1990களின் தொடக்கம் இந்தியாவில் ராவ் காலம். ஆம்! நரசிம்ம ராவ் காலமே,
இந்தியாவில் தனியார் துறை கொழுக்கத் தொடங்கிய காலம்!
இதை, “இந்தியாவின் ராவு
காலம்“ என்று கிண்டலடிப்பார் பேராசிரியர் அருணன்!
அப்போதிருந்துதான் முதலாளிய சாமிக்கு தனியார் மயம், தாராளமயம், உலகமயம் (LPG –
Liberlisation!
Privatisation!! Globalisation!!!)
எனும் மந்திர உச்சாடனங்கள்
இந்தியாவின் எட்டுத்திசையிலும் ஓங்கத் தொடங்கின!
அதற்குமுன்பே தனியார் மயம் நிறுவனமயமாகாமலே இந்தியாவில் இருக்கத்தான் செய்தது. என்றாலும், சுதந்திரத்திற்கு முன்னர் இருந்ததை விடவும் சுதந்திர இந்தியாவில்தான் தனியார் மயம் தழைத்தோங்கியது!
அதனால்தானே அவர்கள் 1948இல்
இந்தியாவுக்குச் சுதந்திரம் தருவது பற்றிய முடிவை, முன் நகர்த்தி 1947இல்
தந்துவிட்டுப போனார்கள்? 46க்கும் 48க்கும் இடையில் என்ன நடந்தது? என அறிய
விரும்புவோர், பள்ளி-கல்லூரிப் பாடநூல்களில் தேடினால் கிடைக்காது, இந்திய
சமூகவரலாற்றில்தான் இதற்கு விடைகிடைக்கும். இடையில் நடந்த இந்திய கப்பற்படை
எழுச்சி, ஆங்கில அரசுக்குத் தந்த அதிரடி ஞானம்தான் அது!
(இதுபற்றிய மேலதிகத் தகவல்களை அறிய – நண்பர் மாதவரஜ் அவர்களின்
பின்வரும் பக்கத்தைச் சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்
எனவே, காங்கிரசிடம் ஒப்படைக்கப் பட்ட இந்திய சுதந்திரத்தைப் பயன்
படுத்தி, இங்கிலாந்து உள்படப் பற்பல வெளிநாட்டினரும் தமது வணிகத்தைத் தொடர்ந்தனர்.
சுதந்திர இந்தியாவில் உலக முதலாளிகளின் தனியார் மயம் தாராளமாக வளர்ந்துகொண்டுதான்
வந்தது!
1947 இந்திய விடுதலைக்கு முன் இந்தியச் செல்வங்கள் வெளிநாட்டால்
சுரண்டப் பட்டதைவிடவும் பலபத்துமடங்கு பல்வேறு வெளிநாட்டு முதலாளிகளால் அதிக
அளவில் சுதந்திரத்திற்குப் பின் கொள்ளையிடப் பட்டன, இன்றும் கொள்ளையிடப்பட்டும்
வருகின்றன!
பெப்ஸி, கோக் முதலான பானங்களில் மட்டுமே பலஆயிரம் கோடி ரூபாய்களைக்
கொண்டுபோகும் தனியார் பகாசுரக் கம்பெனிகளை நமது அரசு நிறுவனங்களோடு ஒப்பிட்டால்,
.இந்த நிலைமைக்குக் காரணம் புரியும்.
என்ன ஒரு முக்கியமான செய்தி எனில், இது கொள்ளை என அறியப்படாமல்,
வெளிநாட்டுக் கம்பெனிகளின் முதலீடு மற்றும் லாபம் எனும் பெயரில் புள்ளிவிவரங்கள்
தரப்படுவதுதான்.
இதை நேரடிப் பொருளாதாரச் சுரண்டலாகப் புரிந்துகொண்டுவிடாமல் இருக்க,
“மாறிவரும் உலகுக்கேற்ற புதிய நாகரிகம்” என்று நம்
இந்தியர்களின் மண்டைக்குள் செலுத்தப்பட்டதுதான்!
இந்தியர்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, உண்ணும்
உணவு, உடுக்கும் உடை, இருக்கும் வீடு மற்றும் புழங்கும் பொருள்கள் அனைத்திலும்
வெளிநாட்டுப் பொருள் என்றால் புதுமையானது, உயர்தரமானது, நாகரிகமானது என்னும் நினைப்பை
மனநிலையை யார் எப்படி உருவாக்கினார்கள்? இது வெளிநாட்டு அடிமைத்தனமன்றி வேறென்ன?
இனிய நண்பர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களோடு
வெளிநாடு சென்றிருந்தபோது, அவசரத்திற்கு பனியன் வாங்க ஒரு கடைக்குள் நுழைந்து
தேடினால், அதில் நம் திருப்பூர் உழைப்பின் வேர்வை வாசம்!
அவர்கள் நம் பொருள்களை மதிக்கிறார்கள்! நாம்தான்
வெளிநாட்டுப் பொருள்களைக் கண்ணைமூடிக்கொண்டே வாங்கிப் பழகிவிட்டோம். இந்தியரைவிடவும்
மற்றவரையே உயர்வென்று நினைக்கிறோம்! ஆனால், வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு அவ்வளவு
மதிப்பு மரியாதை..! இல்லையா?
இந்த நம் மனநிலைக்குக் காரணமே தனியார் மயத்தின் தாக்கமன்றி வேறென்ன?
ஒரு கற்பனைத் துணுக்குதான்-
உலகின் 300 நாடுகளில் தன் வணிகநிறுவனங்களை
வைத்திருக்கும் பில் கேட்ஸிடம் யாரோ ஒரு –கற்பனை- செய்தியாளர் கேட்டாராம், “உங்கள்
நிறுவனங்களில் எல்லாம் முக்கியப் பொறுப்புகளில் இந்திய இளைஞர்களே இருக்கிறார்களே?
ஒருவேளை புதிய இந்தியப் பிரதமர் ஒருவர் வந்து 'இனி இந்தியர்கள் அனைவரும் எந்த
வெளிநாட்டிலும் இருக்கக் கூடாது எவ்வளவு சம்பளத்தை வெளிநாட்டு நிறுவனங்களில்
அவர்கள் வாங்குகிறார்களோ அதை இந்திய அரசே தரும், அவர்களின் உழைப்பும், அறிவும்
இந்தியாவுக்கே இனி பயன்படவேண்டும்' என்று சட்டம் போட்டுவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டாராம்.
கொஞ்சம் கூடத் தாமதிக்காமல், பில் கேட்ஸ்
சொன்னாராம் – “ரொம்ப எளிதான கேள்விதான், என் தலைமையகத்தை
இந்தியாவில் திறந்துவிடுவேன்” என்றாராம்! இது எப்படி இருக்கு?
சரி
இந்தக் கதைக்கும் இந்தத் தலைப்புக்கும் என்ன
சம்பந்தம் என்றால், இருக்கிறது நண்பர்களே!
இடஒதுக்கீடு என்பது சமூகத்தைச் சமநிலையில்
கொண்டுசெல்வதற்கு நம் நாட்டுப பேரறிஞர்கள் அம்பேத்கரும், தமிழகத்தின் தந்தை பெரியாரும்
கண்ட மிகப்பெரிய சமூக நீதி. இதை நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று யாரும்
சொல்லவும் இல்லை. மக்களிடையே இந்தியாவுக்கே சிறப்பான சாதி ஏற்றத் தாழ்வினால் வந்த
சமநிலையற்ற சமூகநிலை இருக்கும் வரை இந்த இட ஒதுக்கீடும் தேவைப்படுமே அன்றி இது
நிரந்தரத் தீர்வாக யாரும் சொல்லவில்லை!
பலபத்தாண்டுகளுக்கு முன்னர் பஞ்சப்படி கேட்டுப்
போராடிய ஊழியர் இடையில் பேசிய தலைவர்
ஒருவர் சொன்னாராம் –
“எங்களுக்குப் பஞ்சப்படி உயர்வே வேண்டாமய்யா...
ஆமாம் நாங்கள் மாதச் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு வேலைசெய்யத் தயாராகவே
இருக்கிறோம், இந்த அரசுகள் விலைவாசியை ஏறாமல் பார்த்துக் கொணடால் எங்களுக்குப
பஞ்சப்படி உயர்வைத் தரவே வேண்டாம்..”
சரிதானே இது?
