தமிழ்இனிது-35 , நன்றி-இந்துதமிழ்-20-02-2024

 

வல்லியும், வள்ளியும்

            ‘வள்ளி, வல்லி இரண்டும் ஒன்றல்ல’ எனினும் இவற்றின் வேறுபாடு பற்றி விளக்க வேண்டினார் முனைவர் கு.தயாநிதி. கலப்பையால் மண்ணை உழுதபோது வள்ளிக் கிழங்குடன் கிடைத்த குழந்தையே கு(ன்)றவர் மகள் வள்ளி! ‘வள்ளி திருமணம்’ புகழ்மிகு மரபுக் கதை!   

            தமிழ்‘வள்ளி’, புராணங்களின் வழியாக ‘வல்லி’ ஆனார்! வல்லி, வலிமையான கொடி!  காமவல்லி (கற்பகத் தருவில் படரும் கொடி), மரகதவல்லி (தரும தேவதை/பார்வதி) போலும் பெண் தெய்வங்கள் பல! “கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்” என்பது பக்திப் பாடல். “இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தா, இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்” – பட்டுக்கோட்டையாரின் காதல் பாடல்.

பாரியின் பறம்பு மலையில் தானாக விளையும் நால்வகைப் பொருளில் வள்ளிக் கிழங்கையும் சொல்கிறார் கபிலர்! “கொழும்கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே“-புறம்-109/6. இத்துடன், வள்ளி எனும் சொல், சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது, வல்லி – கொடி-கிழங்கு எனும் பொருளில் ஓரிடத்திலும் இல்லை! ஆக, வள்ளி என்பது தமிழ் மரபில் வந்த பெயர், வல்லி என்பது பின்வந்த புனைவுப் பெயர்!   

புறமும், புரமும்

            இராமநாத புரம், விழுப்புரம் இவற்றில் இடையின ர வருகிறது. புறநானூறு, நகர்ப்புறம் இவற்றில் வல்லின ற  வரும்.  வேறுபாடு என்ன?     

கையின் உள்பக்கத்தை -உள்அகம்கை –உள்ளங்கை என்றும், வெளிப் பக்கத்தைப் -புறம்கை- புறங்கை என்றும் சொல்கிறோம். சங்க இலக்கியத்தில் ‘அகம்’ (காதல்)அல்லாத வீரம், அறிவு, பண்பு போல்வன ‘புறம்’ எனப்படும். அப்படியான 400பாக்களின் தொகுப்பே புறநானூறு. பேருந்து சிலவற்றில், “கரம் சிரம் புரம் நீட்டாதே” என எழுதியவர், டி.ராஜேந்தர் நண்பராக இருக்கலாம்!  இங்கு, ‘புறம்’ என்பதுதான் சரி.   

‘புரம்’ என்பது நகரில் மக்கள் வாழும் பகுதி. பெங்களுரில் ‘கே.ஆர்.புரம்’, கோவையில் ‘ஆர்.எஸ்.புரம்’ புதுக்கோட்டையில் காமராச புரம் போல, ‘புரம்’ என முடியும் ஊர்கள் 90உள்ளதாக, சொல்லறிஞர் கவிஞர் மகுடேசுவரன் சொல்கிறார்! சான்றோர் நினைவாக வைக்கப்பட்ட இடப் பெயர்கள் இவை! கலைஞர்  கருணாநிதி நகரை கே.கே.நகர் என்பது போலச் சுருக்கி, நம் வரலாற்றை, அடுத்த தலைமுறை அறியாதபடி நாமே மறைக்கலாமா?!   

பளபள கலகல

“பங்குச் சந்தை  ‘மளமள’வென்று சரிந்தது“ என்று செய்தியில் வருவது சரிதானா?” எனில்,  சரிதான். சரசரவென்று சரிவதுதான் சரி. எனினும், விரைவுப் பொருளில் இப்படிச் சொல்லலாம். இரட்டைக்கிளவி என்பது, இரட்டைச் சொல்லாக மட்டுமே வரும், பிரித்தால் பொருள் தராது, குறிப்பாகவே பொருள் தரும். “இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்து இசையா”-தொல்காப்பியம்-531. “மளமளன்னு வேலைய முடிச்சா, விறுவிறுன்னு கிளம்பிட்டா! ”கலகலன்னு இருப்பான்” “வழவழன்னு பேசுவான்”- என்பன நடைமுறைப் பேச்சில் இலக்கணம்!

ஆனால், “சுள்ளு சுள்ளுனு கோவம் வருது” என்றால் அது “அடுக்குத் தொடர்”! ஏனெனில் 'சுள்' என்ற ஒரு சொல்லே பொருள் தந்து விடுகிறதே!   “ஜல்ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி”, “சலசல சலசல இரட்டைக் கிளவி“ போலும் திரைப் பாடல்கள் அடுக்கி வந்தாலும் பிரித்தால் பொருள்தரா! ஓசை இனிமை கருதி, இலக்கணத்தை மீறி வந்த இரட்டைக் கிளவிகள் இவை எனலாம்!    

----------------------------------------------------------------------------- 

15 கருத்துகள்:

  1. புறம், புரம், வல்லி, வள்ளி விளக்கம் மனதைக் கவர்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், பிப்ரவரி 20, 2024

      கவர்ந்திருச்சா.. சரி. அப்ப அடுத்தடுத்த கட்டுரைகளையும் முன்னே சென்று படித்துவிட்டு, உங்கள் கருத்துகளை எழுதுங்கள்..

      நீக்கு
  2. ஆகா...ஆகா...தேடல் மிகுந்த கட்டுரை...அத்தனை குவியல்..பலே..பலே அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், பிப்ரவரி 20, 2024

      ஆகா..ஆகா. என்பதும் பலே பலே என்பதும் அடுக்குத் தொடர். ஒற்றைச் சொல்லே பொருள் புரிந்துவிடுகிறது அல்லவா? இனிமைக்காக அடுக்குவது.. சரி சரி சரி.. புரிகிறது! நன்றி

      நீக்கு
  3. நல்ல தகவல்கள்! புரம் எனும் விகுதியில் 90 ஊர்கள் இருப்பதாகச் சொன்னது சுவையான புள்ளிவிவரம். காலஞ்சென்ற தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் இப்படி ஊர்ப்பெயர் விகுதிகளை ஆராய்ந்து எழுதியுள்ள ‘தமிழகம் - ஊரும் பேரும்’ எனும் நூலில் இப்படிப் பல சுவையான செய்திகளை அறியலாம். இப்பொழுது அது ‘தமிழிணையம்’ மின்னூலகத்தில் இலவசமாகப் படிக்கவே வெளியிடப்பட்டுள்ளது.

    வள்ளி - வல்லி விளக்கம் நன்றாக இருந்தது. குறவர் இன மக்களை கு(ன்)றவர் என நீங்கள் குறிப்பிட்டுள்ளது புதுமை!

    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், பிப்ரவரி 20, 2024

      கு(ன்)றத் தலைவர் மகள் வள்ளியைத் தேடிச் சென்ற குமரன்தான் -வள்ளிக்காக- குன்றுதோறும் ஆடிக்கொண்டிருக்கிறான்! இப்போதைய வள்ளி திருமண நாடகப் பெயர்கள் தெரியுமா நண்பா? “கந்தனின் காதல் மணம்”, “குகனை மணந்த குறிஞ்சி மலர்” நவீன மரபுக் காதல் நாடகத் தலைப்பு!

      நீக்கு
    2. //கு(ன்)றத் தலைவர் மகள் வள்ளியைத் தேடிச் சென்ற குமரன்தான் -வள்ளிக்காக- குன்றுதோறும் ஆடிக்கொண்டிருக்கிறான்!// - அட! உண்மைதான் ஐயா!

      இன்றைய வள்ளித் திருமண நாடகப் பெயர்களும் அழகாகவே இருக்கின்றன!

      நீக்கு
  4. இரட்டைக்கிளவி கடகடவென படித்தேன் நன்றிஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்புதன், பிப்ரவரி 21, 2024

      நல்லது நல்லது நண்பரே. அப்படி அப்படி அடுக்குத் தொடரையும் பார்க்கவில்லையா?

      நீக்கு
  5. வள்ளி வல்லி சொல் வேறுபாடு மிகச்சுவையாய் விளக்கியதும் புறம் புரம் வேறுபாடும் இலக்கணத்தை மீறிய இரட்டைக் கிளவிகள் பற்றிய விளக்கம் என் அனைத்தும் அருமையாக விளக்கி உள்ளீர் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. ஐயா, வல்லி என்பது, லதா என்பதன் தமிழ்ப்பொருள் என்கிறார்களே!

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாசனி, மார்ச் 02, 2024

    ஐயா, லதா ( கொடி) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எனச் சிலர் சொல்கின்றனரே?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்சனி, மார்ச் 02, 2024

      அப்படித்தான் சொல்கிறார்கள். வடமொழியோ தமிழ்மொழியோ, பெண்களை கொடியிடை, மெல்லிடை என்றுதானே வர்ணிக்கிறது? அ.மங்கை இயக்கத்தில் வந்த “அவ்வையார்” நாடகத்தில் இன்குலாப் வசனம்தான் நினைவுக்கு வருகிறது - “உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகெனில், தொப்பை பெருத்தல் ஆணுக்கு அழகோ?” மொழிபெயர்ப்பை மட்டும் பார்க்காமல்,
      சொல்லின் வரலாற்றையும் பார்க்க வேண்டி யிருக்கிறது, “சொல்லின் வரலாறு சொல்லும் வரலாற்றில், வல்லார் அடிமை செய்த வரலாறும் புலனாகும்” என்பது இந்த வலைப்பக்கத்திலேயே உள்ள எனது “ஒரு காதல் கடிதம்” எனும் நெடுங்கவிதையின் ஒரு பகுதி. நேரமிருந்தால் எடுத்துப் பாருங்கள். புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற அந்த நெடுங்கவிதை, சாலய் இளந்திரயன் அவர்களின் “அறிவியக்கம்” இதழில் (1977-78) ஓராண்டு தொடராக வந்தது. அப்போது நான் திருவையாறு அரசர் கல்லூரித் தமிழ் இலக்கிய மாணவன் வயது 20!

      நீக்கு