பெரும்பான்மையோர் தவறுசெய்வதுதான் ஜனநாயகமா? (குட்டிக்கதை)

தொடர்வண்டிப் பாதையில் ஒரு குழந்தை 
விளையாடிக் கொண்டிருந்தது. 
நல்லவேளையாக அந்தப் பாதையில் 
தொடர்வண்டிகள் ஏதும் வருவதில்லை, மாற்றுப்பாதைதான் அது.
ஆனால் இன்னொருபக்கம் பார்த்தால் எப்போதும் வண்டி வருகிற பாதையில் பத்துக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அய்யோ! இந்தப் பக்கம் தூரத்தில் வண்டிவரும் சத்தமும் கேட்கிறது..
இங்கிருந்து கத்தினாலும் குழந்தைகள் கவனிக்கவில்லை.

என்னருகில் தொடர்வண்டி செல்லும் பாதையை மாற்றும் கருவி ஒன்று இருந்தது.. 
நான் இப்போது என்ன செய்வது?

ஒருகுழந்தையைக் காப்பாற்றுவதா?
பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றுவதா?

நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

ஆங்.. அதைத்தான் நானும் செய்தேன்.

ஒரு குழந்தை பலியானாலும் பரவாயில்லை என்று அந்தப் பாதையில் தொடர்வண்டி செல்லுமாறு கட்டையைத் திருப்பிவிட்டேன்.
பத்துக்குழந்தைகள் காப்பாற்றப் பட்டுவிட்டன!

இப்போது என் மனச்சாட்சி உறுத்தியது-
எப்போதாவது வண்டி வரக்கூடிய –பாதுகாப்பான- பாதையில் விளையாடிய குழந்தை, சட்டப்படி தவறேதும் செய்யவில்லை. 
ஆனால்...
தவறான பாதையில் 
எப்போதும் வண்டி வரக்கூடிய பாதையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் 
அதிக எண்ணிக்கையில் இருந்ததால்,
அவர்களைக் காப்பாற்ற நினைத்து, 
தவறுசெய்யாத ஒரு குழந்தையைத் தண்டித்து விட்டோமே? இது சரியா?
இவ்வளவுதான் கதை.
செல்பேசிவழி எனக்கு வந்த குட்டிக்கதை இது.

இப்போது என் கேள்வி-
இதைத்தானே நாம் ஜனநாயகம் என்கிறோம்?

அதிக வாக்குப்பெற்றவர்கள் 
தவறு செய்தாலும் நாம் 
தண்டிக்க முடிவதில்லையே?

எண்ணிக்கை சிறியதாக இருந்தால், 
தவறு செய்யாதவர்களையும் 
நாம் தண்டித்துவிடுகிறோமே? 
இது சரிதானா?

இதுதான் நம் ஜனநாயகம் என்றால் 
இது சரியானது தானா?
இதற்கு சரியான மாற்று என்ன 
என்று யோசிக்க வேண்டாமா?
---------------------------- 
படத்திற்கு நன்றி -கூகுளார்.

22 கருத்துகள்:

 1. தவறான பாதையில் பெரும்பான்மையினரை திரட்டி ஒரே இடத்தில் குவிப்பதிலிருந்து தவறு செய்யாத சிறுபான்மையை நோக்கி பயணப்படுத்துதல் மூலம் சனநாயகத்தை மீட்டெடுக்கலாம், நல்வழிபடுத்துதல் நமக்கு இங்கே தேவையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. தவறு செய்யாத எனச் சொல்வதை விட
  இதுவரை வாய்ப்பில்லாத எனச் சொல்லலாம்

  தன் பலம் வளர்க்காது பலவானை
  பலவீனப்படுத்துவன் மூலமே
  தன்னை வளர்க்க நினைக்கும்
  கம்னியூஸ்டுகள்

  நாளுக்கொரு மேடை
  நாளுக்கொரு பேச்சு என
  தன் கடந்த கால வரலாற்றில் நிரூபித்தவர்..

  ஜாதி இயக்கமாகவே தன்
  இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர்

  ஒரு மத இயக்கம்

  இவர்களின் கூட்டு எப்படி மக்களின்
  ஏகோபித்த நம்பிக்கையை பெற இயலும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, இதற்குப் பதில் எழுதும் வகையில் ஒரு கட்டுரை எழுதச் சொல்கிறீர்கள்.. எழுதிடுவோம்!

   நீக்கு
 3. சஊரியன் மேற்கில் உதிக்கும் என பெரும்பான்மை சொன்னால் ஒத்துக்கொள்ளும் ஜனநாயகமாக இருக்கிறது..உலகின் தேர்தல் அதிசமாய் இந்தியா இருக்கிறது...ஆனால் மாற்றவேண்டியது ஏராளம் அய்யா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றவேண்டியதும் இருக்கிறது, மார்தட்டிக் கொள்ள வேண்டியதும் இருக்கிறது நண்பா! குணம்நாடிக் குற்றமும் நாடி..

   நீக்கு
 4. இதுதான் பிரச்சனை. சிறுவர்கள் விளையாடுகிறார்கள். அது இயல்பு. இரயில் வரும்போது குதித்து அதன் ஓட்டத்தை இரசிக்கவும் தெரியும். பெரும்பான்மையினரோ, சிறுபான்மையினரோ....இயல்பாகத்தான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் தான் ஒருவரை காபபாற்றுவதாய் மற்றவருக்கு கெடுதல் செய்கிறார்கள்... இரயில் பாதையை அடைத்து அனைவரையும் பாதுகாக்க வேண்டிய அரசு , அதிகாரிகள், அரசியல் வியாதிகள்..... இந்த ஆட்டத்தில் தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.... பாதிக்கப்படுவது சிறுவர்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுவர்களாய் பாதிக்கப்படுவோர் அடுத்தடுத்த தலைமுறையில் பெரியவர்களாகவும் பாதிக்கப்படுகிறார்கள் காரணம் இதன் மறுபதிப்பே

   நீக்கு
 5. பதில்கள்
  1. “வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்,
   கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்” பா.தா.

   நீக்கு
 6. வாட்சாப்பிலும் பேஸ்புக்கிலும் முன்னரே படித்திருந்தாலும் உங்கள் கருத்துகளோடு படிப்பது அருமையாக சொல்லியுள்ளீர்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பா! பார்ப்பதைக் கேட்பதை நம் செய்திகளோடு யோசிக்கும்போதுதானே புதிய முடிவுகள் கிடைக்கின்றன?

   நீக்கு
 7. ஐயா என்னுடைய கருத்தும் என் குடும்பத்தாரின் கருத்தும் இது ஒன்றே ஜனநாயகத்தை இளைஞர்களிடம் அதுவும் நன்கு படித்த மற்றும் நாட்டை நன்கு கற்றறிந்தவர்களிடம் தரவேண்டும் ஐயா.இந்த ஜனநாயகத்தில் மாற்றம் நிகழும் என்று சிறிது நம்பிக்கை ஆனால் இன்று நம் நாட்டில் சர்ப்பயாகம் தானே நிலவுகிறது மேலே வர வேண்டும் என்று நினைத்தால் கீழே தள்ளிவிடுகிறார்களே பாம்புகள் போன்ற அரசியல்வாதிகள்..!!

  காத்திருப்போம் நல்ல விடியலுக்கு..!!ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்லம்..? என்னடா பெயர் மாற்றியாச்சா? நல்லது. பாம்புகள் உள்ள நாட்டில் ஏணிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் பா. உன்போலும் இளைஞர்கள்தான்.. நன்றிம்மா

   நீக்கு
 8. பெரும்பான்மையோர் தவறு செய்தால் செய்துகொண்டே இருந்தால் அது சரி என்றே ஆகிவிடுகின்றது. இங்கு கதை அருமைதான். ஆனால் மற்றொரு உண்மைச் சம்பவமும் நினைவுக்கு வந்தது. கர்நாடகாவில் ஒரு சிறுவன் ரயில் வரும் பாதையில் விளையாடிக் கொண்டிருந்தவன் தண்டவாளம் சரியில்லாததைக் கண்டு அப்போது வந்த ரயிலை தனது சிவப்பு நிற சட்டையைக் காட்டி நிறுத்திப் பயணிகளைக் காப்பாற்றியதாக. அப்படி இவரும் ஏதேனும் யுத்தி செய்து ரயிலை நிறுத்தியிருந்தால் சிறு குழந்தையும் காப்பாற்றப்பட்டிருக்குமே. அந்தக் கோணத்திலும் ஆராயலாமே. நம்மை ஆள்பவர்களும் தவறுகள் செய்து கொண்டே அதைச் சரி என்று நம்ப வைத்துவிடுகின்றார்கள். அல்லது மக்கள் அதற்கு இம்யூனைஸ் ஆகிவிடுகின்றார்கள்...

