ஆசிரியர் தகுதித் தேர்வின் சமூகச் சிக்கல்

                     இன்று தமிழ்நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கும் பள்ளி மாணவர்க்கான அரையாண்டுத் தேர்வுப் பணிகளை எனது பள்ளியின் துணை முதல்வர் எனும் பொறுப்பில் நான்  பார்த்துக் கொண்டிருக்கும் போது, பயிற்சிப் பணிக்கு -ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து -வந்திருக்கும் ”மாணவ ஆசிரியர்”களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
                    இன்று பயிற்சி முடித்து விடை பெறும் ஆசிரிய-மாணவி ஒருவர், ஆசிரியர்கள் எல்லாருக்கும் இனிப்பு-காரம் கொடுத்துக் கொண்டு வந்தவர் எங்கள் முதல்வரிடம் கொடுத்துக்கொண்டே, “அப்படியே கையெழுத்தும் போட்டுவிடுங்க சார்” என்று சொல்லவும், வழக்கமாக இதற்கெல்லாம் கோபப் படும் அவர் இப்போது என்னவோ சிரித்துவிட்டு, “ஓ! அதுக்குத்தான் இந்த இனிப்பா?” என்று சிரித்துக் கொண்டே கேட்கவும்தான் அந்தப பெண்ணிற்குப் புரிந்தது போல... “சாரிசார் தெரியாம கேட்டுட்டேன்“ என்றார்.
                  “இப்படி அப்பாவியா இருக்கியேம்மா..” .என்று எனது கவலையைப் பகிர்நது கொண்டேன். நான் அவருக்கு வழிகாட்டி ஆசிரியர் என்பதால், ஒரு “அன்பளிப்பு“ பொட்டலத்தை நீட்டினார்.“கிப்ட்”ஆம்!
                    நான் சிரித்துக்கொண்டே “நன்றிம்மா“ நா இதெல்லாம் வாங்கிறதில்ல..” என மறுக்கவும் அவர் நம்புவதாகத் தெரியவில்லை...
“அட நிஜந்தாம்மா...”  என்று சொல்லி அவரை உட்காரச் சொல்லி அண்மையில் வந்திருக்கும் “டெட்” (ட்டி.இ.ட்டி) தேர்வு பற்றிச் சொல்லி இதன் சாராம்சம் என்னன்னு தெரியுமா எனக் கேட்க, அப்பாவியாய் அவர், தெரியலியே சார்... என்றார். உடன் அவருடன் பயிற்சிக்கு வந்திருக்கும் 7.8பேர் சேர்ந்து என் முகத்தைப் பார்க்கவும் எல்லாரிடமும் பேசினேன்.
                 பாவம் அவர்களுக்கு விஷயமே தெரியவில்லை என்று தெரிந்து கொண்டேன். அண்மையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் “ஆசிரியர் தகுதித் தேர்வு” வழியாக, பணியமர்த்தும் முறை மற்றும் “அக்ரிகேட் மார்க்” முறையில் தற்போது தனியார் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் -பி.எட். மற்றும் “இடைநிலை ஆசிரியர் பயிற்சி“ படித்துக் கொண்டிருக்கும் யாருக்கும் இன்னும் பத்தாண்டு ஆனாலும் வேலை கிடைக்கப் போவதில்லை எனும் செய்தி,அவர்களுக்கே தெரியவில்லை என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது!
              அதிர்ந்து போனதுபோல அவர்கள் நிற்கவும் நிலையை விளக்கிச் சொன்னேன். “நல்ல மதிப்பெண் எடுத்திருந்தால் அரசு ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் சேர்நதிருப்பீர்கள், அது இல்லாததால், 50ஆயிரம் முதல் ஒருலட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்துத் தனியார் நிறுவனங்களில் ப டிக்கிறீர்கள். ஆனால், தற்போது அரசு அறிவிப்பால், 12ஆம் வகுப்பு, இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியப்பயிற்சிக்கான மதிப்பெண்களையும் சேர்த்துத்தான் டி.இ.டி தேர்வுக்குப் பின் (அக்ரிகேட்) மதிப்பெண் போடுகிறார்கள் எனவே நீங்கள் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?“ என்று கேட்ட போது உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தவர்களாக நின்றுவிட்டார்கள்...
            மிகச் சிறந்த மதிப்பெண் எடுத்த - மிகச்சிறந்த அறிவுக்கூர்மையுள்ள ஆசிரியர்கள் தமிழ்நாட்டு மாணவர்ககுக் கிடைப்பது நல்லதுதான். ஆனால், இவர்களைப் போல மதிப்பெண் இல்லாமல் (1200க்கு 500, 600மதிப்பெண் எடுத்து)  அதனாலேயே தனியாரிடம் பணம் கொட்டித் தற்போது -2012-2013 கல்வியாண்டில் ஆசிரியப் பயிற்சியைப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?  இவர்கள் “டெட்” தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் “அக்ரிகேட்” மதிப்பெண் கிடைக்காது!  இதேபோல, 10-15ஆண்டுகளுக்கு  முன் கல்லூரிகளில் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் “டெட்” தேர்வில் இளைஞர்களோடு போட்டி போட முடியாமல் தேர்வாக முடியாது!  அவர்களின் நிகழ்காலமே கேள்விக்குறியாக இருக்கும்போது எதிர்காலம் என்னவாகும்?
           தகுதி திறமை இளமை எல்லாம் சரிதான், லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை, கனவு என்னவாகும் என்னும் கேள்வியை அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது என்றே தோன்றுகிறது. இது ஒரு சமூகப் பிரச்சினை என்பதை ஏன் யாரும் ?புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? இவர்களின் இந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு வழக்கு மன்றம் செல்ல வாய்ப்பிருப்பதாகவும், வழக்கு மன்றம் நியாயமாக சிந்தித்தால் இவர்களுக்கான “அக்ரிகேட்” மதிப்பெண் மாற வாய்ப்பிருப்பதாகவும்தான் எனக்குத் தோன்றுகிறது.
          தகுதி திறமை என சமூகப் பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாத தலைவர்களைத்தான் தந்தை பெரியார் சிந்தனைச் சாட்டை கொண்டு சொடுக்கி எடுத்து அண்ணல் அம்பேத்கர் கொண்டுவந்த அரசியல் சட்டத்தை முதன் முதலாகத் திருத்தம் செய்ய வைத்த வரலாறு எல்லாருக்குமே மறந்துவிட்டதா? இப்போது “புதிய ரிசர்வேஷன்“ மறைமுகமாக நடைமுறையாகிக் கொண்டிருக்கிறதா?  கொஞ்சம் யோசியுங்கள் புரியும்!
          மாணவர்கள் நன்றாக இருக்க ஆசிரியர்களும் நன்றாக இருக்க வேண்டுமல்லவா? இதில் அவசரப் படுவது இருவருக்குமே கேடாக முடிந்துவிடக் கூடாதுஅல்லவா?  என்ன நாஞ்சொல்றது சரிதானுங்களா?
----------------------------------------------------------------------------------------------------

10 கருத்துகள்:

 1. சரியாத்தேன் சொல்லியிருக்கீக.. செலவுக்குக் காசுகேட்டவனுக்குச் செனை ஆட்டைக் காட்டுனான்னு தெற்கத்திப் பழமொழி ஒன்னு இருக்கு.. நடப்புலயும் அதேன்.. நறுக்குன்னு சொல்லியிருக்கீக..

  பதிலளிநீக்கு
 2. அருகிப்போன வேலைவாய்ப்பில் போட்டிகளால் சாதிகள் மோதிக்கொள்கின்றன. மார்க் நிறைய எடுத்த நல்லா சொல்லிக்கொடுத்துறுவாரா? என்ன செய்ய மார்க்கட்ல அதிகமா வரத்து வந்துருச்சு எப்படியாவது கழிச்சுவிடனுமே!
  ஹரிகர்ன
  கத்தார்.

  பதிலளிநீக்கு
 3. நாஞ்சொல்லி என்ன பண்ண பாவலரே? கேக்குறவன் கேணையா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டையில கே.டி.வி தெரியுமாம்! புரிய வேண்டியவங்களுக்குல்ல புரியணும்?
  இருந்தாலும் -
  “சொல்லுறத சொல்லிபுட்டேன், பண்ணுறத பண்ணிடுங்க” ப.கோ.பாடல்தான்...!

  பதிலளிநீக்கு
 4. ஆங்! அதுதான், அதேதான்!
  நல்ல அறிவாளிகளாக - முதல் மதிப்பெண் எடுத்தவர்களாக - ஆசிரியர்களின் தகுதி இருக்கவேண்டும் என்பது முக்கியம்தான்.
  ஆனால் ஆசிரியரின் முதல் தகுதி - அன்பா? அறிவா?-ன்னு பட்டிமன்றம் நடத்தினா நான் அன்பு அணிதான்.
  அதனால் அறிவு வேண்டாம்னு் அர்த்தமில்ல...
  “அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
  மக்கட்பண் பில்லா தவர்” (குறள்-997)
  இது நம்ம முப்பாட்டன் குறளான் சொன்ன திருவாசகமல்லவா? அதுதான்... அதேதான் நாஞ்சொல்றது!
  உங்க கருத்துக்கு நன்றிங்க அய்யா!

