனநாயக மொழி என்று எழுதியிருந்தேன். அதன்படி ஜனநாயகத் தமிழ்க் கருத்துகளை வரவேற்கிறேன். எனது எண் கீழுள்ளது.

நன்றி

அன்புடன்,

நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை.

எனது புலன எண்-94431 93293

---------------------------------------------------------- 

(நன்றி - இந்து தமிழ் நாளிதழ் - 07-5-2024)

“விடுமுறை“க்கு விண்ணப்பிக்கலாமா?

விடுமுறையும் விடுப்பும் -

அரசு (அ) தனியார் நிறுவனம் முறையாக அறிவிப்பது விடுமுறை. விதிகளின் படி, தனது தேவைக்கு விண்ணப்பம் செய்வது விடுப்பு. விடுப்பு வேண்டுவோர், ‘விடுப்பு விண்ணப்பம்’ என்று எழுதுவதே சரி. “விடுமுறை விண்ணப்பம்“ என்று எழுதுவது தவறு. ஒருவரின், தனித் தேவைக்காக, அனைவருக்கும் விடுமுறை விடச் சொல்வது நியாயமாரே?

எதார்த்தமும் இயல்பும் -

            எதையும் ‘இயல்பாக’ ‘உண்மையாக’ எழுதுவதை, தமிழ் இயல்புக்கு மாறாக “எதார்த்தம்” என்கிறார்கள்! “எதார்த்தமாச் சொன்னதப் பிரிச்சி, பதார்த்தம் பார்த்துச் சண்டைக்கு வரலாமா?” என்று, பேச்சிலும் இது புகுந்துவிட்டது. இதில் தமிழ் மரபின்படி வரக்கூடிய எ எழுத்தையும் விட்டு, ‘யதார்த்தம்’ என்றே எழுதும் ‘இலக்கிய அறிவு ஜீவி’களும் உண்டு!

பெயர் சொல்லும் தமிழ் மரபு -

            தமிழறிஞர் திரு.வி.க. வில் உள்ள திரு என்னும் சொல்லைப் பலரும் மரியாதைக்கானது என்று நினைத்துக் கொள்கிறார்கள்! ஆனால் உண்மையில் ‘திருவாரூர் விருத்தாசலனார் மகன் லியாணசுந்தரன்’ என்பதே ‘திரு.வி.க.’வின் விரிவு ‘சிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரன்’ என்பது ‘சி.வை.தா.’வின் விரிவு! இவர், தமிழ் ஏட்டுச் சுவடிகளை அச்சுப் பதிப்பதில்  புகழ்பெற்ற உ.வே.சா. அவர்களுக்கும் முன்னோடியானவர்!

சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ இருநூறு பெயர்களைப் பட்டியல் போடுகிறார் பேரா.ந.சஞ்சீவி. கோவூர் கிழார்,  ஒக்கூர் மாசாத்தியார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் - தந்தைக்கும் ஊருக்கும் தொழிலுக்கும் பெருமை சேர்த்த பேராண்மை புலவர்களின் பெயர்கள்! (“சங்க இலக்கிய ஆய்வும் அட்டவணையும்“ – ந.சஞ்சீவி. தொகுப்பு – பேரா.காவ்யா சண்முக சுந்தரம்-2010)

இடைக்காலத்தில் சாதிப்பெயர்கள் பின்னொட்டாக வந்தன. இதை எதிர்த்து, சாதிப் பெயர்களைத் தன் பெயரில் போட்டுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற பெரியாரின் -1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மான- வேண்டுகோளை ஏற்று, திராவிடச் சிந்தனையாளர் பலரும் சாதிப் பெயர்களை விட்டனர். இப்போது தமிழர் பலரும் சாதிப் பெயரின்றித் தம் பெயரைக் குறிப்பிடுவது பொதுத் தன்மையானது. வட இந்திய, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், திரைத்துறைக்  கலைஞர், விளையாட்டு வீரர் பெயர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும்.

சாதிப் பின்னொட்டை விட்டபின், தந்தை பெயரின் முதல் எழுத்தை மட்டுமே முன்னெழுத்தாக(initial) இட்டனர். 1994இல் முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசாணை வெளியிட்டும் புழக்கத்தில் வராததைக் கண்டு 2003இல் முதல்வராக இருந்த கலைஞர்  அரசாணை வழி மீண்டும் வற்புறுத்த, இப்போது, தாயின் முதல் எழுத்தையும் சேர்த்துத்  தமிழர்கள் எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தச் சமத்துவத் தமிழ்ப்பெயர் மரபைப்  பிறநாட்டினரும் பெருமையுடன் பின்பற்றலாம்!  

தடையில்லாச் சான்றும், தடையின்மைச் சான்றும்

         அரசு வழங்கும் ‘தடையில்லாச் சான்று’ (No Objection Certificate- NOC) பற்றி அறிந்திருக்கலாம். இதைத் ‘தடையின்மைச் சான்று’ என்பதே சரியானது. இல்லாத தடையை இருப்பதாகச் சொல்லி அதற்குத் தடையில்லை என்பது சரியானதல்லவே! அரசு விளம்பரங்களில் சரியாக வந்தாலும் ‘ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு நிரந்தரமாகக் கொண்டு செல்லப்படும் வாகனங்களுக்குபடிவம் 28இல் தடையில்லாச் சான்றிதழ்  தேவை’  என்பது போலும் சிலவற்றை,  அரசும்    மக்களும்  மாற்றியமைக்க வேண்டும்.   

--------------------------------------------------------------

 

4 கருத்துகள்:

 1. ஐயா! தொடர் நிறைவடைகிறது எனும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது! தொகுத்து வெளியிடுவதென்றாலும் அதற்காகத் தொடரை நிறுத்த வேண்டியதில்லையே? தொடர் வெளிவந்து கொண்டிருக்கும்பொழுதே முதல் 50 கட்டுரைகள் புத்தகமாக வெளியாகியிருக்கின்றன என்பதை அதனூடே தெரிவித்தால் பலர் கவனத்தையும் அது சென்றடைய ஏதுவாக இருக்கும், புத்தக விற்பனைக்கும் உதவுமே! புத்தகம் நல்ல வரவேற்பு பெற்றால் அதையொட்டி இத்தொடரும் இன்னும் பரவலாக வாசிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதே!

  விடுமுறையும் விடுப்பும் வெவ்வேறு என்பது பெரும்பாலோர் அறியாத செய்தி! நகைச்சுவையாய் உணர்த்தியமைக்கு நன்றி!

  ‘இயல்பு’ எனும் சொல்லின் இடத்தை ‘யதார்த்தம்’ கைப்பற்றி இப்பொழுது அதுவும் போய் Casual-தான் எல்லா இடங்களிலும் இயல்பாக ஆளப்படுகிறது. இப்படி அயல்மொழிச் சொற்கள் நம் மொழிக்கு வரும்பொழுது நம் மொழியின் மரபு, இயல்பு, இலக்கணம் எல்லாவற்றையும் குழப்பி விடுவதால்தான் தனித்தமிழுக்கான தேவை இப்பொழுதும் உள்ளது என்பது சிறியேனின் பணிவன்பான கருத்து.

  பெயர் சொல்லும் தமிழ் மரபு குறித்த விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்! இதில் நீண்ட காலமாக எனக்கோர் ஐயம் உண்டு.

  நகரத்தார் சாதியைச் சேர்ந்தவர்கள் பெயரின் முதல் எழுத்துக்களைச் சுருக்கி அழைக்கும் வழக்கத்தை வெகு காலமாகக் கொண்டிருக்கிறார்களே, இது அவர்கள் பல ஆண்டுகள் முன்பே வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு வந்ததால் வெளிநாட்டவரைப் பார்த்துக் கற்றுக் கொண்ட வழக்கமா அல்லது தாங்களாகவே உருவாக்கிக் கொண்டதா ஐயா?

  ஒருமுறை எழுத்தாளரும் பதிப்பாளருமான லேனா தமிழ்வாணன் அவர்கள் தொலைக்காட்சிச் செவ்வி ஒன்றில் இதற்கு ஒரு விளக்கம் சொன்னார். அதாவது நகரத்தார் வீடுகள் மிகவும் பெரியவை என்பதால் வீட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதியிலிருப்பவரை அழைக்கப் பெயரைச் சுருக்கி அழைப்பதுதான் வசதி என்பதால் இப்படி ஒரு வழக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார். "‘லட்சுமணா...’ என என் முழுப் பெயரையும் சொல்லி என் அப்பத்தா அழைப்பதற்குள் நான் இந்தக் கட்டிலிருந்து அந்தக் கட்டுக்கு ஓடி விடுவேன். எனவே ‘லேனா’ என அழைப்பது எளிதானது" என்று எடுத்துக்காட்டும் சொன்னார். ஆனாலும் தங்கள் விளக்கம் அறிய ஆவல்!

  பதிலளிநீக்கு
 2. விடுப்பு விண்ணப்பம் தடையின்மைச்சான்று அறிந்தேன் நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 3. உங்கள் பகிர்வுக்கும், தகவலுக்கும் நன்றியும் வாழ்த்துகளும் தோழர்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் அண்ணா!
  விடுபட்ட பகுதிகளை இன்று தான் வாசித்தேன்.

  குறிப்பு’ என்பதன் எதிர்ச்சொல் ‘வெளிப்படை’ ‘பொதுவாக’ என்பதன் எதிர்ச்சொல், ‘சிறப்பாக’ என்றறிந்தேன். ஙப்போல் வளை என்பதன் விளக்கத்தையும் (ங என்னும் ஓர் எழுத்து, மற்ற 11 எழுத்துகளையும் காப்பாற்றுதல்) தெரிந்து கொண்டேன்.

  நோன்பு துறப்பு/திறப்பு - நோன்பு துறப்பு என்பது தான் சரியென்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். திறப்பு தான் சரியென்று நினைத்திருந்தேன்.

  “பெயர் வெறும் பெயரல்ல, பண்பாட்டின் அடையாளம்! உங்கள், குழந்தைப் பெயர்கள், தமிழ்ப் பெயரெனில் நல்லதுதான். அதைவிட சாதி, மதம் காட்டாத பெயராக இருந்தால் மிகவும் நல்லது” என்ற வரிகள் மிகவும் சிறப்பு அண்ணா. “தமிழன் பெயரிலும், தமிழ் இல்லை” என்ற அவலத்தைப் போக்கும் விதமாய், இந்த வரிகள் அமைந்திருப்பது சிறப்பு.

  மகிஷன்–எருமை, பூவராகவன்–நிலப்பன்றி - இது போல் வடமொழிப் பெயர்கள் சிலவற்றுக்கு, அர்த்தம் சொல்லியிருந்தால், இன்னும் நகைச்சுவையாய் அமைந்திருக்கும்.

  “ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைத் “தொப்புள் கொடி உறவுகள்” என்பர். இதைப் பழந்தமிழ் ‘கொப்பூழ்’ என்கிறது”. ‘கொப்பூழ்’ என்ற, பழந்தமிழ்ச் சொல்லைத் தெரிந்து கொண்டேன்.

  “கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்” - இது போல் பெரும்பாலான வாக்கியங்களைச் செயப்பாட்டு வினையில் தாம், அமைக்கிறார்கள். செய்வினையில் எழுதுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாய் இதைச் சொல்லியிருப்பது நன்று.

  அரசு வழங்கும் ‘தடையில்லாச் சான்று’ (No Objection Certificate- NOC) என்பது தவறு; ‘தடையின்மைச் சான்று’ என்பதே சரி என்று தெரிந்து கொண்டேன்.
  தெரியாத பல புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
  ‘தமிழ் இனிது’ தொடர் துவங்கி, 50 வாரங்கள் ஆகப் போகிறது என்பதை நம்ப முடியவில்லை. காலம் என்னமாய் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறது!

  தமிழின் இனிமையை மெல்லிய நகைச்சுவை இழையோட, சுவைபட விளக்கியமைக்கு, மிக்க நன்றி அண்ணா.


  பதிலளிநீக்கு