தமிழ்இனிது-தொடர்16, 17

 தமிழ் இனிது-16     

 (நன்றி -இந்து தமிழ் நாளிதழ் 
26-9-2023 செவ்வாய் )
உளமார / மனமாற வாழ்த்தலாமா?!

மனம், குளம், மரம்  
        இவை போலும் சொற்கள் தொடரில் வரும்போது, ‘அத்து’ எனும் பகுபத உறுப்பு (சாரியை) சேர்ந்து, ‘மனத்தில் நினைத்தேன்’, ‘குளத்தில் குளித்தேன்’, ‘மரத்தில் ஏறினேன்’ என்று மாறுவது மரபு. எனினும் ஏனோ, ‘மனம்’ மாறி(?) ‘மனதில்’ என்று பேசுவது பழக்கமாகி, பிறகு அதுவும் தொடர்ந்து வழக்கமாகி, எழுத்திலும் வந்துவிட்டது! பாரதி, “மனதில் உறுதி வேண்டும்” என்றே பாடுகிறார். மனத்தில் என்பது மனதில் என்றானதற்காக, ‘குளதில்’ குளிக்க முடியாது! ‘மரதில்‘ ஏறவும் கூடாது!  அப்படியான வழக்குகள், தமிழில் இல்லை! ஆனால், இங்கே பேச்சு வழக்கில் உள்ள ‘மனசு’, “மனசில் ஆயோ?” என்று மலையாள வழக்கிலும் உள்ளதை, ஒப்பாய்வு செய்யலாம்.    

தமயன் - தமையன்-

   தம்+ஐயன்= தமையன் (தமக்கு மூத்த, பெரியவன்),  தம்+அக்கை=தமக்கை, தம்+பின்= தம்பி (தமக்குப் பின் பிறந்தவன்), தம்+கை= தங்கை (தமக்கு இளையவள், சிறியவள்), கை எனும் சொல், சிறிய என்றும் ஒரு பொருள்தரும்! கைப் பை, கைக் கடிகாரம், கைப் பேசி என்பன கையில் இருப்பதால் மட்டுமின்றி கைக்கு அடக்கமான அளவில் சிறியதாய் இருப்பதாலுமே  இப்பெயர் பெற்றன என்பது இன்னொரு தமிழ் நுட்பம்!  

அடமானம் - அடைமானம் - 

   ‘மானத்தை அடகு வைப்பது’ ன்னும் பொருளில் வரும் இந்தச் சொல்லின் பண்பாட்டுச் சிறப்பைப் பாருங்கள்! சொந்தக் காலில் நிற்க வேண்டுமே அன்றி, கடனாகக் கூடஏற்பது இகழ்ச்சிஎனும் சுயமரியாதை இதற்குள் கிடக்கிறது! அடகு வைப்பது சொத்தை அல்ல,  தன்மானத்தையாம்! பேச்சு வழக்கில் அடைமானம் அடமானம் என, எனும் நெடில், என குறில் ஓசை பெறுவது ஐகாரக் குறுக்கம். ஆனால்,  எழுதும்போது சேர்த்து எழுதுவதே மரபு. அதாவது, எழுதும்போது பழைமை, உடைமை, புடைவை, தமையன், ஏழைமை, அடைமானம் என எழுதுவதை, பேச்சு வழக்கில் பழமை, உடமை, புடவை, தமயன், ஏழமை, அடமானம் என்றே சொல்கிறோம்.  எனினும் பேச்சு மொழியை எழுத்து மொழியில் எழுதுவது வழக்கமாகி வரும்போது, இந்த  எழுத்து மரபை  அறிந்திருப்பதும் அவசியம்.

உளமாற – உளமார?  

   நண்பர்கள் ஆரத் தழுவிக் கொள்வதும், வாயார வாழ்த்துவதும், உளமாரப் புகழ்வதும், வயிறார உண்பது சரிதான். இதை மனமாற என்றால், மனம் மாற என்னும் தவறான பொருள் தந்துவிடும்.

வான வேடிக்கை – சரியா?  

    வானத்தில்  நடப்பதால்   வானவேடிக்கை ஆகிவிடாது! வானமா வேடிக்கை காட்டுகிறது? வானத்தில் நாம்தானே வேடிக்கை காட்டுகிறோம்? வாணம் என்றால் வண்ணவெடிச் சரம். எனவே ‘வாண வேடிக்கை’ என்பதே சரி. ‘புஸ்வாணம்’ என்பது வெடிக்காமலே ‘புஸ்‘ என ஒலி-ஒளியைத் தருவதால் வந்த பெயர். இதை, ‘எதிர்பார்த்தது நடக்காத’ போது, கிண்டலாக, ‘புஸ்வாணம் ஆயிருச்சு!’ என்னும் வழக்கில் கேட்கலாம்.

வீடு கட்ட, பூமியைத் தோண்டுவதையும் ‘வானம் தோண்டுவது’ என்னும் வழக்கு வியப்பானதுதான்! ‘மதுரையில்மெஜுரா மில்’ கட்ட வானம் தோண்டிய போது ரோம நாணயங்கள் கிடைத்தன!’ என்பது, சொல்லாலும் பொருளாலும் வியப்பூட்டும் தமிழ் நுட்பம்! 

 --------------------------------------------

 தமிழ் இனிது     (17)                      

(நன்றி - இந்து தமிழ் -03-10-2023 - செவ்வாய் ) 
------------------------------------------------------------------- 
 'அண்ணா'வை   கைவிடலாமா?

சொற்களைப் புரிந்து கொள்ள, நேரடியாக அகர முதலி -Dictionary- யில் தேடுவதை விடவும், சூழலுடன் அச் சொல்லைப் பொருத்திப் பார்க்கும் போதுதான் தெளிவு கிடைக்கும்.

மேல்நாடும், கீழத்தெருவும் –   

தமிழ் வழக்கில், “மேல்நாடு” என்பதை, மேற்குலக நாடு என்றே புரிந்து கொள்கிறோம். சிலருக்கு, “மேற்கில் உள்ள நாடா, மேலான நாடா?” என்று சந்தேகம் வருவதும் இயல்பு. தமிழில் மேற்கு கிழக்கு என்பன திசைகளைக் குறித்தாலும், உயர்ந்த, தாழ்ந்த என்றும் பொருள் உண்டு! தமிழ்நாட்டின் மேற்கில், உயரமான மேற்கு மலைத்தொடரும், கிழக்கில், தாழ்வான நிலப்பகுதிகளும் இருப்பதிலிருந்து இக்கருத்து வந்திருந்தாலும், சமூக ஏற்றத்தாழ்வைக் குறிப்பதும் ஆய்வுக்குரியது.  (குறள்-973). பெரும்பாலான சேரிப் பகுதிகள், ஊருக்குக் கிழக்கிலேயே இருப்பதைச் சிந்தித்தால் இது விளங்கும். “சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு இருமைத் தன்மை” என்று, இதுபற்றி ஒரு அத்தியாயமே எழுதுகிறார் “ஒரு பண்பாட்டின்  பயணம்” எனும் பெருநூலின் ஆசிரியர், திரு ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., இந்தக் கருத்து வியப்புக்கு மட்டுமல்ல சமூகவியல் ஆய்வுக்கும் உரியது.

எல்லாரும், நல்லோரும்

            இலக்கிய வழக்கில் “எல்லோரும்“ என்னும் சொல், பேச்சு வழக்கில் “எல்லாரும்“ என்றே வருகிறது. “எல்லாரும் ஓர் விலை” - பாரதி பாடல், சில பதிப்புகளில் “எல்லோரும்” என்றும் அச்சாகியுள்ளது! “எல்லார்க்கும் நன்றாம் பணிதல்”-குறள்-125. இதேபோல, “நல்லாரைக் காண்பதுவும் நன்றே” என்கிறார் ஔவை. இதற்குத் தொல்காப்பியரும் “ஆ ஓ ஆகும்.. …செய்யுள் உள்ளே”–“அதாவது, நல்லார் என்பது நல்லோர் என்றும் வரும்” - என்று ஒப்புதல் தருகிறார் (தொல்-680). எனவே,  இரண்டு சொற்களில் ஏதேனும் ஒன்றை ஓசைக்கேற்பப் பயன்படுத்தலாம்.  

  மூத்த சகோதரர் எதற்கு?

            பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்கலாம், பிறநாட்டவரின் கண்டுபிடிப்புகளை, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் பயன் படுத்தும் போது, அவர்களின் சொற்களைப் பயன்படுத்துவதும் இயல்பே. ஆனால், அந்தச் சொற்களில் தமிழ் மரபின் கவனமும் தேவை.

             ‘அண்ணன்’ எனும் ஒற்றை உறவுச்சொல் ஆங்கிலத்தில் இல்லை. அதில் ‘Elder Brother’ தான். அதற்காக ஆங்கில வழியில்  ‘மூத்த சகோதரர்’ என்று தமிழைப் படுத்தலாமா? அண்ணன் என்னாவது? waterfalls-ஐ  ‘நீர்வீழ்ச்சி’ என்றால் ஏற்கெனவே இங்கிருக்கும் அழகு தமிழ் ‘அருவி’ வருத்தப்படாதா? இவைபோலும் சொற்களில் மிகுந்த கவனம் தேவை! ஆடம்பரத்திற்காகக் கடன் வாங்கினால் வாழ்க்கை சீரழியும், அலட்சியமாகச்  சொற்களைக் கடன்வாங்கினால் தமிழும் சீர்குலையும்.   

காந்தீயமா? மார்க்சியமா?   

காந்திய வாதிகள் தீயவற்றைப் பார்க்க, பேச, கேட்க வேண்டாம் என்று மூன்று குரங்குகள் உணர்த்தும். இருந்தும் சிலர் “காந்தீயம்” என்று எழுதுகிறார்கள், இது தவறு. “இசம்“ (ism) எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம்தான் “இயம்”என்பது. இதன்படிப் பார்த்தால் காந்தியம், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், என்பனவே பொருத்தமான சொற்கள். இதே போல, பாசிசம், நாசிசம், என்கிறார்கள்! தமிழ் மரபின்படி ‘பாசியம்’, ‘நாசியம்’ என்றல்லவா எழுத வேண்டும்?! சர்வாதிகாரத்தைத் தமிழ் விரும்பவில்லை போலும்! குறள்-அதிகாரத்தை ஏற்கும் தமிழ், சர்வ-அதிகாரத்தை ஏற்பதில்லை என்றே தோன்றுகிறது. இதுதான் தமிழ் அறம்! ஏனெனில் தமிழ் இனிது! 


------------------------------------------------------------------ 

 நமது “தமிழ் இனிது” தொடர் பற்றி,

03-10-2023 - காலை “கலைஞர் தொலைக்காட்சி” 

“ஒன்றே சொல் நன்றே சொல்” பகுதியில் பேசிய  

அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்கள்,

மனம் திறந்து வாழ்த்தி, பாராட்டினார்கள்.

4-நிமிடம் கடந்த அவர்களது உரையைப் பெற்று

பதிவிட முயல்கிறேன்.

(நண்பர்கள், கிடைத்தாலும் அனுப்பலாம்)

-------------------------------------

10 கருத்துகள்:

  1. அருமை சொல்லிச் செல்லும் பாங்கு பாமரனான எனக்குகூட இயல்பாக ஒன்றி வருகிறது. மிக்க மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு..,...

    பதிலளிநீக்கு
  3. அருமை ஐயா! வழக்கம் போலவே சுவையான, தமிழ் நுட்பங்கள்!

    ‘வானம் தோண்டுதல்’ எனும் சொல்லாடல் இதுவரை அறியாத ஒன்று.

    உளமார, மனமார, காலார போன்ற சொற்களில் பலரும் குழம்புவதுண்டு. என்னிடம் கூட ஒருவர் கேட்டார். பலருக்கும் எழும் இந்த ஐயத்தைத் தீர்த்து வைத்தமைக்கு நன்றி!

    அடமானமா அடைமானமா என்கிற குழப்பம் எனக்கும் இருந்தது. தெளிவுறுத்தியமைக்கு நன்றி! ஆனால் இந்தச் சொல்லுக்குள் இப்படி ஒரு வாழ்வியல் நுட்பம் இருக்கும் என்று சிந்தித்ததில்லை. மிக்க மகிழ்ச்சி அறிந்ததில்!

    மனத்தில் எனும் சொல் மனதில் என மாறக் காரணம் அது மனம் எனும் தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது என்பதை ஏற்காமல் மனஸ் எனும் வடமொழிச் சொல்லிலிருந்து வந்ததாக நம்பப்படும் தவறான கருத்தினால் இருக்கலாம் என்பது என் பணிவன்பான கருத்து.