  பதிலளிநீக்கு
 5. I didn't read any of these problems in our news paper recently but it looks very critical for many student Teachers.
  I am in Linux hence could not type in Tamiz, sorry.

  பதிலளிநீக்கு
 6. “அக்ரிகேட் மதிப்பெண்” பற்றிய விவரம் எல்லாச் செய்தித்தாளிலும் வந்து தமிழ்நாடே கலவரப்பட்டு, விண்ணப்பித்த பலபேர் தேர்வே எழுதாமல் போன செய்தியைக் கவனிக்கவில்லையா குமார்? தினமணியில் கட்டம் கட்டிப்போட்டிருந்ததைப் பார்த்த நினைவு இருக்கிறது. என் “மாணவ-ஆசிரியர்கள்” இப்படித்தான் ஆச்சரியமாகக் கேட்டார்கள். இதுபற்றி இன்னும் தகவல் சேகரித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதித் தினமணிக்கு அனுப்ப உங்கள் கேள்வி என்னைத் தூண்டிவிட்டது. விரைவில் எழுதுவேன்.

  பதிலளிநீக்கு
 7. தங்களுடைய இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை......இப்படி சில தேர்வுகள் வந்தால் மட்டுமே கல்வியில் முழுமையான தரம் இருக்கும்.....அதுவும் குழந்தைகள் கல்வியின் தரத்தை மற்றவர்களின் கனவு லட்சியத்துக்காக விட்டு கொடுப்பது மாபெரும் தவறு.....அக்ரிகேட் மதிப்பெண் இலாதவர்கள் திறமை இருப்பின் இளநிலை முதுநிலை பட்டம் பெற்று தங்கள் திறமை நிருபிக்கட்டும்.......கல்வியில் தரத்தை கொண்டு வருவதால் மட்டுமே இந்தியா 2020 இல் வல்லரசாகும் .......அன்பு மட்டுமே போதும் என்றால் குழந்தைகளுக்கு அன்னையின் வளர்ப்பு மட்டுமே போதுமானது. பெரியாரின் சீர்திருத்தப்பட்ட சமுதாயத்தை திறமையான ஆசிரியர்களால் மட்டுமே கொண்டு வர முடியும் என்பது என் கருத்து......

  பதிலளிநீக்கு
 8. அடடா... இந்தியாவை வல்லரசாக்காமல் ஓயமாட்டீர்கள் போல? வாங்கம்மா வாங்க...
  முதலில் நல்லரசாக்க முடியுமா பார்ப்போம், பின்னர் வல்லரசாகலாம்.
  இதே கருத்துப் பகுதியில் நான் ஏற்கெனவே சொல்லியிருந்தது தான், என்றாலும் மீண்டும் சொல்லத்தான் வேண்டும் - கேக்குறவன் கேணையா இருந்தா கே.ஆர்.விஜயா கொண்டையில கே.டி.வி தெரியுமாம்!
  என்ன பண்ண தாயீ!எங்கள மாதிரி ஆரஅமர யோசிக்க உங்கள மாதிரி வயசுப்புள்ளங்களுக்கு கொஞ்சம் நாள்ஆகத்தான் செய்யும்... பார்ப்போம்

  பதிலளிநீக்கு
 9. “என் கருத்து தவறானது, சமூக முன்னேற்றத்திற்கு உகந்தது அல்ல” என்று தெரியவந்தால் அதை ஒப்புக்கொண்டு, எனது கருத்தை மாற்றிக் கொள்வதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லையம்மா. இதில் ஈகோ எல்லாம் என்றைக்கும் உதவாது. ஆனால், இப்போது இருக்கும் நிலையில் ஆசிரியர் திறமை மட்டும் போதுமானதாக இல்லை. சீரழிவு ஊடகம் பொறுப்பை உணராத பெற்றோர் இதை மாற்றவேண்டிய பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அரசு எனப் பல விஷயங்கள் மாறவேண்டியுள்ளது. எனது வலையில் நான் எழுதியிருக்கும் “ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்” எனும் கட்டுரையிலும் இதை முன்னரே சொல்லியிருக்கிறேன். இன்னும் மாற்ற வேண்டியதில் உங்கள் பங்கும் இருக்கிறது. வெறும் ஆசை மட்டும் போதாது. எதார்த்தைப் புரிந்து கொண்டு முன்னேற இன்னும் போராட வேண்டியுள்ளது.. எனது கட்டுரையை முழுமைப் படுத்தி விரைவில் வௌயிடுவேன் (அதற்கு முன் காத்துக்கொண்டிருக்கும் சில “அர்ஜன்ட்” கட்டுரைகளை முடித்து விட்டு வருகிறேன். சண்டையைத் தொடர்வோம் - நா.மு.

  பதிலளிநீக்கு