தமிழ்இனிது-34 நன்றி - இந்துதமிழ் நாளிதழ் -13-02-2024


தசையும் சதையும்

தமிழில் ‘தசை’ எனும் சொல்லைப் புறநானூறு (மான்தசை-177) முதலான இலக்கியங்களும், அகரமுதலி(Dictionary)களும் சொல்கின்றன. பாரதியார், புகழ்பெற்ற “நல்லதோர் வீணை” பாடலில் “தசையினைத் தீ சுடினும்”  என்கிறார். இந்தத் ‘தசை’ இப்போது, ‘சதை’ என்றே முன்-பின்னாகப் புழங்குகிறது. எழுத்தாளர் பலரும் பேச்சு வழக்கில் உள்ள இச்சொல்லையே பயன் படுத்துகின்றனர். “சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே“ – கவிஞர் இன்குலாப். ‘ரத்தமும் சதையுமா’ வழக்கில் உள்ள இந்த மாற்றத்தை இலக்கணமும் ஏற்றுக் கொள்கிறது!

அலரி, கதுவாலி தெரியுமா?

இல்வாய்--வாயில்–வாசல், கால்வாய்–வாய்க்கால், புறநகர்-நகர்ப்புறம், முன்றில்-இல்முன், அலரி-அரளி, கொப்புளம்-பொக்குளம், கதுவாலி-கவுதாரி(கௌதாரி), தானைமுன்-முன்றானை (முந்தானை!), புறக்கடை-கடைப்புறம் - இப்போது ‘புழக்கடை’ என்றே புழங்குகிறது! 

இவ்வாறு, சொல்-பொருள் மாறாத வகையில், எழுத்துகள் மட்டும் இடம் மாறுவதை, ‘இலக்கணப் போலி’ என ஏற்கிறார் நன்னூலார்(267)

இதற்காக, பொருள் பொருந்தாத வகையில், சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் ‘பகலிரவு பாராமல்’ என்று எழுதியிருப்பதைப் பற்றி, திருச்சி எழுத்தாளர் நவஜீவன்  வருந்தினார். பகல்தான் உழைப்பிற்கு உரியது, இரவிலும் ஓய்வில்லாமல் உழைப்பதை, ‘இராப்பகல் பாராமல்’ என, இரவை முன்னிறுத்தும் தொடரை அன்றி, ‘பகலிரவு’ எனும் சொல் எப்படி உணர்த்தும்?  திருத்தம் கோரும் நண்பரின் வருத்தம் சரியானது தானே?

கலைஞ்சர், கலைஞர்?

            கும்பகோண மக்களின் ‘நுப்பது’ போல, கோவை நண்பர் ஒருவர், கலைஞரைக் ‘கலைஞ்சர்’ என்றும், வேறுசிலர் இளைஞரை ‘இளைநர்’ என்றும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இது தமிழில் உள்ள இன எழுத்து – ஆங்கில உச்சரிப்பு - மயக்கத்தின் ஒரு வகை என்றே தோன்றுகிறது.  இச்சொற்களை ஆங்கிலத்தில் ‘kalaignar’ என்றும் ‘Elaignar’ என்றும்  எழுதுவதன்  ஒலி மயக்கமே அன்றி, பிழையான- உச்சரிப்புகள் இவை!  

ஊடகம் தவிர, மக்கள் புழங்கும் சொற்களின் உச்சரிப்புக் குழப்பம் பற்றி விரிவாக எழுத வேண்டியுள்ளது. சில சொற்களைப் பார்ப்போம்.  

வடமொழிச் சொல்முன் ஒற்று மிகாது!

 ‘பு(Pu)த்தகம்’ என்பதை ‘பு(Bu)த்தகம்’ என்றும், ‘கா(Kaa)லி’ என்பதை கா(Gaa)லி என்றும் –பெரும்பாலும்- உச்சரிப்பது தவறு! பிறசொல் புழங்கும் போதும் அது தமிழாகி, தமிழ் உச்சரிப்பே பெறும்.  

வான்மீகியின் இராம காதையைத் தமிழில் எழுதிய கம்பர், பாத்திரப் பெயர்களைத் தூய தமிழில் தந்ததைக் கவனிக்க வேண்டும். கம்ப  ராமாயணத்தில் ‘கிரந்த’ எழுத்துக்கு இடமில்லை! ராம்-இராமன், சீதா-சீதை, லக்ஷ்மண்-இலக்குவன், ராவண்-இராவணன் என, தமிழ்ப்படுத்திய சிந்தனை, வெறும் சொல் மாற்றம் மட்டுமல்ல பண்பாட்டுக் காப்புரிமை!  

முனைவர் கு.ஞானசம்பந்தன் உலகறிந்த பட்டிமன்ற நடுவர். புலவர் கோ.ஞானச்செல்வன், தமிழ் இலக்கணக் கடல். “இருவரில் ஒருவர் பெயரில் மட்டும் ‘ச்’ ஒற்று வருவது எப்படி?” ‘ஞானம்’ பொதுவாயினும், வந்து சேரும் ‘சம்பந்தன்’ வடமொழி, ஒற்று மிகாது. ‘செல்வன்’ தமிழ்ச் சொல்,  எனவே ஒற்று மிகும். அவ்வளவுதான்!

---------------------------------------------------------------------------   

முக்கியமான பின்குறிப்பு (1)

இக்கட்டுரையில்  இரண்டு எழுத்துப் பிழைகள் உள்ளன என்பதை அச்சாகி வந்தபின்தான் கவனித்தேன். என்ன சோகம்! “சொற்களில் பிழையின்றி எழுதும் முயற்சி பற்றிய கட்டுரையில் எழுத்துப் பிழையா?”  என்று இது வரை ஒரே ஒருவர்தான் கேட்டார்! அவரும் ஒற்றைப் பிழையை மட்டுமே சுட்டியிருந்தார்  (அவ்வளவுதான் நம்ம “ரீச்”!) 

அந்த இரண்டு பிழைகளையும் திருத்தம் செய்தே இந்த எனது வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளேன். அந்தப் பிழைகள் என்னென்ன என்பதை –எனக்கு மட்டும்- தெரிவித்தால் என் சொத்தில் பாதியை – எழுத்தாளர் சுஜாதா மாதிரி -  தரலாம் என்று நினைக்கிறேன்.

முக்கியமில்லாத பின்குறிப்பு (2)

சுஜாதா, இப்படி ஏதாவது கேட்டுவிட்டு, மகளைக் கட்டித் தருவேன், சொத்தில் பாதி தருவேன் என்று சொல்வார். பிறகு அவருக்கு மகளோ, சொத்தோ இல்லை என்பதை வேறோர் இடத்தில் சொல்வார்!  நான் இருக்கும் வீடும் காரும் என் இணையர் பெயரில்தான் இருக்கின்றன. என் மகள் இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி விட்டது... எனவே... 

பி.கு (3) அந்த இரண்டு பிழைகளும் ஒரே பத்தியில்தான் இருந்தன!

பி.கு-(4) மிக முக்கியமானது - என்ன இருந்தாலும் 'குற்றம் குற்றமே' என்பதால் இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்வேன். இந்து தமிழ் நண்பர்கள் மேல் எந்தக் குறையும் இல்லை, நான் எழுதி அனுப்புவதை --என்மேல் வைத்த நம்பிக்கையில்-- அப்படியே வெளியிடுகிறார்கள்  என்பதால், இனி இரட்டைக் கவனமாக இருப்பேன் என இந்து-தமிழ் திசை  நண்பர்களுக்கு உறுதியளித்திருக்கிறேன். எனது வலை வாசகர்களுக்கும் அதே உறுதியை வழங்கி, நடந்த தவறுக்கு எனது நிபந்தனையற்ற மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். வணக்கம்.

------------------------------------------------------------------------------- 

18 கருத்துகள்:

 1. முனைவர் சு.சோமசுந்தரிசெவ்வாய், பிப்ரவரி 13, 2024

  இலக்கணப்போலி குறித்து தாங்கள் எழுதிய தமிழ் இனிது சிறப்பு ஐயா. பல சொற்களுக்கான விளக்கமும் கிடைக்கிறது. நாம் வழங்கி வரும் சொற்களைச் சரியாகப் பயன்படுத்துதல் அவசியம் என்பதை உணர்த்துகிறீர்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்செவ்வாய், பிப்ரவரி 13, 2024

   நன்றி சகோதரி. உங்கள் ம.உ. த. ச. பணிகளை நானறிவேன். அவற்றிடையே வந்து கருத்தும் பதிவிட்ட உங்கள் அன்பிற்கு எனது நன்றி

   நீக்கு
 2. தசை, சதை இரண்டும் ஒரேசொல் என்பதே பள்ளியில் கற்றுத்தரப்படவில்லை.தசை,தசைநாண்,தசைப்பிடிப்பு என்றும் கெட்டித்தசை/ஊழச்சதை என்றும் சொல்லிக்கொடுத்ததால் திரு.முத்துநிலவன்ஐயா தசையைத்திருப்பிப்போட்டு சதையைக்கண்டுபிடித்து
  விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்செவ்வாய், பிப்ரவரி 13, 2024

   பெரும்பாலும் புறநூல் பயிற்சி (அவுட் ஆஃப் சிலபஸ்) தானே நமது இலக்கு! அதுதான்! நன்றி

   நீக்கு
 3. தசை சதை விளக்கம் நெளிந்தேன் நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்செவ்வாய், பிப்ரவரி 13, 2024

   நன்றி நண்பரே (அது சரி, அதற்கு ஏன் நெளிந்தீர்கள்?...நம்மல மாதிரியே எ.பி.?

