தமிழ்இனிது-18- (அய்யாவும் மய்யமும் - இந்து தமிழ் நாளிதழ்)

( நன்றி - இந்து தமிழ் - திசைகாட்டி -10-10-2023 )

நண்பர் ஒருவர், “ஐயா, அய்யா  இரண்டில் எது சரி?, கமல் கட்சியில் ‘மய்யம்’ என்பது சரியா? ‘மையம்’தானே சரி?” என்று கேட்டார்.

 ‘ஐயா’வில் உள்ள ‘ஐ’ எழுத்தை, அதற்குரிய இரண்டு மாத்திரை அளவுக்கு அழுத்தி உச்சரிக்காமல், ஒன்றரை மாத்திரை அளவில் ‘அய்யா’ என்றே பேசுகிறோம். அதுபோலவே, ‘சமையல்’, ‘சமயல்’ ஆகிறது. ‘மழை பெய்கிறது’ என்பதை, ‘மழ பெய்யுது’ என்றே சொல்கிறோம்.   

 இதை ‘ஐகாரக் குறுக்கம்’ என்று இலக்கணம் சொல்கிறது.  அதாவது, ‘ஐ’ எனும் இரண்டு மாத்திரை, தன் ஓசையில் குறுகுவது!

‘தற்சுட்டு அளபு ஒழி ஐ, மூவழியும் நையும்’ - நன்னூல்-95.  கை, பை, எனவரும் ஓரெழுத்து ஒருமொழி தவிர்த்து, தொடரில் வரும் ‘ஐ’யை, 2மாத்திரைக்கு உச்சரிப்பதில்லை. ‘ஐ’ முதலில் வந்து ‘ஐயா’, ‘அய்யா’ ஆகிறது! இடையில் வந்து, ‘உடைமை’- ‘உடமை’ ஆகிறது, இறுதியில் வந்து ‘தவளை’ , ‘தவள’ ஆகிறது. 

இதுபற்றித் தொல்காப்பியரிடம் கேட்டால், ‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’ (தொல்-நூற்பா எண்-54) என்று,  ‘ஐ’, ‘அய்’ இரண்டையுமே பயன் படுத்தச் சொல்லி, வியக்க வைக்கிறார்!   

மீண்டும், ‘விளிமரபு’ இயலில், ‘ஐ ஆய் ஆகும்’  என்கிறார் (தொல்-606). ‘அன்னை’ என ஐகாரத்தில் முடியும் சொல், விளி(அழைப்பு) ஏற்கும்போது ‘அன்னையே’ என்று ஆவது போல, ‘அன்னாய்’ என்றும் வரும் (கலித்தொகை-51). ஆக, ‘ஐ’-‘அய்’ என வருவது புதிதல்ல! பழந்தமிழில், ‘கை’யை, ‘கய்’என்றே சொல்கின்றன சிந்தா மணியும் (கய்தரு மணி) கம்ப ராமாயணமும் (கய்யொடும் இற்று).      

இன்றும் கிராமக் காவல் தெய்வமாக ‘அய்யனார்’ இருக்கிறார்! ‘ஐயப்பன்’ ‘அய்யப்பன் இருவரும் ஒருவரே! ஆக, ‘ஐயா’, ‘அய்யா’ இரண்டும் சரிதான். கமல், ‘மய்யம்’ என்பதும் சரிதான்.    

உடனே, ‘தமிழில் ‘ஐ’ எனும் உயிர் எழுத்தே வேண்டாமா?’ எனில், ‘ஐ’ இருக்கும். இரண்டும் கெட்டானாக, ‘ஐய்யா’ என்பதுதான் இருக்கக் கூடாது! அதோடு, ‘அய்’ என்பதே தவறு என்றும் சொல்ல வேண்டாம்!   

இதன் தொடர்ச்சியாக, ‘கலைஞரை, கலய்ஞர் என்றல்லவா எழுத நேரும்?’ எனில், ஆம்! ஆனால், ‘ஒரே மூச்சில் ஒன்பது படி தாண்டக் கூடாது’ என்றே எழுத்துத் சீர்திருத்தர் வலியுறுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

வள்ளுவர் குறளில், ‘ஔ’ எழுத்தையே பயன் படுத்தவில்லை! ‘ஔ’ வந்த இரண்டு குறளிலும் (167,169) ‘அவ்’ என்றே சொல்கிறார்! ‘ஐ’, ‘அய்’ ஆவதற்கும் ‘ஔ’, ‘அவ்’ ஆவதற்கும் தொடர்புண்டோ?

மறுபக்கம், மற்ற உயிரெழுத்துகள் போலன்றி, ‘ஐ’ ‘ஔ’ இரண்டு எழுத்து மட்டும் கூட்டெழுத்தாக உள்ளதையும் ஆய்வு  செய்ய வேண்டும்.   

“இலக்கணமும் சமூக உறவுகளும்” என்றொரு சிறு ஆய்வு நூலை, ஈழத் தமிழறிஞர் கா.சிவத்தம்பி எழுதியிருக்கிறார். அதன்படி பார்த்தால், ‘தோழரே’, ‘உடன்பிறப்பே’, ‘ரத்தத்தின் ரத்தமே’, ‘ஜீ’ என்று, அவரவர் சார்பை அடையாளப் படுத்துவது போல, பெரியார் கருத்துகளை ஏற்றுக் கொள்வோர், ‘ஐயா’வைப் பெரும்பாலும் ‘அய்யா’ என்றே எழுதுகிறார்கள் என்பதும் உண்மை தான் ! “மய்யம்” கமலும் அப்படித்தான் போல!    

--------------------------------------------------------------------- 

11 கருத்துகள்:

  1. அருமை... தொடர்ந்து உங்கள் கட்டுரையை படித்து வருகிறேன் புதிய புதிய தகவல்கள் இதன் மூலம் நான் அறிகிறேன்

    பதிலளிநீக்கு
  2. அருமையான விளக்கம் அய்யா!😁

    பெரும்பாலோருக்கு இந்தக் குழப்பம் உண்டு. நான் வெகுகாலம் அய்யா என எழுதுவது தவறென்றே நினைத்திருந்தேன். நம் பதிவுலக நண்பர் Joseph Viju அவர்கள் பதிவு படித்தபொழுதுதான் தொல்காப்பியரே பரிந்துரைத்த ஏற்பாடுதான் இது என்பது தெரிந்தது. இன்னும் இது தெரியாத, தெரிந்தாலும் ஏற்க மனமில்லாத சில, பெரியார் கொண்டு வந்த சீர்திருத்தம் இது என்கிற ஒரே காரணத்துக்காக இது தவறு என்று குதித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் என்பது இப்படிப் பல வண்ண வேறுபாடுகள் காட்டும் கடல் என்பதை அந்தக் கிணற்றுத்தவளைகளுக்கு ஒருபொழுதும் புரிய வைக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  3. நல்ல விளக்கம், நன்றி தோழர்

    பதிலளிநீக்கு
  4. விளக்கம் அழகாக இருக்கிறது கவிஞரே....

    தந்தையை பெற்றவரை "அய்யா" என்றும், மேலதிகாரியை "ஐயா" என்றும் குறிப்பிடுவதே சரியென்று ஒரு தமிழறிஞர் கட்டுரையில் படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. அருமை ஐயா
    நீண்ட நாள் குழப்பங்களுக்குத் தெளிவு கிடைத்திருக்கிறது.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  7. // வள்ளுவர் குறளில், ‘ஔ’ எழுத்தையே பயன் படுத்தவில்லை! ‘ஔ’ வந்த இரண்டு குறளிலும் (167,169) ‘அவ்’ என்றே சொல்கிறார்! ‘ஐ’, ‘அய்’ ஆவதற்கும் ‘ஔ’, ‘அவ்’ ஆவதற்கும் தொடர்புண்டோ? //

    முப்பால் எழுத்துகளின் எண்ணிக்கையில் கட்டமைக்கப்பட்ட உலகின் ஒரே கணக்கியல் நூல்...

    இந்த ஆண்டு முதல், இதன் பதிவுகளை தொடங்கி உள்ளேன்...

    திருக்குறளில் "ஔ" என்பதே சரி...

    பதிலளிநீக்கு
  8. தொல்காப்பியம் குறிப்பிடுவது போல் அகரம் இகரம் இணைந்து ஐகாரமும் அய்யா என்பதும் ஐயா என்பதும் சரிதான் இதேபோல அகரம் உகரம் இணைந்து ஔகாரம் ஆகும் அவ்வையார் , அவ்விய நெஞ்சம் எல்லாம் திருவள்ளுவர் கால மரபுதானே அதையே நாம் வழக்கப்படுத்திக் கொள்வது தான் கணினிக்கும் காலத்திற்கும் ஏற்றது.

    பதிலளிநீக்கு
  9. அருமை!..நன்றி அய்யா!..
    -- அய்யாறு.ச.புகழேந்தி

    பதிலளிநீக்கு
  10. வள்ளுவர் ஒள எழுத்தையே பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக 'அவ்' என்று பயன்படுத்தியுள்ளார் என்று தெரிந்து கொண்டேன். புதிய செய்திகளை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அண்ணா!

    பதிலளிநீக்கு