முகம் 'சுழிக்க' வைக்கலாமா?
தமிழாசிரியர்
முனைவர் மகா.சுந்தர், ‘முகம் சுளித்தல்’ என்பதை, பலரும் ‘சுழித்தல்’ என்றே
எழுதுவதாக வருத்தப்பட்டார், உண்மைதான்!
‘மனநிறைவு
இன்மை’யை முகத்தில் காட்டுவதை, ‘முகம் சுளித்தல்’ என்பார்கள். கோவக் குறிப்பை, ‘முகம்
கறுத்தான் / கண் சிவந்தான்’ என்பர். எனினும், ‘சுழித்தல்’ - தவறான வழக்கு, ‘சுளித்தல்’
என்பதே சரி. ‘ளி-ழி’ குழம்பியது எப்படி?!
நம் தமிழர்களின் உச்சரிப்புச் சிறப்பு, ‘உலகப்புகழ்’ பெற்றதாயிற்றே! பழம்-பலமாகும்,
உளுந்து-உழுந்தாகும்! அதுவே நாளடைவில் எழுத்திலும் வந்து குழப்பும்! பொருளில்
தெளிவாக கவனமாக இருந்தால், எழுத்துப் பிழையும் குறையும்.
உதடு ‘சுழிப்பது’ என்றால், நெருங்கியவரிடம்
‘பொய்க்குறிப்பு’ காட்டுவது! ‘சுழி’ என்பது ‘இன்மை’(0-ZERO) என்பதற்கான அழகு
தமிழ்ச் சொல்! இதை, ‘பூஜ்ஜியம்’ என்று சொல்வது,
‘முகம்சுளிக்க’ வைக்காதோ?
தொடர்ப் பிழை கவனிக்க..
11-01-2024 - காலை 6.45 மணி - கோடைப் பண்பலை-
வானொலிச் செய்தியாளர், “அனைத்து மத்திய அரசின் துறைகளும்..” என்னும் தொடரைச் சிலமுறை
சொன்னார். மத்திய அரசு எத்தனை இருக்கிறது? ஒன்றுதானே? செய்தி வாசித்தவர், இந்தத் தொடரை,
“மத்திய அரசின் அனைத்துத் துறைகளும்”என அமைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
ஊடகச்
செய்தியாளரும், வாசிப்போரும், அச்சிடுவோரும், இவை போலும் தொடர்களின் நுட்பம் அறிந்து,
தொடர்களை அமைத்தால், இளந்தமிழர் அறிந்து வளர்வார்கள். மேலும், ‘ஒன்றிய அரசு’ என்பதே, பொருள் நிறைந்த -அரசியல்
சட்டப்படியான- சரியான சொல் (AptWord) எனினும் அவரவர் சார்பைக் காட்டுவதாக அமைந்து விட்டதும்
உண்மை.
சீண்டுதல் – சீந்துதல்
2017ஆம் ஆண்டு, பொங்கலை ஒட்டிய நாள்களில்,
சென்னை மெரினாவை மையமிட்டு, உலகமே வியந்து பார்த்த, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்,
தீயாய்ப் பற்றித் தெறித்த முழக்கம் -
“சீண்டாதே! சீண்டாதே! தமிழர்களைச் சீண்டாதே!” சீண்டுதல் – வெறுப்பேற்றுதல்.
லட்சக்
கணக்கான இளைஞர் முழக்கங்களின் பக்க விளைவாக அதே மணல்வெளியில் ‘சீந்து’வாரற்றுக் கிடந்தன
பன்னாட்டுக் குளிர்பானக் குப்பிகள்! சீந்துதல்
– மதித்தல். இவ்விரு சொற்களையும் இவற்றின் வேறுபாடறிந்து பயன்படுத்த வேண்டும்.
ஐந்நூறா? ஐநூறா?
பாரதி
சொல்வது போல, “ஓரிரண்டு வருஷத்து நூல் பழக்கமுள்ள” எளிய மக்களை மறந்த எந்த மொழியும்
வளர முடியாது! மக்கள் மொழி, கொஞ்சம் ‘கலப்பட’மாகத்தான் இருக்கும். மொழிக்கு முதலிடம்
தரும் ‘தூய புலவர்மொழி’ வேறு! இரண்டுக்கும் பயனுண்டு! இவற்றை, இடமறிந்து பயன்படுத்தி
மொழி வளர்க்கும் இலக்கணமே நமது தேவை.
ஐநூறு,
செய்நன்றி, பொய்மை, கைமாறு என்பன மக்கள் தமிழ். ஐந்நூறு, செய்ந்நன்றி, பொய்ம்மை, கைம்மாறு
- இலக்கியத் தமிழ்.
‘கைம்மாறு’
–திருவாசகம் -திருச்சதகம்-5,
‘செய்ந்நன்றி’ –குறள்-110,
‘பொய்ம்மை’-கம்பராமாயணம்-9106(TVU) என, இலக்கியங்கள் சொல்ல, ‘தனிக் குற்றெழுத்தை
அடுத்த ‘ய’ முன்னும்,
தனி ‘ஐ’
முன்னும் வரும்
மெல்லினம் மிகும்’(158)
என்று, இலக்கணமும் சொன்னார் நன்னூலார்.
தமிழ்வளர்ச்சித்
துறையின் ‘சொற்குவை’யிலும் ‘ஐநூறு’ உள்ளது. பொய்மை, செய்நன்றி, கைமாறு என, ‘மெய் மிகா’ச்
சொற்கள், அச்சு நூல்களிலும் வந்துவிட்டன. இவற்றை ஏற்கலாம் என்பதே என் கருத்து. மக்கள்
வளர்ச்சிக்கான மொழிக்கு, நாம் செய்யும் ‘கைமாறு’ இதுதான்!
--------------------------------------------------
மக்கள் வழக்கே எழுத்து வழக்காவதும் இலக்கண ரம்பாவும் இயற்கை. அதனையொட்டி கைமாறு போன்ற மெய்மிகாச் சொற்களை ஏற்பது போற்றுதற்குரியது.
பதிலளிநீக்குஆம் அய்யா, இதுபற்றி முனைவர் பொற்கோ முதலானவர்கள் சிந்தித்து எழுதினார்கள். இன்னும் பெரும் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் இதில் தலையிட வேண்டும். இதனால்தான் நானும் அவ்வப்போது கொளுத்திப் போட்டு வருகிறேன்
நீக்குவணக்கம் .தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது ஐயா.,
நீக்குமிகவும் சிறப்பாக உள்ளது தோழர்.
பதிலளிநீக்குஅருமை. கட்டுரை பயனுடையதாய் இருந்தது.
பதிலளிநீக்குசிறப்பு, நன்றி
பதிலளிநீக்குஅருமையான பதிவு. இன்றைய தலைமுறைக்கு நல்வழி காட்டி வரும் ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்
பதிலளிநீக்குசுளித்தல் ஐநூறு நன்றி ஐயா
பதிலளிநீக்குஅருமையான பரிந்துரைகள் ஐயா!
பதிலளிநீக்குமுகம் சுளித்தல் என்பதை அண்மைக்காலமாக ‘முகம் சுழித்தல்’ என்றுதான் எழுதி வருகிறார்கள் பலர். ஆங்கிலத்தில் எழுதும்பொழுது ஒரு சிறு பிழை கூட நேர்ந்து விடக்கூடாது, அப்படி நேர்ந்து விட்டால் அவமானம் என நினைக்கும் நம்மவர்கள் தாய்மொழியில் தவறாக எழுதுவதுதான் உண்மையிலேயே அவமானம் என்பதை உணராததன் விளைவே இத்தகையே கவனக்குறைவுப் பிழைகள்.
சீண்டுதல் - சீந்துதல் இரண்டுக்கும் பொருள் வேறுபாடு உண்டு என்பதை அறிவேன் என்றாலும் சீந்துதல் பேச்சு வழக்கு என்றே இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இரண்டுமே தனித் தனிச் சொற்கள் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. மிக்க நன்றி!
மற்றபடி தொடர்ப்பிழைகள் இப்பொழுது மலிந்து விட்டன. அவசரமாக எழுதுவதால் நேரும் பிழைகளா அல்லது தெரியாமல் எழுதுகிறார்களா என்பதே புரியவில்லை. தமிழ் ஊடகங்கள் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றன. எனில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை, நன்கு தமிழ் அறிந்த ஆர்வலர்களைப் பணிக்கு அமர்த்திக் கொண்டு தவறில்லாமல் தமிழை வெளியிடலாம் இல்லையா? இதில் என்ன தடை? அரசு இதற்கு ஆணையிட வேண்டும்!
சுளிப்பு எனும் சொல்லே மன நிறைவின்மைக்குப் பொருந்தி வரும் என்று அறிந்துகொண்டேன் அண்ணா. இதுவரை பயன்படுத்தியதில்லை, இனி சரியாகவே பயன்படுத்தலாம். :)
பதிலளிநீக்குமெய்மிகா சொற்களைப் பற்றிய விளக்கமும் கருத்தும் சிறப்பு. எப்போதும் போல் அருமையான கட்டுரை. நன்றி அண்ணா.
அறியாதன எளிதாக அறிந்தோம்.தொடர வாழ்த்துகள்
பதிலளிநீக்குஎளிய.முறையில் விளக்கியமை நன்றி ஐயா!!
பதிலளிநீக்கு