எது பெரும் பிழை?
ஆவண செய்வதா? – ஆவன செய்வதா?
அரசு அலுவலரிடம் ஒரு கோரிக்கையை
முன்வைத்து, ‘ஆவண’ செய்யுமாறு கேட்கிறார்கள். பதிலும் ‘ஆவண’ செய்வதாகவே வருகிறது!
‘ஆவணம்’ என்பதற்கு, நிலையான பதிவு (Document) என்பது பொருள்!
‘ஆவன’ என்பதே, ‘ஆக வேண்டியன’ என்னும் பொருள்தரும் சொல். இதுபோலும் சொற்களைப்
பற்றி, தமிழ் வளர்ச்சித் துறையினர், மாவட்டம் தோறும், ஆண்டுதோறும் அரசு
ஊழியர்களுக்குப் பயிற்சி தருகிறார்கள். ஆனாலும், ஒப்பமிடும் அரசு உயர்அலுவலர்
அதைப் பார்த்துத் திருத்தினால்தான் மற்றவர்களும் திருத்தமாக எழுதுவார்கள். இதைச்
சரிசெய்ய, அரசு தான் ‘ஆவன’ செய்ய வேண்டும்.
ஆத்திச்சூடியா
ஆத்திசூடியா?
குழந்தைகளுக்கு எழுத்துகளை அறிமுகம்
செய்வது, கல்வியின் தொடக்கம். ஔவையாரின் “ஆத்திசூடி“, புகழ் பெற்ற சிறுநூல். இந்த
வடிவ நூல்கள் அவ்வப்போது தமிழில் வந்துகொண்டே இருக்கின்றன! (ஆத்திசூடியின்
முதல்தொடர் –அறம்செய விரும்பு! அறத்தின் வடிவமான குழந்தைகளுக்கு, அறத்தைப் பற்றி
விளக்க முடியுமா என்பது வேறு!)
ஆனால், இன்றைய இணையத் தமிழில், ஆத்திசூடி படும்பாடு, பெரும்பாடு!
ஆமாம்! பிறகு, “ஆத்திச்சூடி“ என்று எழுத்துப் பிழையோடு, கல்வி
தொடங்கினால்? அது விளங்குமா?
’ஆத்திச்சூடி’ செயலிகள்(Aaps) சிலவும்(!) இருக்கின்றன! ’இன்ஸ்டா’,
’யூட்யூப்’, முகநூல், புலனம் போலும் இணைய ஊடகங்களில் ‘ஆத்திச்சூடி’ என்றே பலரும்
எழுதுகிறார்கள்! இதைப் பார்த்து, “இணையத்தில் தமிழ் ஔவையா! அடடா“ என்று
மகிழ்வதா? “நான் எழுதிய ஆத்திசூடியை எழுத்துப் பிழையுடன் எழுதுகிறாயா?” என்று
-கையில் கம்போடு- உருட்டி விழிக்கும் ஔவையைப் பார்த்து அஞ்சுவதா?!
“நன்மை கடைப்பிடி” என்னும் ஆத்திசூடிக்கு, “நல்லவற்றைப் பின்பற்று”
என்று பொருள். ஆனால் ‘விக்கிப்பீடியா’வில் “கடைபிடி” என்று உள்ளதைப் பார்த்தோ
என்னவோ, நமது இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலிலும் அவ்வாறே உள்ளது! இதற்கு,
‘கடையைப் பிடி’ என்று பொருளாகும்! விக்கிப்பீடியரும், பாடநூல் எழுதியவரும், அடுத்த
முறை திருத்திவிட அன்போடு வேண்டுகிறேன்.
வாய்ப்பாடும் வாய்பாடும்
‘வாய்பாடு’ வாயால் சொல்லிச் சொல்லி,
மனப்பாடமாகக் கற்பது. கணித, அறிவியல், வாய்பாடுகளை ஆங்கிலத்தில் ‘Formula’
என்பர். கணக்கு வகுப்பில், வாய்பாடு சொல்லத் தெரியாமல், வாங்கிய பிரம்படியை,
எழுபது வயதிலும் மறக்காதவர் இன்றும் உண்டு!
