இந்தியா இப்போது முன்னேறிவிட்டது! (கவிதை)


இந்தியா இப்போது முன்னேறிவிட்டது!
நா.முத்து நிலவன்
( இந்த எனது கவிதையைத் தனது திருச்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தனது குரலில் எடுத்துச் சொல்லி, எனது பெயரையும் குறிப்பிட்டுப் பாராட்டிய திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சு நிறை  நன்றியும் வணக்கமும். 
இதோ அந்த இணைப்பு -
(இணைப்பில், சரியாக 31ஆவது நிமிடம் நமது கவிதை!)

சரி இப்போது அந்தக் கவிதையை 
முழுவதுமாகப் படிக்கலாம் வாங்க!) 


அப்போதெல்லாம்
வண்டியில் பெட்ரோல் திருடினார்கள்
இப்போது வண்டியையே திருடுகிறார்கள்!

அப்போதெல்லாம்
வங்கியில் கொள்ளை அடித்தார்கள்.
இப்போது வங்கியையே கொள்ளை அடிக்கிறார்கள்!

அப்போதெல்லாம்
குழந்தைகளிடம் நகை திருடினார்கள்
இப்போது குழந்தைகளையே திருடுகிறார்கள்!

அப்போதெல்லாம்
தொலைக்காட்சியில் படங்களும் செய்தியும் வந்ததோடு,
இடையிடையே விளம்பரங்களும் வந்தன
இப்போது விளம்பரங்களுக்காக வரும் தொடர்களில் 
செய்தியும் படமும் சிறிதளவு வருகிறது!

அப்போதெல்லாம்
மீனவர் மீன் பிடித்தார்கள்
இப்போது மீனவர்களையே பிடித்துப் போகிறார்கள்!

அப்போதெல்லாம்
அம்மா அப்பா பாசத்தால் வளர்ந்தோம்
இப்போது மம்மிடாடி பணத்தால் வளர்க்கிறார்கள்!

அப்போதெல்லாம்
பிள்ளைகள் வீட்டில் பெற்றோர் இருந்தார்கள்
இப்போது வெளிநாட்டில் பிள்ளைகள்
தொடர்பு எல்லக்கு அப்பால் இருக்கிறார்கள்!

அப்போதெல்லாம்
தண்ணியடித்தவர்கள் பயந்தொதுங்கிப் போனார்கள்
இப்போது தண்ணியடிக்காதவரே ஒதுங்கிப் போகிறார்கள்!

அப்போதெல்லாம்
விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தார்கள்,
இப்போது விவசாயத்தையே தள்ளுபடி செய்கிறார்கள்!

வங்கியில் சிறுகடன் வாங்கிய விவசாயி விஷம் குடிக்கிறான்
வங்கியை முழுங்கியவனோ வெளிநாட்டில் விஸ்கி குடிக்கிறான்!

கடவுள் இல்லை  கடவுள் இல்லை 
பெரியார் சொன்னது உண்மைதான்! 
ஏழாயிரம் கோவில்களில் கடவுள் இல்லை!
பூசை வைத்த பூசாரிகள் சொல்லவில்லை
மீசை வைத்த அதிகாரிதான் கண்டு சொன்னார்!

போலிச்சிலைகளைப் பூசித்த மக்கள் இப்போது 
யோசிக்கிறார்கள்., கடவுள் இல்லை?
போலிப்பூசாரி, போலிச் சிலை, போலிக் கடவுள், போலி மருத்துவர்
போலி அதிகாரி, போலிப் போலிசுபோலித்தலைவர்கள்,
போலி அமைச்சர், போலி அரசு, போலி மகாத்மா!

கொல்லப் பட்டவரை மகாத்மா என்றனர் பலர்
கொன்றவனையும் மகாத்மா என்பவரும் உளர்!

முன்பை விட இப்போது
இந்தியா இப்போது முன்னேறித்தான் விட்டது!!

-------------------------------------------------------------------------- 
04-02-2019 அன்று நடந்த  திருப்பூர் புத்தகத்திருவிழா,
கவியரங்கத் தலைமைக் கவிதை.
மார்ச்-2019 செம்மலர் மாத இதழில் வெளிவந்தது.
------------------------------------------------------------------- 

திருப்பூர்க் கவியரங்கத்திற்குப் பின்னும், 
செம்மலரில் இக்கவிதை வெளிவந்த பின்னும், 
தேர்தல் நேரத்தில் தொடர்ந்து எழுதி
இதே வலையில் வெளியிட்ட பிறகு, 
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 
எடுத்துச் சொன்ன மறுநாள், 15-04-2019 அன்று
தீக்கதிரில் வெளிவந்த கவிதை!
ஒரே தலைப்பு என்பதால்
இங்குத் தொடர்கிறது! 
--------------------------------------------------------------------- 

அப்போதெல்லாம்
வாக்காளரை விலைக்கு வாங்கினார்கள்,
இப்போது வேட்பாளர்களையே வாங்கிவிடுகிறார்கள்

அப்போதெல்லாம்
கட்சியில் செல்வாக்கைக் காட்டி சீட்டுக் கேட்டார்கள்
இப்போது செலவுசெய்யும் தகுதி அறிந்தே சீட்டுத் தருகிறார்கள்

அப்போதெல்லாம்
தலைவர்களை விலைக்கு வாங்கினார்கள்
இப்போது கட்சிகளையே வாங்கிவிடுகிறார்கள்

அப்போதெல்லாம்
அமரர் ஊர்தி பிணத்தோடு போனது,
இப்போது பணத்தோடு போகிறது!

அப்போதெல்லாம்
உணவே மருந்தாக இருந்தது,
இப்போது உணவும், மருந்தும்கூட நஞ்சாகிவிட்டது!

அப்போதெல்லாம்
வெளியூருக்கு படிக்க அனுப்பவே யோசித்தார்கள்,
இப்போது தேர்வெழுதவும் வெளிமாநிலம் அனுப்புகிறார்கள்

அப்போதெல்லாம்
முற்றும் துறந்தவர்களையே முனிவர்கள் என்றார்கள்
இப்போது, காவிஉடைகளில் கார்ப்பரேட் வணிகர்கள்!

அப்போதெல்லாம்
படிப்பதற்கு இலவசப் பள்ளிக்கூடம் திறந்தார்கள்
இப்போது, கொள்ளைக்கூடங்கள் திறக்கப்படுகின்றன

அப்போதெல்லாம்
பள்ளித் தளமனைத்தும் கோவில் செய்வோம் என்றான் பாரதி
இப்போது உண்டியலைப் பெரிதாக்கி சிலையைத் திருடிவிட்டார்கள்!

அப்போதெல்லாம்
நீதிபதியிடம் நீதிமன்றம் போய் நீதி கேட்டோம்
இப்போது நீதிபதிகளே வீதிக்கு வந்து நீதி கேட்கிறார்கள்

அப்போதெல்லாம்
குற்றவாளிகளுக்கு தண்டனை தந்தார்கள்
இப்போது பதவி உயர்வு தந்து பாராட்டுகிறார்கள்!

அப்போதெல்லாம்
ஆடம்பரப் பொருள்களுக்கே அதிகவரிபோட்டார்கள்
இப்போது அவசியப் பொருள்களுக்கே அதிகவரி போடுகிறார்கள்

அப்போதெல்லாம்
கோமாளிகள் சர்க்கஸில்தான் இருந்தார்கள்,
இப்போது சர்க்காரிலேயே இருக்கிறார்கள்

அப்போதெல்லாம்
தலைவர்கள் புயல்சேத ஆறுதலுக்கு வந்தார்கள்
இப்போது தேர்தலுக்கு மட்டுமே வருகிறார்கள்

---- இன்னும் அவ்வப்போது வரும் --------------- 
என்னை மீண்டும் மீண்டும் எழுதவைக்கும்
நம் நாட்டுத் தலைவர்களுக்கு நன்றி
------------------------------------------------------------------------------------ 








12 கருத்துகள்:

  1. மிக நன்றாக யதார்த்தமாக உள்ளது...
    எனது பக்கத்திற்கும் தங்களுக்கு நல் வரவு..
    (இந்தப் பெயரை அழுத்தினால்)

    பதிலளிநீக்கு
  2. எத்தனை உண்மைகள்...

    ஒவ்வொரு வரியும் சிந்திக்க வேண்டியவை...

    பதிலளிநீக்கு
  3. கவிதை அருமை... ஆனால் எழுத வேண்டிய தருணங்களில் எழுதாமல் கடைசி நேரத்தில் எழுதி இருக்கீங்களே சார் இப்பத்தான் தூக்கத்தில் இருந்து விழித்தீர்களா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ( இந்த எனது கவிதையைத் தனது திருச்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தனது குரலில் எடுத்துச் சொல்லி, எனது பெயரையும் குறிப்பிட்டுப் பாராட்டிய திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சு நிறை நன்றியும் வணக்கமும்.

      இதோ அந்த இணைப்பு -

      http://valarumkavithai.blogspot.com/2019/04/blog-post_13.html

      நீக்கு
  4. குத்தலோ குத்தல்...
    சுத்திச் சுத்திச் சுழட்டி
    அலசி அடித்து நொறுக்கும்
    அருமையான பதிவுகள்

    பதிலளிநீக்கு
  5. எதார்த்தமாக கூறிவிட்டீர்கள் மாறிப்போனதும் மறைந்துப்போனதும் பற்றி அப்பா. தாங்கள் கூறிய வார்த்தையை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன் இந்தியா வல்லரசு ஆவதற்கு முன்பு நல்லரசு ஆக வேண்டும் என்று கூறியதை மறக்கவில்லை அப்பா.

    நல்ல பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இந்தியா ரொம்பவே முன்னேறி விட்டது.

    பதிலளிநீக்கு
  7. செம சூப்பர் அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைத் தங்கள் பாணியில் சிந்தித்த விழிப்புணர்வு வரிகள்.ஸ்டாலின் அவர்கள் வாசித்தபோது பார்வையாளர்கள் கைதட்டியது வெகுவாக கவர்ந்தது. வரிகளின் வீரியம் விரலுக்கு மை வைக்கும் அன்று வெளிப்படும். வெளிப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. Sattai adi kavithai... Enakku migavum piditha kavithaikalil oneraga ithu Mari vittathu... NANDRI Annan seeman... Avar slliye intha kavithai padithen... NANDRI MUTHU NILAVAN...

    பதிலளிநீக்கு
  10. அறிவொளிபரப்பும் அறிஞர்திரு.முத்துநிலவன் அவர்களது உரை&எழுத்து இரண்டுமே முற்போக்கானவை.இப்பதிவில் படித்த கவிதைகள் மிகவும் எளிமையாக மக்களைச்சென்றடையும் வகையில் உள்ளன.இருபது ஆண்டுகளுக்கு முன் கலைஞர்எழுதிய அந்தக்காலம்&இந்தக்காலம் கவிதையைஒப்பிடுவதாக இக்கவிதைஉள்ளது.பாராட்டுகிறோம்.
    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் பாதுகாப்புப் பேரவைக்காக,அ.இருளப்பன்/பொதுச் செயலாளர்.

    பதிலளிநீக்கு