அவர்தான் நல்ல தலைவர்! (குட்டிக்கதை)


ஓர் ஊரில் ஒருகட்சியின் கொடியேற்றம் முடிந்தபின், மாற்றுக் கட்சியின் தொண்டன் தன் கட்சியின் கொடி அதைவிட உயரமாகப் பறக்க வேண்டும் என்று விரும்பி ஏற்பாடுகளைச் செய்தான்.
 மாற்றுக்கட்சித் தலைவரும் கொடியேற்றி முடித்து காரில் ஏறினார். இதைப் பார்த்த அந்த ஊர்க்காரர், அந்தக் கட்சித் தலைவரிடம் போய், “என்னய்யா உங்கக் கட்சியாளு இப்படி இருக்கான்? 
 “ஏன்?எப்படி இருக்கான்? நல்லாத்தானே கட்சி வேல   பாக்குறான்?
“அட போங்க தலைவரே! நீங்க இப்பக் கொடியேத்துன கொடிக் கம்பத்துல நேத்து ராத்திரி விறுவிறுன்னு ஏறி உயரத்தை அளந்து பாத்துட்டு இறங்கினான்.  ஏன்டா நட்டுவச்ச மரத்துல ஏறுறியே கீழவிழுந்து கால் கை ஒடிஞ்சா என்ன பண்ணுவன்னு கேட்டேன், அவன் “உயரத்த அளக்குறேன்“ னு சொன்னான். 
“அட லூசுப்பயலே, கொடிக்கம்பத்த நடுறதுக்கு முன்னாடியே கம்பத்த கீழபோட்டு அளந்திருக்க வேண்டியதுதானடா?னு கேட்டேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?.. 
“எங்களுக்குத் தெரியாதா? கீழகிடக்கும்போது அளந்தா அதுக்குப் பேரு நீளம். நட்டுவச்சி அளந்தாத்தான் அது உயரம்! எங்க கொடி அந்தக் கட்சிக் கொடியவிட உயரத்துல பறக்கணும்னுதான் எங்க தலைவர் சொன்னாரே தவிர நீளத்துல பறக்கணும்னா சொன்னாரு?அப்படின்னு கேக்குறான்!
“ஆமா.. அதுக்கு என்ன இப்ப?“
“அதுக்கு என்னவா? நீளத்துக்கும் உயரத்துக்கும் வித்தியாசம் தெரியாத தொண்டன வச்சிக்கிட்டு என்னய்யா பண்ணப் போறீங்க..“
“அய்யா நீங்க அரசியலுக்குப் புதுசா..? நீளத்துக்கும் உயரத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்குற வரைக்கும்தான் அவன் தொண்டனா இருப்பான். தெரிஞ்சிட்டா நா தலைவனா இருக்க முடியாது இல்ல..?
---------சரி கதை ஒன்றும் கற்பனைக் கதை இல்லை. தமிழ்நாட்டில் இந்தியாவில் பெரீய்ய கட்சிகளில் நடப்பதுதான்..

  தான் தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காகவே தொண்டர்களை விவரமில்லாமல்–உணர்ச்சி வசப்படுத்தி – வைத்திருக்கும் கட்சிகள் எவை...?

     நான் சொல்லப்போவதில்லை..
  பி.கு-1அப்பறம் இது நம்ம சொந்தக் கதை இல்லீங்க.. 20,30 வருட முந்தியே யாரோ சொல்லக் கேட்டது..         நானும் பல கூட்டங்களில் சொல்வது..
  பி.கு-2 தமிழில் தலைவர் னு சொன்னா ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும் பலர்பால். இது தெரியாம தலைவின்னு ஒருசொல் எப்படி வந்துச்சுன்னு தெரியல.
---------------------------- 

21 கருத்துகள்:

  1. அன்புள்ள அய்யா,

    தலைவர் தலைவராக இருக்கவும் தொண்டர் தொண்டராகத் தொடரவும் நல்ல கதை.

    த.ம. 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா.. நமது பிரபல தலைவர்கள் தம் தொண்டர்களை, வளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது பற்றிய கதை. சரியா?

      நீக்கு
  2. இப்போது தொண்டர்களுக்கும் தலைவர் ஆசை வந்துவிட்டது, இல்லையென்றால் இத்தனை கட்சிகள் வந்திருக்க சாத்தியமில்லை. நீளம்,அகலம் பிரச்சனை தலைவர்களுக்கும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கெங்கு காணினும் தலைவர்களடா! தொண்டர்களற்ற லெட்டர் பேட் அமைப்புகள் எத்தனை சாமி!

      நீக்கு
  3. சூட்சுமமே அது தானே.. சரியாய் சொன்னீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் அம்மா மயம்தான்... விடுங்க ஐயா...
    கதை நல்லாயிருக்கு...
    ஆனா ஒண்ணுந்தெரியதவனா இருக்க வைக்கிறதைவிட விழுந்து கிடக்கவுல்ல வைக்கிறாங்க.... இந்தக் கொடுமை எந்த மாநிலத்திலும் இல்லையே...

    பதிலளிநீக்கு
  5. கதை நல்லாயிருக்கு!

    புத்தி தெளிந்துவிட்டால் அவனும் தலைவனாகிவிடுவானே... சரியாத் தான் சொல்லி இருக்காங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெளியவிடாம அடிக்கத்தானே மது, ஊடகம், சாதி மதம் இத்யாதி இத்யாதிகள்.. விட்டுடுவமா?

      நீக்கு
  6. என்னங்க இப்படியா ஏமாற்றுவது தலைவர்( குட்டிக்கதை) என்றதும் ஏதோ குட்டியை பற்றிய கதை என்று வந்தேன் இப்படி ஏமாற்றிவிட்டீர்களே...ஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காந்தி ஜெயந்தி நினைவுக்கு வருகிறது. உங்க குசும்புக்கு அளவில்லயா சாமி?

      நீக்கு
  7. அய்யா இந்த மதுரைத்தமிழன் சீரிய்ஸாகவே சிந்திக்க அல்லது கருத்து சொல்ல மாட்டானா என்று திட்டாதீர்கள்..பாவம் அய்யா இந்த மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா “ரொம்ப நல்லவேன்“னு அவங்க மனைவியே சொன்னாங்க...

      நீக்கு
    2. ஹை! அப்படியா அண்ணா?!!! அப்போ மதுரைத் தமிழனுக்கு இனி பூரிக்கட்டை அடி இல்லைனு சொல்லுங்க....ஹும் நமக்குப் பூரிக்கட்டைகள் பதிவுகள் போச்சே போச்சே!!!

      கீதா

      நீக்கு
  8. குட்டிக் கதையல்ல! குட்டும்! இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  9. குட்டிக் கதை தான் ஆனால் இதை உணர்ந்து படித்தால் அதன் வெளிபாடு அதிகம் ஐயா.தொண்டரும் இருக்க மாட்டான் தலைவரும் இருக்க மாட்டான் நாடு நல்லா இருக்கும் ஐயா..

    அருமை அருமையான கதை ஐயா..

    பதிலளிநீக்கு
  10. அருமை ஐயா!தொண்டனை சிந்திக்க விடக்க கூடாது. விட்டால் தலைவராக இருக்க முடியாதே.

    ஆசிரியருக்கும் ஆண்பால் பெண்பால் வைத்திருக்கிறோமே!

    பதிலளிநீக்கு
  11. குட்டிக்கதையா அது ??!!! எவ்வளவு பெரிய ராஜதந்திரத்தை உள்ளடக்கியுள்ளது!!!

    பதிலளிநீக்கு
  12. குட்டிக்கதையோடு கருத்துக்களை பகிர்தல் அழகாயிருக்கே...

    பதிலளிநீக்கு