தமிழ்இனிது-30 (நன்றி-இந்து தமிழ் 09-01-2024)

       


       
வரலாறு மாறி வரலார் ஆகலாமா?

ஒன்று – ஒண்ணு? ஒன்னு?

         வி.சேகர் இயக்கிய திரைப்படம், ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும். இந்த வரியில் தொடங்கும் கண்ணதாசன் திரைப்பாடல் ஒன்றும் உள்ளது.    

மாறாக, கன்றுக்குட்டி - பேச்சு வழக்கில் - ‘கன்னு’க்குட்டி ஆகிறது. “கன்னுக்குட்டி கன்னுக்குட்டி“- திரைக்கலைஞர் சிவகுமார் நடித்த பாடல்!  கொன்று, தின்று - ‘கொன்னாப் பாவம், தின்னாப் போச்சு!”-  பழமொழி!

இப்படி, ‘று’ எழுத்து, இனவழியில், ‘னு’ ஆவதுண்டு!  எண்ணுப் பெயர்களில்,  ஒன்று-ஒண்ணு, மூன்று- மூணு என, ‘ணு’ ஆவது எப்படி?       

         தமிழறிஞர் இராம.கி., தனது “வளவு“ வலைப்பக்கத்தில் “ஒண்ணு சரியா? ஒன்னு சரியா? என்றால், ‘ஒண்ணு’ என்பது முதலில் வந்திருக்க வேண்டும், ‘ஒன்னு’ என்பது பின்னால் வந்திருக்க வேண்டும்” என்கிறார். (https://valavu.blogspot.com/2005/11/blog-post_03.html)

இதை, இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்: ‘ஒண்ணா’  எனில் ‘இயலா’ என்பது பொருள். ‘சொல்லொ(ண்)ணாத் துயரம்’,  ‘காண ஒண்ணாக் கொடுமை’  என, ‘ஒண்ணா’ - எதிர்ச் சொல்லாகவே உள்ளது!  

ஆக; ஒன்று, மூன்று என்பன எழுத்து வழக்கு; ஒன்னு, மூனு என்பன பேச்சு வழக்கு,  ஒண்ணு, மூணு  என்பன தவறான வழக்கு எனலாம்.                   

ஆர்ந்த - ஆழ்ந்த இரங்கல்?

அன்பிற்குரியவர்களின் மரணத்தில், “மனமார்ந்த அஞ்சலி / இரங்கல்” என்கிறார்கள்!  நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம். ஆனால், “ஆழ்ந்த இரங்கல்” என்பதே சரி.  ‘உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து’ என்பது உட்பொருள். நன்றி சொல்ல, “மனமார்ந்த நன்றி” என்பதே சரி.

‘நன்றியை உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து சொல்லக் கூடாதா?’ எனில், “நல்லதுக்கு, அழைச்சாத்தான் போகணும், கெட்டதுக்கு அழைக்க மறந்தாக் கூட, கேள்விப் பட்டாலே போகணும்” என்பார்கள்! ஆளில்லாத பூக்கடையில், இரவிலும் சில மாலைகள் தொங்குவதைப் பார்க்கலாம்! பணத்தை மீறிய தமிழர்மரபு!  நல்ல மரபுதானே இலக்கணமாகிறது?!   

ஒருக்காலும் ஒருகாலும் – 

நக்கீரரின் முருகாற்றுப் படைக்குப் பின்னுள்ள – ‘கடைச் செருகல் - வெண்பாக்கள் ஒன்றில், “ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்” என்னும் தொடர் உள்ளது. 

ஆள்பவனையும், ஆண்டவனையும் கேள்விகேட்ட திருவிளையாடல் படத்தில், முக்கண்ணன் சிவனிடமே, இருகண் சிவந்து “...ஒருக்காலும் இருக்க முடியாது!” என்று சீறுவார் நக்கீரர்!

“ஒருக்கா வந்துட்டுப் போப்பா?” இது, சிற்றூர்த் தாயின் தவிப்பு! மலை(ST)மக்கள் இலக்கியமான குற்றாலக் குறவஞ்சி, ‘ஒருக்கால்’ ‘இருக்கால்’ என்றே பாடும் (கு.கு: 353ஆம் பாடல்).  

  ஆக, ‘ஒருமுறை’ எனப் பொருள்படும் ‘ஒருகால்’ எனும்  சொல் பேச்சுவழக்கில் ‘ஒருக்கால்’ என்றாகிறது. ‘ஒருக்காலும்’ என ‘உம்’ சேரும்போது எதிர்ச் சொல்லாகிறது எனக் கருதலாம்.

அடையார்? பெரியார்?  – வரலார்?

காஞ்சிபுரத்துத் திருப்பெரும்புதூர் அருகில் பிறந்து, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களைக் கடந்து, மொத்தம் 43கி.மீ., நடந்து, வங்கக் கடலை அடையும் ஆறு அடையாறு! இதை, ‘அடையார்’ என்பது அடுக்குமா? சொல்லின் இறுதியில் வரும் ‘று’ (குற்றியலுகரம்) ஆங்கிலேயர்க்கு வராததால் ‘ர்’ போட்டு அடையார் என்றனர்! 

இவ்வாறே, ‘முல்லைப் பெரியாறு’ (பேரியாறு-பதிற்றுப் பத்து : 28), ‘பரளியாறு’ (பஃறுளியாறு –சிலம்பு:11:காடு:19) என்பனவும் மருவின.  

தமிழக ஆறுகளின் ‘வரலாறு’ மாறி,  ’வரலார்’ ஆவது நல்லதா?!  

----------------------------------------------------------------

(வலையேற்றப்பட்ட நேரம் :

09-01-2024 செவ்வாய் பிற்பகல்-2-30)

14 கருத்துகள்:

  1. அருமை ஐயம் நீக்கும் பதிவு நன்றி தோழர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜனவரி 09, 2024

      நன்றி சொன்னால் போதாது தோழர். இவைபோல என்னென்ன சொற்கள் குழப்பமாக உள்ளன எனும் உங்கள் அனுபவ அடிப்படையில் வரும் பட்டியல் வேண்டும். அனுப்புங்க

      நீக்கு
  2. அருமை ஐயா!

    தலைப்பைப் படித்து விட்டு "வரலாறு என்பதைக் கூடவா ‘வரலார்’ என எழுதுகிறார்கள்? அப்படியே எழுதினாலும் அதற்கொரு விளக்கம் தேவையா?" என்று எண்ணினேன். ஆனால் அடையாறு, பெரியாறு ஆகிய சொற்களின் பிழைகளைத்தாம் அப்படிக் கண்டித்திருக்கிறீர்கள் என்பது கண்டு சுவைத்தேன்!

    ஒருக்கால் என்பது தவறு, ஒருகால் என்பதே சரி என எங்கோ படித்த நினைவு. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ ‘ஒருக்காலும்’ என்றே இதுவரை நான் எழுதி வந்திருக்கிறேன். தங்களுடைய மேற்படி விளக்கத்தைப் படித்த பின்பு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் தேடியபொழுது இரண்டு வகையிலுமே இந்தச் சொற்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டிருப்பதாக - அதாவது நீங்கள் சொன்னதைத்தான் - பாவாணரும் பதிவு செய்துள்ளார். இந்த ஒற்று எப்பொழுதுமே இப்படித்தான் குழப்பியடிக்கிறது!

    இப்படி இருவேறு எழுத்துக்கூட்டல் கொண்ட சொற்களில் இரண்டுமே சரி என்பதைத் தாங்கள் தொடர்ந்து இந்தத் தொடரில் விளக்கி வருகிறீர்கள். அறிந்து மகிழ்கிறோம்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜனவரி 09, 2024

      நன்றி தோழர் இபுஞா. ஆனால், இத்தொடரில் நான் எழுதிய பல குழப்பமான சொற்களை எடுத்துத் தந்தவர் நீங்கள்தான். பட்டியல் இன்னும் நீள்கிறது. தொடர் நன்றாகப் போவதால் தொடரலாம் என்கிறது இதழ் நிருவாகம். நீங்களும் பட்டியலைத் தொடரலாம்

      நீக்கு
    2. கண்டிப்பாகத் தொடர்கிறேன் ஐயா தாங்கள் தரும் ஊக்கத்தால்!

      நீக்கு
  3. நடைமுறை இலக்கணம் நளினமுடன் நடைபயில்கிறது. அருமை ஐயா. நன்றி.
    கோபிநாத் கே. எஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜனவரி 09, 2024

      நன்றி கோபி. என்னை விடவும் தேர்ந்த “இலக்கணப் புலி” நீங்கள் என்பதை நாம் நடத்திய தமிழாசிரியப் பயிற்சியிலேயே சொன்னதை நினைவூட்டுகிறேன். நீங்களும் உங்களனைய இலக்கண ஞானியரும் எழுதாத காரணத்தாலேயே நான் எழுதத் தொடங்கினேன். உங்கள் தமிழிலக்கண அறிவ மக்களுக்குப் பயன்பட வேண்டாமா கோபி? ஏதாவது செய்யுங்கள். குண்டுச் சட்டிக்கு உள்ளேயே குதிரை ஓட்டாதீர்கள் இது என் வெண்டுகோள். (உங்களிடம் சொல்லியும் நடக்காததால் பொதுவில் சொல்கிறேன்)

      நீக்கு
  4. மிக்க நன்றி ஐயா,தங்களின் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜனவரி 09, 2024

      நன்றி தோழர். உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்

      நீக்கு
    2. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜனவரி 09, 2024

      நன்றி தோழர். உங்கள் ஆலோசனைகள் தேவை

      நீக்கு