தவணை வாழ்க்கை!

கடலில் மூழ்கியவன்
தீவு தேடி
திமிங்கலத்தில் விழுந்தான்

கடனில் மூழ்கியவன்
தீர்வு தேடி 
பைனான்சில்  நுழைந்தான்.

பூக்கடைக்கு மட்டுமல்ல
இந்த 
சா கடைக்கும்
விளம்பரம் தேவையில்லை,

ஏழாவது வீதியின்
எட்டாவது சந்தில்-
சின்னப் பலகையில்
சிரிக்கும்
தற்கொள்ளை முனை!

அழகான சிரிப்பு,
அற்புதமாய் உபசரிப்பு,
உலக நடப்பின் உபதேசிப்பு,
தவணையில் தசைப்புசிப்பு.

மேசை நாற்காலி
மேல்விரிப்பு சுத்தம்,
துடைத்து வைக்கப்பட்ட இதயம்.

எம்மதமும் சம்மதம்-
எல்லாச் சாமியும்
முதலாளியின் பின்னே.

கசங்கிய மஞ்சள் பையோடு
கைநடுங்க
நாற்காலி நுனியில்
வந்தவன் கேட்பான்:
தவணை எத்தனை?’
தற்கொள்ளை விசாரணை.

கணினியின் கணக்கில்-
எலும்புகள் நொறுங்கும்
அறிவியல் எரிச்சலூட்டும்

பெட்டிகள் நிரம்புவது
வட்டியில் அல்ல,
ஆற்றாது அழுதுவழியும்
ரத்தத்தில்.

அம்பலப்படாத கிம்பளத்தார்
அஞ்சாறு பேர்
ஓர் அப்பாவிப் பையன்,
அவ்வளவே,
கொள்ளைக்கடை 
கொழுத்து வளர்ந்தது..
வளர்ந்தது..வளர்ந்ததுவே!

நொம்பலப்படும் சம்பளத்தார்-
ஒருகணம் அபிமன்யுவாய்,
மறுகணம் பாஞ்சாலியாய்.
ஓ! போர்ஷியா!
ஓ! போர்ஷியா!


--------எனது  பழைய காதல் கவிதைகளிடையே இதுவும் காணப்பட்டது, காதலை மட்டும்தான் அனுபவிக்க வேண்டுமா? இந்த அனுபவத்தை -யும்தான் கொஞ்சம் அனுபவியுங்களேன் ---------

9 கருத்துகள்:

 1. தவணை எத்தனை////தற்கொள்ளை எத்தனை ஆழமான வரிகள்

  பதிலளிநீக்கு
 2. எளியோரை கவர்ந்து அழைத்துப் பிடித்து
  கடித்து அரைத்து உண்டுக் கொழிக்கும்
  அந்தப் பொறி குறித்த கவிதை அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அருமையான கவிதை..இன்னும் தேடிப்பாருங்கள்...எல்லாக்காலமும் பொருந்தும் உண்மைகள்

  பதிலளிநீக்கு
 4. கவிதை அருமை...
  அதில் இருக்கும் வார்த்தைகள் அருமையோ அருமை...
  எக்காலத்துக்கும் பொருந்தும் கவிதை.

  பதிலளிநீக்கு
 5. இன்னும் நிலைமை மாறலையே அண்ணா..அதிகமாயிட்டுள்ள போகுது.

  பதிலளிநீக்கு
 6. கடனில் தத்தளிக்கும் அவலமும் தற்கொள்ளைகளால் தற்கொலைகள் நீளும் துயர்களும் தீரும் நாள் எந்நாளோ?

  பதிலளிநீக்கு
 7. நீங்கள் எப்போதோ இளம்பருவத்தில் (இப்போதும் இளம்பருவம் தான்!!!) எழுதியவை இன்றும் அப்படியே பொருந்திப் போகின்றது பாருங்கள்...ரசித்தோம்...

  பதிலளிநீக்கு