விடிகாலையில் மாணவர் வீடுகளுக்குச் சென்று வந்தேன்...

              இன்று விடிகாலையில், கடந்த ஆண்டு போய்வந்தது போலவே -பத்தாம் வகுப்பு படிக்கும் -என் பிள்ளைகளில் சிலர் வீடுகளுக்குப் போய் வந்தேன்.
நேற்று இரவு -வழக்கம்போல- பத்து மணிக்கு, “இன்றோ நாளையோ விடிகாலையில் வீட்டுக்கு வருவேன், படித்துக்கொண்டு இருக்கவேண்டும்” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அதில், எங்கள் பள்ளியிலேயே  கணித ஆசிரியராக இருக்கும் நித்யா டீச்சரின் தங்கை மகன் ஜெயராம் “வெல்கம்சார்“ என்று பதில் அனுப்பியிருந்தான். (கடந்த வாரம் காலை 5.30க்கு அவன் வீட்டுக்குப் போனபோது, நான் வந்திருப்பதாகச் சொல்லி எழுப்பிய பிறகு அடித்துப் பிடித்து எழுந்ததை நினைத்துக் கொண்டேன்).  அந்த டீச்சர் வந்து, “படிக்கிறான், காலையில எழுப்பிவிட்டாலும் எழுந்திருக்க மாட்டான் சார்... நீங்க வருவீங்கன்னு சொல்லி கொஞ்சம் எழுந்திருக்கிறான் ரொம்ப நன்றிசார்“ என்று சொல்லியிருந்தார்.
                முகிலன், நமீஸ்,விக்ரம் மூவரும் வந்ததும் கிளம்பினோம்.
                 முதலில் ஜெயராம் என்றதும், பயகளுக்கு ஒரே சிரிப்பு “அவன் குப்பற அடிக்க கிடப்பான்ங்கய்யா..“ என்று ஒருவன் சொல்ல, “இல்லங்கய்யா, இப்பல்லாம் சீக்கிரம் எழுந்திருச்சிடுறான்...” என்று சொன்னவனுக்கு ஏமாற்றம்தான்... அவன் எழுந்திருக்கவே இலல... வீடும் இருட்டாகவே இருந்தது. மின்சாரம் அப்போதுதான் போயிருந்தது என்றாலும், இவர்கள் வீட்டில் இன்வெர்ட்டர் இருப்பதாகவும் பயலுக சொன்னார்கள்...
             அடுத்து, சந்தோஷ் வீடு.
              பயலுக போய் கூப்பிட்டதும், அவன எழுப்பிக்கொண்டே, “நீங்க போங்கப்பா.. நா அவன எழுப்பி வரச்சொல்றேன்..” என்று சொல்ல, “ட்யு’ஷனுக்கு இல்லம்மா எங்க அய்யா வந்திருக்காங்க“ என்றதும்தான் என்னைக் கவனித்த சந்தோஷ் அம்மா “அய்யா வாங்கய்யா“ என்று அழைத்து, “கரண்ட் போயிருச்சில்ல.. அதான் தூங்குறான்..“  என்று சமாதான்ம் சொல்லிக்கொண்டே “டே சந்தோசு அய்யா வந்திருக்காங்கடா“ என்று எழுப்பிவிட... அவன் திருதிருன்னு முழிச்சிக்கிட்டே எழுந்து வந்தான்...மணி-விடிகாலை-5.17.
             அடுத்து விக்ரம், ஜெகதீஸ்வரி, லெட்சுமி, கார்த்திக் என எனது மாணவர் பலர் வீடுகளுக்குப் போய் வந்தாலும்,காமராசபுரம் 33ஆம் வீதியில் இருக்கும் மெகராஜ்பானு, மற்றும் பாலாஜி நகர் வினோத் வீடு இரண்டும் மறக்க முடியாததாக இருந்தது. வினோத் வீடு சின்னக் கு டிசை. ஆனாலும் அரிக்கேன் விளக்கை வைத்துக்கொண்டு அவன் படித்துக்கொண்டிருந்தான்...    
             மெகராஜ்பானு அண்ணன் வீட்டு வாசலில் நின்று கொண்டு, எங்களை வரவேற்றான்.. வீடு தெரியாமல் அருகில் நின்றுகொ்ண்டே தொலைபேசியில் வீட்டு அடையாளத்தைக் கேட்டுச் சென்றதன் விளைவு! அவங்க அப்பா டீக்கடையில் வேலை என்பதால் 4மணிக்கே எழுந்து போய்விட்டாராம்...

              “அப்பா என்கூட பேசறதில்லங்கய்யா... நீங்க சொல்லிப் பேசச் சொல்லுங்கய்யா“ என்று என்னிடம் தனியாகச் சொல்லியிருந்த பானுவின் முகத்தில் துடைக்க முடியாத சோகம் எப்போதும் இருக்கும்... ஆனாலும் வகுப்பின் அனைத்து வேலைகளிலும் முன்னின்று செய்யும் குணத்தை நான் வகுப்பிலேயே பாராட்டியிருந்தேன். மலாலாவைப் பற்றி வகுப்பில் நடந்த விவாதத்தில் மெகராஜ் நிறைய விஷயங்களைச் சொன்னது நினைவுக்கு வந்தது. அப்பாவைப் பார்க்க முடியாத ஏமாற்றம் எனக்கு... எப்படியும் கேட்டு பார்த்துப் பேச வேண்டும்...
             சில பிள்ளைகள் மேம்போக்காக இருந்தாலும், எங்கள் வீட்டுக்கும் பேப்பர் போட்டுக்கொண்டே படிக்கும் சிலம்பரசன், ரவி டீக்கடையில் கிளாஸ் கழுவிக்கொண்டே பத்தாம்வகுப்பு இ பிரிவில் படிக்கும் தமிழ்ச்செல்வன் என என் மாணவர்கள் விதம் விதமாய் வாழ்ந்து கொண்டே எனக்கு நிறையக் கற்றுக் கொடுக்கிறார்கள்...
            தொலைக்காட்சியில் பேசுவது, கருத்தரங்கங்களில பேசுவது, கட்டுரைகள் எழுதுவது எல்லாவற்றையும் விட என் பிள்ளைகளின் வீடுகளுக்குப் போய் வருவதுதான் எனக்கு ரொம்பவும் நெஞ்சைத் தொடும் நிகழ்வாக இருப்பதுதான் உண்மை!
             அவர்கள், நான் வருவதால் விடிகாலையில் எழுந்திருக்கிறார்கள் என்று சில பெற்றோர்கள் நன்றிசொல்வது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை சில பெற்றோரகள் அவ்வளவாக விரும்பவில்லை என்பதும்... என்றாலும் கடந்த ஆண்டு போய்வந்ததுபோல அரையாண்டு விடுறையில் கிராமங்களிலிருந்து வரும் பிள்ளைகளின் வீடுகளுக்குப் போகவேண்டும்.
--------------------------------------------------------
கடந்த ஆண்டு சென்று வந்த அனுபவம் பார்க்க http://valarumkavithai.blogspot.in/2012_02_01_archive.html

6 கருத்துகள்:

 1. arumai......Saatai endru oru thiraipadam vanthullathu ayya....antha padam kuritha ungal karuthugalai ethir parkiren..........

  பதிலளிநீக்கு
 2. அருமையான படம். தலைப்பு “கொஞ்சம் ஓவராத்“ தெரியுது.
  கதையும் சற்றே மிகை. உள்ளே
  ஆசிரியர் அமைப்புத் தொடர்போ,வெளியே அரசியல் தொடர்போ இல்லாத பள்ளி உண்டா?
  “தயா“க்கள்... ஒருவரல்ல... ஓராயிரம் தயாக்கள் ஏற்கெனவே அரசுப்பள்ளிகளில் உண்டு! அது விருது கொடுப்பவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் எமது மாணவர்க்குத் தெரியும்... எனது முந்திய பதிவு ஒன்றைப்பார்ககவும். - தலைப்பு - ”என் மாணவன் எனக்குத் தந்த நல்ல ஆசிரியர் விருது”

  பதிலளிநீக்கு
 3. நன்றிக்கு நன்றி.
  “என் மாணவன் எனக்குத் தந்த நல்ல ஆசிரியர் விருது” பார்த்துவிட்டுச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. கற்றுக் கொள்வதும் கற்றுக் கொடுப்பதும்தான் ஒரு நல்ல ஆசிரியருக்குள்ள தகுதி... ஆனால் எல்லோராலும் அதை அடைய முடிவதில்லை.. அடைந்தவர்கள் அடைகிறார்கள் மாணவர்கள் மனக்குகையில்..

  பதிலளிநீக்கு