    நாசியம், பாசியத்துக்கான தமிழ் சார் விளக்கம் அசத்தல்!😍😍 ஆனால் இது நீங்கள் நயம் கருதிச் சொன்னது. இதையே வழிகாட்டலாக எடுத்துக் கொண்டு "நாசிசம், பாசிசம் என்றுதான் தொடர்ந்து எழுத வேண்டும். காரணம், தமிழ் வல்லாதிக்கத்தை ஏற்காது" என்பதாக யாரும் புரிந்து கொண்டு விடக்கூடாது. அந்தளவுக்குப் போக மாட்டார்கள் என நம்புவோம்! :-)

    ஆனால் எனக்கோர் ஐயம் ஐயா! Ism என்பதன் தமிழாக்கம்தான் இயமா? நம்மிடம் ஏற்கெனவே இலக்கியம் எனும் சொல் இருக்கிறதே? நான் இதுகாறும் இயம் என்பது இயல் எனும் சொல்லிலிருந்து பிறந்தது என்றே புரிந்திருந்தேன். தவறோ?

    கிழக்கு மேற்கு - கீழ் மேல் ஆகியவற்றுக்கான விளக்கத்தின் வாயிலாக ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ நூலையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டீர்கள்! மிக்க மகிழ்ச்சி!

    இராசராச சோழன் காலத்தில் உயர்சாதியினர் வாழ்ந்த மேலத்தெரு உயரமாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்விடமான கீழத்தெரு தாழ்த்தியும் கட்டப்பட்டு, மேலத்தெருவில் மழை பெய்தாலும் அது கீழத்தெருவிலேயே சென்று தேங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்ததாகப் படித்திருக்கிறேன். நீங்களே கூட ஒருமுறை இதை எழுதியதாக நினைவு. உயர்சாதியினரின் வாழ்விடத்துக்கும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்விடத்துக்கும் மேலத்தெரு, கீழத்தெரு எனப் பெயர் வைக்கும் வழக்கம் இதன் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம் என நினைக்கிறேன்.

    எல்லாரும், எல்லோரும் ஆகிய இரண்டுமே சரிதான் என்பதைச் சிறியேன் அறிவேன். ஆனால் எப்படி எனக் கேட்டால் விடை பகரத் தெரியாது. (நல்லவேளை, இதுவரை யாரும் கேட்கவில்லை.) இனி இதைக் காட்டுவேன்.

    இல்லாத சொற்களுக்குக் கடன் வாங்கலாம். ஆனால் ஏற்கெனவே இருக்கும் சொற்களுக்கும் ஏன் அயல் மொழிகளிடம் கடன் வாங்கித் தாய்மொழியின் கையிருப்பைத் தொலைக்க வேண்டும் என்ற தங்கள் கேள்வி இன்றைய தலைமுறையினருக்குச் சென்று சேர வேண்டும்! அண்ணாவைத் தமிழ்நாடு மறவாதிருக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  4. யாவர்க்குமாகா தமிழினுக்கிப் பெரும் பணி.. வாழிய!!!

    பதிலளிநீக்கு
  5. சிறப்பு தோழர் ///சொற்களைப் புரிந்து கொள்ள, நேரடியாக அகர முதலி -Dictionary- யில் தேடுவதை விடவும், சூழலுடன் அச் சொல்லைப் பொருத்திப் பார்க்கும் போதுதான் தெளிவு கிடைக்கும்//// நல்ல உதவும் அறிவுரை, நன்று, பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  6. நன்றி நன்று ஐயா

    பதிலளிநீக்கு
  7. கை என்ற சொல்லுக்குச் சிறிய என்றும் பொருளுண்டு என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். இது போல் பூமியைத் தோண்டுவதற்கு, வானம் தோண்டுவது என்றும் சொல்வழக்கு இருக்கிறது என்பதும், எனக்குப் புதுச்செய்தி. மிக்க நன்றியண்ணா!

    பதிலளிநீக்கு
  8. "பாசிசம், நாசிசம், என்கிறார்கள்! தமிழ் மரபின்படி ‘பாசியம்’, ‘நாசியம்’ என்றல்லவா எழுத வேண்டும்?! சர்வாதிகாரத்தைத் தமிழ் விரும்பவில்லை போலும்!" இதை ரசித்து வாசித்தேன். "அலட்சியமாகச் சொற்களைக் கடன்வாங்கினால் தமிழும் சீர்குலையும்" சிறப்பான எச்சரிக்கை! மிக அருமையண்ணா!

    பதிலளிநீக்கு