நா.முத்துநிலவன் நூலுக்கு முனைவர் பா.மதிவாணன் அவர்களின் அணிந்துரை

முனைவர் பா.மதிவாணன் அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி.
நா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும்  கம்பன் தமிழும் கணினித் தமிழும்’ இலக்கியச் சிந்தனைகள் கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன்  பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன் அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரை     
------------------------------ 
       நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று என் மனம் அசை போடுவதைச் சற்றேனும் பதிவு செய்யாமல் இந்த அணிந்துரையை எழுத இயலாது.
                ஒன்றன் அருமையை நெருக்கடியில் தான் உணர முடியும்.  இந்திய வரலாற்றில் சனநாயகத்தின் அருமையை நெருக்கடி நிலைக் காலத்தில் (நுஅநசபநnஉல 1975-1976) உணர முடிந்தது.  அப்போது எனக்கு வயது பதினெட்டு. அரசியல் செய்திகளில் அடங்கா ஆர்வம் பிடர்பிடித்து உந்தியது.  மறுபுறம் என் இலக்கியக் கல்விவழித் தேடலில் நா. வானமாமாலை, க. கைலாசபதி, கோ. கேசவன் முதலியோரின் ஆய்வுப் போக்கிற்கு ஆட்பட்டேன்.  இவற்றால் அன்றைய இடதுசாரி இயக்கம் சார்ந்தேன்.
                1980களின் தொடக்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்து செயல்பட்டபோது அதில் இளைஞர்களின் ஈடுபாட்டையும் விறுவிறுப்பான செயலாற்றலையும் உளந்திறந்த தோழமையையும் ஏக்கத்தோடு எண்ணிப் பார்க்கிறேன்.
                புறத்தும் அகத்தும் நேர்ந்த பெருத்த மாறுதல்களால் தோழர்பலரும் வௌ;வேறு கிளை வழிகளில் பிரிந்தனர்.  சிலர் வேறு அமைப்புகளில் இணைந்தனர்.  சிலர் புதிய அமைப்புகளை உருவாக்கினர்.  சிலர் புதிய கருத்து நிலை சார்ந்தனர்.  சிலர் ஒதுங்கிப் போயினர்.  என்றாலும் அன்றைய கட்சி வறட்டுத்தனமுடையோர் சிலர் தவிர்ந்த தோழர் பலரிடம் இன்றும் தொடரும் நட்பின் அடையாளம் இந்த அணிந்துரை.
                ஆசிரியப் பணியைத் தொண்டாக மேற்கொள்ளுதல், சமூக அக்கறையோடு அழகியல் நயங்குன்றாக் கவிதையாக்கம், நுட்பமானவற்றையும் சுவைபட எளிமையாய் இயம்பும் பேச்சாற்றல், பாடுதற்கமைந்த குரல்வளம், எழில்மிகு ஓவியத் திறன், இயக்கப் பணிகளில் இடையறாது உழைத்தல், அரவணைப்போடு அமைப்புகளை உருவாக்கி நடத்துதல், கணினியின் புதிய தொடர்புச்சாத்தியங்களை உள்வாங்கி உலகளாவிய நிலையில் உலவுதல் இத்தனைக்கும் இடையே இன்முகம் மாறாதிருத்தல் - இவையனைத்தும் இயைந்த அரிய ஆளுமையாளர் கவிஞர் நா. முத்து நிலவன் அவர்கள்.
                அகவையால் மட்டுமன்றி வேறுபல வகைகளிலும் மூத்தவராகிய முத்துநிலவன் தம் நூலுக்கு அணிந்துரை தரும் வாய்ப்பை எனக்கு நல்கியிருப்பது அவரது அன்பின் பொருட்டேயாகும்.  நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன்.
                தமிழறிந்தோரின் வசதிகளுள் ஒன்று, செவ்வியல் இலக்கியம் முதல் இடையறாமல் தொடரும் இலக்கிய வகைகள் பலவற்றைத் தமிழ் வழியாகவே துய்க்க முடிவது.  இதுவே தமிழின் தலையாய சிறப்பென்பேன் நான்.
                மரபுவழித் தமிழ்க் கல்வி ஒரு காலத்தில் - நவீன இலக்கியங்களை அலட்சியமாகப் பார்த்தது.  நவீன இலக்கியப் படைப்பு ஃதிறனாய்வுகளில் ஈடுபட்டவர்கள் மரபிலக்கியங்களைப் பண்டிதச் சரக்கென்று ஒதுக்கினார்கள்.  மிகச் சிலர் விதி விலக்காயிருந்தனர்.  இவ்விதி விலக்குகளின் விரிவுக்குத் தமிழக மார்க்சியரே அடித்தளம் அமைத்தனர் என்பது வரலாற்றுண்மை.  இவ்வழியில் இயங்கும் முத்துநிலவன் மோனை கருதி, ‘கம்பன் தமிழும் கணினித் தமிழும்எனத் தலைப்பிட்டிருந்தாலும் கபிலர் தமிழ் முதல் கணினித் தமிழ் வரை தோய்ந்த தம் சிந்தனைகளைக் கட்டுரையாக்கியிருக்கிறார்.
                ‘காலத்தை மீறிய கவிதைகள்எனும் கட்டுரை தமிழ்க் கவிதை உள்ளடக்க உருவ மாற்றங்களைச் சமூக மாற்றப் பின்னணியில் வைத்துச் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது.
                ‘சங்க இலக்கியமும் தமிழ்ச் சமூக வரலாறும்எனும் கட்டுரை, சங்க இலக்கியங்கள் கொண்டு மார்க்சிய நோக்கில் வரலாற்றை எழுதும் வாய்ப்பைச் சான்றுகளால் புலப்படுத்துகிறது.
                திருக்குறள் முற்றிலும் காலங் கடந்த நூலில்லை என்றாலும் இன்றளவும் ஏற்றிப் போற்றப்படுவதற்கான நியாயங்களை, ‘திருக்குறளில் தமிழும் இல்லை தமிழ் நாடும் இல்லை ஏன்?’ என்கிற கட்டுரை குறள் கூறாமல் உணர்த்தியவை எனும் நோக்கு நிலையில் நின்று - விளக்குகிறது.
                ‘திருக்குறளில் பாடபேதம்!?’ எனும் கட்டுரை கல்விப்புலம் சார்ந்த விவாதக் கட்டுரை.  சீர்களை எழுத்தளவில் காண்பதும் ஓசையளவில் உணர்வதுமாகிய வேறுபாடும் கருதப்பட வேண்டுமென்று தோன்றுகிறது.
                ;கம்பனும் கார்ல் மார்க்சும்’, ‘செம்மொழி மாநாடும் கம்பனும்;’ ஆகிய கட்டுரைகளில் கம்பனை முற்போக்காளர் காண வேண்டிய கோணம் காட்டப்பட்டுள்ளது.  ஜீவா, ரகுநாதன், எஸ்.ஆர்.கே., க.வீரையன் நூல்கள் இவ்வகையில் படிக்கத் தக்கன.
                தமிழில் இலக்கிய விருதுகள்ஃபரிசுகள் பெரிதும் விவாதத்திற்குரியனவாகவே இருந்து வந்திருக்கின்றன் வருகின்றன.  அரசாதரவு பெற்ற கவிச்சக்கரவர்த்திகள் மக்கள் மனத்தில் இடம் பெறவில்லை.  கம்பனுக்கே அந்த இடம் நிலைத்தது.  விவாதமற்ற சாகித்திய அகாதெமி விருது தமிழில் அரிது.  பாரதிக்கு முதல் பரிசு கிட்டாமை பற்றிய ஆய்வில் பொதுவாகத் தமிழ்ச் சமூக மனப்பான்மையையும் புலப்படுத்துகிறார் முத்துநிலவன்.
                திரைப் பாடல்கள் கவிதைகளல்ல என்போரையும் திகைக்க வைத்தவர் கண்ணதாசன்.  படத்தின் பகுதியாகவன்றித் தனிக் கவிதைகளாகக் கண்ணதாசன் பாடல்கள் பல, தம்மைத் தக்கவைத்துக் கொண்டன.  முத்துநிலவன் கண்ணதாசனின் வெகுசன ஈர்ப்பு எழுத்தாற்றலையும், அனுபவம் பதிந்த பாடல்;களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
                ‘புதுக் கவிதை வரவும் செலவும்என்கிற கட்டுரையில் ஒருபுறம் புதுக்கவிதையைப் பழம் பண்டிதம் மறுதலித்ததையும் மறுபுறம் புதுப் பண்டிதம் அகமன இருட்டுக்குள் தள்ளியதையும் விமரிசிக்கும் முத்துநிலவன் புதுக் கவிதை வடிவத்தை முதலாளித்துவச் சனநாயகத்தின் விளைவாகவும் அதன் உச்சக் கட்டத்தில் சமூகச் சமத்துவத்தைச் சாதிக்கும் சாதனமாகவும் காண்கிறார்; வரவேற்கிறார்.  அதே வேளையில் மரபுக் கவிதை எனும் மகாநதி?’  என்கிற கட்டுரையில் மரபுக் கவிதைகளின் உயிர்ப்பையும், தொடர்ச்சியையும் அடுக்கடுக்கான சான்றுகளால் புலப்படுத்தியிருக்கிறார்.
                ‘இடக்கரடக்கல்தமிழுக்கு மட்டும் உரியதன்று. ஆங்கிலம் போன்ற மேலை மொழிகளிலும் இம்மரபு உண்டு.  இலக்கியத்தில் - குறிப்பாகக் கவிதையில் - இடக்கரடக்கற் சொற்கள் அவ்வப் படைப்பைப் பொறுத்து ஆற்றல் பெறும்.  அதே வேளையில் வலிந்து புகுத்தும் அதிர்ச்சிகளும் பொறுப்பற்ற அள்ளித் தெளிப்புகளும் தரமாகவே காலாவதியாகிவிடும்.  (இடக்கரடக்கல் அல்லாத சொற்களுக்கும் இது பொருந்தும்
                ஜெய பாஸ்கரன் கவிதையொன்றில் மயிரான்என்ற சொல் வருவதைத் தவிர்த்து மறைமுகமாகச் சொல்லியிருக்கலாம் என்கிற திருப்பூர் கிரு~;ணனின் கருத்தை மறுத்துச் சான்றுகள் பல காட்டி விவாதிக்கிறார் முத்து நிலவன்.
                இன்குலாபின் மனுசங்கடாபாட்டைக் கே.ஏ. குணசேகரன் குரலில் கேட்டபோது நாங்க எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்கஎன்கிற அவலமும் ஆவேசமும் எங்களை உலுக்கின.  இங்கே வேறு எந்த சொல்லும் பொருந்தாது.  முத்து நிலவனும் இதனைச் சுட்டியுள்ளார்.  இத்தொடர்பில் மேலும் ஆர்வமுள்ளோர் பெருமான் முருகனின் கெட்ட வார்த்தை பேசுவோம்எனும் நூலைப் படிக்கலாம்.
                ‘இன்றைய தமிழில் பெண் கவிகள்என்று தலைப்பு இருந்தாலும் சங்ககால ஒளவையை அறிமுகப்படுத்தி அடுத்தடுத்த காலகட்டத்துப் பெண் கவிகளின் போக்கையும் சுட்டிக் காட்டிய பின்பே தலைப்புக்கு வருகிறார் முத்து நிலவன் ; ‘பெண் கவிஞர்எனும் அடைமொழியின் நியாயத்தை முதலியேயே சொல்லி விடுகிறார்.
                பெரிதும் 1980களில் எழுச்சி பெற்று இரண்டாயிரத்தை யொட்டித் தொகுப்புகள் மிகுந்து வரும் பெண் கவிஞர் படைப்புகளில் அவர்தம் தனித்த அடையாளங்கள் மிளிர்வதைக் கவிதைச் சான்றுகளால் நிலுவியுள்ளார் முத்துநிலவன்.
                ‘ஒரு ஜெயகாந்தனும் சில ஜெயகாந்தன்களும்என்கிற கட்டுரை ஜெயகாந்தனின் மணிவிழாக் கால மதிப்பீடு.  அதற்குப் பின் ஜெயகாந்தன் குறிப்பிடத்தக்க எதையும் எழுதாமையினால் அது முழுமையான மதிப்பீடாகக் கொள்ளத் தக்கது.  வணிகஃவெகுசன இதழ் உலகில் எழுத்தாளனின் கம்பீரத்தை நிறுவியவர் ஜெயகாந்தன்.  வெகுசன இதழ்களால் புகழ் பெற்று, அவற்றுக்கேற்ப தமக்கெனத் தனித் தன்மையையும் தக்க வைத்துக் கொண்டு எழுதிய ஜெயகாந்தனின் சாதனைகளையும் சமரசங்களையும் சீர்தூக்கிக் காட்டுகிறார் முத்துநிலவன்.
                இக்கட்டுரையின் உள்ளடக்கச் சிறப்பு ஒருபுறமிருக்க, ஜெயகாந்தன் பாத்திரங்கள் தமக்குள் உரையாடுவது போல் தொடங்கி, இடையில் தாம்புகுந்து பேசி, நிறைவாக அப் பாத்திரங்களின் உரையாடலோடு முடிக்கும் உத்தி சுவையும் பொருத்தமும் புதுமையும் மிக்கது. 
                தமிழிலக்கிய விமர்சன வரலாற்றில் க.நா.சு.வுக்குத் தவிர்க்க முடியாத தனியிடமுண்டெனினும் அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்லர்.
                தம் பரந்த படிப்பால் பயமுறுத்தி, பட்டியல்களையே அவ்வப்போது மாற்றி விமர்சனமெனக் காட்டியவர் க.நா.சு. என்கிற முத்துநிலவனின் மதிப்பீடு உணர்ச்சி வயப்படாதவர்கள் கணக்கில் கொள்ள வேண்டியதாகும்.  க. நா. சு. கருத்துநிலை எதனையும் சாராத தூய இலக்கிய வாதியுமல்லர் என்பதைக் க.நா.சு.வின் எழுத்திலிருந்தே காட்டுகிறார் முத்துநிலவன்.
                இக்கட்டுரை குறித்து சுபமங்களாவில் வந்த ஏற்பு எதிர்ப்புகளையும் தொகுத்துத் தந்திருப்பது நாகரிகம் மட்டுமன்று; சனநாயக முறையுமாகும்.
