தமிழ் இனிது – 49 - (அடுத்த வாரம் நிறைவடையும்)

 

(நன்றி -இந்து தமிழ் -28-5-2024)
 இலக்கணத்தில் இரட்டைக் கவனம் ஏன் தேவை?

3000-ஆண்டுக்கு மேலாக- பேச்சு எழுத்து இரண்டிலும் மக்கள் மொழியாகத் தொடர்வது தமிழ். எழுத்து வடிவங்கள் மாறினாலும் பொதுவான பேச்சில் பெரிய மாற்றமில்லை. ஆக, கற்காலம் தோன்றி தற்காலமும் நாம் பேசும் தமிழை, “வயது ஏற ஏற வனப்பேறும் அதிசயமே!” என்று அப்துல் ரகுமான் வியக்கிறார்!  

அவ்வப்போது தோன்றும், மறையும் சொற்களைப் பற்றியும்,  பாடும்- எழுதும் பாவகைக்கு ஏற்பவும் இலக்கண நூல்களும் மாறி வந்துள்ளன. விருத்தங்கள் எல்லாம் அப்படி வந்தவை தாம்! இப்போது இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கணத்தை மீறிய புதுக்கவிதை வந்து, பலரையும் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. புதிய புதிய சிந்தனைகளில் இலக்கியங்கள் தோன்ற, தமிழ்ச் சமூகம் ஒரு பாய்ச்சல் வேகத்திற்கு மாறி வருகிறது!  

மாறிவரும் இலக்கண மரபுகள்-   

            தொல்காப்பியரே, “மொழி, காலத்தாலும் இடத்தாலும் மாறும்“ என்பதை ‘புறனடை’ இலக்கணமாகச் சொல்லி விட்டார்! “கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே” எனும் நூற்பாவை இருவேறு இடங்களில் (602,781) அமைத்த தொல்காப்பியர், கால மாற்றத்திற்கு ஏற்ப மொழி மாற்றத்தை முன்மொழிகிறார்.

தொல்காப்பியர்க்கு, 1,500ஆண்டு பின்வந்த நன்னூலாரும், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என வழிமொழிகிறார். தமிழை அழிக்க நினைப்போர்க்கு இரையாகி விடாமலும், வளர்க்க நினைப்போர்க்குச் சுமையாகி விடாமலும் புதிய இலக்கணத்தில் இரட்டைக் கவனம் தேவை!

புதிய இலக்கணத்தின் தேவை

ச-எழுத்து, அ,ஐ,ஔ எனும் மூ எழுத்துகளில், சொல்லின் முதலில் வருவதில்லை (ச,சை,சௌ எனத் தமிழ்ச் சொற்கள் தொடங்குவதில்லை) என்கிறது தொல்காப்பிய நூற்பா-62, ஆனால் சங்க இலக்கியத்திலேயே “ச“ எழுத்து நூறு இடங்களில் மொழி முதலில் வந்திருப்பதைப் பட்டியலிடுகிறார், ‘சங்க இலக்கியம் தொடரடைவு’  எனும்   செயலியை, தனது பேருழைப்பால் தொகுத்திருக்கும் மதுரை ப.பாண்டியராஜா. ஆக, தொல்காப்பியர் கருத்தும், பின்னர் மாறியிருப்பதைப் பார்க்கிறோம்.

1990களின்பின், பன்னாட்டுப் பண்பாடு பரவியபோதே, “புதிய மணிப்பிரவாள நடை“ ஆங்கில, கிரந்த எழுத்துகளில் பரவியது! பள்ளி மாணவர் பெயர்கள் 99விழுக்காடு கிரந்தக் கலப்பில் உள்ளனவே?!  

ஆக, பயன்பாடற்ற இலக்கணத்தைக் கைவிட்டு, புதிய இலக்கணம் தொகுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பேராசிரியர் பொற்கோ, தமிழண்ணல் போன்றோர் இதைப் பற்றிக் கவலையோடு சொல்லி யிருக்கிறார்கள்.

உரை நடையில் இலக்கணம் தேவை

            தொல்காப்பியம் “உவமஇயல்“ என்றே தனித்துச் சிறப்பித்த உவமையை, நன்னூல் 12ஆகச் சுருக்கியது (நூற்பா-366). இவற்றிலும் ஒன்றுகூட இப்போது வழக்கில் இல்லை! மாறாக, ‘ஆட்டம்’ ‘மாதிரி’ ‘கணக்கு’ போலும் புதிய உவம உருபுகள் வந்து விட்டன! (“குரங்காட்டம் தாவுற“ “ஆந்த மாதிரி முழிக்கிற“, “கிளி கணக்கா பொண்ணு“) இவற்றுக்குப் புதிய இலக்கணம் தேவை!  இது ‘ஒரு சோற்றுப் பதம்’ தான்!

