ஆர்.நீலா எழுதிய இரண்டு நூல்கள் வெளியீடு


ஏற்கெனவே

'வீணையல்ல நான் உனக்கு'

(கவிதைகள்)

'பாமர தரிசனம்'

(அறிவொளி கள அனுபவங்கள்)

'கற்றது சிறையளவு'

(சிறைவாசிகளுக்கு எழுத்தறிவு கற்பித்த அனுபவங்கள்)

முதலான

எட்டுநூல்களை எழுதியிருக்கும்

கவிஞரும் எழுத்தாளருமான ஆர்.நீலா

இப்போது எழுதியுள்ள 

இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா

நேற்று -22-7-2025 – ஆலங்குடியில் நடந்தது.

தமிழ்நாடு அரசின்

மாண்புமிகு பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர்

சிவ.வீ.மெய்யநாதன் அவர்களும்

பன்மொழித் திரைக்கலைஞர்

தோழர் ரோகிணி அவர்களும்

கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டுப் பேசினார்கள்



விழாப்படங்களும் அழைப்பிதழும்


படத்தில் இடமிருந்து வலமாக
நா.முத்துநிலவன், ராசி பன்னீர் செல்வன், தங்கம் மூர்த்தி,
ரோகிணி, ஆர்.நீலா, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,
'பறம்புத் தேக்கன்' திருப்பதி வாசகன்,
நீலாவின் இணையர் சுபி, ஸ்டாலின் சரவணன், மு.கீதா
---------------------------------------------------------------------

நூல்கள் வாங்க –

(இரண்டு நூல்களும் சேர்த்து ரூ.240

ரூ.250 அனுப்பினால் உங்களை வந்தடையும்)

தொடர்புக்கு -

கவிஞர் ஆர்.நீலா – செல்பேசி எண் - 63827 81951 

-----------------------------------------------------------------------------------------------------

'அழகனும் அழகிகளும்' 

நூலுக்கு நான் எழுதிய முன்னுரை 

------------------------------------------------------------------------------------ 

இருளில் கிடக்கும் வைரங்களின் மீது 

ஒளிபாய்ச்சும் கலை - களப்பணி 

-- நா.முத்துநிலவன் -

ம் தமிழைப் பழங்காலத்திலிருந்தே முத்தமிழ் என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப் படுகிறோம்! பன்னாட்டு வணிகப் பண்பாட்டுச் சூழலில் வாழப் பழகிவிட்ட இன்றைய இளைஞர் பலர், இதன் பொருளை அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்!

தமிழை, இயல்-இசை-நாடகம் என முத்தமிழ் என்கிறது தமிழ் மரபு! இயல் என்பது கவிதையும் உரையாடலும்.                                                                                                         இசை என்பது அதையே உரிய இசையோடு பாடுவது.                     நாடகம் என்பது உரையாடலுடன், இசையும், நடிப்பும் சேர்ந்தது. 

இப்போது முத்தமிழுடன் அறிவியல் தமிழ், இணையத் தமிழ் என்று ஐந்தமிழ் வரை தமிழ் வளர்ந்திருப்பதும் உண்மைதான்...ஆனால்... 

ஆனால், முத்தமிழின் நுட்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோமோ? என்னும் கவலை, என்னைப் போலப் பலருக்கும் உண்டு! மரபுக் கவிதை, புதுக்கவிதையாகக் கால ஓட்டத்தில் பரிணமித்தது போல, மரபுக் கவிதையின் நுட்பங்களான, வரகவி, ஆசுகவி, சித்திரக்கவி, வித்தார கவி என்பதெல்லாம் அனேகமாக அழிந்து வரும் பட்டியலில் உள்ளன! இந்தக் கவிதைகளுடன் நீண்ட காலத் தொடர்பில் இருந்த தமிழிசை நுட்பமும், நடன நுட்பங்களும் கூட அழிந்துவரும் பட்டியலில் இருப்பது பற்றிக் கவலைப் படுவோர் யாரிருக்கிறார்?

ஆனால் சிறுபான்மையோர் பக்கமே எப்போதும் இருக்கும் கலை இலக்கிய வாதிகள் இதுபற்றிக் கவலைப்படுவது இப்போது வளர்ந்துள்ளது. அதுவும் சமூக மாற்றத்தோடு கலை-இலக்கியத்தைப் பொருத்திப் பார்த்து சமூக முன்னேற்றத்திற்காகவே எழுதி இயங்கி வரும் முற்போக்குக் கலை இலக்கிய வாதிகள் கவலைப்படுவது இந்த நிலையில் மாற்றம் நிகழ்த்தும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராகவும் கலை-இலக்கியக் களப்பணியாளராகவும் உள்ள எழுத்தாளர் ஆர்.நீலா இந்த நூலில் தந்திருக்கும் நடனக் கலைக்காகவே வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட தேவரடியார்களின் அரிய கலையை நேரிடையாகச் சென்று அவர்களுடன் கலந்து பேசி, அழிந்துவரும் சதிராட்ட நிகழ்வுகளைப் பார்த்து அது பற்றிய தனது அனுபவத்தை எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. 

ஆர்.நீலா, 35ஆண்டுகளுக்கு முன்பே, அறிவொளி இயக்கத்தில் களப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களைக் கதைகளாக, கட்டுரையாக எழுதியவர்தான். அறிவொளி முத்தம்மாஇவரது அறிமுகக் கவிதையாக வர, பிறகு, கிராமங்களில் பெற்ற அறிவொளி அனுபவங்களை, ‘பாமர தரிசனம்என்ற நூலாகத் தந்ததும், சிறைவாசிகளுக்கு எழுத்தறிவு கற்பிக்கப் போன அனுபவத்தைக் கற்றது சிறையளவுஎன்ற நூலாகத் தந்ததும், மறக்க முடியாத அனுபவப் படைப்புகள் என்றால், இந்த நூல் படிப்போரை நெகிழ வைக்கும் அனுபவத் தொகுப்பு என்று சொல்லலாம்.

 னது தேடலில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தேவதாசிபெண்களின் வாழ்க்கையைப் பற்றி, -சுமார் 35ஆண்டுகளுக்கு முன்- அறிவொளி இயக்கக் காலத்திலேயே கேள்விப்பட்ட நீலா, அப்போது ஆட்சியராகவும், அறிவொளி இயக்கத் தலைவராகவும் மக்கள் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட எங்கள் அன்பின் சகோதரி ஷீலாராணி சுங்கத் இஆப அவர்களின் உதவியோடு தேவதாசிபெண்களை அந்த அவப்பெயரிலிருந்து மீட்கப் பாடுபட்டு, இத்தனை ஆண்டு கழிந்தும் அவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களை அந்தத் தொழிலில் இருந்து மீட்கத் தன்னாலான பணிகளைச் செய்ய நினைத்தவர் அவர்களோடு பேசிக் கொண்டே இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.

அந்தப் பேச்சில், இவருக்குப் பிடித்த நுண்கலையும் ஒன்று சேர, வேறு எந்தப் பணியில் இருந்தாலும் ஆண்டுகள் பல கழிந்தாலும், இவர்களுடனான தொடர்பு அற்றுப் போகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது முதலில் கவனம் பெறுகிறது. 

அடுத்து அவர்களின் இசை-நடனத்துடன் பாடல் இயற்றும் ஆற்றலும் இப்போதிருக்கும் கலைஞர்களிடம் இல்லை எனும் ஆதங்கம் நூல்முழுதும் தெரிகிறது. தமிழ்த் திரைப்படங்களும் இப்படித்தானே இருந்தன? எம்.கே.டி. என்ற தியாகராஜ பாகவதர், புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா என்ற இருவருமே முதல் சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்டதன் காரணம் இவர்கள் இருவருமே இசைக்கலைஞர்கள் என்பதுதானே? இப்போது தமிழை உரிய முறையில் உச்சரிக்கத் தெரியாதவ பலர் பாடவும் நடிக்கவும் வந்தது பெரிய சோகம்தானே?

நீலா சொல்கிறார்  தேவதாசி என்ற சொல்லுக்கு இறைவனின் ஊழியர் என்பது பொதுவான பொருளாகும். இதில் கடவுள் சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், பிறரால் தேவதாசி ஆக்கப்பட்டவர் என இரு தரப்பும் அடங்கும்இந்த ஆய்வு முறை மிகச் சரியானது. இவர் பாலிமொழியிலும், சமஸ்கிருதத்திலும் தமிழிலும் இப்பெயர் பெற்றவர்கள் பற்றிய விவரம் வியப்பளிக்கிறது.

எழுத்தாளர் ஆர்.நீலாவின் பார்வை தேவதாசியரின் கலையைத் தாண்டி, தனிவாழ்விலும் நீள்கிறது, சொல்கிறார் இந்நிலைக்கு அவர்களைத் தள்ளியது யார்? என்ற கேள்வியை முதலில் வைக்க வேண்டும். அவர்கள் ஆற்றிய தொண்டுகள் கலை-இலக்கியச் சேவைகள் முறையாகப் பதிவு செய்ய வேண்டும். அதை நோக்கிய என் பயணங்களே இந்நூல்அரசுகள் விரிவாகக் களப்பணி செய்து தொகுக்க வேண்டிய பணிகளை இவர் தொடங்கியிருக்கிறார்! இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலைப் பகுதியின் தகவல்களே  இவ்வளவு என்றால், மாநிலம் முழுதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்நூல் தூண்டுகிறது. இதுவே இச்சிறு நூலின் வெற்றி! எழுத்தாளர் ஆர்.நீலாவின் தொடக்கத்தை அரசுகளும் பிறரும் தொடரவேண்டும்.

தொல்காப்பியம் இலக்கண நூல்தான் எனினும் வாழ்வியல் சார்ந்த கருத்துகள் மிகுந்த நூல். அதில் வரும் ஒரு நூற்பா, எண்வகை மெய்ப்பாடுகளைச் சொல்லும்

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப(தொல்-மெய்ப்பாட்டியல்-247) இதில் உள்ள ஒவ்வொரு மெய்ப்பாட்டிற்கும் தனித்தனியே விரிவான விளக்கமும் தருவார் தொல்காப்பியர், இது செய்யுளுக்கே உரியதாக அவர் சொன்னாலும் பின்னர் கூத்துக் கலைக்கும் பொருந்தி வரக் காணலாம்.  இந்த எண்வகை மெய்ப்பாடுகளோடு அமைதி அல்லது சாந்த நிலையைச் சேர்த்து நவரசம்என்றனர் பின்னோர். இதே பொருளில் குறுந்தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்களும் சொல்வதைக் காணலாம். நவரச வளர்ச்சியில் இவற்றையே நடன பாவங்களாகவும், நடன அசைவு, அடவுகளில் பயன்படுத்துவர் பரத நாட்டியக் கலைஞர்கள்.

இந்த பரதக் கலையே சதுர் ஆட்டம் சதிராட்டம்- எனும் ஆட்டக் கலையின் விரிவு என்பதையும் சுருக்கமாகச் சொல்கிறார் ஆர்.நீலா. கோவிலில் நடுவில் உள்ள மண்டபத்தில் நான்கு திசையும் பார்க்க நடு நின்று ஆடியதால் சதுராட்டம் பிறகு சதிராட்டம் ஆகியிருக்கலாம்.

சதிர்க் கச்சேரி, கோயில்களில் மட்டுமே ஆடப் பட்டது. பிற்காலங்களில் அரசவையில் ஆடும்போது, அதன் தரம் தாழ்ந்தது, கோயிலில் ஆடுபவர் தேவதாசி, அரசவையில் ஆடுபவர் ராஜதாசிஎன்று இதை விளக்குகிறார் நீலா. அப்போது தேவதாசிகள் கௌரவமாக நடத்தப்பட்டதையும் சொல்கிறார். மேலும் அவர், பொதுவாக தேவதாசி ஆடும் பாடும் வடிவங்கள் அன்றைய சமஸ்கிருத மயமாக்கப்பட்டது விராலிமலையில் மட்டுமே தமிழ் முதன்மையானது என்கிறார்!

விராலிமலைக்கு வந்த அருணகிரிநாதர், அவரது சீடர் பாம்பன் அடிகள், பின்னர் அவர்களின் சீடர்களாக வழி வழிவந்தோர் சொன்ன கதைகள் பாடல்கள் வாழ்வியலின் தொகுப்பே இந்நூல். அருணகிரிநாதரும் பாம்பன் அடிகளும் எழுதிய, சிக்கலான செய்யுள் வடிவங்களான ஆசுகவி, சித்திரக் கவி, மதுரகவி, வித்தாரக்கவி ஆகிய அனைத்து வடிவங்களையும் ஆடல்,பாடல், ஓவியங்களாக வளர்த்து வந்த தேவதாசிகளின் கடைசி தேவதாசியைச் சந்தித்து எழுதியுள்ளார் என்பது இந்நூலின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இருக்கிறது.

இதில் வரும் பிந்துமதியின் கதை, விக்கிரமாதித்தன், காளிதாசன் கதைகளில் வரும் அறிவும் அழகுமான தேவதாசிகள் தமிழகத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதாகவும் மிகவும் வியப்பான வடிவிலும் உள்ளது. கதைக்குப் பொருத்தமான வெண்பா இரண்டைக் கவிஞர் ஆலங்குடி சிவகுமாரிடம் வாங்கிப் போட்டிருப்பது நீலாவின் உழைப்பு, அக்கறை மற்றும் நேர்மையைக் காட்டுவதாக உள்ளது. இதில் சிலப்பதிகார மாதவியை ஒப்பிட்டிருப்பதும் சிறப்பு. இதில் வரும் தலைக்கோலம் என்பது, அன்றைய அரசர்கள் மிகச்சிறந்த நடனப் பெண்ணுக்கு வழங்கும் சிறப்பு விருது என்பது கூடுதல் செய்தியாகும். (ஆட்கொண்டு காட்டு அருள்எனும் வெண்பா ஈற்றடி, குற்றியலுகரச் சிக்கலோடு உள்ளது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்)

தமிழகத்தைப் பொறுத்தவரை ஐந்தாம் நூற்றாண்டு வரை வள்ளி மட்டுமே முருகனின் காதல் மனைவியாக இருந்ததை, பிள்ளையார் வருகையோடும் ஒப்பிட்டுக் கொள்ளலாம். வாதாபியை ஆண்ட -இன்றைய கர்நாடகப் பகுதி- இரண்டாம் புலிகேசியை வெற்றிகொண்ட இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னன், பொ.ஆ.பி.-642இல் நடந்த போரின் வெற்றிக்கு அடையாளமாக வாதாபியிலிருந்து கொண்டு வந்ததுதான் பிள்ளையார் வடிவம் என்பது வரலாறு தரும் செய்தி. வாதாபி கணபதிம் பஜேபாடல் தரும் செய்தி.

பின்னால் வந்த கணபதி, முன்னால் இருந்த முருகனுக்கு அண்ணன் என்றும், சிவபெருமானின் குடும்ப உறுப்பினர்களாக பார்வதி, கணபதி, முருகன் கதைகள் புராணமாகக் கட்டப்பட்டதுமான தகவல்கள் முருகன் மீது தேவதாசிகள் கட்டிப் பாடிய பிற்காலப் பாடல்களில் இருந்து தமிழ் வரலாற்றில் வடபுலப் புராணக் கலப்பை அறியலாம்.

இப்படி, நூல் முழுவதும் சுவையான தகவல்கள், வராற்றுக் குறிப்புகள், தேவதாசிகளின் கலை-இலக்கியப் பங்களிப்பின் நுட்பங்கள், அவர்கள் வாழ்வின் அவலங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

கோயில்கள் கலைகளின் இருப்பிடமாக இருந்ததோடு, தேவதாசி பெண்களின் சமூக நிலைகளின் அடையாளமாகவும் இருந்திருக்கின்றன என்பதை நூலின் ஊடுபாவாகச் சொல்கிறார் நீலா.

இந்தக் களப்பணி ஆய்வுகள் தொடர வேண்டும்.

மற்ற பகுதிகளில் உள்ள தொன்மக் கதைகளுக்கும், நம் தமிழரின் தொன்மக் கதைகளுக்கும் ஒரு முக்கியமான வேறு பாடு உண்டுஎனும் நீலா, முருகன், சுப்பிரமணியன் என்று ஆக்கப்பட்ட கதையையும் மிகச் சுருக்கமாகச் சொல்லி விட்டார். இது விரிவாக எழுதப்பட வேண்டிய மிக முக்கியமான சமூகவியல் வரலாற்றுக் குறிப்பு மட்டுமல்ல, தமிழர் சிறு தெய்வ வழிபாட்டிலிருந்து, பெருந்தெய்வ வழிபாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட அடிமைஉணர்வின் வரலாறும் கூட.

கல்லே பரவின் அல்லது நெல்லுகுத்துப் பரவுமோர் கடவுளும் இலவேஎன்பது புறநானூறு 355ஆம் பாடல், மாங்குடி கிழார் பாடியது. இந்தக் கல்லும் இனக்குழு மக்கள் காலத்தில் தமது இனக்குழுவுக்காகப் போரில் உயிர் துறந்த வீரனுக்கான நடுகல் என்கிறது திருக்குறள்-771.

இந்த மக்கள் பெருந்தெய்வ வழிபாட்டுக்குள் இழுக்கப்பட்டதும், சாதிகள் நிலைப்பட்டதும், உழைப்பாளிகள் தாழ்த்தப்பட்டவர் ஆனதும், பெண்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டதுமான சமூக நிலைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

வையும் தேவதாசிகளின் கதைகளில் இணைந்திருக்கின்றன. இவற்றையும் தேடித் தொகுக்க வேண்டும். சுவையும் நுட்பமும் மிக்க இவர்களின் கதைகளையும் தனியே தொகுக்க வேண்டும்.

இப்படி ஏராளமான செய்திகளைக் கொண்ட ஒரு தொடக்கமாக இந்நூல் திகழ்கிறது. இதை எழுத  நூலில் ஓரிடத்தில் நீலாவே சொல்வது போல பல ஆயிரம் மைல் பயணமும், பல ஆயிரம் ரூபாய் செலவும் பிடிக்கும் என்பது உண்மை.

இருளில் கிடக்கும் இந்த மாணிக்க மணிகளின் வாழ்வு மேம்பட அன்னை முத்துலட்சுமி போல, 1990-91களில் இங்கு மாவட்ட ஆட்சியராக இருந்த எங்கள் பாசத்திற்குரிய ஷீலாராணி சுங்கத் இஆப. அவர்கள், அறிவொளியோடு இவர்களையும் அரவணைத்ததில் தொடங்கியது நீலாவின் இந்தக் களப்பணி. அண்மையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பரதக் கலைஞராகவும் திகழ்ந்த கவிதா ராமு இஆப., அவர்களின் உதவியும் மற்றொரு வகையில் இந்நூலாக்கத்திற்குக் காரணம் என்று சொல்லவேண்டும்.

இந்தப் பயணத்தைத் தொடருங்கள் நீலா, அரசு ஆதரவு மற்றும் தோழர் உதவிகளையும் கேட்டுப் பெற வேண்டும் களப்பணி இது.

எனது அன்பான வாழ்த்துகள் நீலா, 

உங்கள் படைப்புகளில்  தொடர் பணிகளைக் கோரும் 

ஒரு தனிச் சிறப்பு இந்நூலுக்கு உண்டு.

சிறு பொறி பெருந் தீயாக மாறட்டும். 

இருட்டில் கிடக்கும் 

இந்த மாணிக்க மணிகளின் வாரிசுகளாவது 

பேரொளி பரப்பி வாழ்வில் உயரட்டும்.


தோழமை வாழ்த்துகளோடு,

நா.முத்துநிலவன்

மாநிலத் துணைத்தலைவர்- தமுஎகச

15-07-2025           செல்பேசி  94431 93293

 புதுக்கோட்டை  622 004

-------------------------------------------------------------------------------- 

நூல்கள் வாங்க –

(இரண்டு நூல்களும் சேர்த்து ரூ.240

அஞ்சல் செலவையும் உள்ளடக்கி

ரூ.250 அனுப்பினால் உங்களை வந்தடையும்

தொடர்புக்கு -

கவிஞர் ஆர்.நீலா – செல்பேசி எண் - 63827 81951 

----------------------------------------------------------------------------------------------------- 

எழுத்தாளருக்குச் செய்யும் ஆகப்பெரிய மரியாதை

அவரது நூல்களை விலைகொடுத்து வாங்கி

படித்து, விமர்சனம் செய்வதுதான் அல்லவா?

--------------------------------------------------------------------------------------------

இரண்டு நூல்களிலம் இரண்டு மூன்று செட் வாங்கி 

உங்கள் நண்பர்களுக்கும் தந்து மகிழ வேண்டுகிறேன்.

நீலாவை அறிந்தவர்கள், தமுஎகச தோழர்கள்

ஆங்காங்கே அறிமுகக் கூட்டங்கள் நடத்தலாம்

நூல் விமர்சனமும் எழுதலாம்.

---------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக