தந்தை பெரியார் என்பவர் யார்.?

தந்தை பெரியார்

(17-9- 1879 --- 24-12-1973)


         “அறிவைத் தடுப்பாரை,
           மானம் கெடுப்பாரை
          வேரோடு பெயர்க்க வந்த 
           கடப்பாரை” என்று கவிஞர் காசிஆனந்தன் அவர்களும்,
          “தொண்டு செய்து பழுத்த பழம்,
            தூய தாடி மார்பில் விழும், 
            மண்டைச் சுரப்பை 
            உலகு தொழும்
            மனக்குகையில் 
           சிறுத்தை எழும்
            அவர்தாம் பெரியார், 
            யார்? அவர்தாம் பெரியார்” என்று பாரதிதாசன் அவர்களும், ஏற்றிப் போற்றிய தந்தை பெரியார், உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர் வரிசையில் என்றும் இருப்பவர்.

           என்னைப் போலும் பலகோடிப் பேருக்கு உலக அளவில் கார்ல்மார்க்சும், இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கரும், தமிழக அளவில் தந்தை பெரியாரும்தான் மிகப் பெரிய வழிகாட்டிகள் என்பதே உண்மை!

அவரை வெறும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும்,
கடவுள் மறுப்பாளராகவும் மட்டுமே பார்த்துப் பழகிவிட்டார்கள் பலர்! அவர்கள் யானையைப் பார்த்த குருடர்கள்!

           உண்மையில்,
அவர் சுடர்மிகுந்த சுயசிந்தனையாளர்.
           “அவன் சொன்னான், இவன் சொன்னான்னு நம்பாதே! உனக்கு எது சரின்னு படுதோ அதன் படி யோசி! நட!” என்று சொன்ன உண்மையான சிந்தனையாளர்!
          இன்றைய சமூகத்தில்தான் பெரியார் பெரிதும் தேவைப்படுகிறார்.

          எங்கள் ஊர்க்கவிஞர் சுவாதி எழுதியது போல,
         “ தடுக்கி விழுந்தால்
          எத்தனை கோவில்கள்!
           தந்தை பெரியார் நகர் தந்தை பெரியார் நகரில் கோவில்கள் மட்டுமல்ல, அவரது பெயர் தாங்கிய பாடநூல்களிலும் மூடநம்பிக்கைகள்!

(முதல் செய்யுள் கடவுள்வாழ்த்தாகவும், முதல் பாடம் பெரியார் வரலாறாகவும் எத்தனை பாடநூல்கள்! - ஒருபக்கம் பெரியாரைப்பற்றிய தகவல்களைப் பற்றி மட்டும் பாடம் வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் அவர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப்போராடிய பல மூடநம்பிக்கைகளை அதேநூலின் வேறு பக்கங்களில் பாடம் வைப்பதுபற்றி என்ன சொல்ல? ” - பார்க்க எனது வலைப்பக்கக் கட்டுரை https://valarumkavithai.blogspot.com/2016/02/blog-post_11.html
------------------------------------------------------------ 
“சாமி கும்பிடுவதற்கு“ எதிரானவரல்ல தந்தை பெரியார்!
“கும்பிடுறேன் சாமி“ என்பதற்கு எதிரானவர் என்பதே சரி
------------------------------------------------------------

பெரியார் ஏன் “கடவுள் இல்லை” என்று சொன்னார்?
         கடவுளுக்கும் அவருக்கும் கணக்குவழக்குத் தகராறு ஏதுமில்ல. பங்காளிச் சண்டையும் கிடையாது. அவர் ஏன் கடவுள் இல்லையென்று சொன்னார் எனில், இன்றும் தீராத நோயாக கிராமத்தில் வெளிப்படையாகவும் நகரத்தில் மறைந்தும் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளும் அதுசார்ந்த ஜாதி உணர்வுகளும் தான் முதல் காரணம்!

நம்நாட்டு சடங்குகள் ஜாதிகளோடு தொடர்புடையவை!
அந்தந்த ஜாதிகளும்  மதத்தோடு பிணைக்கப்பட்டிருப்பன!
மதமோ அந்தந்த மதத்தின் கடவுளோடு தொடர்புடையது!
எனவேதான்- பெரியார் சொன்னார்.
        “கடவுள் ஒழிக!”
 
(இதற்குள் சாதி ஒழிக என்பதும் மதம் ஒழிக என்பதும், முடநம்பிக்கை ஒழிக என்பதுமான பல பொருள்கள் உண்டு!)

இவற்றைக் காப்பாற்றும் “பார்ப்பான் ஒழிக, காங்கிரஸ் ஒழிக, காந்தி ஒழிக“ என்றுதான்  தான் தலைமை வகித்த காங்கிரஸ் கட்சியிலிருந்து நிரந்தரமாக வெளியேறினார் பெரியார்
இதைப் பற்றிய விக்கிப்பீடியாவின் கட்டுரை தெளிவாக உள்ளது 
பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈரோடு வெங்கடசாமி இராமசாமி நாயக்கர்( செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவ தற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும்  திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தவர். இவருடைய  சுயமரியாதை இயக்கமும்பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ் பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை,   தீண்டாமை,   மூடநம்பிக்கை,   வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார்”

மதம் மாறலாம், ஜாதி மாறமுடியாது!
       நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நம் நாட்டில் மதம் மாறமுடியும். ஆனால், ஜாதி மாறமுடியாது. இந்து மதத்தில் இருக்கிறவன், இசுலாம் மதத்திற்குப் போனாலோ, கிறித்து மதத்திற்குப் போனாலோ அந்தந்த மதங்களின் உலக நாடுகளில் இல்லாதபடிக்கு, புதிய ஏற்பாடாக அந்த மதங்களில் இல்லாத ஜாதி ஏற்பாடாக- இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. (வெகு சில இடங்களில் இந்த நடைமுறை மாற்றப்பட்டதால்தான் சிலர் மதம் மாறுவது இன்றும் தொடர்கிறது) உலகில் வேறெங்கும் இல்லாதபடிக்கு நம் நாட்டைப் பிடித்த சிறப்பு நோய் இது! இதற்கு மருந்து கண்டவர் தந்தை பெரியார்.

     “எனக்குக் கீழானவன் யாரும் இல்லை, எனக்கு மேலானவனும் யாருமிலலை” இதைவிட சமத்துவத்தை விளக்குவது எப்படி?

          கல்வியைப் பரப்புவதிலும், பெண்ணுரிமையைப் பெரிய இயக்கமாக மாற்றியதிலும் தந்தை பெரியாருக்குப் பெரும் பங்கு உண்டு. கல்வி- வேலைவாய்ப்புக்காக இடஒதுக்கீடு பெறப் பெரும் போராட்டம் நடத்தி முதன்முதலாக  இந்திய அரசியல் சட்டத்தையே திருத்திய பெருமை பெரியாருக்கே உண்டு 
          தந்தைபெரியாரும்  காமராசரும் தமிழக அரசியலில் இல்லாமல் போயிருந்தால், இந்த முத்துநிலவன் போலும் பலலட்சம் பேர், எழுத்தறிவற்ற முட்டாள்களாக ஆடுமாடு மேய்த்துக் கொண்டுதான் திரிந்திருப்போம்  என்பதால் எனது பட்டங்களை மட்டுமல்ல, எனது சிந்தனைகளையும் தந்தை பெரியாரும் தலைவர் காமராசரும் போட்ட பிச்சை என்று பல மேடைகளில் நான் சொல்லியிருக்கிறேன்.

மார்க்ஸ் ஏங்கெல்சின் “கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை”  நூலை மட்டுமல்ல, இளம்வயதில் நாட்டுக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட  பகத்சிங்கின் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” நூலையும் தமிழில் முதலில் தந்தவர் தந்தை பெரியார்தான். 

பலலட்சம் மைல் தூரம் பயணம் செய்து தமிழர்
 முன்னேற்றத்திற்காகத் 95 வயதிலும் மூத்திரச் சட்டியை அருகில் வைத்துக்கொண்டே பேசி, எழுதிப் போராடியவர்!

இப்படி ஏராளமாக எழுதலாம், தாராளமாகச் சொல்லலாம்
ஆனால் பெரியாரை வாழ்வில் கடைப்பிடிப்பது கடினம்.
கடைப்பிடிக்கிறேன் என்பதால் நான் உரிமையோடு சொல்வேன்!

 (என் வாழ்வில் எந்த மூடநம்பிக்கைக்கும்-செயல்பாடுகளுக்கும் நான் இடம் தந்ததில்லை, சாதி மறுப்பாளனாகவே இன்றுவரை வாழ்ந்தும் பேசி எழுதிக்கொண்டும் இருக்கிறேன். இதை  நான் மறைத்ததும் இல்லை தேவையானபோது சொல்லியும் வருகிறேன்)

தந்தை பெரியாரின் சிந்தனைகள் வளர்க!
       பெண-உரிமைக்கான இயக்கங்களைப் பெரியார் நடத்தியபோது, யாரோ ஒருவன், “பெண்களைப் பொதுவுடமையாக்குவதாகச் சொல்கிறீர்களே! உங்கள் மனைவியை நான் அழைத்துச் செல்லலாமா?” என்று துடுக்காகக் கேடடானாம்! நாமாக இருந்தால் கோபத்தில் எதையாவது உளறி, திட்டிக் கொட்டியிருப்போம்! தந்தை பெரியார் பதறாமல் சொன்னாராம் -
“ஓ! தாராளமாக அழைத்துப்போகலாம்- அவள் விரும்பி வந்தால். ஒருவேளை அவள் செருப்பால் அடிப்பதாக இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்” எப்படி?

இதே போலத்தான் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தின் போது, ஒருவன்,“கடவுள் இல்லை என்கிறீர்களே? ஒருவேளை கடவுள் உங்கள் முன் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டானாம். “அப்படியா? வரச்சொல்! நம்புகிறேன். வரவில்லை என்றால் நான் சொல்வதை நீ நம்பவேண்டும்”
          
சமூகச் சீர்திருத்தப் பொது அரசியலுக்கு வந்ததாலேயே அவரது சொத்துகளை எல்லாம் இழந்தவர் பெரியார். இன்று சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வருவோரை நினைத்தால் பெரியாரின் தேவை புரியும்.

         இன்று எனக்கென்ன மகிழ்ச்சி என்றால், தந்தை பெரியாரால் பயனடைந்த பலரும் நினைக்காத பொழுதில், மூன்று சகோதரிகள் தனது வலைப்பக்க எழுத்தில் பெரியாரை நினைவு கூர்ந்திருப்பதுதான். படித்துப் பாருங்கள்...

ஒருவர் எனக்கு முன்பின் அறிமுகமில்லாத சகோதரி -
http://nigalkalam.blogspot.com/2014/09/blog-post_17.html

மற்றொருவர் எங்களோடு புதுக்கோட்டையிலேயே வசிக்கும் சகோதரி-
http://velunatchiyar.blogspot.com/2014/09/blog-post_16.html

இன்னொருவர் என் அன்புத் தங்கை மைதிலி-
http://makizhnirai.blogspot.com/

        பெண்ணுரிமையைப் பற்றிப் பலரும் பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்க, பெரியார் ஒருவர்தான் எளிமையாகச் சொன்னார் -
“பெண்கள் முன்னேறணும்னா... பெரிசா ஒன்னும் பண்ண வேணாம், அவுங்க கையில இருக்குற கரண்டியப் புடுங்கிட்டு, புத்தகத்தைக் குடுத்தாப் போதும்”
எப்படி? இதுதான் பெரியார்! இதற்குள்தான் எத்தனை சிந்தனைத் தெளிவு!

பெரியாரின் கொள்கைகள் வாழ்க!
பெரியார் நினைத்த சமூக மாற்றங்கள் நிகழ நம்மால் ஆனதைச் செய்வதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
தோழர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் வாழ்க! 

----------இதுவரை நான் எழுதியது -நா.மு. ----------- 

இனிமேல் வருவன இணையத் தகவல்தொகுப்பு ----------------------- 


பெரியாரை பற்றி தெரியாத 
தமிழ்நாட்டு மக்களுக்கு சில செய்திகள்.

தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி.

அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடிய 
தந்தை பெரியாரின் சரித்திரத் துளிகள் சில...

* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான்.

* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்து வைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரது சேகரிப்பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

* நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

* தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்! அந்த பெரிய மனிதருக்கு இருந்த நேர்மை பணிவு கூட இங்கே விசத்தை கக்க வரும் நபர்களுக்கு ஒரு சதவீதம் கூட கிடையாது

* 95 வது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!
_______


பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார் என்று கேட்கும் நன்றி மறந்த ஜாதீய தமிழ் அடிமையே..

நன்றாகக் கேள் கல்வி மறுக்கப்பட்ட நாங்கள் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதற்கு காரணம் இடஒதுக்கீடு! அதை பெற்றுத்தந்தது பெரியாரின் இடைவிடாத போராட்டம்.

அவரவர் சாதித் தொழிலையே பள்ளிகளில் கற்க வேண்டுமென குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டுவந்த போது, மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் செய்தவர் பெரியார் அதனாலேயே குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அவரவர் சாதித் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டியதிருந்திருக்கும். மருத்துவராகவோ பொறியாளராகவோ உயரயதிகாரியாகவோ வாய்ப்பு இருந்திருக்காது. பெரியாரின் உழைப்பை மறந்த நன்றிகெட்ட பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே இனியாவது உணர்ந்துகொள்...

அனைவரும் கோவிலுக்குள் செல்வதற்காகவும் அர்சகராக ஆவதற்கும் போராடியவர் பெரியார். எங்கள் சுயமரியாதைக்காகவும், இழிவு நீங்கவும், தீண்டாமை நீங்கவும், சாதி மதம் ஒழியவும் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார். அந்த பெரும் பணியை மறந்த சிறியார்கள் இல்லை நாங்கள்!

ஏ நன்றி கெட்ட பார்ப்பனீய அடிமை தமிழனே அவரால் உயர்வடைந்துவிட்டு இன்று கேட்பாய் பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று!

நால்வர்ணத்தைக் கடைபிடித்த, சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மனுநீதியின்படி ஆட்சி செய்த பார்பன அடிமைத் தமிழ் அரசர்கள், திருக்குறளை - வள்ளுவரைப் போற்றவில்லை, திருக்குறள் மாநாடு நடத்தி தமிழ்நாடெங்கும் திருக்குறளைக் கொண்டாட வைத்தவர் பெரியார்!

அந்த பெரியாரை மறந்த பார்ப்பனீய அடிமைத் தமிழர்களே! இன்று தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்று வஞ்சமாக கூக்குரலிடும் அயோக்கியர்களே, உன் கையிலிருக்கும் வேதம் காட்டுமிராண்டித் தனமானது
அதை தவிர தமிழில் வேறு என்ன இலக்கியம் உள்ளது? #தமிழை_காட்டுமிராண்டி_மொழியாக்கியதே உன் வேதங்கள் தானே இதை என்று உணர போகிறாய்?

பதில் கிடைக்குமா... ஜாதீய அடிமைகளே...?
___

"மருத்துவமனையில், 'கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 'காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்' என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்.

மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம்.

அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால்..

இதற்கு... இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம்? என்றால், இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது - என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்?" - பெரியார்!!

____

பெரியார் என்னும் சகாப்தம்

90-ஆவது வயதில் _ 180 கூட்டம்.
91-
வது வயதில் _ 150 கூட்டம்.
93-வது வயதில் _ 249 கூட்டம்.
94-வது வயதில் _ 229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் 
(95-வது வயதில்) 42 கூட்டம்.
இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்.

ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்.....

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.....

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ?

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா?

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ?

நான் சொல்வதை கேட்டால் தான்
உனக்கு சொர்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம்
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...

நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...


யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக்கொண்டு, அனுபவத்தைக்கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து - உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர் பெரியார் மட்டுமே!

பெரியாருக்கு நிகராக எவானவது உண்டா?

பெரியார் என்ன செய்து கிழித்தார் என்று கேட்கும் தற்குறிகளுக்கு

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தொடங்கிய காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலை...


1. ஆதிதிராவிடர்கள், பார்ப்பன தெருக்கள், கோயில்களை சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்து கூடச் செல்லக் கூடாது.

2. ஆதி திராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டிக்கட்டக் கூடாது.

3. தங்க நகைகள் அணியக் கூடாது.

4. மண் குடத்தை தான் தண்ணீர் பிடிக்க பயன்படுத்த வேண்டும்.

5. ஆதிதிராவிடர் விட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6. சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

7. திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

8. பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

9. குதிரை மீது ஊர்வலம் செல்லக் கூடாது.

10. பொதுக் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

11. மேல் அங்கியோ, துண்டுடோ அணிந்து கொண்டு செல்லக் கூடாது.

12. உயர்ந்தோர் குடியிருப்பின் வழியாக தாழ்ந்தோர் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.

13. பெண்கள் ரவிக்கைகள் அணியக் கூடாது என்பதோடு மேல் சாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணிகளையும் எடுத்து அக்குலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

14. நீதி மன்றங்களில் சாட்சி சொல்ல நேரிட்டால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும்.

இதை எல்லாம் மாற்றியது யார்?
நீ அடிமையாக இருக்கும் உயர்ஜாதி பார்பனீயத் தலைமையா?

பதில் சொல்லுங்கள்! 

-------------------பின் பகுதி இணையத் தொகுப்பு------------------------ 

51 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா
    பெரியாரின் சிந்தனைகள் சமுதாயத்தின் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை வேரறுப்பதற்காக விளைந்தவை. இலக்கியத்தில் அவரின் பங்கு பற்றி தங்கள் கட்டுரையால் அறிந்து கொண்டேன். அடுத்த முறை தங்கள் இல்லத்திற்கு வரும் போது பெரியார் எழுதிய அல்லது பெரியார் பற்றிய புத்தகம் ஒன்றினை எனக்கு இரவலாக கொடுக்க வேண்டுகிறேன். பெரியார் சிறந்த சிந்தனையாளர், மதிநுட்பாளர் என்பதனைக் கட்டுரையின் மேற்கோள்கள் எடுத்தியம்புகிறது. வகுப்பில் பெண் பிள்ளைகளைப் பார்த்து நான் சொல்வதுண்டு பெரியார் ஒருவர் இல்லையென்றால் நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்க முடியாது என்று ஆண்களுக்கும் அப்படி தான் என்று மறந்து. பெரியாரின் சிந்தனைகள் வாழ்க! சமூகம் தளிர்க்க!! நன்றீங்க அய்யா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பாண்டியன். எப்படி இருக்கீங்க? என் மகள் நலமா? வலைப்பக்கப் பதிவில் இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறீர்கள் போல.. இனி வேகம் எடுக்கப் பார்க்கலாமா? தொடருங்கள். பெரியார் பற்றிய பதிவு ஒரே மூச்சில் எழுதியது. நன்றி.

      நீக்கு
  2. பெரியாரைப் பற்றிய ஆழமான சிந்திக்கத் தூண்டும் பதிவு!
    பெரியார் இல்லாவிட்டால் இன்றைய சமூகம் எந்த அளவிற்குப் பின்தங்கிப் போயிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தால் மட்டுமே அவர் பெருமைகளை உணர்ந்து கொள்ள முடியும்.
    தங்களின் முற்போக்குக் கருத்துகளையும் அறிவேன்.
    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே, “நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்“ என்பது தானே உண்மை? ஆனால், இந்த மரத்துப் போன மனிதர்களுக்கு வெயிலும் உறைக்கவில்லை, மழையும் குளிரவில்லை! என்ன செய்ய பெரியாரை நினைவுபடுத்திக்கொண்டே இருப்போம்.

      நீக்கு
  3. அன்புள்ள அய்யா திருமிகு.நா.முத்துநிலவன் அவர்களுக்கு,
    வணக்கம்.
    தந்தை பெரியார் பிறந்த நாளில் ‘பெரியார் பிறந்திருக்காவிட்டால்...?’ என்ற தங்களின் கன்டடுரையைப் படித்துப் பார்த்தேன்.