அதே போலத்தான், பரம்பரையாகப் பள்ளிக்கூட வாசனையோ பல்வேறு பணிகளைப்
பார்த்த அனுபவமோ இல்லாத பகுதி மக்கள் இருக்கும் வரை, ஒருபரம்பரையே இந்த
வேலையைத்தான் செய்ய வேண்டும், இவர்தான் மலம் அள்ளவேண்டும், இவர்தான் முடிவெட்ட
வேண்டும், இவர்தான் துணி துவைக்க வேண்டும் இவை எல்லாவற்றையும் விட, யார் வீட்டில்
இழவு விழுந்தாலும் இவர்கள்தான் பறையடிக்க வேண்டும், இன்னொரு பக்கம்- இவர்கள்தான்
கோவிலில் பூசாரியாக இருக்க வேண்டும், இவர்கள்தான் இந்தக் கோவிலில் கருவறைவரை
போகமுடியும், இவர்கள்தான் கல்யாணம் மற்றும் கருமாதிகளில் மந்திரம் ஓதவேண்டும்
என்பது மாதிரியான “குல வழக்கங்கள்“ இருக்கும் வரை இடஒதுக்கீடும் இருக்கத்தானே
வேண்டும்?
சாக்கடை இருக்கணும்,
ஆனா நாத்தம் அடிக்கக் கூடாதுன்னா எப்படி?
சாதி இருக்கணும்,
ஆனா தீண்டாமை ஒழியணும்னா எப்படி?
ஏற்றத்தாழ்வான சமூகம் இருக்கணும்,
ஆனா இடஒதுக்கீடு கூடாதா?
சாராயம் குடிக்கணும்,
ஆனா போதை ஏறக்கூடாதுன்னா
அது எப்படி முடியும்?
நாயகன் படத்துல,
வேலுநாயக்கர் சொன்னது நினைவுக்கு வருதா?
“அவன நிறுத்தச் சொல்..
நானும் நிறுத்துறேன்!” வசனம்தான்!
சரி இது ஒருபுறமிருக்கட்டும்.
இந்தச் சாதிவாரியான இடஒதுக்கீடு கேட்டு இப்போது எல்லாரும் போராடத்
தொடங்கிவிட்டார்கள். முற்பட்ட சாதிப்பிரிவான அல்லது அந்தப் பகுதியின் முன்னேறிய
வகுப்பான ஜாட் இனத்தவர் அரியானா வில் இட ஒதுக்கீடு கேட்டு ஊரெல்லாம் கலவரமாம்!
நான் கேட்கிறேன், இப்போதெல்லாம் தனியார் மயம் அதிகமாகிக் கொண்டே
வருவதில் இந்த இட ஒதுக்கீடு காலியாகிக் கொண்டே வருகிறதே! தெரியவில்லையா?
உண்மை நிலவரம் என்னவென்றால் இப்போது -2016இல்- ஒரு புள்ளி விவரம்
சொல்கிறது, இந்திய வேலைவாய்ப்பில் கிட்டத்தட்ட 87.5விழுக்காடு வேலைகளைத்
தனியார்கள் தான் தருகிறார்கள். இவ்விடங்களில் ஒருஇடம் கூட இட ஒதுக்கீடு
கிடையாது! வெறும் 12.5இல் தான் இடஒதுக்கீடு!
கொஞ்சநாளாக முணகிக்கொண்டிருந்த சிலர் இப்போதுதான் தனியார் துறைகளிலும்
இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று பேசத் தொடங்கி யிருக்கிறார்கள். இவர்கள் ஆதரவோடு
மத்திய மாநில அரசுகள் நடந்தபோது இந்த ஞானம் வராமல், இப்போது வந்தாலும் இதையும்
வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமான செய்தி ஒன்று உண்டு.
அரசுப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அது.
இந்தியா முழுவதும் பல்லட்சம் பலநூறு துறைகளில் வேலைவாய்ப்புக் கொட்டிக்
கிடக்கிறது. ஒருதுறையும் ஒருபோதும் முழுவதுமாக நிரப்ப்ப்படவே இல்லை. தாழ்த்தப்பட்ட
மலைமக்கள் பணியிடங்கள் உள்பட. இதுபற்றிய வெள்ளை அறிக்கை தரும்படி நம் சட்டமன்ற,
நாடாளுமன்றங்களில் பலமுறை கேட்டிருக்கிறார்கள்.. வெள்ளை அறிக்கைதான் வந்தபாடில்லை!
எனவே, இருக்கும் அரசு மற்றும் அரசு ஆதரவுடன் நடக்கும் அனைத்து
வேலைகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ,
அவ்வளவு முக்கியம் அனைத்துத் துறைகளிலும் உரிய அளவிற்கு பணியிடங்களை நிரப்ப, புதிய
வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும்.
பா.ஜ.க.வின் அரசியல் ஞானகுரு ஆர்.எஸ்.எஸ். என்பது ஊரறிந்த ரகசியம்.
பாஜக இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வாய்திறந்தாலும் அதை நடைமுறைப்படுத்தி விடாமல் சரியாகப்
பார்த்துக் கொள்வது ஞானகுருதான்.
அவர்கள் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கிறார்கள்.
என்ன அது?
“அங்கொன்றும் இங்கொன்றுமாக அது என்ன தனியார் மயம், இந்தியா மொத்தத்தையுமே
–நாடாளுமன்றம் உட்பட- தனியார் மயமாக்குவதன் வழியாக, தாங்கள் நினைக்கும் உலகின்
மிகப் பெரிய பணக்காரக் கம்பெனிகளை உள்ளே கொண்டு வந்துவிடலாம். அப்படி தனியார்
மயமாகி விட்டால் இடஒதுக்கீடு தானாகவே காணாமல் போய்விடும் ல! எப்புடீ?
அப்படியானால், இடஒதுக்கீடு கேட்டு யார் போராடினாலும், அரசு மற்றும்
தனியார் துறை அனைத்திலும், -மக்கள் வளம் அதிகமுள்ள இந்தியாவில்- உரிய வேலைவாய்ப்பு எவ்வளவு தேவை அவ்வளவு உருவாக்குவதே சரியான தீர்வாகும்
இல்லையென்றால்..
நம் கிராமத்தில் சொல்வார்களே, அந்தப் பழமொழிதான்-
“அவன் பந்தியில இடமில்லைங்கிறான், இவன் இலைப்பீத்தல் னு புலம்புறான்?” கதைதான் நடக்கும்.
என்ன நான் சொல்றது சரிதானுங்களே?
சரியென்றால், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகக் குரல்
கொடுக்க மட்டுமல்ல, தெருவில் இறங்கிப் போராடவும் தயாராகுங்கள்.
அப்போதுதான் சமத்துவ சமூகம் உருவாகும்.
“மேட்டைக் கரைக்காமல்
பள்ளத்தை நிரப்ப
மண்ணுக்கு எங்கே போவது?”
-------------------------------
இக்கட்டுரையை எழுதத் தூண்டிய வகையில்
இரண்டு நன்றிகளை நான் சொல்ல வேண்டும்-
(1)
மாற்று இணைய இதழில் வந்த கட்டுரை ஒன்று-
(2)இன்றைய
நாளிதழ்களில் வந்த இடஒதுக்கீடு கேட்டு ஜாட்இன
மக்களின் போராட்டச் செய்திகள்
--------------------------------------------
ஆஹா அருமையான பதிவு ஐயா.மீரா.செல்வக் குமார் ஐயா அவரின் பதிவில் அழகாக சொல்லி இருந்தார் அதாவது நம் வீட்டை நிதானமாக ஒரு முறை சுற்றிலும் முற்றிலும் பார்த்தாலே தெரியும் நாம் எத்தனை இந்தியப் பொருட்களை உபயோக்கிறோம் என்று.ஆம் ஐயா நாம் அனைவரும் அன்னியப் பொருகளுக்கு அடிமை ஆகிவிட்டோம்.
பதிலளிநீக்குஅதே மாதிரி தான் இட ஒதுக்கீடும் தனியார் மயமும் ஐயா.சிந்திக்க வைக்கிறது இந்த பதிவு வாழ்த்துகள் ஐயா.
ஒரு நாட்டுக்கு அடிமையாக இருந்தது புரிந்தது, இப்போது பலநாட்டுப் பொருள்களுக்கு அடிமையாகி வருவது புரிந்தால் தெளிவடையலாம். நன்றிம்மா
நீக்குமிகச் சிறப்பான கட்டுரை ஐயா...
பதிலளிநீக்குநிறைய விவரங்கள்... நிறைவாய் அறியத் தந்தீர்கள்.
'மேட்டைக் கரைக்காமல்
பள்ளத்தை நிரப்ப
மண்ணுக்கு எங்கே போவது?'
அதானே.... மொத்தக் கட்டுரையின் சாரத்தையும் சொல்லும் மூன்று வரி...
அருமை ஐயா...
அந்த வரிகள் எங்கோ ஒரு கவிதைத் தொகுப்பில் படித்த வரிகள் அதனால்தான் மேற்கோள் குறிக்குள் இட்டேன். நன்றி குமார்
நீக்குசரியான நேரத்தில் சரியான விதத்தில் சொல்லப்பட்ட கட்டுரை. வாசிக்கின்ற வாசகர்களில் இருந்து தொடங்கினாலே போதும். பல நூறு மைல் பயணம் எடுத்து வைக்கின்ற முதல் அடியில் தானே ஆரம்பமாகிறது.
பதிலளிநீக்குஜாட் மக்களுக்கு மட்டுமல்ல, “நாங்க ஆண்ட பரம்பரையாக்கும்” என்று மார்தட்டிவிட்டு, “எங்களுக்கும் இடஒதுக்கீடு குடுங்க” என்று கையேந்துவோரும் புரிந்து கொள்ளவேண்டிய சிக்கலில் இப்போது இடஒதுக்கீடு..அதுதான்...நன்றி
நீக்குபாதுகாக்கப் படவேண்டிய பதிவு
பதிலளிநீக்குதம +
நன்றி மது
நீக்குதம்பி! அருமையான, அலசல்! காரண காரியங்களை விளக்கி மிகத் தெளிவாக, எழுதியுள்ளீர்! வரிவிடாமல் இரண்டு முறை படித்து வியந்தேன்!
பதிலளிநீக்குஅய்யா வணக்கம்.
நீக்குதங்களின் வயது என்ன அய்யா? 80ஐத் தாண்டியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்னும் அசராமல் வலைப்பதிவில் தமிழ்மணத்தில் முன்னணியில் இருப்பது பற்றி வியப்பதோடு தங்களின் சுறுசுறுப்பில் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன் அய்யா..
இந்திய வேலை வாய்ப்பில் 87.5 சதவிகிதம் தனியார்
பதிலளிநீக்குஇட ஒதுக்கீடு என்ற சொல்லே அர்த்தமற்று அல்லவா போய்விட்டது
ஆமாம் கரந்தையாரே! இதுபற்றிய ஞானமில்லாமல் வெறும் இடஒதுக்கீட்டுக்காகவே போராடுவது அர்த்தம் இழந்துவருவதைப் பார்த்துப் பொறுக்காமல்தான் இதை எழுதினேன் அய்யா... சேலையில்லன்னு கேட்டு ஒருத்தி சின்னாயி வீட்டுக்குப் போனாளாம், அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு எதுத்தமாதிரி வந்தாளாம்.. வேறென்ன சொல்ல..?
நீக்குமண்டல் கமிஷன் பரிந்துரைகளே காற்றில் பறக்க விடப்பட்டு விட்டது ,இன்னும் மெண்டல் மாதிரி இட ஒதுக்கீடு போராடிக் கொண்டிருக்கிறோம் !அடுத்து ,இட ஒதுக்கீட்டை நிறைவேற்று என்று காலமெல்லாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் !
பதிலளிநீக்குகற்பனை இல்லை அய்யா ..ஒருமுறை அமெரிக்காவில் இது நடந்ததாக சொன்னார்கள் ...பில்கேட்ஸ் அவர்களை இந்தியர்களை வேலைக்கு எடுக்காதீர்கள் , எடுத்தால் கடுமையான சட்டங்கள் போட்டு முடக்குவோம் என்றார்களாம். பில் உடனே ...என் அலுவலகத்தை இந்தியாவில் திறந்துகொள்கிறேன் என்றாராம்....
பதிலளிநீக்குஅறியாத பல புதிய தகவல்கள் ஐயா.. தேவையான பதிவு , மதி ஐயா பதிவு பல வியப்புகளை ஏற்படுத்திவிட்டது, மறைக்கப்பட்ட வரலாறு பல நேரங்களில் சுவாரஸ்யம் நிறைந்ததாகத் தான் இருக்கிறது.
பதிலளிநீக்குபல கோணங்களில் பல தகவல்களுடன் ஆன பதிவு. கடைசி வரிகளில் முழு கட்டுரையின் கருத்தும் அடங்கிவிட்டது. "மேட்டைக் கரைக்காமல் பள்ளத்தை நிரப்ப மண்ணிற்கு எங்கே போவது?"// நன்றாகச் சிந்திக்க வைத்த பதிவு....நிச்சயமாக ஒதுக்கீடு வேண்டும்..
பதிலளிநீக்கு