வேட்பாளர்களுக்குத் தகுதித் தேர்வு வைக்கவேண்டும்!

 
  அனேகமாக எல்லா வேலைகளுக்குமே போட்டித்தேர்வு அல்லது தகுதித்தேர்வு வைத்துத் தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இது நல்லதுதான் என்றால், இந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் நிகழ்காலத்தோடு எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் நமது தலைவர்களுக்கும் இதுபோலத் தகுதித் தேர்வு வைப்பதுதானே சரியாக இருக்கும்?
எனில், “சட்டத்தையே உருவாக்கும் சட்டமன்ற உறுப்பினர்“ தகுதிக்கு ஒரு தேர்வு வைத்து, ஒவ்வொரு கட்சியும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கில் வேட்பாளர்களிடம் கட்சிகள் வாங்கும் வைப்புநிதி, அவ்ளோதானா? இதற்குக் கணக்குக் கேட்டாலே பலகோடி வரும்போல உள்ளதே? இது தேர்தல்ஆணையத்துக்குத் தெரியாதா?

“எவ்வளவு செலவு பண்ணுவீங்க?
“என்ன சாதி, உங்க தொகுதியில உங்க ஆளுங்க எவ்ளோ பேரு இருக்காங்க? அவுங்க ஓட்டெல்லாம் உங்களுக்கு விழுமா?
“நம்ப கட்சியில எவ்ளோ நாளா இருக்கிங்க?
என்றெல்லாம் வேட்பாளர் தேர்வின்போது பலகட்சித் தலைவர்கள் கேட்பதாகத் தொலைக்காட்சிச் செய்திகளில் பார்த்தேன்.
அப்படியே இந்த மாதிரி தேர்வு வைத்து எடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்ல?
"ஆகா இது ஜனநாயகத்திற்கு ஆபத்து" என்று ஒருசில தலைவர்களே குரல் எழுப்பக் கூடும். "தலைவர்களுக்கு எந்தத் தகுதியுமே இருக்க வேண்டியதில்லை" என்று எந்த அரசியல் சட்டத்தில் இருக்கிறது என்று அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். ஜனநாயகம் என்பது "சமமான வாய்ப்பு" என்பதுதானே தவிர, “தகுதியற்றவர்களுக்கான முதல் மற்றும் கடைசி வாய்ப்பு" என்று யார் சொன்னது?
 பாரதி பாடி ஒரு நூற்றாண்டு ஆன போதிலும் இன்னும் பொருந்துகிறதே இந்த வரி-
 கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரும் நாடு இது
            இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் திரு நாடு!
ஆனால் இங்கு தான், கடந்த 65ஆண்டுக்கால "ஜனநாயகத் தலைவர்கள்" ஆட்சியில்தான் கஞ்சி குடிப்பதற்கு இலார்மட்டுமல்ல "அதன் காரணம் இதுவென்னும் அறிவும் இலார்" நிலையில் மக்கள் இருப்பதற்கான முதற்காரணம் ஜனநாயக"த்தின் பெயரில் பெரும்பாலும் தகுதி இல்லாத தலைவர்கள் கையிலேயே நாடு தொடர்ந்து இருந்ததன்றி வேறென்ன?
     விமான நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபடும் வீர்ர்களுக்கு நடத்தப்பட்ட மத்தியத் தொழிலகப பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீர்ர்களுக்கான அடிப்படைத் தகுதித் தேர்வில் 70 சதவீதம் பேர் தோல்வியடைந்தனர்“ (தினமணி-11-02-2013 செய்தி) எனும் போது, “அய்யோ! இவர்களின் கையில் இத்தனை நாளாக இருந்த நமது விமான நிலையங்களின் வழியாக எத்தனை தீவிரவாதிகள் உள்ளே வந்தனரோ? என்னென்ன பேரழிவுத் தொழில்நுட்பங்கள் நுழைந்தனவோ?" என்று அஞ்சுகிறோமே? இதற்கே இந்தப் பதற்றம் எனில், பெரும்பாலும் தகுதியற்ற தலைவர்களின் பல்லாண்டுக்கால ஆட்சியில் என்னென்ன தவறுகள் நடந்திருக்கும்! என நினைத்துப் பார்க்கவே நெஞ்சு பதறுகிறதே!
பாண்டிச்சேரியில் ஒரு கல்வியமைச்சரே பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக்கொண்டு தற்போது கம்பி எண்ணினார் எனில் இவரது கையில் கல்வித்துறை!சிந்தித்துப் பாருங்கள்! இதற்கென்ன காரணம்? தகுதிஇல்லாதவர் தலைவராக அமைச்சராக முடிந்த்து எப்படி?
     உறரியானாவில் ஒரு முதலமைச்சரும் அவரது மகனுமாக அடித்த கூத்தில் தகுதியற்றவர்கள் எவ்வளவு பேர் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகி இருக்கிறார்கள்? இது வெளியே தெரிந்து தண்டனை தரப்பட்டது பாராட்டுக்கு உரியதுதான். ஆனால், இது நடக்காமலே தடுத்திருக்க நம்மால் முடியவில்லையே? ஏன்? ஜனநாயகத்தின் பேரில் அவர்களுக்குக் கிடைத்த தகுதியற்ற தகுதிதானே?
     அரசுப்பணிக்குப் போவதென்றால் அதற்குரிய படிப்பு, அனுபவம் தேவை என்று உலகம் முழுவதும் வைத்திருக்கிறார்கள். நமது தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்புத்தான் தற்போதைய அரசுப்பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி. அதாவது முழுநேர அலுவலக உதவியாளராக (அதாங்க பியுன் வேலை) வேண்டுமானால் ஒருவர் குறைந்த பட்சம் பன்னிரண்டாம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும். ஆனால், அவரை விரட்டி விரட்டி வேலைவாங்குகிற "ஆபீசருக்கெல்லாம் ஆபீசரான" ஓர் அமைச்சர் அல்லது மக்கள் பிரதிநிதி (மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ., நகராட்சி -ஊராட்சிகளின் தலைவர், உறுப்பினர் என மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர்) எவருக்கும் எந்தவிதக் கல்வித் தகுதியும் தேவையில்லை என்பது எந்தவகை நியாயம்?
முன்அனுபவம் இல்லாதவர்க்கு வேலைகிடையாது என்று முன்அனுபவ மில்லாத தலைவரே அரசாணையிட்டுச் சொல்வாராம்! என்ன கூத்து இது?
     அரசுப் பணியில் சேரமட்டுமல்ல, ஒவ்வொரு பதவி உயர்வின்போதும் தேர்வெழுதித் தான் ஊழியர்கள் அதிகாரிகள் ஆகமுடிகிறது. ஆனால், அரசையே நடத்தக்கூடிய தலைவர்கள் வட்டம் மாவட்டமாகி -எம்.எல்.ஏ எம்பி. மந்திரியாவதும், பெரிய தலைவர் தொடர்புடையவரிடம் காரணம் சொல்லாமலே எந்திரி என்று சொன்னால் உடனே அவர் காணாமல் போவதும் எப்படி? எந்தத் தகுதியில் வந்தார், எதனால் போனார் என்பதை மக்களுக்குச் சொல்ல முடியாதது ஏன்? இங்கு தகுதி என்ன? தகுதியின்மைதான் என்ன?
 காமராசர் போன்ற, கல்வியறிவு குறைவென்றாலும், பொது அறிவும் அதைவிட நாட்டுக்கு நல்லதுசெய்ய என்னென்ன தெரிந்திருக்கவேண்டும் என்னும் உணர்வும் உள்ள தலைவர்கள் மிகுந்திருந்த காலத்தில் எழுத்தறிவு சதவீதமும் குறைவு. அப்போது அதுபற்றிய தகுதி பெரிதாகக் கருதப்படாததைப் புரிந்து கொள்ள முடிகிறது.
எழுத்தறிவும் வளர்ந்து, மக்களின் பிரச்சினைகளும் தேவைகளும் பல்கிப் பெருகியிருக்கும் இந்தக் காலத்திலும் மக்கள் தலைவர்களுக்கு எந்தக் கல்வியறிவும் தேவையில்லைஎன்று வைத்திருப்பது எவ்வளவு சிக்கலை உருவாக்குகிறது என்பதை மறுஆய்வு செய்யவேண்டும். தலைவர்கள் ஆவதற்குக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியை நிர்ணயிப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை.
            சரி அய்யா. கல்வித்தகுதி உள்ளவர்கள் எல்லாம் சரியாகத்தான் நம்மை வழிநடத்தி வருகிறார்களா? என்று கேட்பீராகில், இருங்கள்... அவசரப்படாதீர்கள் "படிச்சவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் அய்யோன்னு போவான்" கல்வித் தகுதி மட்டும்தான் சரியான தகுதி என்று டி.இ.டி (ஆசிரியர் தகுதித் தேர்வு) போல நானும் அவசரப்பட்டுச் சொல்லமாட்டேன். ஆசிரியர்க்கான முதல், இரண்டாம் தகுதி அன்பும் அர்ப்பணிப்பும்தான். அடுத்த தகுதியாகத்தான் நான் அறிவை வைப்பேன் நமது டிஇடியில் அதற்கு இடமில்லை. ஆனால், அதைவிடவும் இது அடிப்படையான இடமல்லவா?
            மக்கள் தலைவர்களாக வருவோர்க்கு அடிப்படைக் கல்வி என்று ஒன்றை வைத்த பிறகு, பதவிக்குத் தக்க உலக அறிவு, சேவை மனப்பான்மை, சுயகட்டுப்பாடு, சாதி-மதச் சார்பற்ற செயல்பாடு முதலான அதாவது மக்கள் தலைவர்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கத் தேவையான தகுதிகளில் ஓரிரு தகுதிகளாவது இருக்கும்படி "தலைவர்களுக்கான தகுதித் தேர்வு" நடத்தப்பட வேண்டும்.
            உலக அறிவுக்குச் சாதாரண எழுத்துத் தேர்வையும், முன்னோடிப் பண்புகளைக் காண, செய்முறைத் தேர்வுகளையும் வைக்க முடியும். மனமிருந்தால் மார்க்கமுண்டு.
            தேர்தல் ஆணையமே நடத்தக் கூடிய இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர் மட்டுமே நேரடி அரசியலில் ஈடுபட முடியும் என்று சட்டம் இயற்ற வேண்டும். பதிவு செய்யப்பட்ட மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் மாவட்ட மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அனைவரும் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறுவது அவசியம். தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்தான் பொதுவாழ்விற்கே வரமுடியும் என்பதை அரசியல் கட்சிகளின் அடிப்படை விதியாக ஆக்க வேண்டும். தகுதியில்லாதவர்கள் பொதுவாழ்வுக்கே வர இயலாதபடிக்கு சட்டமியற்றி விட்டால், கட்சிகளே தங்கள் நிர்வாகிகளை வடிகட்டித்தானே எடுத்தாக வேண்டும்?
முன்னர் எடுபிடியாக, அடியாளாக இருந்தவர்கூட வட்டம், மாவட்டமாகி, எம்எல்ஏ, எம்.பி. என ஆகிவிடும் வரலாற்றுப் பிழைகளைத் தவிர்க்கலாமே?
ஆகா... இப்போதைய சட்டமியற்றும் இடத்தில் இருப்பவர்கள், இனிமேல் தாங்களே வரமுடியாதபடியானஒரு சட்டத்தை இயற்ற விடுவார்களா என்ன? ஆகவே, தேர்தல் ஆணையமே இந்த விதியை உருவாக்க வேண்டும். தேர்தலில் நிற்பதற்குரிய தகுதியை நிர்ணயிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டே! அந்தப் படிவம்நிரப்புதலில் தானே எத்தனைபேர் மீது என்னவிதமான வழக்கு இருக்கிறது? தற்போது உள்ள சொத்து எவ்வளவு? என்னும் புள்ளி விவரமே கிடைக்கிறது? அதை வைத்துத்தானே எவ்வளவு சொத்துச் சேர்த்தார் என்பதைக் கண்டுபிடித்து அதே ஆணையம் வெளியிடுகிறது? அப்படியானால், இந்தத் தகுதித் தேர்வை நடத்தி, “வேட்பாளர்களையே தகுதிநீக்கம் செய்யும் உரிமைதேர்தல் ஆணையத்திற்கு இருக்க வேண்டும்.
            இந்தக் கவிதையை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், மேடையில் சொல்லும் இடத்தில் எல்லாம் கைதட்டலை அள்ளுகிறது
 ஒருவன் கொலை செய்தான்,
அவனை, கொலைகாரன் என்றார்கள்,
 ஒருவன் கொள்ளையடித்தான்,
அவனை, கொள்ளைக்காரன் என்றார்கள்,
                  ஒருவன் கற்பழித்தான்,
அவனை, காமாந்தகன் என்றார்கள்
 இந்த மூன்றையும் சேர்த்து
வேறொருவன் செய்தான் -
                  அவனை, “தலைவாஎன்றார்கள்!
                                    -- என்பதில் உண்மை உறுத்துகிறல்லவா?
நம் தலைவர்களில் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதால்தானே இது எல்லாருக்கும் உறைக்கிறது! சதவீதம் வேண்டுமானால் மாறலாம். எல்லா அரசியல் கட்சிகளுக்குள்ளும் இதுபோலும் "தலைவர்கள்" இருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது வரும் அசிங்கச் செய்திகள் நமக்கு அறிவித்துக் கொண்டுதானே இருக்கின்றன?
            சாதாரணக் குடிமகன் செய்யும் தவறையே ஒரு பொறுப்பான மக்கள் தலைவர் செய்தால் அதற்கான தண்டனை கூடுதலாகத்தான் இருக்கவேண்டும். தகுதியற்றவர் மீண்டும் தேர்தலில் நிற்காமல் தடைவிதிக்க தேர்தல் ஆணையத்திற்கு இருக்கும் அதிகாரத்தை சற்றே விரிவுபடுத்தி ஆரம்பத்திலேயே அவ்வாறானவர் தேர்தலில் நிற்பதைத் தடுக்கும் அதிகாரமும் ஆணையத்திற்கு இருக்க வேண்டும். தலைவர்க்கான தகுதித் தேர்வுஎன்பதை இப்படியான வடிகட்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
கிராம ஊராட்சி உறுப்பினர் பதவியிலிருந்து, நாட்டின் பிரதமர் பொறுப்புவரை அதிகாரமும், பொறுப்பும் அதிகரிக்கும்போது, அதுஅதற்கான தகுதி-தேர்வுகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் அரசுப்பணியாளர் தேர்வுப்படிநிலைகள் 4,3,2,1 போல.
இது ஜனநாயகத்திற்கு விரோதமான யோசனையல்ல. சாதி-மத-இன-பிரதேச எல்லை எதைப் பற்றியும் நான் பேசவில்லை. அவையெல்லாம் ஏற்கெனவே உள்ள விரிந்து பரந்த நமது ஜனநாயக உரிமைகள். அடிப்படை உரிமை எதிலும் நான் கைவைக்கச் சொல்லவில்லை. நான் சொல்வது ஜனநாயகக்கடமை பற்றியது. கடமையைச் செய்யாதவர்கள் உரிமை கேட்பது சரிதானா? என்பதே எனது கேள்வி.
"அரம் போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
 மக்கட்பண்பு இல்லா தவர்" (குறள்-997)
------------------------------------------------------------------------
படிக்காதவர்கள் மீண்டும் படிக்க.... 
நன்றி திண்ணை இணைய இதழ்

7 கருத்துகள்:

  1. அண்ணா இதை நானும் யோசித்தேன்..ஆனா அவங்களே தேர்வு வைத்து அவங்களே பாஸாக்கிடுவாங்களே..அண்ணா...பணம் ஆட்சி செய்யும் காலத்தில்,...இது நடக்குமா அன்ணா?

    பதிலளிநீக்கு
  2. இன்றைய நடை முறை அரசியல் குறித்த
    அதீத ஆதங்கத்தில் எழுதப்பட்ட கட்டுரையாகவே
    இதனை எடுத்துக் கொள்கிறேன்..

    பொதுவாக இதைச் செய்ய வேண்டும்
    என்பதைத் தீர்மானிப்பவர்களாக
    மக்கள் தலைவர்களும்...

    (தீர்மானம் இவர்கள் போட முடியும்
    உத்திரவு எழுத்தில் போட முடியாது )

    இப்படித்தான் செய்யவேண்டும் என்கிற
    சட்ட முறை தெரிந்தவர்கள்
    அதிகாரிகளாக இருக்கும்படியாகத்தான்
    நம் நிர்வாக இயல் உள்ளது..

    ( இவர்கள் உத்திரவிட முடியும்
    கூட்டத்தில் தீர்மானிக்க முடியாது 

    அதிகாரிகள் மிகச் சரியாக இருந்தால்
    ஒரு பைசா கூட அரசியல்வாதிகள்
    எடுக்க நிச்சயம் முடியாது

    எனக்குத் தெரிய காசோலையில்
    கையொப்பமிடும் அதிகாரம்
    மக்கள் பிரதி நிதிகளில்
    ஊராட்சித் தலவருக்கு மட்டுமே உண்டு

    வேறு யாருக்கும் இல்லை

    அந்த வகையில் தகுதித் தேர்வில் வென்று
    பதவியில் இருக்கிற அதிகாரிகள் மிகச் சரியாக
    இருக்க முடியுமானால் அனைத்தும் சரியாக
    வாய்ப்புண்டு...

    மக்கள் பிரதி நிதிகள் எப்படி இருந்த போதும்...

    பதிலளிநீக்கு
  3. நியாயமான கோரிக்கைகள் தான்.. ஆனால் நடக்குமா.. ஏனென்றால் சட்டம் இயற்றும் அதிகாரமே அந்த அரசியல் வாதிகளின் கைகளில் தானே இருக்கிறது.. யோசித்துப் பார்த்தால் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இணையான அதிகாரம் படைத்த அமைச்சர்களின் தகுதிகளும் அவருக்கிணையாகத் தானே இருக்க வேண்டும்...குறைந்தபட்சம் டெக்னிக்கலான துறைகளுக்காகவாது படித்தவர்களை கொண்டு வரலாம்.. ஆனால் நமது நாட்டுக்கே கல்வி அமைச்சராக வெறும் பேச்சுத் திறமையும் அவேசமும் தானே தகுதிகளாக இருக்கின்றன.. அதுவும் மக்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளரை குறுக்கு வழியில் எம்ப்பி ஆக்கி அமைச்சராக முடியும் என்றால் தவறு எங்கே இருக்கிறது..? சரியான தேவையான பதிவு ஐயா..

    பதிலளிநீக்கு
  4. உண்மை உறைக்கும் கவிதை வரிகள்...

    குறள் ஒன்றே அனைத்தையும் சொல்லி விடுகிறது...

    பதிலளிநீக்கு
  5. ஐயா அருமை.இந்த மாதிரி நம் நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கும் தகுதி தேர்வு நடத்தினால் நாமா எங்கையோ போயிருவோம்.படித்தவன் ஆட்சிக்கு வந்தால் திறமையாகவும் நேர்மையாகவும் ஆட்சி செய்ய வேண்டும் ஐயா.முதலில் யார் வந்தாலும் கல்வி,மருத்துவம் மற்றும் குடிநீர் இவற்றை மட்டும் இலவசமாக தரவேண்டும்.விளை நிலங்கள் விலை நிலமாக மாறாமல் இருக்க வேண்டும்.
    நம் நாட்டில் எவரும் இல்லை காமராசர்,அன்னை தெரசா.

    நல்ல பதிவு ஐயா.இந்த பதிவு அரசியல்வாதிகள் கவனத்திற்கும் அரசு கவனத்திற்கும் சென்றால் அவர்கள் நிலைமை கோவிந்தோ கோவிந்தோ தான் ஐயா.

    வாழ்த்துகள் தகுதித் தேர்வு வர வேண்டும் ஐயா..நல்ல சிந்தனை.

    பதிலளிநீக்கு
  6. அருமை. சிறப்பான கருத்தோட்டம்.. இப்படிப்பட்ட கருத்துகள் பலரைச்சென்றடையும் போது விழிப்புணர்வு மாற்றத்திற்கு வழிவகுக்கும்.. அய்யமில்லை

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள் முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு

    வணக்கம். அருமையான கனவைக் காண்கிறீர்கள்.
    எல்லோருக்கும் இந்த கனவின் மீது ஆசை உள்ளது. ஆனாலும் இன்றைக்கு இந்த தகுதி தேர்வைத் தரமாகத தயாரித்து வைத்தால் மருந்துக்குக் கூட ஒருவர் தேற மாட்டர்கள் என்பதுதான் கசப்பான உண்மை. இருந்தாலும் கனவு காண்போம்.

    பதிலளிநீக்கு