   நீக்கு
 4. பதில்கள்
  1. நா.முத்துநிலவன்செவ்வாய், பிப்ரவரி 13, 2024

   நன்றி (பெயரையாவது விரிவாக எழுதலாம்'ல?)

   நீக்கு
 5. நீங்க போய் பிழையா எழுதிடுவீங்களான்னு தான்... எல்லாரும் ஒழுங்கா படிக்கிறாங்களான்னு சோதனை கூட செஞ்சுருப்பீங்க....தமிழய்யா..
  ஆனால் நான் ஒன்று சொல்வேன்...இப்போதுதான் மிக நிறைவான ...மகிழ்ச்சியான எழுத்தை பார்க்கிறேன்...
  நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்செவ்வாய், பிப்ரவரி 13, 2024

   எழுத்துப் பிழை என்பதே, மன வேகத்துக்கும் கை வேகத்துக்குமான இடைவெளி என்பதே பெரும்பாலோர் நிலை. அதையும் தாண்டி கவனக்குறைவும் ஒரு காரணம். மீண்டும் ஒருமுறை, எழுதிய தேர்வுத் தாளைப் போலப் பார்த்தும் பிழை நேர்வதைத் தவிர்க்கும் போராட்டம் தொடரும் தொடர வேண்டும். மற்றபடி ”நமக்கெல்லாம் எழுத்துப்பிழை வராது” என்று யாரும் கிடையாது!

   நீக்கு
 6. ஐயா! ஒரே ஒருவர் ஒரே ஒரு பிழையை மட்டுமே சுட்டியதால் உங்கள் பரவல் (reach) அவ்வளவுதான் என நீங்கள் முடிவுக்கு வர வேண்டியதில்லை. பிழையின்றித் தமிழ் எழுதுவது பற்றிய தொடரை ஆர்வத்துடன் படிப்பவர்கள் எண்ணிக்கை அவ்வளவுதான் என்பதே சரியாக இருக்கும்.

  மற்றபடி வழக்கம் போலவே அருமையான விளக்கங்கள் ஐயா! கடந்த சில வாரங்கள் போல் அல்லாமல் இந்த முறை செவ்வாயன்றே வெளியிட்டு விட்டது கண்டு மகிழ்ச்சி!

  இலக்கணப் போலிகள் ஒன்றிரண்டுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் ஒரு குட்டிப் பட்டியலே தந்து விட்டீர்கள். அரிய தொகுப்பு! தவிர இலக்கணப் போலியை எப்படி உருவாக்கக்கூடாது என்றும் வழிகாட்டியது என் போன்ற ஆர்வக்கோளாறுகளுக்குச் சரியான எச்சரிக்கை மணி!

  நம் தமிழ் மக்கள் பெரும்பாலும் தவறாக உச்சரிக்கும் சொற்கள் பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்று நானே கேட்க இருந்தேன். நீங்களும் அவ்வாறே சொல்லியிருக்கிறீர்கள்! பெரும்பாலோர் ழகரத்தைத் தவறாக உச்சரிப்பது நீங்கள் ஏற்கெனவே எழுதியதுதான். கலைஞ்சர், கா(Gaa)லி பற்றிப் பதிவு செய்தமைக்கு நன்றி! இவை தவிர இன்று பெரும்பான்மை மக்கள் தவறாக உச்சரிப்பது சகரத்தில் தொடங்கும் சொற்களை. முப்பது ஆண்டுகள் முன்பு வரை Chaக்கரம், Chiத்தி, Chuக்கு, Cheவ்வாய், Choப்பு என்றிருந்த எல்லாச் சகரச் சொற்களும் இன்று ஸகரமாகி விட்டன!

  பிறமொழிச் சொல்லுக்கு முன் ஒற்று மிகாது என்பதை மனத்தில் பதியும் எடுத்துக்காட்டோடு விளக்கியிருந்தீர்கள். மகிழ்ச்சி! ஆனால் பின்னாலும் ஒற்று மிகாது என்கிறது தமிழ்ச் சந்திப் பிழைத் திருத்தியான நாவி. இப்படிச் சில சொற்களும் தமிழில் உள்ளன. இப்பொழுது சட்டென நினைவுக்கு வரவில்லை.

  இது கூடப் பருவாயில்லை. காலம் எனும் சொல் தமிழ்ச் சொல்தானே ஐயா? ஆனால் இதை அயற்சொல் எனக் கருதி இன்றும் ‘சங்ககாலம்’ என்றுதான் எல்லாரும் எழுதுகிறார்கள். இதையும் நீங்கள் இத்தொடரில் பதிவு செய்தால் மகிழ்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்செவ்வாய், பிப்ரவரி 13, 2024

   வடமொழிக்கு முன்னோ பின்னோ தமிழ்ச் சொல் சேரும்போது, தமிழ் இலக்கணமே தடுமாறுமே! இதில் வடமொழிச் சொல் தற்பவமாகவும் தற்சமமாகவும் வந்து குழப்புவதும் உண்டு! சங்கம் என்பது -ச எழுத்தில் தொடங்குவதாலேயே - வடசொல் என்பாரும் உண்டல்லவா? எனில் ஒற்று மிகாதே! அண்ணாதுரையும் அப்படித்தான். அண்ணா - தமிழ். துரை (Thurai) என்பதைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டால் ஒற்று மிகுந்து அண்ணாத்துரை என்றே வரும்.
   துரை (Durai) என வடமொழியாகக் கொண்டால் மிகாது, அண்ணாதுரை என்றே வரும் அல்லவா? இதுபோல வடசொல்லா, தமிழ்ச் சொல்லா எனும் குழப்பமும் தொடர்கிறதே! சங்க காலம், சங்கக் காலமும் இதே தான்!

   நீக்கு
  2. நன்றி ஐயா! ஆம், இந்தக் குழப்பங்கள் பல காலமாக இருந்து வருகின்றன.

   நீக்கு
 7. மதிப்பிற்குரிய ஐயா! உங்கள் அன்பிற்கு இணங்கி இதோ பணிவன்புடன் அந்தச் சிறு பிழைகளைத் தெரிவிக்கிறேன்.

  1) புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவரும் தங்களைப் போலவே தமிழ் மணம் பரப்பும் பெருந்தகையுமான ஞானசம்பந்தன் அவர்களின் தலைப்பெழுத்து (initial) ‘கு’தான். ‘அ’ என்று அச்சில் தவறாக உள்ளது.

  2) “இருவரில் ஒருவர் பெயரில் மட்டும் ‘ச்’ ஒற்று வருவது எப்படி?” - இது ‘க்’ ஒற்று வருவது எப்படி என்று அச்சில் தவறாக உள்ளது.

  ஆனால் ஐயா, அறியாமையினால் ஏற்படும் திருத்திக் கொள்ள வேண்டிய பிழைகளைப் பற்றி விழிப்புணர்த்துவதே உங்கள் தொடரின் நோக்கம் என்பதால் கவனக்குறைவினால் நேரும் இத்தகைய இயல்பான பிழைகளுக்கு நீங்கள் இவ்வளவு வருந்த வேண்டியதே இல்லை என்பது என் பணிவன்பான கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நா.முத்துநிலவன்செவ்வாய், பிப்ரவரி 13, 2024

   ஆகா ஆகா ஆகா... தனியொரு “புலவராக” வந்து இரண்டு பிழைகளையும் கண்டுபிடித்து, அவற்றிற்கான சரியான திருத்தத்தையும் சொன்ன உங்கள் புலமைக்கு என் வணக்கம். சொத்துப் பற்றிய சுயவிளக்கத்தை முன்பே சொல்லிவிட்டதால்.. அந்த “நன்றா என்னும் குன்றேறி நின்று கண்ணில் கண்ட நாடுகள் அனைத்தையும்“ பத்திரம் போட்டுத்தர ஏற்பாடு செய்கிறேன்.. முத்திரைத்தாள் வாங்கும் செலவுக்கு முன்பணம் அனுப்பவும்.

   நீக்கு
  2. ஆகா! பெரிய பரிசாக இருக்கிறதே!! ஆனால் என்னிடம் இப்பொழுது பணம் இல்லை. அதனால் அத்தனை நாடுகளுள் ஒன்றிரண்டைக் குறைத்துக் கொண்டு முத்திரைத்தாள் செலவையும் நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்! ;-D

   நீக்கு