--நா.முத்துநிலவன்--
தமிழர்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும், தமிழைக் காக்கவும் வளர்க்கவும் நினைப்பது
மகிழ்ச்சியளிக்கும் செய்திதான். ஆனால் தமிழைக் காக்க,
உணர்ச்சி மட்டுமே போதாது. செயல் புரிந்து வாழ்த்த
வேண்டிய செயல்பாடுகளும் அதற்கான சிந்தனைகளும் அவசியம்.
பிறமொழி கலந்தோ, உச்சரிப்பை மாற்றியோ பேசப்பேச,
அந்தந்த வழக்கில் வேறொரு புதிய மொழி உருவாகிக் கொண்டே இருப்பதைக் கடந்த
ஆயிரம் ஆண்டுகளில் நாமே கண்டிருக்கிறோம். “வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகு” என்று தொல்காப்பியர் காலத்தில்
இருந்த தமிழ், இப்படித்தான், பெ.சுந்தரனார் காலத்தில் “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்” தமிழின் வயிற்றிலிருந்தே பிறந்ததாகச் சொல்கிறார்!
யோசித்துப் பார்த்தால் வாழ்க்கை முறையை வகுக்கத்தான்
நம்மால் முடியுமே தவிர, வாழ்வது அவரவர் பொறுப்புத்தானே? அதே போல, மொழியின் இலக்கிய இலக்கணத்தை நம் முன்னோர் வகுத்துத் தந்திருந்தாலும்,
அதை வரிவடிவில் எழுதும்போதும், ஒலியுருவில் உச்சரிக்கும்போதும்
அவரவர்க்கும் ஒரு பொறுப்பிருக்க வேண்டுமல்லவா?
மெத்தப் படித்தவர்கூட –அறியாமை காரணமாகவோ, அலட்சியம் காரணமாகவோ- செய்யும் தவறுகள், அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுவதுதான் நாளடைவில் மொழிக்குப் பெருங்கேடு
விளையச் செய்து அழித்தும் விடுகிறது. அல்லது அந்த வேறுபாடுகளே
புதிய மொழிகளின் தோற்றத்துக்கும் விதைகளாகி விடுகின்றன.
திராவிட மொழிக் குடும்பத்தின் தாயான தமிழிலிருந்து தோன்றிய மொழிகளைப் பட்டியலிட்டு,
பேராசிரியர் பெ.சுந்தரனார் பாடியதன் வரலாற்றுக் குறிப்பும் இதுதானே?
இருபத்தோராம் நூற்றாண்டில் அழியும் நிலையில் இருப்பதாக நான் நினைக்கும் தமிழ் எழுத்துகள் இரண்டு! ஒன்று, தவறான உச்சரிப்பால் வழக்கொழிந்துவரும் ழ, மற்றொன்று, தவறான கணினி எழுத்துருக் குழப்பத்தால் சிதைந்து வரும் ர.
இவற்றைக் காப்பாற்ற வேண்டிய
கவலையே இக்கட்டுரை.
இந்த உச்சரிப்பு முறைகள் அனைத்திலும் சிதைந்துவரும்
ஒலிப்புமுறை முதலில் தாக்கியிருப்பது “ழ“ எனும் தமிழுக்கே உரித்தான சிறப்பு
ழகர எழுத்தைத்தான்.
மேற்கண்ட அனைத்துத் தமிழிலும் இப்போது மறைந்து வருவது
ழகரம். முக்கியமாகப்
பேச்சு வழக்கில் - அனேகமாக குழந்தைகளிடமிருந்து – மறைந்து வருகிறது. பத்து வயது உடைய பள்ளிக் குழந்தைகளின் இன்றைய உச்சரிப்பே நாளைய
மொழி நடை! எனவே, ழ எழுத்தின் உச்சரிப்பைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குத்
தரும் பெரும் பொறுப்பை இன்றைய தலைமுறையே ஏற்க வேண்டும்.
இது பேச்சுமொழிக் குழப்பம்தான் என்றாலும், இதன் நடைமுறைச் சிக்கலைப் பற்றியே நான் கவலைப் படுகிறேன். லகர ளகர ழகர உச்சரிப்பு வேறுபாடு அறியாமல் சொல்லித்தரும் ஆசிரியர், தவறுகளை மொழியின் மீது சுமத்தக் கூடாது! தமிழ் நெடுங்கணக்கில் மெய்யெழுத்துகளின் அடுக்கு (வரிசை) முறைக்கு ஆழ்ந்த பொருளுண்டு. இதை அறியாதவரே இந்தக் குழப்பத்துக்கு ஆளாகிறார்கள்.
வல்லினம் மெல்லினம் இடையினம் என மூன்று வகையான
மெய்யெழுத்துகள், முதலில் வல்லினம், அடுத்து
அதற்கு இனமான மெல்லினம் என்றே ஐந்து இனஎழுத்துகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
சொல்லிப்பாருங்கள் க ங, ச ஞ, ட ண, த ந, ப ம. இதன் பின் ஆறு இடையின
எழுத்துகளும் வரிசையாக –மெய்யெழுத்துகளின் இடையில்- உள்ளன. கடைசியாக மீண்டும் வல்லின எழுத்தை அடுத்து மெல்லின
எழுத்தோடு ற ன என்றே முடிகின்றன. இந்த வரிசையின் அர்த்தமறியாமலே கற்பிக்கப் படுவதன் ஆபத்து, உச்சரிப்புக் குழப்பத்தில் கொண்டு சேர்த்துவிடுகிறது.
ல –இதன்பெயர், ஒற்றல் லகரம்! (“குண்டு லகரம்” அல்ல!) நுனி நாக்கு நுனி அன்னம் எனும் மேல் வாயை
ஒற்றுவதால் பிறக்கும் எழுத்து
ள –இதன்பெயர், வருடல் ளகரம்! (“வெள்ளிக் கால் ளகரம்” அல்ல!) நுனி
நாக்கு நுனி அன்னத்தை வருடுவதால் பிறக்கும் எழுத்து
ழ –இதன்பெயர், சிறப்பு ழகரம்! (“வாழைப்பழ ழகரம்”அல்ல!) நுனி நாக்கு, அன்னத்தின்
மேலே இழைத்து மடங்குவதால் பிறக்கும் சிறப்பெழுத்து)
![]() |
(படத்துக்கு நன்றி : கூகுளார்) |
இவை மூன்றும் ஒரேஇனமாக -இடையினமாக- வந்தாலும், பல+மொழி= பன்மொழி, நாள்+காட்டி=நாட்காட்டி என முறையெ மெல்லினம் வந்தால் லகரம் னகரமாகவும், வல்லினம் வந்தால் ளகரம் டகரமாகவும் மாறும் என, இவ்வெழுத்துகளைக்
கற்பிக்கும்போதே சொல்லப்படவேண்டும்.
“கேட்டுக் கொல்கிறேன்” என்றும், “பல்லிக்கூடம்” என்றும்,
“மாம்பலம்” என்றும் “அழுத்தம்
திருத்தமாக”ச் சொல்கிறார்களே!? (மிகப்
பெரிய பேச்சாளர்-இலக்கியவாதிகளும் இதற்கு விதிவிலக்கல்லவே!)
எனில், “தமில் வால்க” என்று
எவ்வளவு கத்தினாலும், தமிழ் எப்படி வாழும்? இதற்கு,“வாழைப்பழம் அழுகிக் கொழகொழத்து கீழே
விழுந்தது” என்று, சிறுவயதில் கற்க
மறந்தவர்க்கு, இப்போதாவது சொல்லித்தர வேண்டும்
இப்படியே, “பெரிய” எனும் சொல்லில் “சின்ன ர“ வருவதும், “சிறிய”
எனும் சொல்லில் “பெரிய ற” வருவதுமான தமிழின் அழகைச் சொல்லித்தர வேண்டும்! அப்படியே
அது பெரிய ற அல்ல, வல்லின றகரம் எனவும், சிறிய ர அல்ல, இடையின ரகரம் எனவும் சொல்லித்
தரவேண்டும். இவற்றால் பொருள் மாறி வருகின்ற சொற்களை அடுக்கி
அடுக்கி நிறையச் சொற்களைச் சொல்லிச் சொல்லித் தரவேண்டும். இல்லையேல்
அடுத்த தலைமுறை “தமில் மொலி”யில்தான்
பேசும்.
இது போலும் தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பு
வேறுபாடு பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புவோர் “மூனு சுழி ண, ரெண்டு சுழி ன - என்ன வித்தியாசம்?” எனும் எனது வலைப்பக்கத்தில் உள்ள கட்டுரையைப் படிக்கலாம். இணைப்பு- https://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_26.html
ர எழுத்து, கணினி எழுத்துருக்கள் சிலவற்றால் ஆபத்தான நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளது. அதாவது ர ரா ரி ரீ என, ரகர வர்க்கத்து எழுத்தின் இறுதியாக சொல்லப்படும் ர் எனும் எழுத்தைக்
கணினியின் எழுத்துரு வகைகள் சில, துணைக்கால் போட்டு
புள்ளிவைத்து எழுதச்செய்து இந்தக்
குழப்பத்தைச் செய்துவிட்டன.
அதாவது இராமர் என எழுதும்போது, ர போட்டுப் புள்ளி வைப்பதற்குப்
பதிலாக துணைக் கால் போட்டு புள்ளி வைக்கத் தொடங்கி அவ்வாறே பழகிவருகிறார்கள்.
(யுனி கோடு எழுத்துருவில் இது சரியாக உள்ளது வேறுசில எழுத்துரு
கல்வித்துறையின் பாடநூல்களிலேயே இடம்பெற்ற அவலத்தால் வந்த ஆபத்து இது) ர ஒற்று வருமிடங்களில் எல்லாம்
துணக் கால் போட்டுப் புள்ளி வைத்து எழுதிவரும் குழந்தை, நாளடைவில்
ர் எனும் எழுத்தையே மறந்துவிடும் ஆபத்து உள்ளது. சந்தேகம் இருந்தால், ஊர், தேர், யார், எனும் சொற்களையோ, சேகர், பஷீர்,
கிறித்துவானவர், பாஸ்கர், குமார், எனும் மனிதப் பெயர்களையோ எழுதச் சொல்லிப்
பாருங்கள்! அதிர்ந்து
போவீர்கள்!
ர உச்சரிப்பு வரக்கூடிய மரம், கரம், பாரம்,
எனும் சொற்களில் இந்தக் குழப்பமில்லை. ஆனால்,
வரி, பாரீர் என எழுதும்போது
குழம்பிவிடுகிறார்கள்.
எனவே, ரகர ஒற்று
எழுதும்போது ர போட்டு, புள்ளி வைக்கவேண்டும், துணைக்கால் போட்டுப் புள்ளி வைப்பது ர் ஆகாது என்பதைக் குழுந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டிய
அவலம் ஏற்பட்டுள்ளது. இதைக் கவனித்து இப்போதே திருத்தாவிட்டால் அடுத்த தலைமுறையில் ர
அழிந்துவிடும்.
இவற்றை
அலட்சியத்தால் விட்டுவிட்டு, பாய்ந்து பறக்கும் வாழ்க்கைச் சிக்கலில் நாமும் கலந்து
ஓடிக்கொண்டே இருந்தால், நாளடைவில் குழந்தைகளுக்கு எழுத்துக்
குழப்பமாக அல்ல மொழிக் குழப்பமாகவே மாறிவிடும் ஆபத்து எழுந்திருக்கிறது என்பதை
உணர்ந்து திருத்த வேண்டுவது நம் தலைமுறைத் தமிழர்களின் தமிழ்க்கடன்.
ஒரு முக்கியமான பின்குறிப்பு
இந்தக் கட்டுரையைப் பற்றிய சந்தேகம்
இருப்பவர்கள், தமிழ்நாட்டு அரசின் 1முதல் 12ஆம்
வகுப்பு வரையிலான பாடநூல்களை எடுத்துப் பார்க்க வேண்டுகிறேன். இருவகையிலும் அவை
அச்சிடப் பட்டு இருக்கும்!
தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்க்கான பாடநூல்களை
எழுத, என்னை
அழைத்தபோது (2018) அதற்குப் பொறுப்பு வகித்த தமிழறிஞர்,
அரசுக் செயலர் திரு த.உதயசந்திரன் அவர்களைச் சந்தித்து இதுபற்றிச்
சொன்னேன். ஆர்வமாகக் கேட்ட அவர்கள், இது பற்றிய எனது கவலையை
அவர்களும் உணர்ந்தார்கள். பிறகு சொன்னார்கள் –“நாம் சொல்லலாம், கோடிக் கணக்கில் நூல்களை அச்சிடும்போது, நூற்றுக்
கணக்கான அச்சகங்களுக்கு அச்சிடக் கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு எவ்வளவுதான்
சொல்லி அனுப்பினாலும், அவசரப் பணிகளை முன்னிட்டு இதைச் செய்ய
மறந்து (அ) மறுத்து விடுகிறார்கள்” என்றார்!
இதுதான் அரசு நிலைமை! இதை மீண்டும் வலியுறுத்த, தற்போது தமிழ்நாடு பாடநூல்
மற்றும் கல்வியியல் கழகத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் எங்கள் பட்டிமன்ற முன்னாள்
தலைவர், அருமைத் தோழர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்
கவனத்திற்குக் கொண்டு சென்று பேச எண்ணியிருக்கிறேன். அவர் அரசு கவனத்திற்குக்
கொண்டு சென்று செய்து தருவார் என நம்பிக்கையோடு இருக்கிறேன். நல்லது நடக்கும்
என்று நம்புவோம்
------------------
அமெரிக்காவில் உள்ள “நியூயார்க்
தமிழ்ச்சங்கம்”- கரோனாக்
காலத்தில் தனது பொன்விழாவை நடத்திய போது (2023), அதன் “இலக்கியக் குழு”த்
தலைவராகப் பொறுப்பேற்றிருந்த நமது ‘வீதி’ நண்பர் திரு ஆல்ஃபி (எ) ஆல்பிரட் தியாகராஜன் (எ) எழுத்தாளர் பரதேசி அவர்கள் கேட்க, அவர்களது
மலருக்காக எழுதி அனுப்ப, FeTNA-2023 மலரில் இக்கட்டுரை முதலில்வெளியிடப்பட்டது.
கடந்த 01-02-2021 அன்று
நடந்த எனது இளைய மகள் ம.மு.லட்சியா – இரா. முத்துக்குமார் திருமணத்தில், மேனாள்
சட்டமன்ற உறுப்பினர்களும் அன்புத் தோழர்களுமான மதுரை
நன்மாறன் வெளியிட, திண்டுக்கல் பாலபாரதி பெற்றுக் கொள்ள, வந்தோர் அனைவருக்கும் – பாக்கு பழம்
போட்ட பையில் – வழங்கப்பட்ட – பாரதி புத்தகாலய வெளியீடாக வந்த ‘இலக்கணம் இனிது” நூலில் உள்ள கட்டுரை.
பிறகு, இதே நூலின் மறுபதிப்பு ‘இந்து
– தமிழ்” வெளியீடாக கடந்த 18-7-2025 அன்று
வந்துள்ளது. இந்த நூலோடு, அண்மையில் வெளிவந்துள்ள எனது நூல்களான -
(1)
இலக்கணம் இனிது
–
(2)
தமிழ் இனிது – இவை இரண்டும் இந்து
தமிழ் வெளியீடுகள்
(3)
இலக்கியம்
இனிது -
(4)
‘அழகியலுக்குள்ளும்
அரசியல் உண்டு – இவை இரண்டும்
சென்னை அகநி பதிப்பக வெளியீடுகள்
மேற்கண்ட 4 -நூல்களையும் ஒரே இடத்தில் பெற, செல்பேசி எண்
- சக்சஸ் புக்ஸ் – திரு அஜ்மீர் - 98420 18544
------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக