தமிழ் இனிது (12) மருவியது மரூஉ (11)வேண்டா சொல் வேண்டாம்

நன்றி - தமிழ் இந்து -நாளிதழ் 

செவ்வாய் - திசைகாட்டி பகுதி

---------------------------------------------------------- 

தமிழ் இனிது (கட்டுரை -12) 

அதெப்படி மருவி வருகிறது?

நா.முத்துநிலவன் 

(15-8-2023 தமிழ்இந்து)

பிற்காலச் சோழர்கள் பரகேசரி ராஜகேசரி  என்றும், பாண்டியர்கள் ஜடாவர்மன், மாறவர்மன் என்றும் முன்னோர் பெயரில் பட்டம் சூட்டிக் கொண்ட வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. செட்டிநாட்டுப் பெரியோர் உள்ளிட்ட தமிழர் சிலரிடம் இவ்வழக்கம் இன்றும் உள்ளது. இதில் தந்தைவழிப் பெயர்கள்தான் இருக்கும். தாய்வழிச் சமூகத்தை மாற்றி, தந்தைவழிச் சமூகமாக நிலைநிறுத்திய ஆணரசியலும் இதிலுள்ளது.

இந்த வகையில் வந்ததுதான் தாத்தா பெயரைப் பெயரனுக்கும், அரிதாகப் பாட்டி பெயரைப் பெயர்த்திக்கும் வைக்கும் வழக்கம். பெயரைத் தாங்கியவன்/ள் என்று பொருள். பெயரோடு, ‘முன்னோர் பெருமையைத் தாங்கிய’ எனும் உட்பொருளும் உண்டு!

பேச்சுவழக்கில் பெயரன் பேரன் ஆனான்.  இதை இலக்கணத்தில் “மரூஉ” என்பர்.  பேச்சு வழக்கில் மருவி –மாறி- ஒலிப்பதே மரூஉ.   

இரு குறில் எழுத்துகளின் ஓசை, ஒரு நெடில் ஓசைக்குச் சமம். அ+அ=ஆ, இ+இ=ஈ முதலான இன எழுத்துகளின் தோற்றத்தை இந்த வழக்கில் வரும் ‘மரூஉ’ உணர்த்தி நிற்பது, தனி ஆய்வுக்குரியது.

 “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” (பெயரியல்-640) தொல்காப்பிய இலக்கணத்தின்படி, சொற்கள் மருவியதற்கும் வரலாறு இருக்கலாம்!  ஆய்வதும் புதிய பொருள்காண்பதும் ஆய்வாளர் கடன்.

பெயர்த்து – பேத்து  “பேத்துருவேன்“

வெயர்த்து – வேர்த்து  “வேர்த்து விறுவிறுத்து“

மிகுதி – மீதி  எஞ்சி நிற்பது

பகுதி – பாதி. பாதியை அரை என்பதே எழுத்து வழக்கு. அரையை,   -இடுப்பு எனும் பொருளில்- “புலித்தோலை அரைக்கசைத்து” என்கிறது சுந்தரர் தேவாரம். உடலின் கால் பகுதியைக் கால் என்றதும், உடலின் நடுவில் இடையில் உள்ள இடுப்பை அரை என்றதும் தமிழ் நுட்பம்!

இந்தப் பாதிப்பில், குறிலும் ஒற்றும் சேர்ந்து  நெடிலாவதும் உண்டு!

செய்தி – சேதி – “அப்பறம், வேறென்ன சேதி?“

பொழுது- போது, போழ்து. பொழுது சாயும் காலம் -சாய்ங்காலம், பொழுது சாயும்-நேரம் -சாயந்தரம் என்பன வழக்கு. இரவு, பகலைச் சந்திக்கும் விடிகாலைப் பொழுதே சந்தி, பகல் முடியும்  காலமே  அந்தி. “இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுது”-வைரமுத்து இப்போது-இப்பொழுது என்பன எழுத்து, இப்ப-என்பது வழக்கான மரூஉ.

உறவுப் பெயர்களில் மரூஉ

புதிதாக மணமாகி வந்தவள், ‘கணவரின் உடன்பிறந்தாளை எப்படி அழைப்பது?’ என்று விழிக்கிறாள், அதற்கு, ‘நாத்தூண் நங்கை’ என எடுத்துக் கொடுக்கிறார்,  இளங்கோவடிகள்! (சிலப்பதிகாரம்-கொலைக்களக் காதை- வரி-19) இதுவே பிறகு ‘நாத்தனார்’ என மருவியிருக்கலாம். இதிலும் ஒரு நுட்பம், நாற்று - இளம் பயிரை- பிடுங்கி வேறு வயலில் நடுவது வழக்கம். “இந்த வீட்டில் பிறந்து, வேறொரு வீட்டில் வாழப்போகும் பெண்” எனும் பொருளில் நாற்று-அன்னாள் –நாத்து-அன்னாள்– நாத்தனாள் - நாத்தனார் ! தமிழ் இனிக்கிறதல்லவா?

இதற்கு இணையான மற்றொரு சொல் ‘கொழுந்தியாள்’. ‘இவள், இந்த வீட்டில் துளிர்விட்ட கொழுந்து அன்னாள் -கொழுந்தனாள், கொழுந்தியாள்- மற்றொரு வீட்டிற்குப் போய்  வாழ்ந்து, பிள்ளைக் கனி தருவாள்’ எனும் பொருள்தான் எவ்வளவு சிறப்பு! ஆங்கில உறவுப் பெயர்கள் -in-law என்றே வருவதை ஒப்பிட்டு, சொல்லின் வரலாறு, தமிழ்ச் சமூக வரலாற்றைச்  சொல்வதைத் தனியே ஆய்வு செய்யலாம்.

-------------------------------------------------------------- 

                                        (நன்றி – தமிழ் இந்து – நாளிதழ் – 22-8-2023)
                                  ------------------------------------------------------------------------ 

தமிழ் இனிது - கட்டுரை - 11 - நா.முத்துநிலவன்

( தமிழ் இந்து -15-8-2023 )

வேண்டா சொல் வேண்டாம்! 

அருகில் – அருகாமையில்

            அருகில் என்பதே சரியான சொல். அருகண்மை எனும் ஒருபொருட் பன்மொழி, திரிந்து அருகாமை ஆகிவிட்டது, ஆனால் இது அருகு எனும் சொல்லுக்கு எதிரான பொருளையே தருகிறது. வழக்கில் உள்ளது என்பதாலேயே, சரியான சொல்லை விட்டுவிட்டு, நாம் தூரத்தில் நிற்க வேண்டாம்!  ‘அருகில்’ எனும் சொல்லையே  புழங்குவோமே!

எத்தனை – எத்துணை

எத்தனை – எண்ணைக் குறிக்கும். ”எத்தனை வயது?” எத்துணை – அளவைக் குறிக்கும். “எத்துணை வெள்ளம்?  “எத்துணையும் பேதமுறாது” -திருவருட்பா-5298. ஆனால், கால- வெள்ளத்தையே நுணுகி எண்ணும் இக்காலத்தில் “எத்துணை” எனும் சொல் வழக்கிழந்தது. “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” எனும் பட்டுக் கோட்டையார் தொடங்கி, “எத்தனை பேர் கூடி இழுத்தும் என்ன? சேரிக்குள் வரவில்லை தேர்” எனும் செ.ஆடலரசன் வரை,”எத்தனை“ என்பதே வழக்கில் உள்ளது.

எல்லாரும் - எல்லோரும் - எல்லீரும்

வள்ளுவர் “எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” என்கிறார்(125), கம்பர், “எல்லாரும்” என்கிறார் ( கம்ப ராமாயணம்-பால-நகரப் படலம்-167), இவ்வாறு முன்னரே, “எல்லாரும்” ”எல்லோரும்” இரண்டு வழக்கும் இருந்ததை, “ஆ ஓ ஆகலும் செய்யளில் உரித்தே”  (தொல்-680) என ஏற்கச் சொன்னார் தொல்காப்பியர்.  இப்போதும் இலக்கிய வழக்கில் இவ்விரண்டு சொற்களையுமே பாரதி பயன்படுத்தி எழுதியிருக்கிறார்.

‘எல்லாரும்’ எனும் சொல்லே மக்கள் வழக்கில் இப்போது உள்ளது.  ‘எல்லீர்’ எனும் சொல், பழந்தமிழில் இருந்ததாகத் தெரிகிறது.

கட்டிடம் – கட்டடம்

          “கட்டிடத் திறப்பு விழா” என்பது தவறு. கட்டும் இடமே கட்டிடம்-மனை(Plot/Site). கட்டி முடிக்கப்பட்டது கட்டடம் (Flat/Building). கட்டு-அடம்- அடுத்து-அடுக்கிக் கட்டுவது.   Apartment என்பதை, “அடுக்ககம்” எனலாம்.

நம்மைப் பொறுத்ததா?-யாரைப் பொருத்தது?

பொருத்திப் பார்ப்பது பொருத்தம். திருமணத்தில் பொருத்தம் பார்க்கிறோம். பொறுத்தம் என தமிழ்ச்சொல் ஏதும் இல்லை. ஆனால், ”கொஞ்ச காலம் பொறுத்துச் செய்யலாம்” என்பதற்கு, “காலம் தாழ்த்தி பொறுமையாகச் செய்யலாம்“ என்பது பொருள். ஆனால், “இதற்கு நான் பொறுப்பல்ல” என்பது, பொறுப்புத் துறப்பு. இரண்டு சொற்களும் வேறு வேறு ஒப்பீட்டுப் பொருளில் ஒன்று போல வழக்கில் உள்ளன என்றே புரிந்து கொள்ள வேண்டும். இலக்கணத்தில் பொருத்தமே பொருத்தம்!  ஆக சொல் மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சி நம் அனைவரையும் பொருத்ததே!

இரண்டு மாதிரியும் புழக்கத்தில் உள்ள சொற்கள் சில -

வெயில் – வெய்யில் : வெப்பத்தின் காரணமாக வருவது வெயில். குறளும் “என்பில் அதனை, வெயில்போல” என்றே சொல்கிறது (குறள்-77). “மாலை வெயில் மயக்கத்திலே மயங்கிடலாமோ?” என்றுதான் கேட்கிறார் பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம்.

ஆனால் “வெய்யிற் கேற்ற நிழலுண்டு” என்கிறார் கவிமணி தேசிக வினாயகர்.  “வெய்யில்” எனும் பெயரில் நல்ல கவிஞர் ஒருவரும் எழுதி வருகிறார்.  பேச்சில் வெய்யில் அடிப்பதாகத் தான் சொல்கிறோம்.

வேண்டா- வேண்டாம் : “வேண்டா” என்பதே இலக்கண வழக்கு (குறள்-37). இச்சொல் இப்போது, “வேண்டாம்”என்றே எழுத்திலும் பேச்சிலும் புழங்கி வருகிறது. இனி, ‘வேண்டா’ இலக்கணத்தைத் தெரிந்து கொண்டாலும், யாரும் அப்படி எழுதுதல் வேண்டாம் அல்லவா? “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” உலகநாதரின் உலகநீதி.

--------------------------------------------------

இதில் கடைசி வரியை உலகநாதரின் உலக நீதி என்பதே சரியானது. இதைத் தவறுதலாக நான், ஔவையார் என்று எழுதிவிட்டதைச் சுட்டிக்காட்டிய நண்பர் வடுவூர் சிவ.முரளி அவர்களுக்கு நன்றி.


-------------------------------------------------------------------------- 

17 கருத்துகள்:

  1. திரிந்து போன தமிழ் சொற்களை நினைவு படுத்தும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா.நாளைய தலைமுறை அறிந்து கொள்ள வழக்கில் இல்லாமல் போக கூடிய அனைத்திற்க்கும் ஆத்திசூடி யாக புதுப்பிக்கப்படலாம்

    பதிலளிநீக்கு
  2. மிக்க மிக்க நன்றி ஐயா, தங்கள் கட்டுரையில் வரக்கூடிய கருத்துக்களை பதித்த பிறகு எனது அறியாமையை, அவர்களை திருத்திக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. அருமைங்க தோழர்

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள் தோழர்

    பதிலளிநீக்கு
  5. மரூஉச் சொற்களும் வழக்குச் சொற்களின் விவரமும் தெளிவாய் விளக்கிய கட்டுரைத் தொகுப்பு அருமை ஐயா 👌👏👏

    பதிலளிநீக்கு
  6. அரிய தகவல்களை அறியத்தந்த அருந்தமிழாளுகைக்கு ஆயிரம் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  7. ஆகா!... ஆகா!!... எத்தனை எத்தனை செய்திகளை இரண்டே பத்திகளில் சொல்லி விடுகிறீர்கள் ஐயா! வெகு அருமை!

    பெயரன், பெயர்த்தி தெரியும். செய்தி, பொழுது, சாயுங்காலம் ஆகியவையும் அறிவேன். ‘சாயந்தரம்’ எனும் சொல்லுக்கு இப்படி ஒரு மூலம் இருப்பதை இப்பொழுதுதான் அறிகிறேன்.

    இவை மரூஉ எனப் பள்ளிக்காலத்தில் படித்தது, நினைவிருக்கிறது. ஆனால் எப்படி இப்படி மருவுகின்றன என்கிற இலக்கண விளக்கத்தை இப்பொழுதுதான் முதன் முறையாகப் படிக்கிறேன். மிகவும் வியப்பாக இருக்கிறது! நாத்தனார், கொழுந்தியாள் விளக்கமும் இனிமை! வாரந்தோறும் இந்தத் தொடருக்குப் படமும் மிக அருமையாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் இந்து தமிழ் நாளிதழார். அவர்கள் இந்தத் தொடரை எவ்வளவு விரும்பிப் படித்து வடிவமைப்புச் செய்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

    கட்டடம் என்பது இன்று தமிழ் அறிஞர்களைத் தவிர மற்ற அனைவருமே தவறாக எழுதும் சொல். பிழைதிருத்துநன் எனும் முறையில் மிகப் பெரும்பாலானோர் செய்யும் பிழைகள் எனும் என் பட்டியலில் இது இரண்டாவது இடத்தில் இருக்கும். இதைப் பொதுவெளியில் அழுந்தப் பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  8. தமிழ் இனிது என்பது யாவரும் அறிந்ததே என்றாலும் தங்கள் கைப்பக்குவத்துடன் பரிமாறும் நேர்த்தியும் சேர்ந்து மிகைக்கச் செய்கிறது.
    நாத்தனார் என்பதற்கு நா துணையாள் என்றும் பொருள் உரைப்பார் மொழிஞாயிறு தேவநேய பாவாணர். இச்சொல் நம் சமூக மாற்றத்தைப் படம் பிடித்துக் காட்டக்கூடியது. ஒருவர் பொண்ணு கொடுக்கும் போது எத்தனை நா துணையாள் இருக்கின்றனர் என்று பார்த்தே பொண்ணு கொடுப்பர். ஆனால் பிக்கல் பிடுங்கல் (நா துணையாய் ) இல்லாத வீட்டைப் பார்த்து பொண்ணு கொடுக்கின்றனர் இப்பொழுது.
    நீங்கள் கூறுவதைப் போன்று தமிழின் உறவுப்பெயர்களே தனி அழகு தான். அங்காளி பங்காளி கொண்டான் கொடுத்தான் ஓப்படியாள் என்ற சொற்களைக் கேட்கும் பொழுதெல்லாம் மனம் பெருமை கொள்கிறது.

    பதிலளிநீக்கு
  9. நாத்தூண் நங்கை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
    என் தாத்தாவின் அப்பா பெயரான ஜம்புலிங்கம் என்ற பெயரையே எனக்கு வைத்தனர்.

    பதிலளிநீக்கு
  10. தாங்கள் விளக்கி சொன்ன விதம் அழகு, பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  11. சிறப்பு.. தகவல் களஞ்சியம். மிக்க பயனுள்ள வகையில் அமைந்திருக்கிறது. நன்றி. உங்களின் இப்பணி தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. அருமை ஐயா..!! சிறப்பான விளக்கங்கள்.!! நன்றி மலர்கள். அடுத்த தலைமுறையினர் அவசியம் அறிய வேண்டும்.

    பதிலளிநீக்கு