நம் வீட்டுக்கு வந்த “ஞானாலயா“

நம் வீட்டில் “ஞானாலயா” அய்யா
பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
------------------------------------------------
புதுக்கோட்டையின் தற்காலப் புகழுக்குக் காரணங்களில் ஒன்று “ஞானாலயாநூலகம் என்பது படித்தவர்கள் –மன்னிக்கவும்- படிக்கின்றவர் அனைவரும் அறிந்ததே.
  நம் பதிவர் விழா முடிந்த ஒருவாரம் கழித்து, அண்டனூர் சுரா அவர்களின் “திற“ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது. 
(இடமிருந்து)நூலாசிரியரின் ஆசிரியர் திருப்பதி, கவிஞர் தங்கம்மூர்த்தி, பின்னால் ஞானாலயா அய்யா, நூல்பிரதி பெறுபவர் சுசிலா (புதுகையின் புகழ்பெற்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தோழர்  முத்துக்குமரன் அவர்களின் துணைவியார்), நூல்பிரதியை வெளியிடும் நா(ன்).மு., மற்றொரு பிரதியை பெற்றுக்கொள்ளும் எழுத்தாளர் சந்திரகாந்தன், வெளியிடுபவர் கலைஇலக்கிய பெருமன்றப் பொதுச்செயலர் முனைவர் இரா.காமராசு. அவரை அடுத்து, நூலாசிரியர் அண்டனூர் சுரா, பின்னால் மாவட்டச் செயலர் இரா.ஜீவானந்தம், வலது கடைசியில் கஇபெம மா.தலைவர் அஜாய்கோஷ்  உள்ளனர்.
  அந்த விழாவின் பொழுதே, என்னருகில் இருந்த ஞானாலயா அய்யா  திரு பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், “செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வருகிறேன், வீட்ல இருப்பீங்கல்ல..?என்று கேட்கவும், நான், “அய்யா நீங்க ஏன் அலையணும்? நானே வருவேன் எப்ப வர? சொல்லுங்க?என்று சொல்லியும் கூட, சொன்னது போலவே செவ்வாய்க்கிழமை காலையில் வீடுதேடி மாடியேறி வந்து நின்றுவிட்டார்!


  வந்தவர், தன்னியல்பில் மடைதிறந்த வெள்ளம்போல நூல்களைப் பற்றியும், ஒரேநூல் அடுத்தடுத்த பதிப்புகளில் மாறிவந்த வரலாறுகளையும் சொல்லிக் கொண்டே இருந்தார்.. நானும் மயங்கிக் கிடந்து உணவையும் மறந்து கேட்டுக்கொண்டே இருந்ததில் மதியம் மணி2ஆனது இருவருக்குமே மறந்து போனது! 
  அந்த மாபெரும் “நடமாடும் நூலகம்“ என் தனி ஒருவனுக்காக இரண்டுமணிநேரம் என்னோடு கழித்ததைப் பெரும் பேறாக எண்ணி இன்றும் மகிழ்கிறேன்! (என் துணைவியார் பதவிஉயர்வு காரணமாகப் பணியிடைப் பயிற்சி சென்றுவிட, நான் அவருக்குக் காஃபி போட்டுத் தந்தேன்!)

        அப்போது நம் பதிவர் விழாவுக்கு வந்திருந்த தஇக உதவி இயக்குநர் தமிழ்ப்பரிதி அய்யா, நீச்சல்காரன், நம் திருப்பூர் ஜோதிஜி, புதுகை அப்துல்லா முதலான பலரும் மதியநேரம் ஞானாலயா வந்துசென்றதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டதோடு, நம் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் நூலில் அவர்களைப் பற்றியும் எழுதியிருந்ததையும் ஒரு குழந்தையைப் போல மகிழ்ந்து கூறி, பதிவர் விழாவில் அவர்களை மேடையேற்றி கௌரவப் படுத்தியதற்கும் நன்றி தெரிவித்து, வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்!
  பேசிக்கொண்டே இருந்தவர், கையில் வைத்திருந்த துணிப்பையில் என்ன கொண்டுவந்திருக்கிறார் என்று அறிய எனக்கு ஆவல் மீதூர்ந்தது. சில அரிதான புத்தகப் பதிப்புகள் வரும்போது, விலையைப் பற்றிக் கவலையின்றி வாங்கிக் கொள்ளும் வெகுசிலரில் நானும் ஒருவன் என்பதை அவரறிவார் என்பதால் “என்னவோ கொண்டுவந்திருக்கிறார்.. அவரே சொல்லும் வரையில் காத்திருப்பதுதான் மரியாதை“ என்று நானும் ஆவலடக்கிக் காத்திருந்தேன்.
  கடைசியாக, 1.50க்கு அவரது செல்பேசி சிணுங்கியது. “டோரா தான்.. சாப்பாட்டு நேரம் ஆயிருச்சில்ல..“ என்றவாறே கிளம்பும் முன், கையிலிருந்த அந்தப் பையிலிருந்து சில நூல்களை எடுத்து என்னிடம் நீட்டி “உங்களுக்காகத்தான் கொண்டுவந்தேன்“ என்றார்.
  அண்மையில் நடந்திருந்த அவரது பவளவிழாவில் வெளியிடபட்ட இலக்கிய-வரலாற்று மலர், மற்றும் இருநூல் பிரதிகள்! (எனக்கு மகிழ்ச்சியாகவும், அதே நேரம் குற்ற உணர்வாகவும் இருந்தது நாமே போய் வாங்கிக் கொள்ளாமல் அவர்கள் தேடி வந்து தரும்படி அலையவிட்டதற்கு!)
   பவள விழாவின் முதல் நாள் ஞானாலயா சென்று அவர்களை வாழ்த்திப் பேசிவிட்டு ஞானாலயா மாடியில் அன்று திறந்த “திரு வி.க.மன்ற“ வளாக நூலக வளர்ச்சிக்கு ஒரு சிறுதொகையாக ரூ.1,000 தந்திருந்தாலும், அடுத்தநாள்ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்த நிகழ்வு காரணமாக நான் பவள விழாவுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, விழாவில் வெளியிட்ட மலரை நான் பெற்றிருக்கவில்லை. 
 அதோடு, அய்யாவுக்கு, புகழ்பெற்ற இலக்கியவாதிகள் எழுதிய கடிதங்களின் தொகுப்பான “தேடலில் தெளியும் திசைகள்மற்றும் ஞானாலயா நூலகம் பற்றி அங்கு வந்துசென்ற சான்றோர்கள் பலரும் எழுதிய குறிப்புகள் அடங்கிய “நெஞ்சை அள்ளும் ஞானாலயா”  நூலையும் அன்புடன் தந்தார்கள். (அதில் இருந்த ஜெயகாந்தன், பிரபஞ்சன், திலகவதி ஐபிஎஸ் ஆகியோர் குறிப்பெழுதியபோது நானும் அங்கு அவர்களுடன் சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. நான் நடத்தும் விழாக்களில் பங்கேற்க வரும் எழுத்தாளர்களை நானே ஞானாலயாவுக்கு அழைத்துச் செல்வது எனது வழக்கம். அப்படித்தான் 07-07-07இல் நடந்த கவிஞர் கந்தர்வன் விழாவுக்கு வந்திருந்த ஜெயகாந்தனை அழைத்துச் சென்றது தேதி உட்பட நினைவிலிருக்கிறது!)
   இந்த 3நூல்களின் மொத்த விலை ரூ.600தான் எனினும், இவைதான் தற்போது புதுக்கோட்டைக்குப் பெருமை சேர்க்கும் கருவூலங்கள் என்பதால் அய்யா அவர்கள் மறுத்தும்கூட ரூ.1,000 தந்து அனுப்பினேன்.
  இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை நண்பர்களே! வாசிப்பை நேசிக்காமல் எழுத்து வராது, வாசிப்புக்காகவே வசிக்கும் ஞானாலயா நூலகம் பற்றிய நூல்கள் பல நூல்களின் தொகுப்பாக உள்ளன என்பது மிகையன்று!
  இவற்றை அனைவரும் வாங்கிப் பயன்பெற வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள். அவர்களோடு பேசி, தொகை அனுப்பி, உங்கள்  முகவரிக்கு நூல்களை அனுப்பச் செய்து வாங்கிப் பயன்பெற அழைக்கிறேன்-
பதிவர் விழாவில் “ஞானாலயா“ பா.கி.அவர்களைக்
கௌரவிக்கிறார் நமது கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர்
முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
  “ஞானாலயா“ பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின்
   தொலை பேசி எண் – 04322 221059
    வலைப்பக்க முகவரி - http://www.gnanalaya-tamil.com/
--------------------------------------------------------  
----------------------------- 