    அய்யா காசி ஆனந்தன் கவிதையில் தொடங்கி அருமையான வரியிலிருந்து...அனைத்தும் அருமை.

    பெரியார் உண்மைச் சிந்தனையையும், பெரியாரும்,காமராசரும் இல்லையென்றால்...நாம் இல்லையென்றும்...எல்லாம் அவர் போட்ட பிச்சையென்றும் உள்ளத்தில் உள்ளதைச் சொன்னீர்கள்.

    ‘கடவுளை வரச்சொல் நம்புகிறேன்!’ என்ற பெரியாரின் பெரிய சிந்தனையும் சிந்தனைக்கு பகிர்ந்தது வெகு அருமை. தாங்கள் பெரியாரின் உண்மைத் தொண்டனாக இருப்பது பெருமை.

    இன்றைய அரசியல் வருவோரை நினைத்தும் பெரியாரின் தேவை குறித்தும் தெரியப்படுத்திய விதம் பாராட்டுதலுக்குரியது.
    நன்றி.

    இன்றைய தினம் அடியேனும் ‘பெரியார்...தமிழினத்தின் விடிவெள்ளி!’ என்ற எளிய கவிதையை எழுதியுள்ளேன். தயவுசெய்து பார்த்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

    manavaijamestamilpandit.blogspot.in

    -நன்றி.
    -மாறாத அன்புடன்,

    மணவை ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே, தங்களின் தளத்தில் கருத்திட்டுள்ளேன். தளத்தைத் தொடரும் இணைப்பைத் தருக. தொடர்வேன் நன்றி.

      நீக்கு
    2. அன்புள்ள பேராசிரியர் அவர்களுக்கு,
      வணக்கம்.
      எனது blogger:

      manavaijamestamilpandit.blogspot.in

      -பார்த்து கருத்திடுக.

      -மாறாத அன்புடன்,

      மணவை ஜேம்ஸ்.

      நீக்கு
    3. தங்கள் தளத்தில் “ஃபாலோயர்“ இணைப்பைத் தரவேண்டுகிறென்

      நீக்கு
  4. வணக்கம் ...சகோதரரே
    மிக அருமையான ,தெளிவான கட்டுரை...இன்று என்ன நாள் என்று என் மாணவிகளிடம் கேட்டேன்...சட்டென்று பெரியார் பிறந்த நாள் என்றார்கள்....சில ஆசிரியர்களுக்கே தெரியவில்லை என்பது வேறு விசயம்..என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி..கரண்டிய வச்சுக்கிட்டே படிக்கிறோம்னு பெரியார் இருந்தால் பெருமை பட்டிருப்பார் தானே...நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமைப் பட்டிருப்பார்னா நினைக்கிறீங்க..? எங்களை (ஆ்ம்பளைங்களை) உறிச்சுத் தொங்கவிட்டிருப்பார். கந்தர்வனின் வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றிய “இரண்டாவது ஷிப்ட்” எனும் கதையைப் படித்திருக்கிறீர்களா, அதுதானே இப்ப நடக்குது? படித்த பெண்கள்,அதுவும் வேலைக்குப் போகும் பெண்கள் கூடுதல் உழைப்பினால் பொதுவாழ்விற்கே வரமுடியாத அளவுக்குக் கிடக்கிறார்கள்.

      நீக்கு
  5. "அறிவைத் தடுப்பாரை,
    மானம் கெடுப்பாரை
    வேரோடு பெயர்க்க வந்த
    கடப்பாரை” என்று கவிஞர் காசிஆனந்தன் அவர்களும்,
    “தொண்டு செய்து பழுத்த பழம்,
    தூய தாடி மார்பில் விழும்,
    மண்டைச் சுரப்பை
    உலகு தொழும்
    மனக்குகையில்
    சிறுத்தை எழும்
    அவர்தாம் பெரியார்,
    யார்? அவர்தாம் பெரியார்” என்று பாரதிதாசன் அவர்களும், ஏற்றிப் போற்றிய தந்தை பெரியார்."
    அறிந்திராத கவிதைகள்.
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
    இனிய பெரியார் பிறந்த தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. பெரியாரின் சிந்தனைகளை நன்றாகவே சொன்னீர்கள். ஆனால் தமிழ்நாடு இன்னும் பின்னோக்கியே சென்று கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. பெரியார் தின வாழ்த்துக்கள்!

    // நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நம் நாட்டில் மதம் மாறமுடியும். ஆனால், ஜாதி மாறமுடியாது. //

    செவ்வாய்க் கிரகம் சென்றாலும் ஜாதியும் பின்தொடர்ந்தே வந்துவிடும் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அய்யா. நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. உலகின் எந்தச் சமூக மாற்றத்திலும், சிறுபான்மை எண்ணிக்கையினர்தான் பெரும்பான்மையான மக்களுக்கு முன்னேற்றத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்... நாமும் மக்களிடம் நம்பிக்கை வைப்போம்.

      நீக்கு
  7. உடை நடைகளில் மாற்றம் வந்திருக்கிறது.ஆனால் மனதளவில் மாற்றம் வரவில்லை.அரசியல்வாதிகள் சாதி உணர்வை மறைமுகமாகவும் நேரிடையாகவும் தூண்ட தவறுவதில்லை.அதை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறார்கள். பகுத்தறிவுப் பகலவனின் சிந்தனைகளை அருமையாக நினைவூட்டி உள்ளது கட்டுரை,
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் கடவுள் இல்லை என்றார் பின்னால் வந்தவர்கள்ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமூலரைத் துணைக்கு அழைத்து, “ஒரு கடவுள் உண்டு“ என்றனர். இது சிறிய வேறுபாடு போலத் தோன்றும் ஆனால் மிகப்பெரிய மாறுபாடு என்பதைப் புரிய வைப்பதற்குள் படாதபாடு படவேண்டியுள்ளதே!

      நீக்கு
  8. எதிர்பாரா சிக்கல்களால் வலைப் பக்கம் வர இயலவில்லை. விரைவில் மீண்டு(ம்) வருவேன். ஐயா . நீண்ட நாள் வராமையை கவனத்தில் வைத்துக் கொண்டு கேட்டமைக்கு மிக நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலையை வெறும் பொழுதுபோக்காகக் கருதாமல், நல்ல பல தகவல்களைச் சுவைபடச் சொல்பவர் நீங்கள். எனவேதான் இடைவெளி நீள்கிறதே எனக் கவலைப் பட்டேன். நீங்கள் “லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவீங்க“னு காத்திருக்கிறோம் அய்யா

      நீக்கு

  9. இனிய வணக்கம் ஐயா..
    மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருந்த சமுதாயத்தை
    சற்று தலையில் தட்டி செய்வது தவறு என்று உணரவைத்தவர்.
    சாதி என்பது நாம் என்ன படித்து வாங்கிய பட்டமா பெயர்க்கு பின்னால்
    சுமந்து செல்ல என்று துச்சமாக தூக்கி எறிய வைத்தவர்...
    பெண்ணுரிமைக்கு முன்னின்று குரல் கொடுத்தவர்... இப்படி
    பல சமூக சிந்தனைகளுக்கு விதை போட்ட பகுத்தறிவு பகலவன்
    பற்றிய அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. தங்களின் வருகைக்கும் பதிவை உள்வாங்கிக் கருத்திட்டமைக்கும். அழகிய வடிவமைப்போடும், அசத்தலான படங்களோடும் உங்கள் தளம் கண்ணைப் பறிக்கிறதே! அடேயப்பா எத்தனை விருதுகளை வாங்கி உங்கள் வலைப்பக்கம் நிறைய அடுக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

      நீக்கு
  10. பெரியாரின் வைக்கம் போராட்டம் தவிர அவரைப் பற்றி பள்ளியில் படித்ததாக நினைவில் இல்லை அண்ணா.. நம் பாடங்கள் அப்படி :(
    'நிகழ்காலம்' எழில் எனக்கு நல்ல தோழி அண்ணா, வலைத்தளம் மூலமாகத்தான். அருமையான மனிதர். உளவியல் சம்பந்தமாகப் பணி செய்பவர், மாணவர்களை வழிநடத்துபவர். கீதா மற்றும் மைதிலியின் பதிவுகள் படித்தேன் அண்ணா.
    நான் நேற்று முகநூலில் இட்டிருந்த நிலைத்தகவல்:
    " "பெண்களின் கையிலிருந்து கரண்டியைப் பிடுங்கி புத்தகத்தைக் கொடுங்கள்" என முழங்கிய தந்தைப் பெரியாரின் பிறந்ததினம் இன்று. இன்றும் கரண்டியை மட்டுமே பெண்கள் பிடிக்க வேண்டும் (அல்லது பிரதானமாகப் பிடிக்க வேண்டும்) என்று நினைப்போரைக் கண்டு வருந்துகிறேன். சமூகத்தைக் கவனிப்பதற்கு முன் பெண்களே, நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்போம், நாளைய சமுதாயம் அவர்களே!" :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...தங்கையும் அ்ண்ணனும் ஒன்றுபோலத்தான் சிந்தித்திருக்கிறோம்.. நல்லதும்மா..குழந்தைகளை எண்ணிக் கவலைப்படுவதே இப்போது நம் நிலையாகிவிட்டது. ஆனால் அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். எனவே நமக்கு முன்பாகவே புரிந்துகொள்வார்கள்.. நன்றிம்மா.

      நீக்கு
  11. அண்ணா, நேரமிருக்கும் பொழுது இதைப் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் :)
    http://thaenmaduratamil.blogspot.com/2014/09/will-he-say-not-obligated.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லிவிட்டேன தாயே! நான் கவனிக்காததை நீ கவனித்து எந்தவித பந்தாவும் இல்லாமல் எனக்குச் சொன்னாய் பார்! அங்கே இருக்கிறதுப்பா உன் அன்பும் என்மேலான நம்பிக்கையும். (எனது நூல்வௌயீட்டு விழா நெருங்குவதால்.. அந்த வேலைகளில் செய்யும் வேலைகளை மறந்து வீட்டில் உன் அண்ணியிடமே திட்டுவாங்குகிறேன், என் தங்கையிடம் திட்டுவாங்கக் கூடாதா என்ன?) விரிவாகவே எழுதிட்டேன் போ!

      நீக்கு
  12. விரிவான சிறப்பான பதிவு ஐயா !! மதம் ஒழிந்தால் ஜாதி ஒழியும் என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான். உண்மையிலேயே பெரியாரும் காமர்ஜரும் இல்லாம்ல் போயிருந்தால் நாம் எவ்வாறு இருந்திருப்போம் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் இன்னும் நம் சமூகத்திற்கு சில பெரியார்களும் காமராஜர்களும் தேவைப்படுகிறார்களே ??? மேற்கொள்கள் அனைத்துமே அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றும் நமக்குள் பெரியாரும் காமராசரும் இருக்கத்தான் செய்கிறார்கள்... ஊடக வெளிச்சத்தில் நாம்தான் கண் கூசிப்போய் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்... அவர்களின் பணியை அடுத்த தலைமுறையில்தான் போற்றுவோம் என்று நினைக்கிறோம்.

      நீக்கு
  13. பெரியார் குறித்த அருமையான பகிர்வு. என்னை அறிமுகமில்லாவிட்டால் என்ன உங்கள் எழுத்துக்களின் தொடர் வாசகி நான். எழுத்துக்களால் நமக்கு அறிமுகம் இருக்கிறது சகோதரரே. நான் என்னுடைய பதிவுலகை ஆரம்பித்ததே பெரியாரின் கடவுள் தாண்டி சிந்தித்த பல கருத்துக்களை எனக்கும் சொல்லிக்கொண்டு மற்றவருக்கும் சொல்லத்தான். ஆனால் தற்போது கொஞ்சம் பாதை மாறினாலும் மனதில் என்றுமே அவரின் கருத்துக்கள் மூலம் விவாதமாக்கிக் கொண்டுதான் இருக்கிறார். என்னை உங்கள் பதிவில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தளத்திற்கு மீண்டும் போனபிறகுதான் நீங்கள் சொன்னது போல நானும் உங்கள் வாசகனாகவே இருப்பது புரிகிறது சகோதரி. அன்பின் பதிவுகளையும் தொடர்புகளையும் தொடர்வோம் நன்றி.

      நீக்கு
  14. அண்ணா! ஏற்கனவே இட்ட பதிவை என் பொருட்டு திருத்தி என் பதிவையும் சேர்த்த உங்கள் அன்பிற்கு ஏதேனும் கைமாறு உண்டா என்ன?? அன்னை என்ற சொல்லின் ஆண் வடிவம் தானே அண்ணன்:)
    கொஞ்சம் டைம் கொடுங்க :)) நிதானமாய் சொல்ல நிறைய விஷயம் இருக்கு :) நாளைக்கு வரேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவாகவே வா தங்கையே. வந்தாலும் நிறையச் சொல்வாய் என்று காத்திருக்கிறேன். (மகிழ்நிறை எழுத்துகள் இப்போதுதான் தெரிகின்றன) வடிவமைப்பு எளிமையாகவும், சற்றே முன்பைவிட தெளிவாகவும் மாறியிருக்கு. ரொம்ப நல்லாருக்கும்மா.

      நீக்கு
  15. பெரியார் பிறந்திருக்காவிட்டால்......
    நாம் எல்லோரும் ஆதிவாசிகள் போல் தான் வாழ்ந்திருப்போம்!

    அருமையான பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மா. காலம் இன்னொரு பெரியாரை உருவாக்கித் தந்திருக்கும் என்றாலும்... நீங்கள் சொ்ல்வதை மறுப்பதற்கில்லை. (ஆனால் இதைப் பெரியார் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். ஏனெனில் பெரியார் பெரியார்தான்!) நன்றி சகோதரி.

      நீக்கு
  16. "ஊன்றிவரும் தடி கொஞ்சம் நடுங்கக் கூடும் !
    உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கம் இல்லை !
    வான் தவழும் வெண்மேகத் தாடி ஆடும் !
    வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை !"
    என்ற கவியரசர் கண்ணதாசனின் கவிதை வரிகளையும் மறக்கமுடியுமா?!...நெஞ்சுரமும் நேர்மைத்திறமும் சோர்வறியா போர்க்குணமும் ...பெரியாரோடு போயிற்றே ..! பெரியாரை கண் முன் நிருத்திய தங்களுக்கு நன்றி ஐயா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... பொருத்தமான கண்ணதாசனின் கவிதை வரிகள். என்ன ஒரு சிக்கல்னா.. இந்தப் பக்கம் பெரியாரைப் பாராட்டிக்கிட்டே அந்தப்பக்கம் அர்த்தமுள்ள இந்துமத விளக்கம் எழுதிய கண்ணதாசன்போலப் பலரும் இருப்பதுதான். அவர் வெறும் பாராட்டுக்குரியவர் அல்லரே? பின்பற்றற்குரியர் அல்லரோ?

      நீக்கு
  17. பெரியார் குறித்து மிகவும் அருமையான கட்டுரை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிய கட்டுரைதான். நினைவிலிருந்து ஒரே அமர்வில் எந்த மேற்கோளுக்காகவும் தேடிச் செல்லாமல், ஒருமணி நேரத்திற்குள் எழுதியது அய்யா. அமர்ந்து காலம்எடுத்து எழுதினால் ஒரு பெரும் புத்தகமே எழுதலாம். என் திறமையால் அல்ல.. அவ்வளவு செய்திருக்கிறார் பெரியார் என்பதால் சொன்னேன். அவர் எழுதிய அளவிற்கும் நாம் படித்திருப்போமா என்பதும் ...சந்தேகமில்லை... இல்லைதான்!

      நீக்கு
  18. எனக்கு மிகவும் பிடித்த பாரதிதாசனின் பாடலோடு தொடங்கி இருக்கிறீர்கள் அண்ணா!
    **அவர்கள் யானையைப் பார்த்த குருடர்கள்!** இதை சொல்ல நான் எத்தனை வார்த்தை எடுத்துக்கொண்டேன்!!! அண்ணா அண்ணா தான்:)
    சமூகச் சீர்திருத்தப் பொது அரசியலுக்கு வந்ததாலேயே அவரது சொத்துகளை எல்லாம் இழந்தவர் பெரியார்** சரியாய் சொன்னீங்க அண்ணா! திருச்சியில் பெரியார் பெண்கள் கல்லூரி(நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்_நான் படித்த இன்ஸ்டிடியூட்) வளாகத்தை பார்த்தால் தெரியும் அவரது அற்பணிப்பும், பரந்த மனமும். பெரியாரை பற்றி பேசிக்கிட்டே இருக்கலாம் தான் , ஆனா அவர் செயலை அல்லவா விரும்புவார்:) நான் போய் ப்ளஸ் ஒன் பண்ணுறேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பாடலை சீர்காழியின் கணீர்க்குரலில் கேடடிருக்கிறாயா மைதிலி? ஆகா.. என்ன அருமையான பாடல்,இசை,குரல் அது? மீண்டும் வந்து, சுருக்கமா...சுருக்..னு சொல்லிட்டியேம்மா? நன்றிடா

      நீக்கு
  19. வணக்கம் தோழரே...
    மதுரை பாறைத்திருவிழாவுக்கு வாங்கேளேன்...
    மேலூம் விபங்களுக்கு
    http://indrayavanam.blogspot.in/2014/09/blog-post_21.html


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைப்புக்கு நன்றி தோழரே. ஆனால், வர இயலாத -நூல்வெளியீட்டு விழாப் பணிகள்- செய்திகளைத் தங்கள் வலைப்பக்கம் வந்துபார்க்க ஆவலுடன் இருக்கிறேன். தங்கள் செய்தியை இங்குள்ள ஆர்வலர் சிலருக்கு அனுப்பி (ஃபார்வேர்டு செய்து)இருக்கிறேன்.. நன்றி. தொடர்வோம்

      நீக்கு
  20. ஒரே மூச்சில் இவ்வளவு செய்திகள். படிக்கப் படிக்க வந்துகொண்டே இருப்பதுபோல இருந்தது. அனைத்தும் தேவையானவே. அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் தாமதம். பொறுத்துக்கொள்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விக்கிபீடியா எழுத்தாளரே! மிகவும் பயனுள்ள செய்திகளைத் தொகுத்து அவ்வப்போது எழுதுங்கள். தங்கள் பணி காலத்தால் அழியாத ஆவணமாக நிற்கும்படி எழுத வாழ்த்துகள். தாமதம் ஒரு பொருட்டல்ல, நன்றி.

      நீக்கு
  21. வணக்கம்
    ஐயா
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
    பார்வையிட முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/10/blog-post_3.html?showComment=1412301499933#c6597964411133375369
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே
    உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் கோர்த்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்..நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் தோழர்
    சிறப்பான கட்டுரை
    மதிப்பிற்குரிய தந்தையான பெரியாரின் பிறந்த தினத்தன்று,பெரியாரை உணர்ந்து கொள்ள தெரிந்துகொள்ள அவரைப்பற்றி 'பெரியார் பிறந்திருக்காவிட்டால் 'என்றொரு சிறப்பான கட்டுரை பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள்...
    நீங்கள் மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள் தோழர்...

    பதிலளிநீக்கு
  24. அருமையான பதிவு சகோதரியே... நான் இந்த தருணத்தில் பெருமை கொள்கிறேன் பெரியாரின் ரசிகை என்று...

    பதிலளிநீக்கு
  25. அருமையான பெரியாரின் பதிவு தோழர் வாழ்த்துக்கள் 😍😍😍😍👌👌👌👌👌👌👌

    பதிலளிநீக்கு
  26. மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் அய்யா

    பதிலளிநீக்கு
  27. பெரியார் என்றும் மக்களுக்கு வழிகாட்டிதான்.

    பதிலளிநீக்கு