கன்னட எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொலை - தேசமெங்கும் எதிர்ப்பலை

 அன்றுமுதல் இன்றுவரை
         ஆதிக்கச் சக்திகளின்
ஆட்டம் அடங்கவில்லை! - அவர்தம்
        ஆசையும் நிறைவேறவில்லை! 

 அது என்றைக்கும் நிறைவேறாது!

“காலம் அறிந்து கூவும் சேவலை
        கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
  கல்லைத் தூக்கி பாரம்வைத்தாலும்
        கணக்காய்க் கூவும் தவறாது!” -  
-- ப .கோ.
---------------------------------------------

கன்னட எழுத்தாளர்
மக்கள் நெஞ்சில் என்றும் வாழும் கல்புர்கி
-------------------------------------------------------------
ஹம்பியில் உள்ள கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புரட்சிகர எழுத்தாளருமான எம்.எம் கல்புர்கி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கல்யாண் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு காலை 2 மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் வந்துள்ளனர். அதில், ஒருவன் வெளியிலேயே நிற்க இன்னொருவன் அவரது வீட்டின் கதவைத் தட்டியுள்ளான். தெரிந்தவர்கள் யாரோ வந்திருப்பதாக நினைத்து கதவைத் திறந்த அவரை, சுட்டுக் கொன்று விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்துக் கடவுள்கள் மற்றும் உருவ வழிபாடுகளுக்கு எதிரான பல கருத்துக்களை இவர் நீண்ட காலமாக பேசியும் எழுதியும் வந்தார். இதனால், இந்து அடிப்படை வாதிகளின் தனிப்பட்ட எதிரியாக மாறியிருந்தார். எனவே, இந்தக் கொலையின் பின்னணியில் இந்து அடிப்படைவாதிகள் இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். அண்மையில், அவரது வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் அமைப்பினர் அவரது வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

2006-ம் ஆண்டு மார்கா 4’ என்ற இவரது 100 ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்புக்காக, இவருக்கு தேசிய சாகித்ய அகாடமி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடகாவின் மிகச்சிறந்த கல்வெட்டு எழுத்தாளரும் ஆவார். இவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு சமூக ஆர்வலர்களும் முற்போக்கு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

செய்திக்கு நன்றி - http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=150047
பதிவு செய்த நாள் : 30, ஆகஸ்ட் 2015 (19:39 IST) 
-------------------------------------------------------------------------------
காணொளிச் செய்திகாண-

கல்புர்கியின் துணைவியார் உமாதேவி விருது தரப்பட்டதை வீரத்துடன் மறுத்த செய்தி
–நன்றி டெக்கான் எரால்டு-
-----------------------------------------------------------------

சுருக்கென எழுதும் என் இரும்புப் பேனாவை அவன் 
                 சுக்கல் சுக்கலாய் முறிக்கலாம்! -  நான் 
நெருப்பெனப் பற்றுவேன்!  நிச்சயம் பரவுவேன்! 
                 நினைப்பதைத் தடுக்க முடியாது!

எழுத்தைத்  தடுக்கலாம் எண்ணத் தடைபோட 
               எந்தத் தடைச்சட்டம் இங்குவரும்? - என் 
கழுத்தை ஓடிக்கலாம் கையை முறிக்கலாம் 
               கவிதையைத் தடுக்க முடியாது!

வாயை அடைக்கலாம்! வன்சிறை பூட்டி என் 
               வாழ்க்கையைக் கூட அழிக்கலாம்! - மூச்சில்
ஓயாது பொங்கிடும் போர்க்குணக் கவிதையின் 
               உணர்ச்சியைத் தடுக்க முடியாது!
-----------------------------------------------------------------------
(மூலம் - 
உருதுக் கவிஞர் 'ஃபெய்ஸ் ஏ ஃபெய்ஸ்'
கருத்துச் சுதந்திரம்  பற்றிய இக்கவிதையை மத்தியப் பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அஞ்சல் அட்டையில்  வெளியிட்டுள்ளது . 

இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் தந்தவர்
வங்கக் கவிஞர் தேபேஷ் தாகூர்.

ஆங்கிலத்தில் இருந்து 
தமிழ்மரபுக்கான சந்தத்தில் நா.மு. 

எழுதியது 1990களில்! “புதிய மரபுகள்“ தொகுப்பில் உள்ளது.

இப்போது ஏன் மறுபதிப்பு? எனில் கல்புர்க்கி எனும் மக்கள் கவிஞன் படுகொலை செய்யப்பட்டது நினைவில் எழுகிறதே!)

இவர்போலும் மக்கள் எழுத்தாளர்களின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சாகித்திய அகாதெமியின் துணிச்சலான செய்கைக்கும் எதிர்ப்பு ஊரவலம் சென்ற எழுத்தாளர்களுக்கும்  பாராட்டுகளைத் தெரிவிப்போம்.

செய்தி படிக்க -
http://epaper.theekkathir.org/ நாள்-24-10-2015
-----------------------------------------

6 கருத்துகள்:

  1. ஆதங்கம் நிறைந்த தொகுப்பு...கவலை வரத்தான் செய்கிறது...ஆனாலும் ஏதேனும் செய்வோம் நாமும்...

    பதிலளிநீக்கு
  2. கண்டிக்கத் தக்க செயல்! எழுத்தாளர்கள் தொடர்ந்து இப்படி தாக்கப்படுவது கருத்துச் சுதந்திரத்தை தட்டிப்பறிக்கும் செயலாக அதிகரித்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  3. மனிதம் வளர்த்தலே இதற்கு தீர்வு என்பது என் கருத்து அய்யா...

    பதிலளிநீக்கு
  4. நிகழ்வுகள் ஒன்றேதான். கதாபாத்திரங்கள்தான் மாறுகின்றன. வேதனையே.

    பதிலளிநீக்கு
  5. வேதனை. நாங்கள் கவலையுடன் இவரைப் பற்றியும் பதிவு போட்டு ஒரே வாரத்தில் (அப்படித்தான் நினைவு..) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்...

    பதிலளிநீக்கு