தமிழ் இனிது -48 ---நன்றி ---இந்து தமிழ் -21-5-2024

 


பிறர் பொருளைத் தமிழ்ப் படுத்தலாமா? 

க் ச் வருமா? வராதா?

தமிழ்ச் செய்தித் தாள்களின் முதன்மைச் செய்தி எதிலும் வல்லொற்று இருக்காது! பொருள் மாறா இடங்களில் க் ச் வருமா என்று கேட்போரை அச்சுறுத்த வேண்டியதில்லை, பொருள் மாறுகிறதா என்று பார்த்தால் போதும் என்பதே எனது கருத்து. 

“வல்லினம் மிகும் இடங்கள்-34, மிகா இடங்கள்-29” என்று பட்டியல் தருகிறார், பொறிஞரும் தமிழ் அறிஞருமான திருச்சி கரு.பேச்சிமுத்து (நூல்:“பிழை தவிர்“ -2018) ஆனால், எந்த இடத்தில் வேண்டும்  என்பதில் புலவர்களிடம் இன்றும் கருத்தொற்றுமை இல்லை என்பதே உண்மை! அதற்கான பட்டியலை எடுக்க, அரசுதான் முயற்சி செய்ய வேண்டும். அதுவரை “சந்தேகத்தின் பலனை வாதிக்குத் தரலாம்” என்னும் நீதிமன்ற நிலைக்கருத்து, தமிழுக்கும் பொருந்துமல்லவா?

பிறமொழிகளில் இல்லாத சிக்கலாக, இந்த ”ஒற்றெழுத்து மிகுமா? மிகாதா?” கேள்விக்கு அஞ்சியே இன்றைய இளைஞர் பலர் தமிழை விட்டு ‘தங்லீசு’க்குப் பாய்கின்றனர். தகுந்த தமிழ்ச் சொல் பயிற்சியும் இல்லை என்பதும் உண்மை! ஆங்கில மோகத்தின் அமோக விளைச்சலிது! இணையத்தில் “முக்காலே மூனுவீசம்” “தங்லீஷ்”ஆக, காரணம் இவை!  

எழுத்துப் பிழை பெரிய பாவமல்ல, தமிழில் எழுதுங்கள்!

‘தங்லீஷ்’ எழுதுவதே தவிர்க்க வேண்டிய தமிழ்க் குற்றம்!

பிறர் பொருளுக்குத் தமிழில் பெயர் வைப்பது பற்றி..

பிறர் ஒருவர் கண்டுபிடித்த பொருளைத் தமிழர் புழங்கும் போது அதற்கான பெயர் அந்த மொழியில் இருப்பதை மாற்றி, எப்படித் தமிழில் தருவது என்று விவாதம் நடக்கிறது. FaceBook - முகநூல்? என்பது போல!

இதில் அடிப்படையான கேள்விகள் இரண்டு. (1) பிறர் ஒருவர் கண்டுபிடித்த பொருள் வேண்டும், அவர் வைத்த பெயர் வேண்டாமா? (2) நாம் கண்டுபிடித்த பொருளை அவர்கள் மொழியில் பெயரிட்டு அழைப்பதை நாம் ஒப்புவோமா? கடந்த ஆயிரம் ஆண்டுக்கும் மேலாக அறிவியல் கண்டுபிடிப்பு எதையும் தமிழர் – தமிழில்- சொந்தமாகத் தரவில்லையே, ஏன்? என்பது தனி ஆய்வு!

அப்படியே தமிழில் பெயர் வைத்தாலும் ‘மகிழுந்து’(Car) தனியாகவா வருகிறது? சிறுசிறு  பகுதிப் பொருள்கள் (Spare Parts) எத்தனை? எப்படிச் சொல்வது? இது அலட்சியத்தால் வரும் வினா அல்ல, “அடிப்படையில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், சிந்தனையைத் தூண்டும் கல்விமுறை பற்றிய செயல் திட்டம் இல்லாமல் ‘சும்மா’ தமிழ்ப் படுத்துவாக நினைத்துப் ‘படுத்துவது’ யாரை?” எனும் அக்கறை வினா.   

பொதுவான அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தமிழில் தரலாம். அதிலும் விவாதங்கள் நடக்கின்றன. Video, காண்பதும் கேட்பதுமாக இருப்பதால், ‘காணொலி’ என்றே தமிழறிஞர் செந்தலை ந.கவுதமன் உள்ளிட்ட பலரும் –நானும்- சொல்கிறோம். ‘இந்து-தமிழ்’ நாளிதழ் உள்ளிட்ட இதழாளர், ‘காணொளி’ என்கிறார்கள். இரண்டும் புழக்கத்தில் வரட்டுமே? சரியானது நிலைக்கட்டும்! இரண்டையும் விட்டுவிட்டு, ‘வீடியோ’ என இரண்டும் கெட்டானாய்ச் சொல்ல வேண்டாம் என்கிறேன்.

மொத்தத்தில் தமிழின் மீது அலட்சியம் வேண்டாம். எழுத்துப் பிழை பற்றி அஞ்சாமல், தமிழில் எழுத முயற்சி செய்ய வேண்டும் பழகப் பழகத் தேவையான திருத்தம் காண்பது எளிது! தமிழறிஞர்கள் மட்டும் இதைச் செய்துவிட முடியாது. மக்கள் பங்கேற்புடன் அரசுதான் செய்யவேண்டும்!

            ------------------------------------------------------   

11 கருத்துகள்:

  1. காணொளி ,காணொலி இந்த விளக்கம் மெய்சிலிர்க்க வைத்தது மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் எனக்கு ஏற்புடைய கருத்துக்களே !!! நன்றி தோழர்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாபுதன், மே 22, 2024

    கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கிறது! நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. படித்தேன் ஐயா!

    வல்லெழுத்து மிகுதல் மிகாதல் பற்றித் தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்தை இன்னும் ஆழமாகவும் வலிமையாகவும் முன்வைத்திருக்கிறீர்கள். என்னைப் பொருத்த வரையில் இலக்கணப் பிழையின்றி எழுதுவது முக்கியம். ஆனால் அதற்காக மக்கள் தாய்மொழியிலிருந்தே விலகிப் போனாலும் போகட்டும் என இருக்க முடியாதுதான்! எங்கு ஒற்று மிகும் / மிகாது என்பது குறித்துப் புலவர்களிடையிலேயே இன்னும் கருத்தொற்றுமை இல்லை எனும் தகவல் அதிர்ச்சி! அதே நேரம் இதற்கான தீர்வாகத் தாங்கள் முன்வைக்கிற, பொருள் மாறும் இடங்களில் மட்டும் வல்லெழுத்தை மிகுத்து / மிகாமல் எழுதிக் கொள்ளலாம் என்பதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. நீங்கள் சொல்லும் இந்த வழிமுறையை நான் கடைப்பிடிக்க முயன்றேன். ஆனால் எழுதும்பொழுது நாம் என்ன நினைத்து எழுதுகிறோமோ அந்தக் கோணத்தில்தான் அந்த வரி தென்படுகிறது. அந்த இடத்தில் ஒற்று மிகுத்தால் எப்படிப் பொருள்படும், மிகுக்காவிட்டால் எப்படிப் பொருள்படும் என இரண்டு வகையில் சிந்தித்துப் பார்க்க இயலவில்லை. இது எத்தனை பேருக்கு இயலும் என்பதும் எனக்குத் தெரியவில்லை. வல்லினம் மிகும் இடங்கள் இத்தனை, மிகா இடங்கள் இத்தனை என ஒருவர் ஆய்ந்து பட்டியலே வெளியிட்டு விட்டார் என்பது துள்ளிக் குதிக்க வைக்கும் செய்தி! ஆனால் அதுவே இறுதியானதா என்பதில் மாற்றுக்கருத்து எழத்தான் செய்யும். வேண்டுமானால் அடுத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தங்களைப் போல் தமிழ் ஆய்வாளர், அறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி விவாதித்து இந்தப் பட்டியலை இறுதி செய்து விடலாமே! அது தமிழ் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக அமையும். தமிழ் வளர்ச்சிக்கும் துணையாகும்.

    அடுத்து வருகிற, பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் பற்றிய தங்கள் கருத்தோடு என்னால் முழுமையாக உடன்பட முடியவில்லை என்பதை வருத்தத்துடனும் பணிவன்புடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தொடர்பாக இரண்டு கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்கள். முதலாவதாக, பிறர் கண்டுபிடித்த பொருள் வேண்டும், அவர் அதற்கு வைத்த பெயர் வேண்டாவா என்கிறீர்கள். இது சரியானதாகத்தான் தென்படுகிறது. ஆனால் இதையே வரலாற்றுக் கோணத்தில் பாருங்களேன்! நாம் தொடக்கத்திலிருந்தே இப்படி எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தி வரவில்லை, இல்லையா? தொடக்கத்தில் மற்றவர்களைப் போல் நாமும் பிறமொழிச் சொற்களை அதே மொழியின் பெயரில்தான் குறிப்பிட்டு வந்தோம். எடுத்துக்காட்டாக டீ, கேமரா, துப்பாக்கி போன்றவற்றைச் சொல்லலாம். இவை தமிழ் மக்களிடம் புழக்கத்துக்கு வந்து நூற்றாண்டுக் கணக்கில் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை இவற்றின் பெயரை நாம் மாற்றவில்லை. தேநீர், துப்பாக்கி ஆகியவை Tea, Tüfek ஆகியவற்றின் ஒலிபெயர்ப்புகள்தாமே தவிர மொழிபெயர்ப்புகள் அல்ல என்பதை நான் தங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றாலும் எழுதும் கருத்தின் முழுமை கருதி இங்கு நான் அதைக் குறிப்பிட வேண்டியதாகிறது. இப்படி எளிதில் மொழிபெயர்க்க முடிந்தாலும் மொழிபெயர்க்காமல் இன்னும் நாம் அப்படியே வேற்றுமொழியிலேயே பயன்படுத்தி வருகிற சொற்களின் எண்ணிக்கை நாம் ஏற்கெனவே மொழிபெயர்த்துள்ள சொற்களின் எண்ணிக்கையை விடப் பெரியது. நம் பாட்டன் காலத்திலிருந்து இங்கே நம்மிடம் புழங்கி வருகிற இந்தப் பொருட்களுக்கெல்லாம் தமிழில் பெயர் சூட்டாத நாம் நேற்று வந்த Television, Computer, Mobile, Facebook போன்றவற்றுக்குத் தமிழில் பெயர் சூட்டியிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நம் மக்களின் அயல்மொழிப் பயன்பாடு அயல்மொழிப் பொருட்களோடு நின்று விடவில்லை என்பதுதான் இல்லையா ஐயா? நம் மக்கள் டீயை டீ என்றதோடு நிறுத்திக் கொள்ளவில்லையே? ஏற்கெனவே இங்கு விளைவிக்கப்பட்டுக் கொண்டிருந்த இன்னொரு பணப்பயிரான சணலையும் Jute என்று அழைக்கத் தொடங்கினார்களே! கேமராவைக் கேமரா என்றதோடு நிறுத்திக் கொள்ளவில்லையே? அதன் மூலம் எடுக்கப்படும் படத்தையும் Photo என்றார்களே! துப்பாக்கியைத் துப்பாக்கி என்றதோடு நிறுத்திக் கொள்ளவில்லையே? அதைச் சுடும்பொழுது வெளிவரும் நெருப்பையும் Fire என்றார்களே! இப்படி அயல்மொழிச் சொல் பயன்பாடு என்பது அயல்மொழியினர் கண்டுபிடித்த பொருட்களோடு நில்லாமல் நம்மிடம் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் தமிழ்ச்சொற்களையும் மாற்றீடு செய்யத் தொடங்கியதால்தானே நாம் தனித்தமிழுக்குக் குரல் கொடுக்க வேண்டி வந்தது, குரல் கொடுக்க வேண்டியுள்ளது? இது தாங்கள் அறியாதது இல்லையே!

    - தொடர்கிறது👇🏽

    பதிலளிநீக்கு
  5. 👆🏽தொடர்ச்சி...


    இரண்டாவதாக, நாம் கண்டுபிடித்த பொருளை வேற்று மொழியினர் அவர்கள் மொழியில் பெயரிட்டு அழைத்தால் நாம் ஒப்புவோமா என்று கேட்டிருந்தீர்கள். அதை வேற்றுமொழியினர் என்ன ஐயா செய்வது? நம் மக்களேதான் செய்கிறார்களே? பச்சையை Tattoo என்கிறார்கள், மாவரைபொறியை Grinder என்கிறார்கள், நிலாவைச் சந்திரன் என்கிறார்கள், செவ்வாயை அங்காரகன் என்கிறார்கள்... இப்படி இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகுமே! எனவே தாங்களே கட்டுரையில் கூறியுள்ளது போல் நம் மக்களின் சிந்தனையைத் தூண்டும் கல்விமுறையின் மூலம் அரசுதான் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும் என்கிற அளவில் இந்தக் கருத்தோடு சிறியேனும் உடன்படுகிறேன். அதே நேரம் அந்தப் புதிய கல்விமுறையானது பொறியியல் - அறிவியல் சிந்தனையைத் தூண்டும் கல்விமுறையாக மட்டும் இல்லாமல் மொழியியலிலும் புலமை வழங்கும் கல்விமுறையாக இருந்தால்தான் மொழிப் பயன்பாட்டில் ஒரு தெளிவான வரையறையை நாம் மேற்கொள்ள முடியும் ஐயா!

    மற்றபடி நானும் 'காணொலி' என்றுதான் வெகுகாலமாகப் பயன்படுத்தி வந்தேன். ஆனால் இலங்கைத் தமிழ் ஆர்வலரும் சிறந்த தமிழ் ஆய்வாளர்களுள் ஒருவருமான திரு.இலங்காநாதன் குகநாதன் அவர்கள் காணொளியே சரி எனச் சில வாதங்களைச் சில ஆண்டுகள் முன் எழுதியிருந்தார். அதைப் பார்த்த பிறகுதான் நான் மாற்றிக் கொண்டேன். அது தங்களின் மேலான பார்வைக்கும் இதோ - https://qr.ae/psaFJL.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், மே 22, 2024

      வணக்கம் நண்பரே. தங்களின் ஈடுபாடும் அக்கறையும் மிகுந்த கருத்துகளைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
      சிந்தித்து முடிவெடுக்காமல் ஏனோ தானோ என்று எழுதுவோரிடையே எப்படி ஆழமான சிந்தனைகளை வைக்க வேண்டும் என்று நான் நினைத்து எழுதுகிறேனோ, அதுபோலவே நீங்களும் உங்கள் கருத்தை வைத்தது மிகுந்த பாராட்டுக்கு உரியது.
      இப்போது 50கட்டுரை முடிந்ததும் புத்தகத் தயாரிப்புப் பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதால் இறுதிக் கட்டுரையை முன்னதாகவே அனுப்பக் கேட்டிருக்கிறார்கள். அதை ஓரிரு நாளில் அனுப்பிவிட்டு, விரிவாகவே உங்களுக்கு பதில் தருகிறேன். அதுவரை பொறுத்தருள்க. நன்றி

      நீக்கு
    2. ஐயா! தங்கள் படைப்புகள் குறித்து நான் இவ்வளவு விரிவாக என் கருத்துக்களை முன்வைக்கக் காரணமே தாங்கள் அளிக்கும் ஊக்கம்தான். தங்கள் கருத்துக்கு எதிராக ஒரு சிறு சொல் கூறிவிட்டாலும் அவமதிப்பாக எண்ணும் தமிழ்ப் பெரியவர்களுக்கு மத்தியில் தமிழில் இவ்வளவு ஆழங்காற்பட்டவராக இருந்தும் தாங்கள் என்னைப் போல் படிக்காதவர்கள் சொல்வதையும் அவ்வளவு மதித்துக் கேட்கும் பாங்குதான் என்னைத் தொடர்ந்து உங்கள் படைப்புகள் பற்றி எழுதத் தூண்டுகிறது. உங்களுக்காக என்றும் மகிழ்வோடு காத்திருப்பேன். நன்றி!

      நீக்கு
  6. இதே கருத்து எனக்கும் உண்டு பல்லாண்டுகளாய்...

    அருமையான கட்டுரை தோழர்

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாபுதன், மே 22, 2024

    இங்கிலீஷ் தவிர்க்க முடிவு செய்துவிட்டேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லாபுதன், மே 22, 2024

    சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய சிறந்த கருத்துக்கள். குறிப்பாக அந்நியக் கண்டுபிடிப்புகளை மொழிமாற்றம் செய்வது இயல்பாகவே சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது. நீங்களே குறிப்பிட்டதைப் போல், Car என்பதை மகிழுந்து என்றால் அதில் உள்ள Steering, dashboard, கிளட்ச் , டிம், ப்ரைட் போன்ற எண்ணற்ற சொற்களை என்ன செய்வது? அப்படியே தமிழில் எழுதிவிடலாம் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு