(நன்றி- இந்து தமிழ் நாளிதழ் - 2023, நவ.28 ) |
மேன்மேலும் தவறு செய்யாதீர்!
தவறாமல் – தவிராமல்
அழைப்பிதழில்
“தவறாமல் வருகை தர” கேட்டுக் கொள்கிறார்கள்! “வருவதைத் தவிர்த்து விடாமல்- தவிர்க்காமல்-
தவிராமல்- வந்துவிட வேண்டுகிறோம்” என்னும்
பொருளில்தான் “தவறாமல்” எனும் சொல்லில் அழைக்கிறார்கள். ஆனாலும் இது சரியான சொல் அன்று.
அழைப்பதை
ஏற்று வருவதில் தவறு, தப்பு ஏதும் உள்ளதா என்ன? எனவே, தவிராமல் (அ) தவிர்க்காமல் வருகைதர
அழைப்பதே சரி.
ஏற்கனவே – ஏற்கெனவே
ஒரு
திரைப்படத்தில் வரும் “எனக்கென ஏற்கெனவே பிறந்தவள்” வரிகளைக் கவிஞர் வைரமுத்து
சரியாகவே எழுதி, பாடியவரும் சரியாகவே பாடியிருந்தும், இணையத்தில் வழக்கம்போல, ‘ஏற்கனவே’
(Erkanave) என்றே உள்ளது! மின்னூலாகவும் கிடைக்கும் ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு நாவலும்
கூட “ஏற்கனவே” என்றே வந்துள்ளன!
இச்சொல், ‘க்ரியா’வின் ‘தற்காலத் தமிழ்
அகராதி’யிலும் கூட (பக்256/அக்-2020) இடம் பெற்றுவிட்டது! ஆனால், ‘முன் சொன்னதற்கு
ஏற்க-எனவே’எனும் பொருள்தரும் இதற்கு,
“ஏற்கெனவே” (முன்னதாகவே -Already ) என்பதுதான் சரியான பொருள் தரும் சொல்!
மெள்ள – மெல்ல
‘மெல்ல
- எனும் சொல், ‘மென்மை’ எனும் பண்பு குறித்த சொல். மெல்லிசை, மெல்லினம் போலும் சொற்களாக எழுத்து மொழியிலும்,
‘மெல்லிசு’ போலப் பேச்சு வழக்கிலும் வரும்.
இதை
‘மெள்ள’ என்றும் சிலர் எழுதுகிறார்கள்! ஆனால், ‘மெள்ள’ எனும் சொல்லுக்கு மென்மை என்றோ,
மெதுவாக எனும் பொருளிலோ வேர்ச்சொல் ஏதும் இல்லை! கம்பரும் “அருந்தும் மெல் அடகு” என்னும்
வரியில், லகர ஒற்றையே பயன் படுத்துகிறார்!
தமிழறிஞர்
பலரை உருவாக்கிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த தமிழறிஞர் நீ.கந்தசாமி அவர்களின்
நூலை மேற்கோளிட்டு, ‘மெல்ல’ எனும் சொல், பழந்தமிழில் – மென்மை எனும் பொருளில் - வந்துள்ள
சொற்களின் பட்டியலைத் தருகிறார் தமிழறிஞர் நா.கணேசன் (கூகுள்குழு உரையாடல்). அவர்,
“மெல்ல எனும் சொல், வழக்கில் ‘மெள்ள’ என மருவியிருக்கலாம்“
என்றும் சொல்கிறார்.
இதுபோல
“சங்கத் தமிழ் தேடு” செயலியில், “மெல்“ என இட்டால் சங்க இலக்கிய நூல்களில் மட்டும்
97இடங்களில் மென்மை பொருளில் வந்துள்ள பட்டியல் கிடைக்கிறது. ‘மெள்ள’ ஒன்று கூட இல்லை!
எனவே
‘மெல்ல’ எனும் சொல்லே மென்மை, மெதுவாக எனும் பொருள்களில் வரும் சொல் என்றும், ‘மெள்ள’
எனும் சொல், வழக்கில் மருவி, தவறாகப் புழங்குவதாகவும்
கொள்ளலாம்.
மேன்மேலும் தவறு செய்யாதீர்!
தொடர்ந்து தவறு செய்பவரை,
“மென்மேலும் தவறு செய்கிறார்” என்கிறார்கள். ஆனால் அவர்போல இதுவும் தவறே! மேலும் மேலும் தவறு செய்வதை
‘மேன்மேலும்’ என்றுதான் சொல்ல முடியும்.
முதலில்
வரும் மேல் எனும் சொல், மெல் என மாறுவது வழக்கில் நடக்கும் தவறு! இது எழுத்திலும் தொடர்வதோடு,
பல அகரமுதலி (அகராதி)களிலும் ஏறிவிட்டதால் இதைப் பற்றிச் சொல்ல நேர்கிறது.
அன்புடன்
வேண்டுகிறேன், ‘மேன்மேலும்’ என்னும் சொல்லை, ‘மென்மேலும்’ என்று எழுதி, மேலும் மேலும்
தவறு செய்ய வேண்டாமே?!
------------------------------------------------------------------
ஐயா, வணக்கம்.
பதிலளிநீக்குஇன்றைய தமிழ் இனிது பகுதியில் இடம் பெற்றிருந்த தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாய் அமைந்திருந்தது.
பாராட்டுக்கு நன்றி. ஆனால் இப்படிப் பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி வேறு சொற்குழப்பம் பற்றிய உங்கள் கருத்துகளையும் தரலாமே
நீக்குமிகச்சிறப்பு தோழர்.
பதிலளிநீக்குநன்றி நண்பா
நீக்குசொல் தேர்வு சிறப்பு.அய்யா. பேச்சு மொழியில் சொல் சிதைவுகள் தவிர்க்கவியலாது. இருப்பினும் தங்கள் கருத்துரைகள் போன்ற பணியினால் தான் மொழியைக் காத்திடமுடியும். எனவே தங்கள் பணி போற்றுதற்கு உரியது.
பதிலளிநீக்குநன்றியும் வணக்கமும் அய்யா. உங்கள் மாணவரிடம் நீங்கள் கண்ட சொற்குழப்பம் பற்றிய பட்டியலைத் தருக பேராசிரியரே
நீக்குஇயலும்வரை எழுதுவோம்
மிகவும் பயனுள்ள தொடர்
பதிலளிநீக்குநன்றியும் வணக்கமும்
நீக்குதங்களைப் பற்றி அறியத் தாருங்களேன்
ஆகா! ஆகா!! அத்தனையும் தங்கள் பெயரின் முன்பகுதி போலவே இருக்கின்றன ஐயா!!
பதிலளிநீக்குஏற்கெனவே பற்றி எழுதியமைக்கு நன்றி!
தவறாமல் / தவிராமல் - புதுமை! ஆனால் தவறாமல் என்பது வருகைக்கு மட்டும் குறிப்பிடப்படுவதில்லையே ஐயா! தவறாமல் செய்து விடுங்கள் என்கிறோம், தவறாமல் நீதிமன்றத்தில் நேர்நிற்க அறிவிக்கிறோம், தவறாமல் இருக்க நினைவூட்டுகிறோம் - மையப்பொருள் ஒன்றே எனினும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் சொன்ன பிறகுதான் இது ஒருவேளை, ‘Don't fail to’ எனும் ஆங்கில வழக்கத்திலிருந்து வந்திருக்குமோ எனத் தோன்றுகிறது. இன்னும் சிந்திக்க நேரம் வேண்டும்!
மெள்ள என்பது பலரும் செய்யும் தவறு. ஆனால் என் பட்டியலில் நான் விட்டுவிட்டேன். இதோ சேர்த்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!
‘மேலும் மேலும் என்பதுதானே மேன்மேலும்? எனில் மென்மேலும் என்பது தவறாயிற்றே’ என நினைத்து நான் எழுத வந்த புதிதில் மேன்மேலும் எனச் சரியாகத்தான் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் போகப் போக ஏதோ குழப்பத்தில் மெல்ல மெல்ல நானும் மென்மேலுமுக்கு மாறி விட்டேன். திருத்தம் வழங்கியமைக்கு நனி நன்றி!
வணக்கம் நண்பர் இபுஞா.
நீக்குதங்களுக்கான பதிலும் கீழுள்ள திரு ரவிகுமார் அவர்களுக்கான பதிலும் ஒன்றாகவே இருப்பதால் அதைப் பார்க்க வேண்டுகிறேன்.
ஏற்கெனவே சொல் நீங்கள் ஏற்கெனவே சொன்னதுதான் எனவே நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நன்றியுடன், வேறுசில சொற்களைப் பற்றியும் சொல்ல வேண்டுகிறேன்
இந்தச் சிறுவனை மதித்து மீண்டும் மீண்டும் ஆலோசனை செய்யும் உங்கள் பெருந்தன்மையை என்ன சொல்ல! கண்டிப்பாய் என்னாலான உதவியைச் செய்கிறேன் ஐயா!
நீக்குஐயா, வணக்கம்.
பதிலளிநீக்குஒரு செயலை செய்யாமல் இருந்துவிட்டேன் என்பதை
ஒரு செயலை செய்யத் தவறிவிட்டேன் என்று கூறுவது உண்டு. அப்படி தவறி இருந்துவிடாமல், கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பதைத்தானே ‘தவறாமல் வரவும்’ என்று கூறுகிறோம். இது தவறா?
திரு எஸ்.ரவிகுமார் அவர்களுக்கு, வணக்கம்.
நீக்குதங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி.
நடைமுறையில் வந்துவிட்டதால் “தவறாமல் வருக” என்பது தவறு என்று ஒதுக்கிவிட முடியாதுதான்.
ஆனால், நடைமுறையில் வந்து விட்டதாலேயே அதற்குரிய சரியான சொல்லைத் தெரிந்து கொள்ளாமலே இருந்துவிடக் கூடாதல்லவா?
ஆங்கிலக் கல்வி வளர்ந்திருக்கும் இன்றைய சூழலில், ஆங்கில வழியாகவே நமது புதிய தமிழ்த் தொடர்களும் உருவாகி வருவதை நம்மில் பலரும் உணர்வதில்லை. உதாரணமாக - அரசுச் செயலர்களின் -அதிகாரிகளின்- சுற்றறிக்கைகள் முழுவதும் “கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்” என்றே முடிவதை அறிவீர்கள். கேட்டுக் கொள்கிறோம் என்றல்லவா அத்தொடர் வரவேண்டும்! இதைத்தான் அதிகார மொழி என்பார்கள்.
அது இப்போது “பக்த கோடிகள் அனைவரும் வந்திருந்து அம்மன் அருள் பெறக் கேட்டுக் கொள்ளப் படுகிறது” என்பதாக நீள்கிறது!
இந்த வகையன்றி, நேரடித் தமிழ் மரபுச் சொற்கள் இருந்தன - இருக்கின்றன - என்பதை உணர்த்தும் ஒரு வகைதான் இதுவும்.
தவறாமல் வரவும் எனில், தவறிப்போய் வருவதும் உண்டா என்ன?
இதுவும் அல்லாமல், “தவறாமல் வருக” என்பதே You are cordially invited / Pls come without fail' என்பதன் தமிழாக்கம; என்றே எனக்குப் படுகிறது.
தமிழ் மரபில், எதிர்ச் சொல்லுடன் கூடிய அழைப்பு வருவதில்லை என்பதையும் சேர்த்து சிந்தித்தால் நான் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியும்
“காதலற் பிரியாமல் கவவுக் கை நெகிழாமல் வாழ்க” என்று கண்ணகியை எதிர்ச்சொல் கொண்டு வாழ்த்தியதே முன்னுணர்த்தும் கதை உத்தி அன்றி, பொதுவாக மண மக்களைத் தமிழர் திருமணங்களில் வாழ்த்துவதில்லை அல்லவா?
இது பற்றி நீங்களும் சிந்திக்க வேண்டுகிறேன்.
எனினும் உங்கள் கேள்வி ஒரு நல்ல கேள்வி என்பதால் தங்களைப் பெரிதும் மதிக்கிறேன்.
கடந்த 6மாதமாக வந்துகொண்டிருக்கும் எனது மற்ற கட்டுரைகள் பற்றியும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ஆகா! அருமையான விளக்கம் ஐயா! இப்பொழுது புரிகிறது. நான் நினைத்தபடியே இது ஆங்கில மரபுத் தாக்கம்தான் என்பதையும் உறுதிப்படுத்தினீர்கள். ஆனால் அத்தோடு நில்லாமல் இதற்காகச் சிலப்பதிகாரம் வரை எடுத்துக்காட்டிய தங்கள் புலமையும் நினைவாற்றலும் நாங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியவை. மிக்க மகிழ்ச்சி ஐயா! மிகவும் நன்றி!
நீக்குமென்மேலும் என்று தொடர்ந்து தவறு செய்யாமல் மேன்மேலும் என்று எமை திருத்திய தங்கள் தமிழுக்கு நன்றி.
பதிலளிநீக்குதமிழை பிழையின்றி மேன்மேலும் எழுதப்படிக்க பதிவுசெய்யும் அய்யா அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குஆகா... நன்றி
நீக்குமென்மேலும் தொடர வேண்டும் ஐயா...
பதிலளிநீக்குபுரிந்து விட்டது.
நீக்குகட்டுரையை இன்னும் படிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் போல?
படித்துவிட்டுக் கருத்திட வேண்டுகிறேன்
மேன்மேலும் எழுதுங்கள்
மேன்மேலும் தான் தொடர்கிறேன்...
நீக்குவாய்வழி தட்டச்சு தவறாகி விட்டதை மின்னஞ்சல் மூலம் தெரிந்தது...