தமிழ்ப்பாட நூல்களில் தமிழ் படும்பாடு!

உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்து -10ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்று- வெளியில் வரும் நம் மாணவர்கள் பெரிய கவிஞராக வரவேண்டும் என்று யாரும் ஆசைப்படுவதில்லை!

தான் நினைப்பதைப் பிழையின்றி எழுதவும்சரியான உச்சரிப்புடன் பேசவும் தெரிந்திருந்தால் போதும்தானே?

 ஆனால் இவ்விரண்டும் நம் பள்ளிப் பாடநூல் வழியாகப் பெரும்பாலும் நிறைவேற வில்லை என்பதுதானே இன்றைய நிலை?  
இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவது, சிந்தனையை வளர்ப்பது இதையெல்லாம் விடவும் சொந்த சிந்தனையை வெளிப்படுத்தும் சாதாரண மொழிஆற்றல்தானே பள்ளிப்பருவத்தில் வளர்த்தெடுக் கப்பட வேண்டும்?  இதற்கு நமது தமிழ்ப்பாட நூல்களை அல்லாமல் வேறு அடிப்படை இருக்கமுடியுமா என்ன? ஆனால் அப்படி இல்லையே?


அடிப்படை சரியாக இல்லை, தவறாகவே உச்சரிப்பதை நாகரிகமாகக் காட்டிவரும் ஊடக வர்ணனையாளர்கள் நமது குழந்தைகளுக்குத் தவறாகவே சொல்லித் தருகிறார்களே?

அடிப்படை மொழியறிவுக்கான பயிற்சி : 
மொழிப்பாடத்தின் முக்கியநோக்கம் பிழையின்றி எழுதவும் பேசவுமான பயிற்சிதான். இதற்காகத்தான் மொழிப்பாடங்களில் இரண்டாம்தாள் வைக்கப்படுகிறது. ஆனால், இதற்கென்று தனித்த எளிமையான பாடப் பகுதியே இல்லை.

மாணவர்களால் வெறுக்கப்படும் இலக்கணப்பகுதிகளும் மனப்பாடம்செய்தோ  எதையாவதுபார்த்தோ எழுதக்கூடியதான கட்டுரைப் பகுதிகளுமே உள்ளன. பிறகு?

நம் தமிழில் க்முதல் ன்;’வரையான மெய்யெழுத்துகளின் வரிசை அமைப்புக்கான காரணமென்ன? இதையறிந்து கொண்டால் எழுத்துப்பிழைகள் வெகுவாகக் குறையும். இதை நமது மாணவர்க்குச் சொல்லித்தர வேண்டாமா?  தமிழாசிரியர்க்குச் சொல்லியிருந்தால் அல்லவா அவர் தம் மாணவர்க்குச் சொல்வார்? தமிழ் முதுகலை படித்தவர்களிடம் கூட இந்தக் கேள்வியை நீங்கள் துணிந்து கேட்கலாம்! பெரும்பாலும் சரியானபதில் கிடைக்காது என்பதுதான் எனது அனுபவத்தில் கண்ட கசப்பான உண்மை!

தமிழ் மெய்யெழுத்துகளின் வரிசையில், காரணத்துடனான ஓர் ஒழுங்குமுறை உள்ளது.
1.க்-வல்லினத்தை அடுத்து -2.ங் மெல்லின எழுத்து,
3.ச்-வல்லினத்தை அடுத்து -4.ஞ் மெல்லின எழுத்து,
5.ட்-வல்லினத்தை அடுத்து -6.ண் மெல்லின எழுத்து,
7.த்-வல்லினத்தை அடுத்து -8.ந் மெல்லின எழுத்து,
9.ப்-வல்லினத்தை அடுத்து-10.ம் மெல்லின எழுத்து,
அடுத்து வரிசையாக 11.ய், 12.ர், 13.ல், 14.வ், 15.ழ், 16.ள் எனும் இடையின எழுத்துகள், இறுதியாக மீண்டும் 17. ற் எனும் வல்லின எழுத்தை அடுத்து 18. ன் மெல்லின எழுத்து.