இலக்கணத்தைப் பழைய முறையில் (1)நூற்பா, (2)எடுத்துக் காட்டு, (3)பொருத்த/விளக்கம் என்று இல்லாமல், உரைநடைச்  சொற்களைக் கொண்டே –சுமையற்ற வகையில்- மாணவர்க்குக் கற்றுத்தர வேண்டும். எளிமையும், நடைமுறைத் தெளிவும், வலிமையும் கொண்டதாக, புதிய இலக்கணம்,  “தமிழ் இனிது” என மாறவேண்டும். 

                                                                    (அடுத்த வாரம் நிறைவடையும்)

           ------------------------------------------- 

28-5-2024- இன்று காலையே “இந்து தமிழ்“ நாளிதழில்

நமது கட்டுரையைப் படித்த மதிப்பிற்குரிய 

நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள்

பின்வரும் குறுஞ்செய்தியை எனக்கு 

அனுப்பியிருந்தார்கள்.

அவர்களின் அன்புக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. 

“தமிழ் இந்து நாளிதழில் தங்களின் தமிழ் உலா அடுத்த வாரம் நிறைவடையும் என்பதை பார்த்தேன். இன்னும் கொஞ்ச காலம் தொடர்ந்திருக்கலாம் தமிழ் இந்து”

------------------------------------------

கடந்த ஓராண்டாக, செவ்வாய் தோறும் வந்த நமது கட்டுரையைப் பல்லாயிரக்கணக்கானோர் படித்தாலும், ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிய பெருந்தகையினரை விரல் விட்டு எண்ணிவிடலாம்! அவ்வாறான பெருந்தகையினர் இருவர் தாம்  முன்னுரை, அணிந்துரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்! 

அடுத்த மாதமே “தமிழ் இனிது” நூல் வருகிறது! பணியைத் தொடங்கி விட்டார்கள் இந்து-தமிழ்ப் பதிப்பகத்தார்!

500-ஐத் தாண்டும் சொற்களை அடுக்கி, “சொல்,பெயர் அடைவு” (எந்தச் சொல், எந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது) எனும் விவரக் குறிப்பை அகர வரிசையில் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் நான்! 

நூலோடு சந்திப்போம்!

நன்றி 

----------------------------------

4 கருத்துகள்:

  1. சிறப்பான தொடர்.. நிறைவடைவதில் வருந்துகிறேன். விரைவில் வேறு வடிவில்/ தளத்தில் இதே பணியை இன்னும் செம்மையாகத் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. மாற்றம் ஒன்றை மாறாதது என கொள்வன கொண்டு தள்ளுவதைத் தள்ளி நாம் தமிழைப் பயன் கொள்வோம். சிறப்பு தோழர். பாராட்டும் வாழ்த்தும். ~ தேமொழி

    பதிலளிநீக்கு
  3. இரையாகாமலும் சுமையாகாமலும் தமிழ் இனிது கற்றுத்தந்த ஐயாவை வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  4. தமிழின் தொன்று தொட்டு வரும் பெருமையைச் சொன்னதோடு அந்தப் பெருமை தொடரத் தேவைப்படும் மாற்றங்களையும் பரிந்துரைக்கும் அருமையான கட்டுரை! வெறும் நான்கே நெடும் பத்திகளில் இவ்வளவு சர்ச்சைக்குரிய விதயத்தை இவ்வளவு வலிமையாக முன்வைத்தது வழக்கம் போல் உங்கள் திறமையின் எடுத்துக்காட்டு! மாற்றங்கள் கட்டாயம் தேவைதான் ஐயா! அதில் மறுபேச்சே இல்லை. ஆனால் மாற்றங்களின் எல்லையை வரையறுத்துக் கொள்வதோடு பின்விளைவுகளையும் கருத்தில் கொண்டு நாம் முடிவெடுக்க வேண்டும். ஆதரவுக் கருத்தாளர், எதிர்க் கருத்தாளர் என வேறுபாடு ஏதுமின்றித் தமிழறிந்த தகைசால் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுத்தால் அந்த ஒருமனமான முடிவுக்குப் பின்னால் பொதுமக்களான எங்கள் நிறைமனமான மொழிநடை என்றென்றும் வழிதொடரும் ஐயா!

    தமிழின் இனிமை சொல்ல 50 படலங்கள் என்பது நீங்களே ஒருமுறை வருணித்தது போல் கடலைக் கரண்டியில் அள்ளித் தரும் வேலைதான். ஆனால் தொடரின் அடுத்த பாகம் வெறும் 2ஆக இல்லாமல் 2.0ஆக அமையும் எனும் தங்கள் மீதான நன்னம்பிக்கையோடு விடை தருகிறோம் ஐயா!

    பதிலளிநீக்கு