                தமிழ்ச் சிறுகதைகள் வகைமைவளம் (varients) மிக்கவை.  சில கதைகள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது எதிரும் புதிருமான விமர்சகர்களாலும் ஏற்கப்பட்ட உண்மை.  இந்த வரலாற்றில் முற்போக்கான நடப்பியக் கதைகளால் தமக்கென ஓரிடம் பெற்றிருப்பவர் மேலாண்மை பொன்னுசாமி என்கிறார் முத்துநிலவன். என்றாலும்  குழு மனப்பான்மை கடந்து விமர்சனமாகக் குறை சுட்டவும் அவர் தயங்கவில்லை.
                ஊடக மாற்றங்களுக்கேற்பத் தமிழ் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கு அண்மைக் காலச் சான்று கணினித் தமிழ்.  இது மேலும் செம்மையும் செழுமையும் உற வேண்டுமென்பதைக் கணினியில் வளரும் தமிழ்என்கிற கட்டுரை காட்டுகிறது.
                உள்ளடக்கத்தால் மட்டுமன்றி உணர்த்து முறையாலும் இக்கட்டுரைகள் வாசகனை இன்முகம் காட்டி அழைத்துச் செல்கின்றன.
                ஜெயகாந்தன் மதிப்பீட்டுக் கட்டுரை உத்தி பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
                “அறிவியலின் படி வேண்டுமானால் ஆலமரம்தான் விழுதுவிடும் என்று கூறலாம்.  ஆனால் தமிழ் இலக்கியவுலகில் அரச மரம்தான் ஏராளமான விழுதுகளோடும் விதைகளோடும் விரிவடைந்து நிற்கிறதுஎன்று ஒரு கட்டுரை தொடங்குகிறது.  எப்படி? படித்துப் பாருங்கள்.
                “கம்பனை மட்டுமல்ல ஆண்டாளையும் ஓவியர் உசேனையும் நாடு கடத்துவதும் அல்லது ஏடு கொளுத்துவதும் ஒன்றுதானேஎனும் வாக்கியத்தில் இயல்பாக நடைபோடுகிறது எதுகை.
                இன்னும் பல இடங்களைக் காட்டலாம்.
                ஆய்வாழமும் நுட்பமும் மிக்கவற்றை வெகு மக்களிடம் அநாயாசமாகக் கொண்டு செல்லும் எழுத்தாற்றல் கைவரப் பெற்றவர் கவிஞர் முத்து நிலவன் என்பதற்கு இக்கட்டுரைகள் சான்று பகர்கின்றன.  அதே வேளையில் அடுத்த கட்டத்திற்கு வாசகனை உந்தித்தள்ளவும் வேண்டும்.  இந்தத் தெளிவும் இவரிடம் இருக்கிறது என்பது சங்க இலக்கியமும் தமிழ்ச் சமூக வரலாறும்எனும் கட்டுரையின் இறுதியில் புலனாகின்றது.
                மார்க்சியம் காலாவதியாகி விட்டது என்பவர்கள் - தமிழிலக்கிய ஆராய்ச்சியாளவில், எனக்கு எட்டியவரை மார்க்சிய அணுகுமுறை தந்த தெளிவைத்தாண்டிப் பெரிய அளவில் புதிதாக எதையும் செய்துவிடவில்லை. கவிஞர் முத்துநிலவன் அவர்களிடம் தமிழ் உலகம் மேலும் எதிர்பார்க்கிறது.
நட்பார்ந்த தோழமையுடன்
பா.மதிவாணன்,                                  
தமிழ்த்துறைத் தலைவர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,

திருச்சிராப்பள்ளி - 620 024
------------------------------------------------------------------------------ 

4 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.
  அணிந்துரையில் தங்களைப்பற்றியஅனல்ப்பறக்கும் வார்த்தைகள் மயைல் உற்றதை அறிந்தேன் மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. எங்கள் அய்யாவின் அறிவு சார்ந்த நடையை வியப்பதா? தங்களின் நூற்கருத்துக்களை அவர் வழி அறிந்து கொண்டதை வியப்பதா எனத் தெரியவில்லை!
  காத்திருக்கிறோம் அய்யா!

  பதிலளிநீக்கு
 3. நூலைப் படிக்க வேண்டும் என்னும் அவாவைத் தூண்டும் அணிந்துரை. வாழ்த்துகள் கவிஞரே

  பதிலளிநீக்கு
 4. சரவண புகழ் மணிசனி, செப்டம்பர் 04, 2021

  முத்துநிலவன் அய்யா வைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது இதைப் படிக்கும்போது

  பதிலளிநீக்கு