எனது காதல் கடிதம்… நிறைவுப்பகுதி
இவ்வாறே வந்த பிற
இலக்கியங்கள் கலை வடிவில்
ஒவ்வொன்றாய் நஞ்சமுதை
உள்ளத்தில் ஏற்றியதால் -76
தாமே அறியாமல்
‘தமிழ்ப் பெண் நான்’ என அடங்கித்
‘தேமே’ என வாழ்ந்தார்
தெய்வாம்சம் அடைந்தாராம்! -77
‘பத்தினி’யும் ‘கன்னி’யும்
‘பரத்தை’யும் ‘விதவை’யும்
முத்தமிழில் பெண்ணுக்கே!
ஆண்பால்சொல் இதற்கில்லை! -78
சிந்தித்துப் பார்த்தால்தான்
சிங்காரச் சொல் இவற்றுள்
வந்திருக்கும் பெண்ணடிமை
வரலாற்றுக் கதை புரியும்! -79
தம் மனைவி இழந்தவாக்குத்
தமிழிலே பெயரில்லை!
‘கம்மனாட்டி’ சொல் எல்லாம்
பொம்மனாட்டிக்குத் தானே? -80
சொல்லின் வரலாறு
சொல்லும் வரலாற்றில்
வல்லார் அடிமைசெய்த
வரலாறும் புலனாகும்! -81
சிந்தனைகள் மென்மேலும்
சிவந்துவரும் என்தோழீ!
இந்தக் கொடுமைகளை
இல்லாமல் நாம் ஒழிப்போம்! -82
அழகைவிடவும் பெண்ணுக்கு அறிவே தேவை!
இப்போது சொல்கண்ணே!
ஏன் உன்னை ‘அழகி’யாக
இப்பாவ லன் நெஞ்சில்
எண்ணாமல், உன்னறிவை -83
இன்னுமின்னும் வளர்க்கவே
எண்ணுகிறான் புரிகிறதா?
மண்ணில் வளர்ந்துவந்த
மனிதப் பெருங்குலத்தில் -84
சரிபாதி அடிமைகளாய்
சமையலறைக் குள்ளேயே
கரியாகிப் போவதா?
கண்ணே! நாம் சிந்திப்போம்! -85
சுரண்டலை ஒழிப்பதற்கு
சூளுரைக்கும் நாம், நமது
உரிமையை உணர்ந்து, பிறர்
உரிமைக்கும் மதிப்பளிப்போம் -86
உழைப்புக்கும் மனித மன
உணர்வுக்கும் சரியான
மதிப்பைப் பெறும்வகையில்
மக்களை ஓரணியில் -87
திரட்டிடத் தோழியரும்
தேவை! மிக மிகத் தேவை!
இரட்டைக் குழல் வேட்டாய்
எழுவோம்! இணைந்தெழுவோம்! -88
அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வோம் வா!
மனித உணர்வுகளை
மழுங்கடித்துக் கதைபேசும்
முனிவர்களின் வரிசையிலும்
முத்து நிலவனில்லை! -89
எல்லாரை யும்போல
இல்லறத்தில் இணைந்தின்ப
எல்லையைக் காணுதற்கும்
எல்லையிலா ஆசைஉண்டு! -90
ஆனால் நம் காதல்
அடுத்தவர்கள் கேடுகெட்டுப்
போனால் நமக்கென்ன
போகம்தான் பெரிதென்னும் -91
எண்ணத்தை வளர்த்துவிட
இடந்தருமேல் அதைவிட நாம்
பன்றிபோல் வாழலாம் -
பன்றிக்கும் கூட்டமுண்டே! -92
சமுதாயக் கொடுமைகளை
சற்றும் நினைக்காமல்
நமது இன்பம் ஒன்றையே
நாடுவது வாழ்க்கையென்றால் -93
சொத்தோடும் சுகத்தோடும்
சுற்றத்தின் வாழ்த்தோடும்
பத்தோடும் பதினொன்றாய்
வாழ்வதுதான் வாழ்க்கையென்றால் -94
அந்த வாழ்க்கையைநாம்
அமைப்பதிலே அர்த்தமில்லை!
நொந்தோர் நுகத்தடியை
நொறுக்குவதே பயன்வாழ்க்கை! -95
இன்பம் பெறவிழையும்
எண்ணம் தலையெடுத்தால்
உன்னைநான் அழைப்பதுபோல்,
என்னை நீ அழைக்கலாம்! -96
‘ஆ!அது, நம் பெண்மைக்கு
அடக்கமில்லாப் பண்பு’ என
யாதும்ஓர் சட்டமில்லை!
யார்நான்? உன் தோழன் அன்றோ? -97
இயலும் வகைஉழைத்தே
எல்லாத் தேவையிலும்
அயலையும் எண்ணிடுவோம்
அனைவருமே சமம்என்போம்! -98
ஒன்றேநாம் என்றேநாம்
தனிஉடமை இனிஉடைய
ஒன்றுபட்ட நம்வாழ்வால்
ஒருவரை மற்றொருவர் -99
நின்று தூண்டுவோம்!
நெஞ்சில் எழுச்சிமிக
உன்றன் இதழ் முத்தம்
ஒன்றெனக்குத் தா! தோழீ ! -100
------------------------------------ ( நிறைந்தது ? )-------------------------------
படத்துக்கு நன்றி - http://www.bharatmoms.com/