இதில், இடையில் வரும் இடையின எழுத்துகளைத் தவிர்த்து ஏனைய 12 எழுத்தும் வல்லினத்தை அடுத்து மெல்லினமஎன --க ங. ச ,   ண, த ந, ப ம, ற ன எனும் வரிசையில்-- அடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

இதற்கும் காரணம் உண்டு! தமிழ்ச் சொற்களின் எழுத்து அமைப்புமுறையே இதன் அடிப்படைக் காரணம். அதாவது தமிழ்ச்சொற்களில் வல்லின உயிர்மெய்எழுத்துக்கு முன்பாக மெய்எழுத்து வந்தால் அது அதற்கான மெல்லினமாகவே வரும். உதாரணமாக எனும் வல்லினவர்க்கத்தைச் சேர்ந்த உயிர்மெய்எழுத்து வரும் சொல்லில், அதற்குமுந்திய எழுத்து ங் எனும் மெல்லின மெய்எழுத்தாகவே வரும்.  (,கா,கி,கீ.கு,கூ முதலான 12எழுத்தும் வர்க்கம் என்பதுபோல)
எ.கா.:1.‘தங்கம்’- ‘ங் எழுத்தையடுத்து வர்க்கம்
எ.கா.:2.‘மஞ்சள்’-‘ஞ் எழுத்தையடுத்து வர்க்கம்
எ.கா.:3.‘பந்து’- ‘ந்;’ எழுத்தை அடுத்து வர்க்கம்
(மிகச் சில சொற்கள் மாறியும் வரலாம்பண்பு’ ‘அன்பு போல… அல்லது கண்ணம்மா, பொன்னையா போல அவ்வெழுத்தே இரட்டித்தும் வரலாம்.)
தமிழ் எழுத்துகள் சொல்லும் இந்த வர்க்க ஒற்றுமையை  தமிழ்மாணவர்க்கு நாம் சொல்லித்தரவில்லை! (நமக்குத்தான் வர்க்க ஒற்றுமைன்னா என்னன்னே தெரியாதே?! வர்க்கம்னா அது ஏதோ அரசியல்னு தானே தெரிஞ்சி வச்சிருக்கிறோம்?)

இந்த அடிப்படையிலேயே மெய்எழுத்துகளின் வரிசையும் அமைக்கப் பட்டுள்ளது என்பதைச் சொல்லித்தந்துவிட்டால் எழுத்துப் பிழை வெகுவாகக் குறைந்துவிடும். உதாரணமாக “மண்டபம்“ எனும் சொல்லில் வருவது ரெண்டுசுழி ன் ஆ, மூன்றுசுழி ண் ஆ? எனச் சந்தேகம் வந்தால், அடுத்துவரும் எழுத்து ட என்பதால் இது மூன்றுசுழி ண் தான் என அறியலாம். இவ்வாறே, மன்றம் சொல்லில் வருவது ரெண்டுசுழி ன் ஆ, மூன்றுசுழி ண் ஆ? எனச் சந்தேகம் வந்தால், அடுத்து வருவது 
ற என்பதால் இது இரண்டுசுழி ன் தான் எனத் தெளியலாம்.
(இது பற்றிய விரிவை அடுத்துப் பார்க்கலாம்)

வல்லினம் எங்கு மிகும், மிகாது என்பதை உதாரணங்களைக் கொண்டன்றி இப்போது சொல்வதுபோல விதிகளைமட்டுமே கூறி விலகிவிடக்கூடாது. இதை விட்டுவிட்டு,  சும்மா வல்லினஎழுத்து ஆறுக்கும் மெல்லினஎழுத்து ஆறும் இனம் என்று பொத்தாம் பொதுவாக மனப்பாடம் செய்யச்சொல்லி வந்திருக்கிறோம். எழுத்துப்பிழையும். உச்சரிப்புப் பிழையும் மண்டி வளர்கிறது!

குண்டு ’ வும்வெள்ளிக்கால் ’ கரமும் (?): 
இவ்வாறே மண்டபம் அல்லது கண்டு நண்டு எனும் சொற்களை எழுதும்போது, ‘ரெண்டு சுழி ன வா?’ அல்லது  மூணுசுழி ண வா?’ எனும் சந்தேகம் (?) வருமானால்,  அடுத்துள்ள எழுத்து ட எனில் அது  எழுத்துத்தான் எனத் தெளியலாம். இதனால்தான்  என்பதை மூணுசுழிஎன்று சொல்லாமல் டண்ணகரம் என்று சொல்ல வேண்டும். இவ்வாறே   ரெண்டுசுழியை றன்னகரம் எனல் வேண்டும்.

குண்டு ல வை உச்சரிப்புக் கருதி ஒற்றல் லகரம எனவும், “வெள்ளிக்கால் ள வை வருடல் ளகரம் எனவும் சொல்லித் தந்தால் பெயருடன் உச்சரிப்பும் தெளிவாகிவிடும். 

நுனிநாக்கு மேல்வாயின் நுனி அண்ணத்தில்
ஒற்ற வருவது ஒற்றல் கரம். இதுதான் காரணம்!
நுனிநாக்கு மேல்வாயின் நடு அண்ணத்தில்
வருட வருவது வருடல் கரம். இதுவும் அப்படியே!

இந்தஎழுத்துகளை உச்சரிக்கும்போது நாக்கும் உதடும் எவ்வாறு செயற்படும் என்பதை எளிய படங்களோடு விளக்கலாம். இவை தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் விளக்கப்பட்டுள்ளன.

தற்போது செயல்வழிக் கற்றல்- அ.ஆ.கல்வி-திட்டத்தில் உச்சரிப்புக்கான ஒருசில படங்கள் உள்ளன. இது எழுத்துப்பிழை நீக்கத்திற்கும் விரிவடைய வேண்டும்! இதுபோல எழுத்துப்பிழை நீக்கத்திற்கும், உச்சரிப்புப் பிழை நீக்கத்திற்குமான பகுதியை ஆழப்படுத்தாமல் ஆயிரம் இலக்கணங்களைப் பாடம் வைத்தாலும் அவை வெற்று மனப்பாடமாகவே அமையும். பிழைகளும் தொடரும்!

பகுத்தறிவும் தமிழறிவும் :
பொதுவாகத் தமிழ்ப் பாடநூல்களின் அமைப்பு முறை சலிப்பூட்டுவதாகவே உள்ளது. இரண்டு தலைமுறையாக உள்ள தமிழ்ப் பாடநூல்களின்;  அமைப்புமுறை மாறி, மாறி, ‘பழையன கழிந்து, புதியன பாய்ந்து புகுந்துவர வேண்டாமா

ஆனால், மையமாக நாம் விரும்பும் தமிழறிவு-பகுத்தறிவு-சமூகஉணர்வு சார்ந்த செய்திகள் எந்தத் தமிழ்ப்பாட நூலிலும் மாணவர்க்கு முழுமையாகத் தரப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, காப்பியங்களிலம், சிற்றிலக்கியங்களிலும் மண்டிக்கிடக்கும் பெண்ணடிமை, மற்றும் மூடநம்பிக்கைக் கருத்துகள் பாடப்பகுதிகளில் ஊடாடிக் கிடப்பதும் வருத்தத்திற்குரியது! இதில் கட்சிபேதமெல்லாம் கிடையாது!

ஆட்சிமாறினாலும் பாடநூல் ஆசிரியர்; மாறமாட்டார், அவர்களே மாறினாலும் அறிவுசார் செய்திகளில்லாமலே பாடநூல்வருவது மட்டும் தொடரும்! தகவல்களை மட்டும் தரும் பாடங்களால் அறிவு வளருமா என்ன? தகவல்வேறு அறிவுவேறு அல்லவா

பெரியாரைப் பற்றிய பாடங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன.
இது நல்லதுதான், ஆனால், பெரியாரின் தலையாய கருத்தான கடவுள் இல்லை என்பது பற்றி, அவரைப்பற்றிய எந்தஒரு பாடத்திலும் ஒருவரிகூட இல்லை.

இப்போதுள்ள 10ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் 6ஆம் பாடமாக திரு நெ.து.சு. எழுதிய இவர்தான்; பெரியார்  பாடத்திலும் சரி, இப்போது வெளிவந்துள்ள 6ஆம் வகுப்புச் சமச்சீர்க்கல்வித் தமிழ்ப்பாடநூலிலும் சரி பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் எனும் செய்தி மட்டும் இல்லை! அப்புறம் எதற்குப் பெரியாரைப்பற்றிப் பாடம்வைக்க வேண்டும் வெறும் தகவலுக்காகவா? ‘பிரச்சினையைத் தூக்கி நடுவில் வை. சுற்றி சுற்றி வா! தொட்டுவிடாதே என்பது கந்தர்வன் கவிதை!

