தமிழ் இனிது-33, நன்றி : இந்துதமிழ்-06-02-2024.

                 ஜெயகாந்தனின் ‘இலக்கணம்’ சரியா?

            ‘ஒரு’ ‘ஓர்’ - வரும் இடங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்-

வரும் சொல் உயிரெழுத்தில் வந்தால் ‘ஓர்’ வரும்  (ஓர் உலகம்)  

வரும் சொல் உயிர்மெய்யில் வந்தால் ‘ஒரு’ வரும் (ஒரு வீடு)  

இவை போலும் சில சொற்களில் ‘இது இங்குதான் வரும்’ என்னும் படியான சொற்கள் பல உள்ளன. இவை வரக் கூடிய இடம் அறிந்து பயன் படுத்தினால் தொடர்களின் பொருளும் அழகும் கூடுமல்லவா?

‘ஆல்’ ‘ஆன்’ எங்கே வரும்?  

‘ஆல்’ ‘ஆன்’ - மூன்றாம் வேற்றுமை உருபுகள் – எங்கே வரும்?

வரும் சொல் உயிர் மெய்யில் வந்தால், ‘ஆல்’ வரும்-                                    

(காலத்தினால் செய்த நன்றி – குறள்-102) 

வரும் சொல் உயிர் எழுத்தில் வந்தால், ‘ஆன்’ வரும்-                                               

(ஒல்லும் வகையான் அறவினை – குறள்-33)

இரண்டும், “புறந்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்” எனும் (298) ஒரே குறளில் வந்திருப்பதைப் பார்க்கலாம்.  

‘தொறும்’ ‘தோறும்’ எங்கே வரும்?

வரும் சொல் உயிர்மெய்யில் வந்தால் ‘தொறும்’ வரும்.                                 

நாள்தொறும் நாடி – குறள்-553.

வரும் சொல் உயிரெழுத்தில் வந்தால் ‘தோறும்’ வரும்.                                     

உறுதோறு உயிர்தளிர்ப்ப – குறள்-1106

இரண்டும் ஒரே குறளில் - 

“களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்                                               

வெளிப்படும் தோறும் இனிது- குறள்-1145.

இந்த இலக்கணம் பற்றிக் கவலைப் படாமல் “ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” என்று ஒரு புதினமே எழுதிய, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் இந்த இலக்கணத்தில் நிற்காதவர்! சமூக இலக்கணமே குலைந்து கிடப்பது பற்றிச் சரியாக எழுதியவர் என்பதால், அவரை நாம் குறைசொல்ல வேண்டியதில்லை. சமூகம் சரியாக இருந்தால்தான் வாழ்க்கை, மொழி, இலக்கியம், பிறகுதானே இலக்கணம்?!

‘ஒடு’ ‘ஓடு’ எங்கே வரும்?

வரும் சொல் உயிர்மெய்யில் வந்தால் ‘ஒடு’ (குறில்) வரும்.                                  

தவத்தொடு தானம் – குறள்-295.

வரும் சொல் உயிரெழுத்தில் வந்தால் ‘ஓடு’ (நெடில்)வரும்.                             

பொறுத்தானோடு ஊர்ந்தான் – குறள்-37.

இரண்டும் ஒரே குறளில்  வந்திருப்பதைப் பாருங்கள்-

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்                                              

கற்றோரோடு ஏனை யவர்-410

இவை “உடன் நிகழ்வு“ பொருளில் வரும் என்பதால்  ‘ஒடு’ ‘ஓடு’ எனும் சொற்களின் மற்றொரு வடிவமான “உடன்” என்பதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும் இலக்கணம் சொல்கிறது! எடுத்துக் காட்டாக? “சட்டமன்ற உறுப்பினருடன், அமைச்சர் வந்தார்“ என்பது சரியான சமூக-மதிப்பீடு அல்ல!  “அமைச்சரோடு சட்டமன்ற உறுப்பினர் வந்தார்“ என்பதே சரியான தமிழ் மரபுத் தொடர் என்கிறது இலக்கணம்! “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே“ (தொல்காப்பியம்-575)

‘உடன்நிகழ்வு’ இலக்கணம், அழைப்பிதழில் எந்த வரிசையில் பெயர் போடுவது, எவர் பெயரை எந்தளவில் அச்சிடுவது என்பது வரை நீள்கிறது! இந்த நடைமுறை இலக்கணம் தெரியாதவர்க்கு, உலக நடப்புப் புரியவில்லை என்றே பொருள்!  

இவை போலும் இலக்கணம் தொடர்பான குறிப்புகள் பலவற்றை, தமிழ்நாடு அரசே வெளியிட்டுள்ளது. நமது ”தமிழ்இனிது“ தொடர் பற்றி மகிழ்ச்சி தெரிவித்து, அவற்றை எனக்கு அனுப்பிய, கடலூர் உதவி இயக்குநர் முனைவர் இரா.அன்பரசிக்கு எனது  நன்றி.   

-------------------------------------------------------

11 கருத்துகள்:

 1. ஆகா! ஆகா!! ஐயா, இந்த வாரம் அசத்தி விட்டீர்கள்! ஒரு - ஓர் ஆகியவற்றின் இலக்கணம் தெரியும். அது, அஃது கூடப் பாடத்திட்டத்தில் இருந்தது. ஆனால் இப்படிச் சொல்லின் பின்னால் வரும் உருபுகளுக்கெல்லாம் இலக்கணம் இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அதுவும் இவற்றுக்கான திருக்குறள்களை எடுத்துக்காட்டியதோடு இரண்டு வேறுபாடுகளும் ஒருங்கே இடம்பெற்றுள்ள அரிய குறள்களையெல்லாம் தேடியெடுத்துக் காட்டியது ஓகோ! மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 2. கவிதா சோலையப்பன்செவ்வாய், பிப்ரவரி 06, 2024

  தங்களிடமிருந்து புதியன பல கற்றுக்கொண்டிருக்கிறேன் ஐயா… மிக்க நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 3. மகிழ்ச்சி அய்யா, உண்மையில் இந்த வாரம் பயனுடைய குறிப்புகள். பரிமேலழகர் உரையில் ஆன் உருபு நிறைந்து இருப்பதைக் கண்டு ஆன் உருபு காலத்தால் பின்னர் இணைந்தாக இருக்கும் என்று தான் எண்ணி இருந்தேன். இந்த இலக்கண முறைமையின் கண்டு வியந்து போறேன். மேலும் இந்த ஒரு ஓர் இலக்கண முறைமை ஆங்கிலத்திலும் அப்படியே பின்பற்றப்பட்டது உண்டு. சில இடங்களில் உயிர்மெய் எழுத்துகள் முன்னரும் ஓர் பயன்படுத்தப்படுவது உண்டு. சிலப்பதிகாரத்தில் இலங்கை அடிகள் கண்ணகியைப் பிரதிப்பெயராக குறிக்கும் பொழுது ஓர் காரிகை என்றே குறிப்பிடுகின்றார். ராஜேந்தர் தன் திரைப்படத்திற்கு தங்கைக்கோர் கீதம் என்றே பெயரிட்டு இருப்பார். ஆனால் ஜெயகாந்தன் ஒரு உலகம் என்று பல நேரங்களில் யோசித்தும் பதில் கிடைக்கவில்லை அய்யா. நன்றி

  பதிலளிநீக்கு
 4. ஐயா, திரு.செயகாந்தன் அவர்கள் உலகறிந்தவராக இருக்கலாம். அதற்காக, அவர் செய்த தவறை (ஒரு உலகம்) ஏற்க இயலாது. அவர் செய்தது தவறு என்றே கூறவேண்டும். சாக்குப் போக்குகள் கூறி மொழியமைப்பைச் சிதைத்தல் நன்றன்று..!
  மற்றபடி, தங்கள் படைப்பு பல நல்ல விளக்கங்களைத் தந்தது சிறப்பு..!!

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு. ஐயா எளிமையாக தமிழை விளக்கம் அளித்துள்ளார். இன்றைய தலைமுறைக்கு தமிழமுது படைத்து வருகிறார்.

  பதிலளிநீக்கு
 6. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா, தங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. தமிழ் இலக்கணத்தை நயம்பட உரைக்கும் தோழருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. வாரந்தோறும் உயிர்ப்போடு உன்னத இலக்கணத்தை எளிய நடையில் எல்லோரும் உணர்ந்துகொள்ளும் வகையில் வழங்கிவரும் தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 9. படி தேன் சுவை தேன் நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 10. மிக மிக. பயனுள்ள தகவல் ஐயா. ஒரு ஓர் ஆள் ஆன் வேறுபாடுகள் அறிந்திருக்கின்றேன். மற்ற தகவல்கள் தந்தமைக்கு மிகுந்த நன்றி ஐயா

  பதிலளிநீக்கு