அப்படியே நமது
இராமநாதபுரம் 
பகுதியைச் சேர்ந்த 
வலைப் பதிவர்களுக்கு
ஓர் அன்பு வேண்டுகோள்-
இன்று-29-10-2015-வியாழன் பகல் முழுவதும்
இராமநாதபுரத்தில் 
மாவட்ட ஆட்சியருடன் இணைந்து.
கலைஇலக்கிய ஆர்வலர் சங்கம் நடத்தும்
இராமநாதபுரம் புத்தகத்திருவிழாவில்
பள்ளிமாணவருடன் உரையாடல் மற்றும்
எனது உரை நிகழ்வுக்காக வருகிறேன்.
வாய்ப்பிருப்போர் வருக! 
சந்திக்க ஆவல்!
அன்புடன்,
நா.முத்துநிலவன்.
செல்பேசி - 94431 93293
-----------------------  

24 கருத்துகள்:

  1. கற்றாரைக் கற்றாரே காமுருவர் என்பார்கள் அல்லவா
    இரு நூலகங்களின் சந்திப்பு
    மகிழ்வினை அளிக்கின்றது ஐயா
    தம=1

    பதிலளிநீக்கு
  2. அன்று புதுகை வந்திருந்தும்
    அங்கு செல்ல இயலாமல் போனது
    வருத்தமளிக்கிறது
    அதற்காக ஒருமுறை வரவேண்டும்
    இராமநாதபுரம் விழா சிறக்க நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. விக்கிபீடியாவில் பதிவதற்காக ஞானாலயா சென்றபோது அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வீட்டை நூலமாகக் கொண்ட அவர் ஒரு நடமாடும் நூலகம். சிறிது நேரம் பேசினாலேயே அவரிடமிருந்து இலக்கியம், வரலாறு எனத் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் அரிய செய்திகளை நாம் அறிந்துகொள்ளலாம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லாச் சொன்னீங்க அவரே ஒரு நடமாடும் நூலகம்தான். நாங்கள் இங்கு, அவரை நடமாடும் புத்தகத் தகவல் களஞ்சியம் என்போம்.

      நீக்கு
  4. விழாவில் ஐயாவுடன் சிறிது நேரம் தான் பேச முடிந்தது... அடுத்த முறை அங்கு வரும் போது நூலகம் சென்று வர வேண்டும் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபாவளிக்குப் பிறகு வாங்களேன்.. போய்வரலாம்.
      ஆர்வமுள்ள பதிவர்களை அழைத்து, மினி பதிவர் சந்திப்பையே அங்கு நடத்தலாம். என்ன சொல்கிறீர்கள்..?

      நீக்கு
  5. அருமையான நிகழ்வை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் அய்யா!
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. தங்களின் தினசரிப் பதிவுகளைப் படிக்கவே பலமாதம் ஆகும்போலவே? தொடர்ந்து அசராமல் நல்லபடியாகவும் எழுதுகிறீர்கள்..வாழ்த்துகள். நானும்தொடர்வேன்

      நீக்கு
  6. தங்களின் புத்தக ஆர்வம் பற்றி ஏற்கனவே அறிந்ததே வாழ்த்துகள் நானும் வாங்க முயல்வேன் தகவலுக்கு நன்றி
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. நன்றி இளைய வலைச்சித்தரே! (ஆமா நாம கலந்துகிட்ட வெள்ளனூர் பதிவு என்னாச்சு? அப்பவே பாலாஜிகிட்ட சொன்னேன் அவ்ளோ படங்கள எடுக்காதீங்கன்னு..)

      நீக்கு
  8. வணக்கம் ஐயா!

    தங்களின் சந்திப்புக் குறித்த பதிவு காண,

    புலமிக் கவரைப் புலமை தெரிதல்
    புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
    பூம்புனல் ஊர பொதுமக்கட் காகாதே
    பாம்பறியும் பாம்பின கால்

    பழமொழி நினைவிற்கு வருகிறது!

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் விஜூ! அடே அப்பா..எவ்ளோ நாளாச்சு நண்பா! எனினும் விழாவில் தாங்கள் பரிசுபெற வருவீர்கள் என்று நான் மட்டுமல்ல, பற்பல பதிவர்களும் எதிர்பார்த்திருந்தோம். நிற்க.
      பழமொழியை விட, அவரது பண்பு, எளிமையைக் கற்றுக்கொள்ள நினைக்கிறேன். “பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து“ எனும் குறளே நினைவிலாடியது. வரவுக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்வோம். வணக்கம்

      நீக்கு
  9. அன்பு நண்பருக்கு வணக்கம்.
    வலைப்பதிவா் திருவிழாவுக்கு வந்தபொது பரிதி ஐயாவுடன் நானும் ஞானாலயா சென்றேன் அங்கு அரிதினும் அரிதான நூல்களைக் கண்டு மலைத்துப்போனேன். அவா் சேர்த்துவைத்துள்ள ஒவ்வொரு நூல்களுமே அரிதான நூல்கள் தான் என்றாலும் அவற்று மிக அரிது எது என்று தேடியபோது அவர் ஒவ்வொரு நூல்களைப் பற்றியும் சொன்ன செய்திகளைக் கேட்டு இந்த நூலகத்தில் மிக அரிய நூல் இந்த உயர்ந்த மனிதா்தான் என்று புரிந்துகொண்டேன் அப்போதே திருப்பூா் ஜோதிஜி அவா்களின் அறிமுகத்துடன் அவரை எங்கள் கல்லூரியில் நாங்கள் நூல்வாசிப்புக்காக உருவாக்கியுள்ள வாசகா் வட்டத்துக்கு நூல்கள் குறித்த சொற்பொழிவுக்கு அழைப்பதற்காக அனுமதிகேட்டேன் அவா்களும் வருவதாக சொன்னாா்கள். தற்போது எங்கள் முதல்வரிடம் அனுமதியும் பெற்றுவிட்டேன். டிசம்பா் மாதத்தில் ஐயா அவா்களை அழைத்து எங்கள் கல்லூரியில் வாசகா் வட்டத்தில் சொற்பொழிவாற்ற வைத்துவிடவேண்டும் என்பதில் மிகவும் ஆா்வமாக உள்ளேன்.

    அவரை நிழற்படத்தில் பார்த்தவுடன் ஞானாலாயா சென்று வந்த நினைவுகளை அசைபோட்டுவிட்டேன் நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, ஞானாலயா தொடர்பாக, த இ க செய்ய வேண்டிய பணிகள் இவைதான்-
      (1) அவர் சேகரித்து வைத்திருக்கும் நூல்களை மின்னூலாக மாற்ற அவரிடம் பேசுவது. (2) நூல்களின் பதிப்பு வரலாறு மற்றும் சிற்றிதழ்வரலாறு, புதுக்கோடடையின் வரலாற்றுக் குறிப்புகள் என சில தலைப்புகளைத் தந்து மணிக்கணக்கில் பேசக்கூடிய பா.கி.அய்யா அவர்களைப் பேசச் சொல்லிப் பதிவுசெய்து அவற்றை முறையாக வெளியிடுவது. முயற்சி செய்க. நானும் இவற்றுக்கு என்னாலான உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன்

      நீக்கு
  10. இந்த அரிய பெருமை பெற்ற, புதுக்கோட்டைக்குப் பெருமை சேர்க்கும் நூலகத்திற்கென்றே (ஞானாலயா பெயரே சொல்லுகின்றதோ!!) புதுக்கோட்டைப் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா, கோடை விடுமுறையில் இரண்டு நாள் சொல்லுங்கள். ஒருநாள் ஞானாலயா, அடுத்த நாள் புதுக்கோட்டையின் சில புகழ்பெற்ற இடங்கள் என ஒரு சிறு பதிவர் சந்திப்பை நடத்திவிடுவோம்? என்ன சொல்கிறீர்கள்?

      நீக்கு
  11. இரண்டு நூல்கள் சந்தித்தன என்று சொல்லுங்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நூலைச் சந்திக்க ஒரு நூலகம் வந்தது என்பதுதான் சரியான தலைப்பு. (நம்ம லெவல் என்னன்னு நமக்குத் தெரியாதா அய்யா?)

      நீக்கு
  12. பதிவையும் உங்கள் பின்னூட்டங்களையும் படித்த போது புதுக்கோட்டை வழியா பயணம் செய்யும் பதிவர்களைக்கூட அடுத்த குறு பதிவர் சந்திப்புக்கு அழைக்கும் அன்பை புரிந்து கொள்ள முடிகிறது. என்னமோ போங்க நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  13. அண்ணா ஞானாலயா புதுகையின் மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே பெருமையான ஒன்று..ஏன் அண்ணா அவர் ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க கூடாது...அவரின் அனுபவங்களும் அறிவும் அனைவருக்கும் பயன்படுமல்லவா...

    பதிலளிநீக்கு
  14. நல்லதோர் சந்திப்பு பற்றி அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு