தமிழ் இனிது-25


(நன்றி - இந்து தமிழ் -05-12-'23)

சம்மந்தி – சம்பந்தி

திருமண உறவால் இரண்டு குடும்பங்கள் இணைவதே சம்பந்தம். புதிய உறவின் குடும்பத் தலைவர்கள் சம்பந்தி ஆகின்றனர். சமமான பந்தம் (உறவு)- சம பந்தம் - சம்பந்தம் ஆனது. ‘மருமகனின் / மருமகளின் பெற்றோர்“ எனும்  பொருள் தரும் சொல் இது. “சமன் செய்து“(குறள்-118), “சரிநிகர் சமானம்“-பாரதி, “சமச்சீர்க் கல்வி“ போல, சம்பந்தியும் –ஏற்றத் தாழ்வில்லாத- சமத்துவம் கருதிய சொல்லே.   

இரண்டு முழங்காலையும் சமமாக மடக்கி அமர்வது சம்மணம். (ச(ம்)மணர் இவ்வாறே அமர்வர்). பந்தி எனில் விருந்து வரிசை.  ஊரார் இதனை “கொண்டான் - கொடுத்தான்” என்றே சொல்கிறார்கள்!

கம்பு எனும் சிறுதானியக்
கூழ் -கம்பங்கூழ்- கம்மங்கூழ் ஆனது போல, ப,ம இனஎழுத்துகள் மயங்கி ஒலிக்கும் மயங்கொலிச் சொல்லே சம்மந்தி என்பது.  எனவே, சம்பந்தி சொல்லே பொருளோடு வாழட்டும்!  

அறுவெறுப்பும் –கண்றாவியும் !

அருவரு என்றால் வெறுத்து ஒதுக்குதல் என்று பொருள். அராவுதல்- அருவுதல். இன்னது என்னும் தெளிவு இல்லாமல், உடலை/மனத்தை (அ)ராவுதல் அருவுதல்- அருவருப்பு. கண்ணை வருத்தும் காட்சியை  கண்ணை (அ)ராவுதல் –உரசுதல் - கண்ணராவி என்போம்! (கண்றாவி அல்ல!) அருவருப்பாக உணர்தலை அருவருப்பு என்பதே சரி. என்ன தான்  வெறுப்பாக இருந்தாலும்,  அருவெறுப்பு என்பது பிழையான சொல்லே.

உடன்பாடும்  உடம்பாடும்

கூட்டணிக் கட்சிகளிடையே “உடன்பாடு ஏற்பட்டது” என்கிறார்கள்! இணையாத ஈரெழுத்துகள் இணைய, உடம்படு மெய் வரும் என்பது இலக்கணம். (நன்னூல்-162) உடம்படுத்தல் தான் சொல்!  

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை, குடங்கருள் பாம்போடு உடன் உறைந்த அற்று” (குறள்-890) என்கிறார் வள்ளுவர், ஆனால் இப்போது கடப்பாடு,  ஒருமைப்பாடு போல, உடன்பாடும் நிலைத்து விட்டது! நாமும் உடன்பாடு எனும் சொல்லோடு, உடன்பட வேண்டியதுதான்! 

நொடி வேறு, வினாடி வேறு!   

இயல்பாகக் கண் இமைக்கும் நேரமும், கைவிரலை நொடிக்கும்         -சொடுக்கும்- நேரமுமே ஒரு மாத்திரை எனும் கால அளவு என்பார் தொல்காப்பியர்  (‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை“- தொல்-07).கண்ணையும், விரலையும் எடுத்துக் காட்டாகச் சொன்னது ஏன் எனில், “காது கேளாதவர் புரிந்து கொள்ளக் கண் இமைப்பதையும், பார்வை அற்றவர் அறிந்து கொள்ளக் கை நொடித்தலையும் சொன்னார்” என்று திருச்சியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர், தமிழறிஞர் ஜோசப் விஜூ நயம்படச் சொல்வது சிறப்பு. ஆனால், தமிழ்க் கணக்கின்  அளவான         –அழகான?- நொடி என்பது இன்றைய உலகக் கணக்களவில் இல்லை!

நாழிகை பழந்தமிழ்க் கணக்கு. (அதனால்தான் “நாழியாச்சு” என்று பறக்கிறார்கள்!) தமிழ் எண்கள் மறைந்து, ரோம எண்களே வழக்கில் இருப்பதால் வணிகத்தில் இன்றியமையாத எண்களில் நொடிக் கணக்கு இப்போது வழக்கில் இல்லை!

60வினாடி ஒரு நிமிடம். ஒரு வினாடிக்கு 24நொடி! நொடியும்,  வினாடியும் வேறு வேறு!  வினாடி/விநாடி என்பன வடமொழி! நிமிட(minute) கணக்கை மணித்துளி என்கிறோம், நொடியை வினாடி என்கிறோம், அப்படித்தான் அகராதிகளும் சொல்கின்றன!  வாழ்க்கைக் கணக்கில், தமிழ்க் கணக்கு மாறியதை யார் அறிவார்?  

----------------------------------------------------------------------- 

9 கருத்துகள்:

  1. சம்பந்தியோடு உடன்பட்டு வினாடி நொடியறியவைத்த அம்மாவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. அருமை. அனைத்தும் பயனுடைய தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  3. தமிழ் பல மொழிகளை ஈன்றெடுத்த தாய்
    திராவிட மொழிகள் மூத்த மொழி தங்களின் திறனாய்வு
    என்பது தேடல், வாசிப்பு ஒப்பீடு, மதிப்பீடு திறன்களை உள்ளடக்கிய எழுத்தராகப் பிறிதொரு பனுவல்
    தெளிதல் அடிப்படையில் மொழி சொல்லாடல் எடுத்துரைப்பது வியப்பாக உள்ளது.உங்களின் பணி
    மிக சிறப்பு அய்யா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமை ஐயா! சுவையான தகவல்கள்!!

    உடன்பாடு, உடன்படிக்கை எனவெல்லாம் சொற்கள் புழக்கத்துக்கு வந்து விட்டன. ஆனால் இலக்கணப்படி இப்படி எழுதுவது தவறு என்பதை இப்பொழுதுதான் அறிகிறேன்! வியப்பாக இருக்கிறது!

    ‘சம்மந்தி’ எனும் சொல்லுக்கு கம்பங்கூழ் எனும் சொல்லின் மாறுதலை எடுத்துக்காட்டியது அழகு! சம்பந்தி வடமொழிச் சொல் என்பது நம்பிக்கை. அதைப் பற்றி நீங்கள் ஏதும் சொல்லாததால் அது தமிழ்ச் சொல்லே என்பது தங்கள் முடிவு என்பதாக எடுத்துக் கொள்ளலாமா? ‘சமம்’ தமிழ்ச் சொல்லாகப் பல காலமாய்ப் புழங்கி வருகிறது. சமையல், சந்திப்பு, சந்தி எனச் ‘சம்’ எனும் வேரில் தொடங்கும் பல சொற்கள் ‘இணைதல்’ எனும் பொருளைக் குறிக்கும் வகையிலேயே வருகின்றன. இவை தமிழ்ச் சொற்களாக இருக்கலாம் என்பது சிறியேனின் கருத்து. போலவே ‘பந்தம்’ எனும் சொல்லும் ‘பற்று’ எனும் சொல்லின் அடிப்படையில் உருவானதே என்கிறார் நம் கண்ணபிரான் இரவிசங்கர் (கரச | Kryes) அவர்கள். இந்த அடிப்படைகளில் பார்க்கும்பொழுது சம்பந்தி என்பதும் தமிழ்ச் சொல்லாகவே இருக்கலாம் இல்லையா? தங்கள் விளக்கம் அறிய விழைவு!

    நொடி எனும் நல்ல தமிழ்ச்சொல் பெரும்பாலும் வழக்கில் இல்லை என்பதை அறிவேன். ஆனால் வினாடி வடமொழிச் சொல் என்பதை இப்பொழுதுதான் அறிகிறேன்.

    நொடிக்கான அளவுகோல்களாகக் கண், விரல் என இரண்டின் இயக்கங்களைத் தொல்காப்பியர் சுட்டியதற்கு ஜோசப் விஜு ஐயாவின் விளக்கம் அசத்தல்! இப்பேர்ப்பட்ட தமிழ் அறிஞர் எழுதுவதை நிறுத்தியது தமிழ்த்தாய்க்குப் பேரிழப்பு என்பதை அவர் உணர வேண்டும்! அன்னாரின் நினைவைத் தூண்டியமைக்கு நன்றி!

    நல்ல தகவல்கள்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  5. சம்பந்தி என்பதை சம் ‘மந்தி’ என அழைக்கிறார்கள் காரணமாகத் தான் இருக்குமோ😁

    பதிலளிநீக்கு
  6. தமிழாசிரியர் எப்போதும் நீங்கள்...

    பதிலளிநீக்கு