தமிழ்இனிது-31 (நன்றி- 23-01-2024- இந்து தமிழ் நாளிதழ்)

  

சிறகு வேறு,  இறகு வேறு!  

கெடிகாரமா? கடிகாரமா?  

          கவிஞர் நேசன்மகதி, செய்தித்தாள் ஒன்றைப் புலனத்தில் அனுப்பி, “கெடிகாரமா? கடிகாரமா?” என்று கேட்டார். “விநாயகர் வடிவ கெடிகார விற்பனை“-விளம்பரமும் அந்த செய்தித் தாளில் இருந்தது!  உமறுப் புலவரின் ஆசிரியர் கடிகை முத்துப் புலவர் வந்து நமது மண்டையில் தட்ட, “கடிகை, கடிகாரம் தான் சரி“ என்றேன் (நன்றி-தமிழ்-தமிழ் அகர முதலி –த.நா.பாடநூல் கழகம்-பக்கம்-247/1985) வெண்கல மணி ஓசையில் காலம் அறிந்ததால், கடிகை - கடிகாரம் ஆனது.  கையில் கட்டுவதால் அல்ல, அளவில் சிறியதால் ‘கைக்கடிகாரம்’ ஆனது,!

 ‘கடிகா’ – பாலி, வடமொழி வழி ‘கடிகை’ எனும் கருத்து, தவறானது.

“மலர்ந்தும் மலராத” -பாசமலர்- பாடலில் “தங்க கடியாரம்“ என்று சுசிலாம்மா பாட, கண்ணதாசன் ‘கடிகாரம்’ என்றே எழுதியிருக்கிறார்.  

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ‘நான்மணிக் கடிகை’ பொ.ஆ.,4ஆம் நூற்றாண்டினது! “கடிகை வெண்பா“- அரசனுக்கு நேரம் சொல்லும் ஒரு சிற்றிலக்கியம்! கடிகை -நேரம் அளவிடு கருவி.  மதுரைக் காஞ்சி-532, நெடுநல் வாடை-142, கலித்தொகை-96/10, அகநானூறு35/3 எனசங்கநூல்களில் வரும்.          “பாலையில் செல்வோர் கடிகை கொண்டு செல்வர்"கடிகை  நாழிகையே" - சூடாமணி நிகண்டு. 

பிறகு கடிகை-கடிகாரம் என்பது ‘கெடிகாரம்’ ஆனது எப்படி? கங்கை –கெங்கை என்றும் (குடியாத்தம் கெங்கையம்மன் கோவில்), கரகம் – கெரகம் என்றும் (கரகாட்டக் காரன் - கோவை சரளா) பேச்சு வழக்கில்     க, கெ ஆக,  கடிகாரம் கெடிகாரம் ஆகியிருக்கலாம்.  ஆனால் பெருவழக்கிலும் எழுத்திலும் கடிகாரம் என்பதே தமிழ்ச்சொல்.  என்ன செய்ய? கடிகாரத்திற்கே ‘நேரம்’ சரியில்லை  போல!  ‘கெரகம்’தான்!  

எம்பளது – நுப்பது

எண்பதை ‘எம்பளது’, என்றும் முப்பதை ‘நுப்பது’ என்றும் சொல்வது, பழைய  தஞ்சை மாவட்ட மக்கள் வழக்கு. எழுதும்போது, சரியாக எழுதுவர். இது எப்படி வந்ததென்று சொல்லாய்வரே சொல்ல வேண்டும்! தப்பான  உச்சரிப்போடு நெடுங்காலமாக வழக்கில் இருப்பது மட்டும் உண்மை!

அரைவை – அறைவை

           சென்னையிலிருந்து பள்ளி  மாணவி ஜூலியானா, “அரைவை எந்திரமா? அறைவை எந்திரமா?” என்று கேட்டார். நல்ல கேள்வி!  அறவை, அறைவை என்பன தவறானவை.  மாவு அரைக்குமிடம் – மாவு அரவை ஆலை. புடைவையைப் புடவை என்றும், உடைமையை உடமை என்றும் வழங்குவது போல, அரைக்கும் அரைவையை அரவை என்றே ஏற்கலாம். மரம் அறுக்கும் மர அறுவை ஆலை என்பது வேறு.

இறக்கை – றெக்கை – ரெக்கை

இறக்கை – wings- இறகு, பெரியது. 

றெக்கை - பேச்சு வழக்கு. 

சிறகு –feather- இறக்கையின் சிறுபகுதி- சிறியது. 

“காதல் சிறகை காற்றினில் விரித்து” –கண்ணதாசன் பாடல்.   

“சிறகுக்குள் வானம்” – ஆர்.பாலகிருஷ்ணன் கட்டுரைகள் - பாரதி புத்தகாலயம். ‘சிறகு’ என்றே  மின்னிதழ் ஒன்றும் வருகிறது!

இறகிலிருந்து பிரிவதே சிறகு, ஆனால், பெரும்பாலும் --வழக்கை முன்வைத்து—சிறகை, இறகு-இறக்கை எனும் பொருளில்  எழுதுகின்றனர். இதை இலக்கணத்தில் (சிறகு எனும் உறுப்பு, இறகு-இறக்கை எனும் முதலுக்கு ஆகிவருவதால்)  சினையாகுபெயர் என்பர். ரெக்கை என்பது பிழை வழக்கு.  சிறகு விரிக்கட்டும் புதிய சிந்தனைகள்!   

(நன்றி - இந்து தமிழ் நாளிதழ் - 23-1-2024 செவ்வாய்)

நண்பர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து,
“என்ன இந்த வாரம் இப்படி வடிவமைத்து விட்டீர்கள்?” என்று
என்னைக் கேட்டார்கள்! கோப்பாகச் சேர்ப்போர், பள்ளி கல்லூரி, பயிலகங்களின் சுற்றறிக்கைப் பலகையில் இதை
ஒட்டிவைப்பது சிரமம் என்றார்கள்!  
( மதுரை உலகத் தமிழ்ச் சங்கச் சுற்றறிக்கைப் பலகையில் 
“தமிழ் இனிது” கட்டுரைகளை ஒட்டுகிறார்களாம்! 
அந்த நல்லுள்ளங்களுக்கு எனது வணக்கம் கலந்த நன்றி )


                                     -------------------------------------------------------------------- 

20 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா🙏கடிகாரம் - நல்ல விளக்கம்: ஆதாரங்களும் சிறப்பு. கடிகை என்பது எப்படி கடிகாரம் ஆனது. கடிகைக் கருவி வட்டமாக (ஆரம் ) உருவானதால் இருக்கலாமா? மணலால் காலம் காட்டியதையும் மணல் கடிகாரம் என்று இன்று குறிப்பிடுகிறோமே அய்யா. அடுத்த வாரம் வல்லி வள்ளி வேறுபாட்டை தரலாமா அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜனவரி 23, 2024

      ஆய்வுத் தொடர்ச்சி மகிழ்ச்சி தருகிறது. தாங்கள் சொல்வது சரியாகத் தோன்றுகிறது. வல்லி வள்ளி வேறுபாடு எழுதுகிறேன். நன்றி அய்யா

      நீக்கு
  2. கடிகை கடிகாரம் அரவை இயந்திரம் சிறகு இறகு விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  3. கடிகாரம் நல்ல கடிகாரம் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜனவரி 23, 2024

      கடிகாரத்துக்குத்தான் நேரம் சரியில்லையே! நன்றி நன்றி

      நீக்கு
  4. வழக்கம் போலவே அருமையான விளக்கங்கள் ஐயா! கடிகாரம் வடமொழிச் சொல் இல்லை என்பதை அறிஞர்கள் அறிவார்கள். பொதுமக்களும் இதை உணரும் வகையில் நீங்கள் அளித்த விளக்கம் பலருக்கும் தெளிவூட்டும் என நம்புகிறேன்! சங்க இலக்கியங்களின் தலைப்புகள் முதல் உள்ளடக்கம் வரை கடிகை உண்டு என்பதை மேற்கோள் காட்டி அசத்தி விட்டீர்கள்!

    மாணவப் பருவத்தினர் ஒருவரும் இது குறித்து ஐயம் எழுப்பியிருப்பது அடுத்த தலைமுறைக்கு உங்களுடைய இந்த அரிய முயற்சி சென்று சேர்ந்திருப்பதை உணர்த்துகிறது. அதுவும் படிப்பதோடு நில்லாமல் ஐயமும் எழுப்பியிருப்பது காண மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜனவரி 23, 2024

      ஆமாம் நண்பா. மாணவர் பலரும் கேட்கத் தொடங்கியிருக்கின்றனர். அதில் பொதுவாகச் சொல்லக் கூடியவற்றை, மகிழ்ச்சியோடு எழுத எடுத்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  5. இறகு, சிறகு ஆகிய இரண்டில் தூவலைக் குறிக்கும் சிறப்புச்சொல் எது என்கிற குழப்பம் எனக்கு வெகு காலம் இருந்தது. இந்தக் கட்டுரை படித்துச் சிந்தித்த பிறகு தெளிவு பெற்றிருக்கிறேன். இறகு எனும் சொல்லின் வேர்ப்பகுதியாக அமைந்துள்ள ‘இறு’ எனும் சொல் ஒடிதல் எனும் பொருளைத் தருகிறது. எனவே இறக்கையிலிருந்து ஒடிந்து விழுவதால் அதற்கு இறகு எனப் பெயர் வந்ததாகக் கொள்ளலாமா ஐயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜனவரி 23, 2024

      உங்கள் கருத்து சரியாகவே தெரிகிறது நண்பா. ஆங்கிலத்தின் Pen எனும் சொல்லும் Penna எனும் லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்ததாக அறிவோம் அதற்கும் இறகு என்றே பொருளாம். மயில் தூவி கொண்டு எழுதப்பட்ட காலத்தை வைத்து தூவல் எனும் சொல் வந்தது என்று தமிழியக்க அறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆய்வுகள் தொடரட்டும்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜனவரி 23, 2024

      சும்மா அருமை பெருமைல்லாம் போதாது. என்னிலும் கூடுதலான ஆசிரிய-த.ஆ., அனுபவம் உள்ள நீ எனக்கு இதுபோலும் பட்டியலே தரணும் எட்வின்.. ஆமா..சொல்லிட்டேன்..

      நீக்கு
  7. பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், ஜனவரி 23, 2024

      தொடர்ந்து இல்லாவிட்டாலும் அவ்வப்போதாவது படிக்கிறீர்களா தோழர், மகிழ்ச்சி. நடைமுறைச் சொற்குழப்பங்கள் பற்றிய உங்கள் ஆலோசனைகள் தேவை அனுப்புவீர்களா?

      நீக்கு
  8. அறியாதன அறிந்தோம்..பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. சிறப்பு தோழர்

    பதிலளிநீக்கு
  10. கடிகை குறித்த விளக்கத்தோடு தவறை நகைச்சுவையாக இடித்திருக்கிறீர்களே அண்ணா :-)

    அரவை குறித்த விளக்கத்தோடு புடவை என்பது புடைவை என்பதை இப்போதுதான் அறிகிறேன்.
    சுற்றறிக்கைப் பலகையில் 'இலக்கணம் இனிது' பகுதியை ஒட்டி வைக்கிறார்கள் என்பது அறிந்து பெருமையாக இருக்கிறது அண்ணா. வாழ்த்துகள்.
    தொடர்ந்து பல சொற்களை அறிமுகப்படுத்துவதற்கும் சரியான பயன்பாட்டைக் கற்றுக்கொடுப்பதற்கும் நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு