மாணவர் படிக்க நூல்பட்டியலும், பார்க்க தமிழ்ப்படப் பட்டியலும் தயாரிப்போம் வாருங்கள்...!

இன்று மோக முள் -   படம் பார்த்தீர்களா? 
                             இன்று (17-12-2012) காலையிலேயே “கே.டிவி.” யில் “மோகமுள்” படம் போட்டிருந்தார்கள்... மீண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்த படம், இருந்து ரசித்துப்  பார்க்க முடியாத நேரத்தில்.... கிளம்பிக் கொண்டே குளிக்கவும், உடைமாற்றவுமான இடைநேரத்தில், (கணினி ப்பொறியியல் படித்துக்கொண்டு, விடுமுறைக்கு வந்திருந்த) என் மகளிடம் அந்தக் கதைபற்றிச் சொல்லிக் கொண்டே வந்தேன்.. அவளும் கேட்டுக்கொண்டே, பார்த்துக்கொண்டே...  விளம்பர நேரத்தில் மற்ற அலைவரிசையில் என்ன நடக்கிறது என்பதிலும் கவனமாக இருந்தாள்...
                            என்ன வலிமையான எழுத்து!... தி.ஜா.வின் எழுத்து! அசந்தால் நம்மை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும் ஆபத்தான எழுத்து!
                            புதுமைப் பித்தனை - சமூக அங்கத எழுத்தாளன் எனலாம்,
                            கு.ப.ரா.வை - பெண்மனச் சித்தன் எனலாம்,
                            ஜெயகாந்தனை - அடித்துப் பெய்த கதைமழை எனலாம்,                          
                            கந்தர்வனை - அழகான கதைசொல்லி எனலாம்,
                            மேலாண்மையை - கிராமத்து நிழல் எனலாம், -- எனில்,
தி.ஜா.வை “ஆபத்தான கதைசொல்லி“ எனலாம் என்பதே எனது கருத்து.

              பள்ளியில் படித்த போது, பொன்னியின் செல்வனையும், யவனராணியையும் ஒளித்து வைத்துப் படித்ததும், கல்லூரிக்கு வந்தபின் மு.வ.,நா.பா.,வுக்குப் பிறகு தி.ஜா.வை ரசித்ததும் பின்னர் ராகுல்ஜி வந்து எல்லாவற்றையும் புரட்டிப் போட, புது்மைப் பித்தனோடும் பாரதி-பாரதிதாசன்-பிறகு புதுக்கவிதைகள் என வந்ததும் நினைவுக்கு வந்தது. வெறிபிடித்துப் படித்துத் திரிந்து நூலகம் நூலகமாக அலைந்து படித்தும், ஊர்ஊராக அலைந்து இலக்கியக் கூட்டம் கேட்டும் திரிந்த  காலம்... நம்மை இப்போதும் ஏங்க வைக்கும் கல்லூரிக்காலம்!
                          இப்போதெல்லாம் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளை நாமே மற்ற புத்தகங்களைப படிக்க விடுவதில்லையே! மதிப்பெண் போய்விடும் என்று பெற்றோர்களைப் போலவே ஆசிரியர்களும் கவலைப் பட வேண்டியிருக்கிறதே! ( தப்பித் தவறிப் படிப்பவர்களை வேலைக்குப் போகும் படலமும், வீட்டு-நாட்டுச் சூழலும்  “சரி“பண்ணி விடுகிறதே!)
                         பள்ளி-கல்லூரி மாணவர்கள் படிக்கவேண்டிய சிறுகதைகள், கவிதை-கட்டுரைத் தொகுப்புகளுடன், பார்க்க வேண்டிய திரைப்படங்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் என்ன? 
                 மேல்நிலைப் பள்ளி மாணவர் பார்க்கவேண்டிய தமிழ்ப்படப்பட்டியல் -
                            1.பராசக்தி,
                            2.நாடோடி மன்னன்
                            3.அவள் ஒரு தொடர்கதை
                            4.வேதம் புதிது
                            5.வீடு
                            6.சில நேரங்களில் சில மனிதர்கள்.
                            6.மகாநதி
                            7.பம்பாய்
                            8.மொழி
                            9.பேராண்மை
                            10..வழக்கு எண்18/9 - இது எனது பட்டியல்
 இதே போல பள்ளி மாணவர்க்குத் தனியாகவும் கல்லூரி மாணவர்க்குத் தனியாகவும் படிக்கவேண்டிய புத்தகப் பட்டியலையும் பார்க்க வேண்டிய குறும்படங்களின் பட்டியலையும் தயாரிக்கலாமா? வாருங்கள்.. தயாரிப்போம்.
இது பற்றிய நண்பர்களின் கருத்தறிய ஆவலாக இருக்கிறேன்.
க.நா.சு.மட்டும்தான் பட்டியல் போடவேண்டுமா?  நாமும் போடலாம்தானே?
                ----------------------------------------------------------------------------


3 கருத்துகள்:

 1. Geetha M
  6:31 pm

  நல்ல சிந்தனை வரவேற்கிறோம்.வாழ்த்துக்கள்.
  வாகை சூட வா படமும் சேர்த்துக்கொள்ளலாமே.நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நன்றாகச் சேர்த்துக் கொள்ளலாம் கீதா.
  இதை ஒரு பட்டியலாகவே நீங்கள் தரலாமே? அதையும் தனி அஞ்சலாக இல்லாமல், நேரடியாகவே அந்தப் பக்கத்தின் கீழ் தந்தால் அப்படியே (கீதா சொல்வதாக முத்துநிலவன் சொல்கிறார் -என இல்லாமல்) நீங்களே சொல்வதாகச் சொல்லலாமல்லவா?
  எங்கே பட்டியல்...?

  பதிலளிநீக்கு
 3. இதோ எனது பட்டியல்...

  யார் யார் எந்தெந்த திரைப்படம் பார்க்கலாம் என்று எனக்கு வகுதுக்கூற இயலவில்லை...

  உன்னால் முடியும் தம்பி
  அஞ்சலி

  முதல் மரியாதை
  ஹே ராம்
  அன்பே சிவம்
  கன்னத்தில் முத்தமிட்டால்

  வறுமையின் நிறம் சிகப்பு
  சலங்கை ஒலி
  புன்னகை மன்னன்
  மூன்றாம் பிறை
  உதறி பூக்கள்
  ஆறிலிருந்து அறுபதுவரை

  கர்ணன்
  பார்த்திபன் கனவு (1960)
  தில்லானா மோகனம்பாள்

  பதிலளிநீக்கு