அஞ்சலகத்தில் கங்கை நீர் விற்பனை! - சில முக்கியக் குறிப்புகள்...


முதலில் தந்தி தொலைக்காட்சியின் இந்த விவாதத்தைப் பாருங்கள் –
(நான்கு இணைப்புகள் அடுத்தடுத்து வருவதைக் கவனிக்க)

இனி, இந்தச் செய்தியைப் படியுங்கள் –
புனித கங்கை நீர் விற்பனை திட்டத்தின்படி, அந்த நீர் அஞ்சல் அலுவலகங்களில் அமோக விற்பனையாகியது.
ரிஷிகேஷ், கங்கோத்ரி ஆகிய இரு இடங்களிலிருந்து கங்கை நீர் பெறப்படுகிறது. அங்கு சென்று தரிசிக்க முடியாதவர்கள் நீரை பெறும் விதமாக, அஞ்சல் அலுவலகங்களில் புனித கங்கை நீர் விற்பனையை பாட்னாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், மனோஜ் சின்ஹா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
உத்தரகண்ட் அஞ்சல் ஊழியர்கள் பாட்டிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு, நாடு முழுவதும் அனுப்பி வைக்கின்றனர். இதில், ரிஷிகேஷ் நீர் 200 மி.லி. அளவு ரூ.15-க்கும், 500 மி.லி. அளவு ரூ.22-க்கும், கங்கோத்ரி நீர் 200 மி.லி. பாட்டில் ரூ.25-க்கும், 500 மி.லி. பாட்டில் ரூ.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 7 இடங்களில்...: தமிழகத்தில், முதல்கட்டமாக திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, தருமபுரி, ஈரோடு ஆகிய 7 தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலை, ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆனால், சில நிமிடங்களிலேயே அனைத்து கங்கை நீர் பாட்டில்களும் விற்றுத் தீர்ந்தன.
இதுகுறித்து சென்னை மாநகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலேக்சாண்டர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 94 தலைமை தபால் அலுவலகத்திலும் கங்கை நீர் விற்பனை செய்யப்பட உள்ளது என்றார்.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணராஜன், ரஞ்சனா தேவி கூறுகையில், “கங்கை நீரில் புனித நீராடுவது இந்து மக்களிடையே பாரம்பரியமிக்க ஒன்றாக இருந்து வருகிறது. அதோடு, அனைவராலும் கங்கைக்கு சென்று வர முடியாதுஇதற்காக, அஞ்சல் அலுவலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை செய்யப்படுவதை வரவேற்கத்தக்கது“ என்றனர் – (தினமணி-13-07-2016) 


இப்போது, அய்யா சுப.வீரபாண்டியன் அவர்களின் இந்தப் பதிவைப் படியுங்கள் -
மதவெறி வளர்க்கும் மத்திய அரசு!
"வாடிப் போகாத பூவும் இல்லை 
மோடி போகாத நாடும் இல்லை"  - என்று அண்மையில் கட்சேவி ஊடகத்தில் (வாட்ஸ் அப்) ஒரு பதிவைப் பார்த்தேன். உண்மைதான். மோடி அரசில் இரண்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒன்று, பிரதமரின் வெளிநாட்டுப் பயணம். இன்னொன்று, இந்துத்துவத் திணிப்பு!
ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில் தொடர்ந்து நடைபோடும் இன்றைய பா,ஜ,க. அரசு,  கங்கை ஆற்றின் தண்ணீரை விற்பனை செய்யும் பணியை இப்போது  அஞ்சலகத்திற்குக் கொடுத்துள்ளது. இந்திய அஞ்சல் துறை ஏறத்தாழத் தன் இறுதி மூச்சை விட்டுக் கொண்டுள்ளது. அஞ்சல் துறை மிகப் பெரிதும் தனியார் வயம் சென்றுவிட்டது. உடனடியாகக் கடிதம் செல்ல வேண்டுமானால், தூதஞ்சல் (கூரியர்), எப்போது வேண்டுமானாலும் சென்றால் குற்றமில்லை என்றால் அரசின் அஞ்சல் துறை என்ற நிலையே இன்று உள்ளது. 
அஞ்சல் துறையில் கடிதங்களைப்  பிரிக்கும் பகுதி (sorting section) இப்போது இல்லை. அதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துவிட்டனர்.  அதன் விளைவாகக் கடிதங்கள் காலம் தாழ்ந்து போய்ச் சேருவதால் பொது  மக்களுக்கும் ஒரு சலிப்பு. இவைகளையெல்லாம் சரி செய்யாமல், கங்கை நீர் விற்பனையை இன்று அவர்களின் பணியாக ஆக்கியிருப்பது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து!
கங்கை ஆறு புனிதமானதென்றால், இந்தியாவில் ஓடும் மற்ற ஆறுகள் எல்லாம் புனிதம் இல்லாதவைகளா? ஆறு என்றால் எல்லாம் ஆறுதான். இதில் ஒன்றைப் புனிதம் என்று கூறுவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைப்பதுதானே அரசின் நோக்கம்?
சரி, கங்கை ஆற்றில்தான் என்ன புனிதம் உள்ளது? 2525 கிலோமீட்டர் ஓடுகின்ற ஒரு மிக  நீளமான ஆறு அது. உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடங்கி, ஓரிரு மாநிலங்களைக் கடந்து பங்களா தேசத்திற்குப் போய், வங்காளக் குடாக்  கடலில் கலக்கின்ற ஆறுதான் கங்கை. இமாலய மலையிலிருந்து தோன்றி, ஓடி வருகிற ஆறு. 
நம்மில்  பலர் ரிஷிகேஷ் சென்றிருப்போம். அந்த ஆறு அங்கே ஓடி வருகிற அழகைப் பேரழகு என்றுதான் சொல்ல வேண்டும். அதில் ஒன்றும் மதம்  எல்லாம் இல்லை.  ஆற்றுக்கு ஏது மதம்? ஆற்றுக்கு ஏது கடவுள்? ரிஷிகேஷில் கங்கை ஓடி வருகிறபோது அந்தப் பாலத்திற்குத்தான் ராமர் பாலம், லக்ஷ்மன் பாலம் என்று இவர்கள் கடவுள் பெயர் வைத்திருக்கிறார்கள். ஹரித்துவாருக்கு வருகிற வரையில் ஆறு ஆறாகவே இருக்கிறது. ஹரித்துவாருக்கு வருகிறபோது கொஞ்சம் களங்கப்படுகிறது. வாரணாசிக்குப் (காசி) போனால் முடிந்து போயிற்று. பிணங்கள் இருப்பதற்கான ஒரு ஆறாக அது மாறிப் போய் விடுகிறது.
கங்கையைப் பற்றி இன்னொரு செய்தி! இந்து  மதச் சார்புடையோர் அதனைப் புனிதம் என்கின்றனர். ஆனால் அறிவியல் அந்த ஆற்றைப் பற்றி என்ன சொல்கிறது? ஆங்கிலத்தில் அந்த வரியை அப்படியே பார்க்கலாம் - "the most fifth polluted water in the world" என்று சொல்கிறது. உலகத்திலேயே மிகவும் மாசு படுத்தப்பட்டுப் போயிருக்கிற ஐந்தாவது ஆறு கங்கை. நம்மை மிஞ்சி நான்கு ஆறுகள்  இருக்கின்றன.
வாரணாசிப் பகுதியிலிருந்து கடலில் கலக்கின்ற வரைக்கும் 40 கோடி மக்களைத் தாண்டி அந்த ஆறு ஓடுகிறது. நாற்பது கோடி மக்களுக்கும் முடிந்தவரையில் எல்லா நோய்களையும் எடுத்துச் செல்கிறது. குறிப்பாக, 10 லட்சம் மக்கள் வாரணாசியில் அன்றாடப் பயன்பாடுகளுக்கு அந்த கங்கை ஆற்றை நம்பியுள்ளனர். வாரணாசியில் இரண்டு கரைகளிலும் வீடுகள். இந்தப் பக்கமெல்லாம் பிணத்தை எரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பக்கம் மக்கள் வாழ்கிறார்கள்.
காசிக்குப் போனவர்கள் எல்லோரும் ஒரு போத்தலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவார்கள். தெரியாமல் கூட குடித்து விடக் கூடாது. பொதுவாக அதனை யாருக்கு கொடுப்பார்கள் என்றால், இறந்துபோகிற நிலையில் இருப்பவனுக்கு கொடுப்பார்கள். கடைசியாக வழியனுப்புகிற விழா அது. அதைக் கொடுத்த உடனே முடிந்தது. அப்புறம் பிழைக்கவே மாட்டான்.
மனிதனின் கழிவிலிருந்து உற்பத்தியாகிற நோய்க் கிருமிகள் கங்கையில் உள்ளன. அது பொதுவாக ஆறுகளில் இருக்கும். ஆனால் அந்த அளவைக் காட்டிலும் 120 மடங்கு கங்கை ஆற்றில் கூடுதலாக இருக்கிறதாம். என்ன ஆவது? 
ஹைதராபாத்திலிருக்கிற அணுசக்தி தேசிய மையம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கங்கை ஆற்றைச் சுத்தப் படுத்தாமல் வைத்திருந்தால் இங்கே விரைவில் நாடு முழுவதும் புற்று நோய் பரவுமென்று கூறியுள்ளது. அதற்குப் பிறகுதான், உமாபாரதி அதற்கான அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ‘புனிதமான ஆற்றை புனிதப்படுத்துவதற்கு’ ஓர் அமைச்சகம்.  புனித ஆறு யாரையும் காப்பாற்ற வில்லை. புனித ஆற்றை அரசு காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
1985 ஆவது ஆண்டு மட்டும் உலக வாங்கி 2.2 கோடி டாலர் பணத்தை அதற்காகக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து உலக வங்கியும், உலக நிதி மையமும் பணத்தை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறார்கள். பணம் கரைந்து கொண்டே இருக்கிறது. ஆனால் கங்கை  சுத்தப்படவில்லை. பிணத்தை எரிப்பதை நிறுத்தினால்தானே அது சுத்தமாகும்? இன்றைக்கும் பிணத்தை எரித்து எரித்து  ஆற்றுக்குள் தள்ளிவிடும் ஒரு போக்கு நடைமுறையில் இருக்கிறது. இந்தப் புனித ஆற்றினுடைய நிலை இது.
இந்த ஆற்று நீரைத்தான் புனிதம் என்று சொல்லி இன்று அஞ்சல் நிலையங்களில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. இந்துக்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருப்போரின் நம்பிக்கை இப்போது போத்தல்களில் அடைக்கப்பட்டு எல்லோருக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசின் இந்தப் போக்கை மதச் சார்பற்றவர்கள் அனைவரும் ஒன்று கூடிக் கண்டிக்க வேண்டும்!

இவ்வாறு அய்யா சுப.வீ.அவர்கள் வலையில் எழுதியிருக்கிறார்
-------------------------------------------------------------------------------------------------- 
எங்களது “கணினித் தமிழ்ச்சங்கம்” காண்செவிக்குழுவில் வந்த செய்திகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் -
கங்கை நீரில் ஒரு தடவை முழ்கி எழுந்தாலே உங்களை புற்று நோய் தாக்கும்ஆதாரம்  http://www.vikatan.com/news/india/10838.art

2007 ஆண்டே கங்கை உலகின் ஐந்து மிகவும் மாசுபட்ட நதிகளில் ஒன்றாக உள்ளதாகவும், வாரணாசி ஆற்றில் மலையளவு நுண்கிருமி வகை நூற்றுக் கணக்கில் உள்ளதாக கூறப்பட்டது. இதை அதிகாரப்பூர்வமாக இந்திய அரசாங்கமும் இந்த அறிக்கையை ஏற்றது.  ஆதாரம்  --

கான்பூரில் உள்ள 100 மேற்பட்ட தொழிற்சாலை கழிவுகள் இங்கு தான் கலக்கிறது.!!  ஆதாரம்  --

கான்பூரில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 5 லட்சம் கிலோ கழிவு கங்கை நதியில் கலக்கிறது.!! ஆதாரம் --

சுவிஸ் அரசின் நிதி உதவியால் இப்புனித நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.  அந்த ஆய்வுதான் இந்த அதிர்ச்சியான தகவலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.  பயனியர் 27.7.1997.  டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (19.6.2003)  வேறு பல ஒழுக்கக் கேடான தகவல்களை வாரி வாரி இறைத்து இருந்தது.

இனி உங்கள் முடிவு ! உங்கள் பாட்டிலில் ச்சே!  முடிவில்!
-----------------------------------------------------

5 கருத்துகள்:

  1. இந்தியாவிலேயே நெ. 1 பயங்கரவாதி முத்துநிலவன்தான் என்று கங்கை நீரின் பேரில் சத்தியம் செய்யத் தயார். மக்களை இப்படியெல்லாம் பயமுறுத்துவதற்கு தடைச் சட்டம் ஏதும் கிடையாதா?

    பதிலளிநீக்கு
  2. ஒரு அரசு இப்படியெல்லாம் செயல்படுவது வேதனைதான்.

    பதிலளிநீக்கு
  3. "பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும் ஆரிய நாடு" என்று பாரதியார் பாரத தேவி திருத்த சாங்கத்தில் குறிப்பிடுகிறார். அது 1906 ஆம் ஆண்டு. பாரத தேவிக்கு நகரம் காசி. ஆறு கங்கை. மலை இமயம். வேதங்களே வெற்றி முரசு. தாஜ் மகாலும் எல்லோராவும் சரப சாஸ்திரியின் கையிலிருக்கும் புல்லங்குழலும் பாரதிக்கு ஆரிய சம்பத்து...
    - தொ ப எழுதியிருக்கும் இந்து தேசியம் என்ற நூலில் இருந்து

    பதிலளிநீக்கு
  4. இது குறித்து ,கடந்த 13ந தேதி என் தளத்தில் என் வாய்ஸ்>>>
    தபாலில் சாம்பல் சேவைத் தொடங்கலாமே :)
    ''தபால் நிலையங்களில் கங்கைத் தீர்த்தம் விற்பது புனிதமான காரியம் தானே ?''
    ''இன்னொரு புனிதமான காரியத்தையும் செய்யலாம் ...கங்கைக் கரைப் பிணங்களின் சாம்பல் , புனிதம் என்று அகோரிகள் உடம்பு முழுவதும் பூசிக் கொள்கிறார்களே,அதையும் தபாலில் விற்கலாம் !''

    பதிலளிநீக்கு
  5. போகின்ற போக்கை பார்த்தால் எல்லா தபால் நிலையங்களிலும், ஸ்டாம்ப், கவர் தவிர, மற்றபடி திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், அக்காரவடிசல், புளியோதரை,வடை எல்லாம் விற்பனைக்கு வந்துவிடும் போல் தெரிகிறது.
    தெரிகிறது.

    பதிலளிநீக்கு