‘கணக்கி’ (Calculator) வந்தபின், ஐந்தையும் பதினொன்றையும் பெருக்க, கணக்கியைத் தேடுகிறாள் ஆறாம் வகுப்புக் கலைவாணி! ‘மனப்பாடம் மட்டுமே கல்வியல்ல’ என்பது, எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, ‘மனப்பாடம் இல்லாமலும் கல்வியில்லை’ என்பதும்! இப்போது வாய்பாடு எனும் அந்தச் சொல்லும் ‘வாய்ப்பாடு’ என்று பிழையாகவே புழங்குகிறது! வாயால் இசைக்கப்படும் வாய்ப்பாட்டின் ‘பக்க –வாத்திய- விளைவாக’த்தான் வாய்ப்பாடு வந்திருக்குமோ?!
பிழைத்திருத்தமா?
பிழைதிருத்தமா?
பேச்சில் பிழைநேர்ந்தால் ‘வாய்தவறி வந்துவிட்டது’
என்கிறோம். எழுத்தில் பிழை நேர்ந்தால், திருத்தம் செய்து கொள்கிறோம். கை /வாயின்
வேகத்துக்கும் மன வேகத்துக்குமான இடைவெளியே எழுத்து /பேச்சில் நேரும் பிழை என்றும்
சொல்லலாம். ஆனால், அந்தப் பிழையைத் திருத்த, முயற்சிகூடச் செய்யாமல் இருப்பதுதான்
பெரும் பிழை!
பிழையைத் திருத்திக் கொள்வதில் ‘பிழை திருத்தம்’ செய்வதில் பிழையில்லை!
‘பிழைத்திருத்தம்’ என்று எழுதுவது தான் பெரும்பிழை!
---------------------------------
--------நன்றி - இந்து தமிழ் -19-12-2023)--------
(பதிவிட்டது - 19-12-2023 மாலை 5.45)
-------------------------
மிகவும் அருமை..தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன்...💐💐
பதிலளிநீக்குஎனது தளத்திற்குத் தங்களின்
நீக்குமுதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே
பிழைதிருத்தி பிழைக்கவைப்போம் தமிழை
பதிலளிநீக்குநன்றி தோழர் பார்த்தா. (ஆனால், நீங்கள் மருத்துவ மனையில் 'பிழைக்க வைப்பது“ போல நினைத்து எழுதினாலும் பிழைக்க வைப்போம எனில் பிழைபடச் செய்வோம் என்றும் ஒரு பொருள் வரும். இந்தச் சந்தேகமும் இல்லாமல் தொடர் அமைக்க வேண்டுகிறேன். )
நீக்குவழக்கம் போலவே அருமையான பரிந்துரைகள் ஐயா! 'வாய்பாடு' என்பதை நானும் தவறாகத்தான் எழுதி வந்தேன், 'இலக்கணம் இனிது' படிக்கும் வரை. அதில் இருந்த திருத்தச் சொற்கள் பட்டியல் பார்த்து உண்மை உணர்ந்தேன். பிழை திருத்தம் என்பதில் எனக்கும் குழப்பம் இருந்தது. அதையும் இலக்கணம் இனிதுதான் தீர்த்தது. ஆனாலும் இந்தத் திருத்தங்கள் நினைவில் நிற்குமா எனும் கவலையும் கூடவே இருந்தது. இப்பொழுது தமிழ் இனிது தந்த நினைவூட்டலால் பயன் இருக்கும் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குநினைவு படுத்துமாறு தொடர்ந்து புழங்குவது தானே மொழி உயிர் வாழும் ரகசியம்?
நீக்குஇதுவரை நானும் ஆவண என்றுதான் எழுதிக் குறிப்பிட்டு வந்துள்ளேன். ஆவணம் என்பது டாக்குமெண்ட் என்பதை நானும் அறிவேன்.. ஆனால் ஆவண என்பது ஆக வேண்டியவை ஆக வேண்டியவற்றைச் செய்யுங்கள் என்ற பொருளில்தான் நான் இதுவரை ண பயன்படுத்தி வந்திருக்கிறேன். அய்யா. தாங்கள் இதைக்குறிப்பிட்டு வெளியிட்ட பிறகும் எனது சந்தேகம் தீரவில்லை. காரணம் என்னவென்றால் ஆவண என்பது ஆக வேண்டியவை என்ற வகையில் சிந்தித்துக் கொண்டிருப்பதுதான் அய்யா. ஆக வேண்டியவை என்பதற்கு ஆவன என்று வருமா என்பதிலும் நான் இன்னும் முடிவுக்கு வர முடியவில்லை....இப்படிக்கு ம.மு.கண்ணன் ஊடகவியலாளர்.
பதிலளிநீக்குவிரிவாக எழுத இதழ்ப் பத்தி இடம் தரவில்லை.
நீக்குஇப்படிச் சொல்லிப் பாருங்களேன் - “ஆகுவன” என்னும் சொல்லின் வழக்குச் சுருக்கமாகவே “ஆ(கு)வன” வந்திருக்கிறது. போ(க)ட்டும் - ஆ(க)ட்டும் ...வழக்குப் போல ஆ(கு)வன..வழக்கிலிருந்து எழுத்துக்கு. சரியா?
ஆவணம் ஆவனம் என்னை குழப்பி யது உண்டு ஐயா. நூலாக வெளியிடுங்கள். பலருக்கும் பயனுள்ளதாக அமையும். நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பா. நாளிதழில் வரும் தொடர் எல்லாம் நாளிதழ் வெளியீடாகவே வரும்
நீக்குஆவண பிழைதிருத்தி ஆவன செய்த அன்புத் தோழருக்கு நன்றி மேலும் இவண் அவ்வண்ணமே இங்ஙனம் போன்ற சொற்களும் சரிதானா என்ற எனது ஐய்யத்தைெ தெளிவுபடுத்தவும்
பதிலளிநீக்குநன்றி நண்பா. இவண்(இவ்வண்ணம்), இங்ஙனம் (இவ்வாறு) என வரும் பட்டியலில் வைத்துக் கொள்கிறேன்.
நீக்குஅருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் “மொக்க” போடக் கூடாது! புரியிது, புரியலன்னாவது எழுதலாம் ல?
நீக்குஅருமை. எது சரியான சொல் என்பதை இறுதியில் "நேரடியாக" குறிப்பிடவும். ( எ.க. ஆத்திசூடி-சரி, ஆத்திச்சூடி-தவறு)- தியாகராஜன்,சேலம்
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி நண்பரே. ஆனால்...
நீக்குஅதை மட்டும் சொல்லிவிட்டுப் போக எனது விளக்கங்கள் எதற்கு? விளக்கம் சரியாகப் புரியும்படியாக இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? விளங்க வில்லையே! அப்படி இதுசரி, இது தவறு என்று மட்டும் பட்டியல் தரும் தளங்கள் ஏராளம் இருக்கின்றனவே!
ச் ப் த் பிழை திருத்த பதிவுக்கும் படிக்க வாய்ப்பு வழங்கியமைக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்குநன்றி நண்பரே. க் ச் ட் விடுபடுவதை மட்டும் விளக்கினால் போதாது என்றுதான் இதுபோல் சொற்களைச் சொல்லி விளக்கி வருகிறேன்.
நீக்கு‘கணக்கி’ (Calculator) - கணிப்பான் என்று சொல்லலாமா ஐயா ?
பதிலளிநீக்குவலைச்சித்தரே, கணிப்பான் என்றுதான் தொடக்க காலக் கணினிமொழியில் சொல்லி வந்தார்கள். அதைவிட எளிதாக வித்தியாசமாக இருப்பதாகப் புழக்கத்தில் வந்தது. அது கணினி இது கணக்கி நல்லா இருக்கில்ல..? இல்லையா?
நீக்குஅருமையான பதிவு ...ஐயா
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நீக்குஅடுத்த முறை உங்கள் பெயரையும் போடுங்கள்
முத்தமிழனே நீ வாழி நீடு.
பதிலளிநீக்கு