தமிழ்இனிது-36 – நன்றி - 27-02-2024 இந்துதமிழ்

சொல் இருப்பதும் மறைவதும் எதனால்?

வாய்ப்பா? ஆபத்தா?  

“புயல் உருவாக  வாய்ப்பு” “கனமழை நீடிக்க வாய்ப்பு“ என, அவ்வப்போது எச்சரிக்கிறது நமது வானிலை ஆய்வு மையம்! நோய் ஆபத்துக் காலங்களில் “கொரோனா பரவக்கூடிய வாய்ப்புள்ளது“, “புற்றுநோய் வர வாய்ப்புள்ளது“ என்று மருத்துவர்களே எழுதுகின்றனர்! ஆபத்து வாய்ப்புக் கேட்டு வருமா என்ன?

‘வாய்ப்பு’ என்பதை ஆங்கிலத்தில் ‘Opportunit’y, ‘Chance’ என்னும் சொற்களால் சொல்கிறார்கள்.  கெடுவாய்ப்பை – Bad luck என்றும் நல்வாய்ப்பை- Good luck என்றும் சொன்னால் இன்னும் எளிதாக விளங்கும். தமிழில் வாய்ப்பு என்பதை இன்றைய தமிழில் நல்வாய்ப்பு எனும் பொருளில் சொல்வதே சரியானது. ஆனால் கெடுவாய்ப்பாக, ஆபத்து வருவதைக் கூட ‘வாய்ப்பு’ என்ற சொல்லால் தெரிவிக்கும் நிலையே உள்ளது! “புயல் வரும் ஆபத்து உள்ளது“, “நோய்வரக் கூடிய ஆபத்து உள்ளது” என்று எச்சரிக்கையாகவே சொல்லலாம். இதை, வானிலை ஆய்வில், மருத்துவத் துறையில், ஊடகங்களில் பணியாற்றும் தமிழர்கள் புரிந்து கொண்டால் தமிழுக்கு நல்வாய்ப்பு!

திரு - எங்கே வரும்?

ஒருவர் பெயரைக் குறிப்பிடும் போது, ‘மரியாதைக்குரிய’ என்னும் பொருளில் ‘திரு’ என்னும் முன்னொட்டுச் சேர்ப்பது வழக்கம். பெயருக்கு முன் மட்டுமே திரு போட வேண்டும், பதவிக்கு முன் போடுவது சரியல்ல. ‘உயர்திரு வட்டாட்சியர்’ என்பது தவறு. ‘திரு ப.சிவகுரு, வட்டாட்சியர்’ என்று தனிப்பட்ட தருணங்களில் போடலாம். அலுவலக முறையில் தவறு.

திருமணம் ஆன பெண்ணை, ‘திருமதி’ என்கிறோம். திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் ஆணுக்குத் ‘திரு’ அடைமொழியே நீடிக்கிறது! எப்போதும் திருதிரு என்று இருப்பது (முழிப்பது) ஆண்கள்தானா என்ன?  

இப்போது இதை மாற்றி, திருமணம் ஆன - ஆகாத, ஆண் - பெண் என யாவருக்கும் ‘திருமிகு’ எனும் ஒற்றைச் சொல்லையே பயன் படுத்தும் புதிய சிந்தனை பரவி வருவது பாராட்டுக்குரியது.   

 ‘உப்பக்கம்’ தெரியுமா?  

‘அப்பக்கம்’ புரியும், ‘அ’ சேய்மைச் சுட்டு, தூரத்தில் உள்ளதைச் சுட்டிக் காட்டுவது,   ‘இப்பக்கம்’ தெரியும் ‘இ’ அண்மைச் சுட்டு, அருகில் உள்ளதைக் குறிப்பது.  தமிழில் ‘அ’ ‘இ’ ‘உ’ என, சுட்டிக் காட்டும் எழுத்துகளைச் ‘சுட்டெழுத்துகள்’ என்பார்கள். அந்த இந்த உந்த, அப்படி இப்படி என்றும் இவை வழக்கில் உள்ளன. அ, இ தவிர எஞ்சியுள்ள ‘உ’ எதைக் குறிக்கிறது? அது புழக்கத்தில் இல்லையே ஏன்? தமிழகத்தில் புழக்கம் இழந்த சொல், ஈழத்தமிழில் உள்ளது எப்படி? தமிழகத்தில் மறைந்ததற்கும் ஈழத்தில் இருப்பதற்கும் சமூகக் காரணம் உள்ளது! 

அருகில், நம் எதிரில் இல்லாமல், முதுகு காட்டி நிற்கும் ஒருவரை எப்படிக் குறிப்பது? – ‘உ’ப்பக்கம் இருப்பவர் என்கிறது குறள்-620. ‘உந்த’ என்பதை இப்படித்தான் ஈழத்தமிழர் சொல்கின்றனர்! அண்மையில் பல பத்தாண்டுகளாகப் போரில் மாண்டவரும், பற்பலரைப் புறமுதுகு கண்டு மீண்டவருமான ஈழத் தமிழரிடம் இருப்பது இயல்புதானே!

ஒரு சொல் புழக்கத்தில் இருப்பதும், தொடர்வதும், மறைவதும், புதிதாகத் தோன்றுவதும் அந்தச் சமூகத்தின் சூழலைப் பொறுத்தது என்பதற்கு இந்த ஓர் எழுத்தே நல்ல சான்று! வேறென்ன சொல்ல?

---------------------------------------------------------------------------- 

13 கருத்துகள்:

 1. தங்களின் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 2. உண்மை அய்யா, பதவிக்கு உயர்திரு என்று எழுதுவது மட்டுமல்ல பின்னாலும் அவர்கள் என்றும் சேர்த்து எழுதுவதும் ஏற்புடையதாக இல்லை. சமயத்தில் நாம் எழுதும்போதும் இப்படிதான் எழுதவேண்டும் அறிவறுத்தப்படுவது தான் கொடுமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்புதன், பிப்ரவரி 28, 2024

   அவர்கள் என்று இடுவது “மரியாதைப் பன்மை” தான் அய்யா. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் .. இலக்கண மருங்கில் சொல்லலாம் என்று நமது மரபு கூறுகிறது. திரு என்பது அப்படி அல்லவே. பெயர் சார்ந்தது என்பது அறியாத பலர் செய்த பொதுப்பிழை இது!

   நீக்கு
 3. தமிழ்நல்வாய்ப்பாக ஆபத்தில் இல்லை. தங்களைப்போன்ற ஆபத்துதவிகள் சான்றோராக அமைந்து தமிழைக்காத்துவருவதை தொல்காப்பியர்மன்றம் சார்பில் பாராட்டுகிறேன்.
  திரு என்ற சொல்திருமணமான ஆண்களுக்கு அவர்களின் பெயருக்குமுன் பயன்படுத்தலாம் என்ற கருத்தும் திருமதி என்சொல்லை திருமணமான பெண்டிருக்குப்பயன்படுத்தலாம் என்றகருத்தும் மரபா?
  அல்லது இலக்கணவிதியா?அதுபோல் பதவிக்குமுன் திரு கூடாதுஎன்பதைஏற்போம்.என்னென்ன பதவிக்கு என்னென்ன முன்அடைமொழி போடவேண்டும்?என்பதைஅடுத்த கட்டுரையில் தெரிவிக்க வேண்டுகிறேன்.அ.இருளப்பன்/ஒருங்கிணைப்பாளர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்புதன், பிப்ரவரி 28, 2024

   திரு திருமதி - இலக்கணத்தில் இல்லை! ஆனால் பெண்ணடிமைக் கருத்தில் வந்தது இப்பிழை. அடுத்து எந்தெந்தப் பதவிக்கு என்னென்ன அடைமொழி என்பதும் மரபே. திராவிடக் கருத்தியல்தான் இதை மாற்றித் தமிழில் தந்தது என்பது வரலாற்றுண்மை. அமைச்சர்களை முன்னர் கனம் காமராசர், கனம் கக்கன் என்றனர். இதனை மாண்புமிகு ஆக்கியது திராவிடம். மானமிகு, மேதகு, என்பன இவ்வாறே பிரித்தறிக. இதைத் தனியே எழுத வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்

   நீக்கு
 4. உயர்திரு விளக்கம் மிக அவசியமானதுங்க ஐயா. அவர்கள் கடிதத்தில் எங்கெங்கு போடுவது என்ற விளக்கக் கட்டுரையை எதிர்பார்க்கிறோம் ஐயா. ஈழத்தமிழர் புழங்கும் உ என்ற சுட்டுச் சொல் நம்மைச் சுட்டுகிறது போல் உள்ளது ஐயா. அதைப் புழக்கத்தில் கொண்டுவர வேண்டிடயது நம் கடமையாகும் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்புதன், பிப்ரவரி 28, 2024

   முந்திய பின்னூட்டத்தில் என் கருத்து உள்ளது.

   நீக்கு
 5. திருமிகு ஐயா அவர்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்புதன், பிப்ரவரி 28, 2024

   நன்றி. இதுபோலும் பின்னூட்டத்தில் வேறு என்னென்ன சொற்களை எழுதலாம் என்னும் உங்கள் கருத்தையும் தெரிவிக்கலாமே?

   நீக்கு
  2. நா.முத்துநிலவன்புதன், பிப்ரவரி 28, 2024

   திருமிகு அய்யா என்பதும் சரியான வழக்கல்ல. பெயருக்கு முன்னர் மட்டுமே திரு இடுக என்பதுதான் எனது கட்டுரையே ..எனக்கே.???

   நீக்கு
 6. நல்ல கருத்து ஐயா

  பதிலளிநீக்கு
 7. இந்த முறை எல்லாமே நெஞ்சுக்கு நெருக்கமான தகவல்கள் ஐயா!

  பெண்களின் பெயருக்கு முன்னால் ‘திருமதி’ என எழுதுவது குறித்த உங்கள் கருத்தும் அதற்கான மாற்றாகத் ‘திருமிகு’ எனும் பொதுச்சொல் பரவி வருகிறது எனும் நற்செய்தியும் மனத்துக்கு இனிமை தந்தன.

  ஆண்களுக்குத் திருமணமானவராக இருந்தாலும் ஆகாதவராக இருந்தாலும் ஒரே போல் ‘திரு.’ என்று குறிப்பிடும் நம் சமுகம் பெண்களை மட்டும் ‘திருமதி’, ‘செல்வி’ எனக் குறிப்பிடுவது பெண்களுக்கு இழிவோ இல்லையோ ஆண்களாகிய நமக்குத்தான் இழிவு என்பது என் பணிவன்பான கருத்து. இந்த வழக்கம் மாற வேண்டும் என்பது என் பல காலக் கனவு. இப்பொழுது அது நடந்து வருகிறது என்பதைத் தங்கள் மூலம் அறிந்து மிகவும் மகிழ்கிறேன்! மற்றபடி, எப்பொழுதும் திருதிரு என்று விழிப்பதால்தான் ஆண்களுக்கு எப்பொழுதும் ‘திரு.’ எனும் அடைமொழியையே பயன்படுத்துகிறார்களோ என்ற உங்கள் நகைச்சுவை நன்றாக இருந்தது!

  பதவிக்கு முன்னால் ‘திரு.’, ‘திருமதி’, ‘திருமிகு’ போன்ற அடைமொழிகள் பயன்படுத்துவது தவறோ என்கிற ஐயம் எனக்கு இருந்தே வந்தது. கூடுமான வரை நான் அதைத் தவிர்த்தே எழுதி வருகிறேன். இந்த வாரம் உங்களுடைய இந்தப் பதிவு மூலம் என் வழக்கம் சரியே என அறிந்து என் முதுகில் நானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறேன்.

  வாய்ப்பு என்கிற சொல்லை நாம் எப்படித் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம் என்பதைச் சொன்னீர்கள். சிந்திக்க வேண்டிய ஒன்று!

  தமிழின் மூன்றாம் சுட்டுச்சொல்லான ‘உ’ பற்றிச் சுவைபட விளக்கினீர்கள்! இது ஈழத்தில் எப்படி வழக்கில் இருக்கிறது என்பதற்கு நீங்கள் காட்டிய காரணம் எந்த அளவுக்கு நீங்கள் ஆழ்ந்த ஈழத் தமிழ்ப் பற்றாளராகத் திகழ்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. ஆனால் இதை ‘இந்து தமிழ்’ வெட்டியதற்கு என்ன காரணம் என்பது புரியவில்லையே! ஏறக்குறைய 150 ஆண்டுகளாக இதழ் நடத்தி வரும் ‘இந்து குழுமம்’ தமிழில் இதழ் தொடங்கிய பிறகுதான் தமிழர்களைப் பொருட்படுத்தித் தன் அரசியலைச் சிந்திக்கத் தொடங்கியது. இனி ஈழத் தமிழர்களைப் பொருட்படுத்தித் தன் அரசியலைச் சிந்திக்கும் அளவுக்கு இவர்கள் வளர இன்னும் 150 ஆண்டுகள் ஆகும் போல! ஆகட்டும்! பொறுமையாகவே அவாள் வளரட்டும்! எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்! தமிழ் அதுவரையிலும் இருக்கும், எதுவரையிலும் இருக்கும்!

  பதிலளிநீக்கு