தமிழ்ப் பெயர் தானா?
நண்பர்கள் சிலர், “என்
பெயர் தமிழ்தானா?” என்று கேட்டனர். “பொதுவாக
அன், உ என முடியும் ஆண் பெயரும் அள், ஐ என முடியும் பெண் பெயரும் தமிழ்ப் பெயராக இருக்கும்,
இ இருபால் பெயரிலும் வரும். இதனால்தான் பாரதி, மணி என்பன இருபாலிலும் உள்ளன“ என்றேன்.
இதைக் கேட்ட ஒருவர், “அய்யோ! நான் பெருமாள், இது பெண் பெயரா?”என்று பதறிவிட்டார்! இன்னொருவர் ”நடிகை
சிம்ரன் ஆண்பாலா?” என்று என்னை மடக்கினார்.
தமிழில்தான்
அன் ஆண்பால், சிம்ரன் தமிழ்ப் பெயரல்ல என்றதும் சற்றே நிம்மதியடைந்தார்! கடவுள் பெயர்களுக்கும்,
ஜ,ஸ்ரீ,ஷ,க்ஷ,உற,ஸ கிரந்த எழுத்துப் பெயர்களுக்கும்
தமிழ் விதி பொருந்தாது.
ஆ என முடியும் வடமொழிப் பெயர்கள் தமிழாகும்
போது ஆண் எனில் அன் எனவும் பெண் எனில் ஐ எனவும் மாறும் அதர்வா-அதர்வன், சீதா-சீதை போல.
தமிழில் பெயர்வைக்கும் உணர்வு இப்போது பெருகி
வருவது மகிழ்ச்சி. பெயர் வெறும் பெயரல்ல, பண்பாட்டின் அடையாளம்! உங்கள், குழந்தைப்
பெயர்கள், தமிழ்ப் பெயரெனில் நல்லதுதான். அதைவிட சாதி, மதம் காட்டாத பெயராக இருந்தால்
மிகவும் நல்லது.
நோக்கும் பார்வையும்
நோக்கம்,
பார்வை இரண்டும் ஒன்றுபோல் தோன்றினாலும் வேறு
வேறு பொருள் தருவன! பயணத்தின் போது, நம் கையில் உள்ள செய்தித்தாளைக் கேட்பவர், “ஒரு
பார்வை (Glance)பாத்துட்டுத் தர்ரேன்” என்பது மேலோட்டமான பார்வை. காதலியைக் காதலன்
-ஒரு நோக்கத்தோடு(Sight)- பார்ப்பது நோக்கம்! “அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்“-கம்பன்.
இதை, “இவள் இருவித நோக்கம் கொண்டவள், ஒரு நோக்கு நோய் தரும், மற்றது அந்நோய்க்கே மருந்தாகும்”(குறள்1091)
என்பது கதைக் கவிதை!
ஒற்றுமையும் ஒருமையும்
’பன்மையில் ஒருமை’,
‘ஒற்றுமையே வெற்றிக்கு வழி’ என்பதை அடிக்கடி கேட்கிறோம். ஒருமை, ஒற்றுமை இரண்டும் ஒன்றல்ல!
போர்க்கால
நிலையில் ‘இந்தியர் அனைவரும் ஒருதாய் வயிற்று
மக்கள்’ என்பது உணர்ச்சியூட்டும் ஒருமைப்பாடு. எல்லா நிலைக்கும் இது பொருந்தாது. மதம்,
மொழி, இனம், பண்பாடு கடந்து, ‘இந்திய உணர்வில்’ ஒருவருக்கொருவர் உறவு சொல்லி வாழ்வது
ஒற்றுமை! இதுதான் இந்தியாவின் பெருமை! இலக்கணத்தில் சொன்னால், ஒருமை தற் கிழமை (என்
கை) போல, பிரிக்க முடியாதது. ஒற்றுமை பிறிதின் கிழமை (என் பேனா) போல, தேவைக்கேற்பப்
பிரிந்தும் சேர்ந்தும் இருக்கலாம்.
‘ஒருமைக்கண்
தான் கற்ற கல்வி, ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ -குறள்-398. ‘ஒருதலைமுறையில் கற்கும்
கல்வி, ஏழு தலைமுறைக்கும் உதவும்’ எனும் பொருளன்றி ஒற்றுமைப் பொருளல்ல!
காலமும் நேரமும்
அழைப்பிதழ்களில், நிகழ்ச்சி
நடக்கும் நேரத்தை, ‘காலம்: காலை 10மணி’ என்று அச்சிடுகிறார்கள். இந்த இடத்தில் நேரம்
என்பதே சரியானது. காலம், ஆண்டின் பெரும்பிரிவு. நேரம், நாளின் சிறுபிரிவு. இதைப் பெரும்பொழுது,
சிறுபொழுது என்பது தமிழ் நுட்பம்! கடந்த (தமிழ்இனிது-42) கட்டுரையில் ‘இது தேர்தல்
நேரம்’ என்று எழுதிவிட்டேன்! ‘தேர்தல் காலம்’ என்பதே சரி. சுட்டிக் காட்டாத நண்பர்களுக்கு
நன்றி. “கால நேரம் பாப்பமா, கல்யாணத்த முடிப்பமா?” என்பது திரைப்பாடல்.
-----------------------------------
இந்த முறை தமிழ் இலக்கணம் இளமை ததும்புகிறது ஐயா!
பதிலளிநீக்கு‘பெருமாள்’ பெண்பாலா, ‘சிம்ரன்’ ஆண்பாலா என்ற அந்த நண்பர்களின் கேள்வி குபீர்ச் சிரிப்பு வகை! பெயர்கள் தமிழில் இருந்தால் மட்டும் போதாது, சாதி-மதம் காட்டாதவையாகவும் இருக்க வேண்டும் என்ற உங்கள் சிந்தனையை வலியுறுத்தலாகச் சொல்லாமல் "அப்படி இருந்தால் நல்லது" என்று சொன்ன நயம் ‘இப்படிச் சொன்னாலாவது கேட்பார்களா என்று பார்க்கலாம்’ என்ற ஏக்கத்தின் குரலாய் எதிரொலிக்கிறது.
பார்வையின் நோக்கத்துக்கும் நோக்கமில்லாப் பார்வைக்கும் இலக்கணம் மட்டுமின்றி இலக்கியமும் காட்டியது அழகு!
வேற்றுமையில் ஒற்றுமை அறிவேன். ஒருமைக்கும் ஒற்றுமைக்குமான வேற்றுமை சுவை!
காலம், நேரம் இரண்டுக்கும் வேறுபாடு உண்டுதான் என்றாலும் இவ்வளவு நுட்பமாகப் பெரும்பாலோர் எழுதுவதில்லை என்பதால் இவற்றையெல்லாம் பிழை என அடையாளம் காண முடிவதில்லை.
கால நேர வேறுபாடு பற்றித்தான் நிறையப் பேர் இன்று கேட்டார்கள். இதோடு பெரும்பொழுது சிறுபொழுது எனும் இலக்கணத்தைக் காலம், நேரம் என்று வைத்துக் கொள்ள முடியுமா என்றும் கேட்டார்கள். இதற்கு இலக்கிய எடுத்துக் காட்டு உண்டா என்றும் கேட்கிறார்கள்! எனக்குத் தெரியல! இது பொருந்தும் என்று எனக்குப் பட்டதால் எடுத்துச் சொன்னேன். தவறு என்று பட்டால் சரியாக இருந்தால் நான் மாற்றிக் கொள்வேன். நீங்கள் சொல்வது போல இவ்வளவு நுட்பமாகப் பெரும்பாலோர் பார்ப்பதில்லை என்பது எனக்குச் சரியாகப் படவில்லை. இதைப்படித்தவர்களாவது அவர்களின் அழைப்பிதழில் மாற்றம் செய்தால் அது போதும் எனக்கு. நாம போய்க்கிட்டே இருப்போம்!
பதிலளிநீக்குஇவை யாரும் நினைவிலிருந்து மங்கி மழுங்க இருக்கின்ற காலத்தில் வியக்க வைக்கும் உதாரணங்களுடன் விளக்கமளித்து, நினைவில் நிறுத்திக் கொள்ள மிளிர வைக்கிறீர்கள்.
பதிலளிநீக்குசார். நமது உடல் செல்களால் ஆனது என்றபோது ஒவ்வொரு செல்லுக்கு உள்ளிருக்கும் பகுதிகளை பிரித்துப் பிரித்து, சுவைக்க கொடுப்பது போல இருக்கிறது தங்களது இலக்கண விளக்கம். இனிது தமிழ் வாழ்க! தாங்கள் வாழ்க!! பகிர்தலுக்கு மிக்க நன்றி சார்.
வணக்கம் சகோதரி. மின்னஞ்சலுக்கு நன்றி. மறந்துவிடுவது மக்கள் இயல்பு. நல்லவற்றைத் தொடர்ந்து நினைவுபடுத்தத்தானே கலைகளும் இலக்கியமும்? நான் அதில் கொஞ்சம் இலக்கணச் சொற்களையும் சேர்த்துக் கொள்கிறேன். அவ்வளவுதான்! தொடர்ந்து உங்கள் கருத்துகளை எழுத வேண்டுகிறேன். வணக்கம்
பதிலளிநீக்குஅழைப்பிதழ் நேரம் காலம் விளக்கம் அறிந்தேன் நன்றி ஐயா
பதிலளிநீக்குஒருமை-ஒற்றுமை இவற்றின் பயன்பாட்டில் இன்னும் சில சான்றுகள் கொடுங்கள் அண்ணா. நன்றி.
பதிலளிநீக்குநேரம் என்பது தமிழென்றும் காலம் வடசொல் என்றும் நினைத்திருந்தேன். காலம் என்பதற்குப் பருவம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா அண்ணா?
பருவம் இக்காலச் சொல். ஆனால் அதே பொருளில்தான் பெரும்பொழுது என்னும் பழைய தொடர் உள்ளது. ஆண்டின் பிரிவு பெரும்பொழுது, அல்லது பருவ காலம்.
நீக்குநாளின் பிரிவு சிறுபொழுது எனப் பழந்தமிழ் சொல்கிறது. அதை இப்போது நேரம் எனலாம்.
ஒருமை - பல்வேறு பட்ட மொழிசார்ந்த பண்பாடுகளை மறுக்கும். பன்மைகளை மறுக்கும். ஒருநாடு ஒரு மொழி ஒரு வரி ஒருதேர்தல் ஒரு கட்சி ஒரு தலைவர் சரியா?
ஒற்றுமை எல்லா நாடுகளையும் இணைக்க மதம் மொழி பண்பாடு கடந்த மனிதநேயம் காக்கும் பன்மைத் தன்மையை ஏற்கும்