நான் எழுதிய நான்காம் சிறுகதை - நா.மு.


மாமா  கையில குப்பை - சிறுகதை
                            
     மாமா! மாமாவ்…”
     பள்ளிக்கூடத்திலிருந்து வந்த வாக்கில் புத்தக மூட்டையைக் கடாசிவிட்டு மாமனைத் தேடினாள் பத்து.
     என்னடீ! நான் இங்கிருக்கேன்..
     ம்.. வந்துமாமா பொங்கல்னு சொல்லேன்.
     ஓகோ! இன்னிக்குப் பள்ளிக்கூடத்திலேர்ந்து புது விளையாட்டு கத்துக்கிட்டு வந்திருக்கியாக்கும்..ம்..சரி பொங்கல்.
     உங்க வாயில செங்கல்ஹய்யா மாமா வாயில செங்கல்…”
     குதித்துக் குதித்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டே கொல்லைப் பக்கம் ஓடினாள்.
     கொஞ்சநேரத்தில் ராஜசேகர் ஆபீஸில் இருந்து வந்தார். பத்துவின் அப்பா. அவர் கைலியில் நுழைந்து கால்கை கழுவி முகத்தைத் துடைத்துக் கொண்டே சாம்புவிடம் என்னடா சி.சி. கிடைச்சிதா? என்றார்.
     தற்காலிக வேலைகளில் அங்கங்கே ஓட்டிக் கொண்டிருக்கும் சாம்பு சர்வீஸ் கமிஷன் குரூப்-டூ எழுத விண்ணப்பம் போடவே இரண்டு நடத்தைச் சான்றிதழ் தேவைப்பட்டது. அதுவும் நாளை தான் கடைசித் தேதி.
     ஒன்று கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வரிடம் வாங்க வேண்டும் - அது ஏற்கனவே இருக்கிறது. இன்னொரு சான்றுதான்
     என்னடா சாம்பு! சி.சி. கிடைச்சுதான்னு கேட்டேன் பேசாம இருக்கே!
     இல்லத்தான் காலேஜ்ல ஃபேர்ன்னு போட்டதுனால வெளியில நோட்டட் பர்ஸன் கிட்ட வாங்குறதாவது குட்ன்னு இருக்கணுமாம்.  சொல்றாங்க. என் ஃபிரண்டு அவனுக்குத் தெரிஞ்சவர் மூலமா வாங்கலாம்னு இப்ப ஆறு மணிக்கு வரச் சொல்லியிருக்கான்.
     சாம்புவும் ராமுவும் ஒளவையார் சிலையில் திரும்பி எலியட்ஸ் ரோடில் சைக்கிளை மிதித்தார்கள். மீன் மார்க்கெட்டைத் தாண்டி பாலத்து முக்கில் வரும்போது தன்னையறியாமல் கன்னத்தில் போட்டுக் கொண்டான் ராமு. அனுமார் கோவில் தெரிந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் டீக்கடை ஸ்ரீதரன் நினைவும் அவர் சொன்ன இந்த அனுமார் கோவில் தல புராணமும் சாம்புவுக்கு நினைவுக்கு வரும்.
     டேய்! சாம்பு! சைக்கிளை வேகமா மிதிடா. மணி ஆறாகப் போகுதுடா. சாம்புவும் கேரியரில் ஃபைல் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்தான்.
     அந்தக் காலனியைத் தாண்டி முத்தையா தோட்டத்தெரு முக்கில் இவர்கள் முன்பு குடியிருந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே போன போது கொஞ்சம் தள்ளியிருந்த சாராயக்கடையைப் பெருங்கூட்டம் கவிந்து கிடந்தது. இரண்டு பேரும் சைக்கிளை நிறுத்தி எட்டிப்பார்த்தபோது ஒரு ஆள் நோஞ்சலான ஒருத்தனைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான். அந்த நோஞ்சலான் கும்பிட்டுக் கீழே விழுந்து தீனமான குரலில் கத்தக் கத்த அடியும் உதையும் கண்மண் தெரியாமல் விழுந்தது. கூட்டத்தில் யாரும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.
     சாம்புவின் கண்களில் நெருப்பு எரிந்த போதும் காதுகளில்-உனக்கு எதுக்குடா சாம்பு இதெல்லாம் என்று சொல்வது வந்து விழுந்து அடக்கியது.
     ராமுவோ எந்த உணர்ச்சியுமில்லாமல் அடி வாங்கியவனின் சட்டையும் சதையும் கிழிந்து தொங்குவதை-ஏதோ சினிமாப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான் - எல்லாரையும் மாதிரியே.
     சாம்புவும் ராமுவும் வேறு பக்கமாக சைக்கிளை வேகமாக மிதித்தார்கள்.
     சாம்பு மீண்டும் மெதுவாக ஆரம்பித்தான். பக்கத்திலிருந்த பெரிய லாட்ஜைக் காண்பித்து ரகசியமான குரலில் இந்த லாட்ஜ்லதாண்டா என் ஃபிரண்டு ஒருத்தன் மெடிக்கல் ரெப்ரசண்டேடிவ் தங்கியிருந்தான். ஒருநாள் நான் அவனைப் பார்க்கப் போனப்ப சும்மா மூனாவது மாடிக்கு மேல இருந்த மொட்டை மாடிக்குப் போனோம். சாந்திரம் அஞ்சு மணியிருக்கும் லாட்ஜீக்கு பின்பக்கத்துல ஒரு ரெட்டை மாடி வீடு பெரிசு. நாங்க பாத்திட்டிருக்கும் போதே அந்த வீட்டு மாடி வராண்டாவுல ஒரு பொண்ணு புடவையும் ரவிக்கையுமில்லாம வெறும் பாவாடை பாடியோட கையால மார மூடிக்கிட்டு தடதடன்னு ஓடியாந்தாபின்னாலயே ஒருத்தன் ஓடி வந்து அவ முடியப் பிடிச்சு தரதரன்னு இழுத்துக்கீழே தள்ளி அந்த மாடி வராண்டாவுல அவளை இம்சை பண்ண ஆரம்பிச்சான். அதுக்குள்ள இன்னொரு ஆளும் வந்து ரெண்டு பேருமா ரூமுக்குள்ள கொண்டு போயிட்டாங்க பட்டப் பகல்லேயே பாவம் யாரு வூட்டுப் பொண்ணோ? வேலைக்கு வந்ததோ இல்ல ஏதாச்சும் உதவி கேட்டு வந்த புள்ளையோ தெரியல
     சரி சரி சாவன்னா வீடு வந்திருச்சு பேசாம வா! ராமு சைக்கிளிலிருந்து இறங்கினான்.
     ராமுவுக்குப் பக்கென்றது. இந்த வீடா? பெரிய மாளிகை மாதிரி இருந்தது. அந்த லாட்ஜிலிருந்து பார்க்கும்போது பின்பக்கம் இந்த அளவுக்கு இல்லையே!
     கூர்க்காவிடம் ராமு பேசிக் கொண்டிருக்கும்போதே சும்மா உள்ளே பாhத்த சாம்புவுக்கு அந்தச் சூழ்நிலையே ஒருவித பயங்கலந்த மரியாதையைக் கொடுத்தது.
     பெரிய கேட்டுக்குள் இருந்த சின்னக் கதவை கூர்க்கா திறந்து விடவும் சைக்கிளை வெளியே வைத்துப் பூட்டிவிட்டு பூ வளைவின் ஓரமாக இருவரும் நடந்து உள்ளே போனார்கள்.
     பாலிஷ் போட்ட சிமெண்ட்டில் வாசல் பரந்து கிடந்தது - இவர்கள் குடியிருந்த வீட்டை விடப் பெரிய அளவுக்கு.
     இவனைக் கையமர்த்திவிட்டு உள்ளே போனான் ராமு.
     எத்தனையோ தடவை இந்தப் பக்கமாகப் போய் வந்தவன்தான் சாம்பு. இப்போது தன் வேலையாக சாவன்னாவுடன் வீட்டுக்குள் வரும்போதுதான் ஒவ்வொன்றும் இவனைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பது போலப் பட்டது.
     வாசலில் தடதடவென்று புல்லட் சத்தம் கேட்கவும் வெளியே பார்த்தான் சாம்பு. மறைவாக நின்று இழுத்துக் கொண்டிருந்த பீடியை அவசரமாக அணைத்துத் தூர வீசிவிட்டு ஓடிவந்த  கூர்க்கா பெரிய கதவைத் திறந்து விட்டான் புல்லட் அடிக்கடி இங்கே வரக்கூடியதாக இருக்க வேண்டும். பூ வளைவில் நுழைந்ததும் இஞ்சினை ஆஃப் பண்ணிவிட்டு வாசலில் வந்து சத்தம் போடாமல் நின்ற புல்லட்டிலிருந்து இறங்கியவனைப் பார்த்ததும் ஆடிப் போனான் சாம்பு.
     வரும் வழியில் அவர்கள் சாராயக் கடை வாசலில் கண்ட நிகழ்ச்சி கண்முன் விரியவும் கால்கள் தாமாக ஒதுங்கிக் கொண்டன.
     இவனை ஒரு கருடப் பார்வை பார்த்தபடி புல்லட் படியேற அதே நேரத்தில் ராமு பக்கத்து அறையிலிருந்து வெளியே வந்தான்.
     கண்டு கொண்டு வணக்கம் போட்ட ராமுவைக் கண்டு கொள்ளாமலே போனான் அவன்.
     படியிறங்கி சாம்புவிடம் வந்த ராமு மெதுவான குரலில் சாவன்னா இருக்காரு. யாரோடவோ பேசிட்டிருக்காரு போல. கூட ஒரு கார் நிக்கிதில்ல. மேனேஜர் நமக்குத் தெரிஞ்சவரா இருந்தது நல்லதாப் போச்சு. கொஞ்சம் இருக்கச் சொன்னார் என்றான்.
     முகத்தில் சலனமில்லாமலிருந்த சாம்புவைக் கவனித்த ராமு என்னடா ஒரு மாதிரி இருக்க! சும்மா ரிலாக்ஸா இரு என்று சொல்லிவிட்டு மீண்டும் குரலைத் தாழ்த்தி புல்லட்ல வந்தது யாருன்னு கவனிச்சியா எல்லாம் சாவன்னாவோட ஆளுதான். இவுங்க மாதிரி ஆளுங்க தன்கிட்ட வந்துட்டா எவனுக்கும் எதுவும் செய்வாங்க. வரலயின்னாதான் வம்பே வரும். சட்டம்கிட்டமெல்லாம் இங்க இருந்துதான்ன என்று சொல்லிவிட்டு அதிகமாகப் பேசிவிட்டது போலச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சட்டென்று நிறுத்தி சத்தமில்லாமல் சிரித்தான் ராமு.
     உள்ளே மேனேஜர் ரூமுக்குள் மணியடித்தது. ஒரு ஆள் வேகமாய்ப போய்விட்டு மேனேஜரிடம் வந்து உங்கள அய்யா கூப்பிடறாங்க என்றதுமே வெளியே வந்த மேனேஜர் ராமுவைப் பார்த்து கொஞ்சம் உள்ள உக்காரு தம்பி இதோ வந்திர்றேன் என்று கூறிவிட்டுப் போனார்.
     சாம்புவையும் அழைத்துக் கொண்டு மேனேஜர் ரூமில் போய் உட்கார்ந்தான் ராமு. சாம்புவுக்கு ஏதோ புதுவேலைக்குச் சேர்ந்த இடத்தைப் பார்ப்பது மாதிரி படபடப்பாய் இருந்தது. சுற்றும்முற்றும் பார்த்தவாறு பேசாமலே இருந்தான்.
     மேனேஜர் வந்ததும் எழுந்து வணக்கம் சொன்னான்- இவரை எங்கியோ? சாம்புவைப் பற்றி விசாரித்தார் ராமு சொன்னான். ஓகோ! நம்ப ஹைவே ஆபீஸர் ராஜசேகரனோட மச்சினனா நீ? என்று ரொம்பத் தெரிந்தது போல சொல்லிவிட்டு. சி.சி. நெயைப் வந்து கேக்குறாங்கன்னு எங்கிட்டே கையெழுத்துப் போட்டு நெறையக் குடுத்திருந்தார்ப்பா. நாந்தான் ஊர் பேர் ஃபில் அப் பண்ணித் தர்றது. இன்னிக்கு காலையிலதான் தீர்ந்தது. உனக்கு இன்னிக்கே வேணுமா?
     ஆமா சார் மொட்டையா சொன்னான் சாம்பு. நாளைக்குள் குரூப்-டூ அப்ளிகேஷன் போடணும் சார். அதான் என்று முடித்ததான் ராமு.
     சரி சரி செக்ரடேரியட்லேர்ந்து ஒரு ஆபீசர் வந்திருக்காரு. போனதும் அய்யாட்ட நேர்ல வாங்கித் தர்றேன்ம்? மேஜைக்கு எதையோ தேடுவதும் எடுப்பதும் வைப்பதுமாக இருந்தார். இவரை எங்கியோ ஒரு இடத்துல…’ சட்டென்று நினைவு வரவில்லை சாம்புவுக்கு.
     கொஞ்ச நேரத்தில் வாசலில் கார் கிளம்பியதும் அந்த கலெக்டர் போட்ட ஆர்டர் பர்ட்டிகுலர்ஸ்.. என்றவாறே மானேஜர் அறைக்குள் வந்தவரைக் கண்டதும் மேனேஜரும் ராமுவும் எழுந்தார்கள். சாம்புவும் எழுந்து கொண்டான். ராமு வணக்கம் சொன்னான். யாரு? என்றார் அவர்.
     ஒண்ணுமில்லிங்கய்யா கான்டக்ட் சர்ட்டிபிகேட்டுக்காக வந்தாங்க. நம்ம பையன்தான். இவன்  காண்ராக்டர் நாகராஜனோட தம்பி. அந்தப் பையன் ஹைவேஸ் ஆபிசர் மச்சினன். அய்யா கையெழுத்து போட்டுக் குடுத்திருந்த சி.சி.யெல்லாம் தீந்துருச்சு. அதான் இருக்கச் சொன்னேன்…”
     சாவன்னா இவர்களின் கைக்கும்பிட்டுக்குத் தலை அசைத்தவாறு மேனேஜரை உள்ளே வரச் சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
     சாம்புவுக்கு இப்போது ஞாபகத்துக்கு வந்துவிட்டது. இந்த வீட்டுக்குப் பின்புறமாக அடுத்த வீதியிலிருக்கும் லாட்ஜிலிருந்து பார்த்தபோது சே! சாவன்னாவும் மேனேஜரும்தானா அந்த?
     உடனடியாக இவர்களை அனுப்புவதற்கென்றே வந்தது போல சி.சி. வந்துவிட்டது. நன்றி சொல்லிவிட்டு சாம்புவின் பர்ஸிலிருந்து பத்து ரூபாயை எடுத்து மேனேஜரிடம் கொடுத்துவிட்டு நடந்தான் ராமு. மேனேஜர் ராமுவோடு வந்ததால்தான் கிடைத்தது. இல்லாவிட்டால் நாளைக்கு வரச் சொல்லியிருப்பேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
     வெளியில் வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பும்போது ராமு என்னென்னவோ சொல்லிக் கொண்டு வந்தான். சாம்பு பேசாமலே வந்தான். ராமுவை அவன் வீட்டில் விட்டுவிட்டு சாம்பு திரும்பியபோது கேரியரில் இருந்த சான்றுகள் ஃபைல் மலை மாதிரி கனத்துக் கொண்டு சைக்கிள் மிதிக்கவே சிரமப்பட்டான்.
     வீட்டுக்குள் நுழைந்து சான்றுகளோடு அத்தானைத் தேடிய சாம்புவை ஓடிவந்து கட்டிக்கொண்டாள் பத்து.
     மாமா மாமா தொப்பைன்னு சொல்லேன்…”
     தொப்பை.
     உங்க கையில குப்பை அய்யா மாமா கையில குப்பை…”
     குதித்துக் குதித்துச் சந்தோஷப்பட்டாள் பத்துக்குட்டி.
--------------------------------------------------------------- 
நான் எழுதிய நான்காவது சிறுகதை இது. “சாவி“ வார இதழில் வந்தது. 

1 கருத்து:

  1. அனுப்புனர்: Nehru Valaguru
    பெறுநர்: "நா.முத்து நிலவன்"
    தேதி: 17 டிசம்பர், 2012 3:14 pm
    நடத்தை சரியில்லாத ...களிடம்தான் நடத்தை சான்றிதழ் வாங்க
    வேண்டியிருக்கிறது. எதார்த்தம்தான், 4-kaam sirukathai - வாழ்த்துக்கள்.
    வா. நேரு

    பதிலளிநீக்கு