  மாற்றங்கள் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேறொரு வழி? சரியான யோசனைதான்.. எப்படியாவது மாற்றுவழி காணவேண்டும் என்பது சரிதான். நன்றி நன்றி.

   நீக்கு
 9. வணக்கம்
  ஐயா.
  அரசியல் வாதிகளுக்கு நீதி தேவதை வித்தியாசமான தீர்ப்பும்
  அதாவது குற்றம் செய்த ஒரு அரசியல் வாதி மறு நிமிடமே வெளியில் வந்திடுவான்
  ஆனால் சராசரி பாமரன் குற்றம் செய்தால் வாழ்நாள் சிறை. எல்லாம் அரசியல் பலம்.அரசியலை கலக்க கலக்க வடிகட்டாத நீர்தான் வரும்...அது போலதான் எல்லாம்.கதை நன்றாக உள்ளது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படிப் பொத்தாம் பொதுவான “எல்லாம் மோசம்” என்று முடிவுகட்டிவிடுவதும் நல்லதல்ல ரூபன், நல்லவற்றைத் தேடிப்போக வேண்டும். நல்ல பூக்களை வீட்டுவாசலில் கொண்டுவந்து தருகிறார்கள்.. ஆனால் கெட்ட விஸ்கியைத் தேடி ஓடிப்போய்.. ஏன் இப்படி?

   நீக்கு
 10. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
  வகுத்தலும் வல்லது அரசு - 383 இந்தக் குறளை அப்படியே இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றுவதாகவே தோன்றுகிறது ஐயா.


  தமது கட்சிக்கு பொருள் வரும் வழிகளை மேலும் மேலும் இயற்றுதலும், வந்த பொருள் வழி எல்லாம் எம் மக்களுக்கு மக்களுக்கு என்று சொல்லி தம் மக்களுக்கு அதாவது,

  வந்த பொருளைத் தம் குடும்பத்துக்கு சேர்த்தலும், அதை எந்த வகையிலும் மக்களுக்குப் பயன்பாடமல் காத்தலும், காத்த பொருளை அடுத்த தேர்தலுக்குப் பயன்படுத்தலாம் என்றும் இன்றைய அரசியல்வாதிகள் இந்தக் குறளுக்குப் பொருள் புரிந்கொண்டார்கள் போலும்.

  தங்கள் பதிவு சிந்திக்கத்தக்கதாக உள்ளது ஐயா. ஆனால் நாளைய செய்தித்தாளில் எந்த நகைச்சுவைச் செய்தியை முதல்பக்கத்தில் வெளியிடலாம் என்று சிந்திக்கும் இந்த அரசியல்வாதிகளுக்கு இந்தகட்டுரையைப் படிக்க நேரம் இருக்குமா என்றுதான் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா புதுமையான பொருள்..பொருத்தமான பொருள் அரசியல் வாதிகள் தந்த அர்த்தம்? நன்றி நண்பா

   நீக்கு
 11. இது கும்பினிகாரன் கொடுத்து சென்ற ஜனநாயகம்..அப்படித்தான் இருக்கும் அய்யா...

  பதிலளிநீக்கு
 12. தமிழக மக்கள் ஆடம்பரங்களுக்கும், பகட்டுக்களுக்கும் கொடுக்கும் மதிப்பையும், தங்களுக்கு கிடைக்கும் இலவசங்களை வைத்து ஒருவரை மிகவும் தவறாக ஆதரிக்கும் தவறான அவர்கள் முடிவை வைத்து கொண்டு, இந்த நம் ஜனநாயக முறை தவறு என்று சொல்ல கூடாது.
  இந்த நம்ஜனநாயக முறை தான் பெஸ்ட்.

  பதிலளிநீக்கு