ஒருபக்கம் பெரியாரைப்பற்றிய தகவல்களைப் பற்றி மட்டும் பாடம் வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் அவர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப்போராடிய பல மூடநம்பிக்கைகளை அதேபாடநூலின் வேறு பக்கங்களில் தொடரும்படிப் பாடம் வைப்பதுபற்றி என்ன சொல்ல?

புராணமாவரலாறாகுழப்பும் பாடப் பகுதிகள்:   பொய்மூட்டைகளான புராணங்கள் ஏதோ நம்நாட்டு வரலாறு போலவே பாடக்குறிப்புகளில் தரப்படுகின்றன! 1996இல் மறுபதிப்புக்கண்ட பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் இடம் பெற்றிருந்த திருவிளையாடற் புராணம் பகுதிக்கான முன்னுரை இப்படித் தொடங்குகிறது : சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல் களில் ஒன்று தருமிக்குப் பொற்கிழி அளித்ததாகும் இந்த முன்னுரையின் கடைசி 2 வரிகளையும் பாருங்கள் : சோமசுந்தரக் கடவுள் புலவனாய்த் தோன்றி நக்கீரனுடன் வாதிட்டதையும் விளக்குவதே நம்பாடப்பகுதி யாகும்’!(பக்கம்:34) இதன்பின் 1997ஆம்ஆண்டுப் பாடநூலில் இதே பெரியபுராணம் பற்றிய குறிப்புரையில், ‘‘தில்லைப்பெருமான் உலகெலாம் என்ற அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் பெரியபுராணத்தைப் பாடினார்’’ என்று (பக்:48) மாணவர்க்குச் சொல்லப் பட்டுள்ள செய்தி, புராணமா?  வரலாறா? இவ்விரு பாடநூல்களின் நூலாசிரியர்குழுத் தலைவர் டாக்டர் மு.பி.பா.என்னும் ஒருவரே! இதில் கவனிக்க வேண்டிய செய்தி-1996இல் தமிழ்நாட்டு ஆளும்கட்சி மாறினாலும் இந்த நூலாசிரியர் மாறவில்லை என்பதுதான்! கற்றோர்க்கு  சென்ற இடமெல்லாம் சிறப்பு!

இவை பத்தாம்வகுப்பில் என்றால், 2005தொடங்கி, இப்போதும் பாடமாகஉள்ள 8ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலின் திருவிளையாடற் புராண முன்னுரையில் புராணம் - பழைய வரலாறு”-என்றே பொருள் சொல்லியிருப்பது வெகுசிறப்பு!
இந்த நூலாசிரியர் குழுத்தலைவர் திரு.வி.கணபதி மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் திருவிளையாடற் புராணம் என்று தெளிவாகவே சொல்லிவிட்டார் (பக்:36) 

இந்த நூலாசிரியர் இருவரும் திருவிளையாடல்  தமிழ்த்திரைப்பட ரசிகர்கள் என்பது மட்டும் தெரிகிறது!
நாமும் நல்ல கலையை ரசிப்போம், அதற்காக இப்படியா!?

இந்த வரலாற்றுக் கற்பனைக்கு ஊற்றுக்கண்ணான குறுந்தொகைப் பாடல்(எண்:02) ‘கொங்குதேர்வாழ்க்கை யில்,  ஆசிரியர்பெயர் இறையனார் என்றுள்ளதே தவிர அதில் செண்பகப் பாண்டியனும் இல்லை, நெற்றிக்கண் திறந்த சிவாஜிகணேசனும் இல்லை! நெற்றிக் கண்திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்ட ஏ.பி.நாகராஜனும் இல்லை!

நடிப்பும் வசனமும் நன்றாக இருந்ததால் மாணவர்களைப் போலவே இந்த நூலாசிரியர்களும் புராணக் கற்பனையை நடந்த வரலாறாகவே நம்பி, மாணவர்களையும் நம்ப வைத்துவிட்டார்கள் இவ்வாறே தற்போதுள்ள 7ஆம் வகுப்புச் செய்யுள் பகுதியில் வரும் சங்கரன் பெற்ற புண்கள்  பாடல்பகுதிக் கதைகளும், ‘முப்புரம்எரித்ததுபோலப் பற்பல புராணப் புனைவுகளும், வரலாற்றோடு குழப்பும் பகுதிகளாக நிறையவே உள்ளன நல்லவேளை இந்தப் புராணங்களை வரலாற்றுப் பாடநூல்களில் சேர்க்காமல் போனார்களே?

விதியை வலியுறுத்தும் பாடப்பகுதிகள்!:
 சிலப்பதிகாரப் பாடங்களில், அறிவுப்பூர்வமாகச் சொல்ல வேண்டிய பகுதி, கண்ணகியின் பாத்திரப் படைப்பு. திருமணம் ஆனபெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு முற்பகுதிக் கண்ணகி உதாரணம் எனில், ஒருவேளை அப்படி இருந்துவிட்டால் பின்னர் எப்படிஇருக்கவேண்டும் என்பதற்கே பிற்பகுதிக் கண்ணகி உதாரணம் என்றல்லவா சொல்லித் தரவேண்டும்? அதைவிட்டு சிலம்பு கூறும் மூன்று நீதிகள்  என்று கற்பைப் பற்றியும், விதியைப் பற்றியும் வலியுறுத்தவா சிலப்பதிகாரத்தைப் பயன்படுத்துவது? ‘கற்பைப் பற்றி என்னவிளக்கம் சொல்ல வந்தாலும் அது பெண்ணடிமைத் தனத்தில்தான் முடியும் என்றுசொன்ன தந்தைபெரியார் இப்படிச் சிலப்பதிகாரத்தைப் பயன்படுத்துவது சரிதான் என்று சொல்வாரா
2003முதல் 12ஆண்டுக்குமேல் பாடநூலாக இருந்த பத்தாம் வகுப்புச் செய்யுள் பகுதியில், பாடப்பகுதிக்கும் அப்பாற்பட்டு இந்த மூன்று நீதிகள் நூல்குறிப்பில் தரப்பட்டுள்ளன! அதை மாணவர்கள் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ கேள்வி-பதில் பகுதியிலும்  சிலம்புஉணர்த்தும் மூன்று நீதிகள் என்ன?’ என்று (பக்:39) சேர்த்திருப்பதன் நோக்கம் என்ன?  ‘மாணவர்களின் விதி இதையெல்லாம் படித்துத்தான் ஆகவேண்டும் என்பது தானோ? ‘விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயடா?!’என, பாரதி புலம்பியது இதனால்தானோ?

சாதி ஒற்றுமையைப் படி! - குலப்பெருமையும் பேசு!:
 தமிழ்நாட்டுப் பாடநூல் அனைத்திலும் முதல்பக்கத்திலேயே  தீண்டாமை ஒழிப்பு வாசகங்கள் இடம்பெற்றிருப்பது சரிதான். உள்ளேயும் பல்வேறு பாட-செய்யுள் பகுதிகளில் சாதிஒழிப்பு மற்றும் சமத்துவக் கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. பாராட்டத்தான் வேண்டும். ஆனால், நுட்பமாகச் சில இடங்களில் நூலாசிரியர்களின் கவனக்குறைவு காரணமாக (அல்லது மிகுந்த கவனத்துடன்?) இடம்பெறும்  சாதிய மற்றும் குலப்பெருமை தகவல்களை என்ன செய்வது?

1997இல் --கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு-வெளிவந்த பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூலில், ‘குலவித்தை கல்லாமல் பாகம் படும் எனும் --குலக்கல்வித திட்டத்திற்கு ஆதரவான-- பழமொழிப்பாடல் இடம்பெற்றது எவ்வாறு? 

இதில், இந்தப் பாடலைமட்டும் தனியாக எடுத்துப் போட்டு  அணிவிளக்கம் தந்த சிறப்புக்கவனம் வேறு! பல தலைமுறைகளை நாசப்படுத்துமல்லவா இது?

இதேபோல, 1996வரை இருந்த தமிழ்ப்பாடநூலின்  கம்ப ராமாயண பாடற்பகுதியில் இராமனின் குலச்சிறப்புகளை விளக்கச் சொல்லி ஒரு கேள்வி, அதே பகுதியில் கம்பர் உவச்சர் மரபுஎனும் சாதிய விளக்கம் வேறு! இதைப் படிக்கும் மாணவர் நெஞ்சில், சாதி - குலப்பெருமைகள்தான் ஆழப்பதியுமே தவிர அது தவறு எனும் கருத்து வளராதே! இந்தக் கவலை பாடநூல் ஆசிரியர்க்கு இருக்கவேண்டாமா?!

பெண்ணடிமையை வலிறுத்தும் பாரதிதாசன்!:   ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் குடும்ப விளக்கு பாடப்பகுதி இருந்தது. பரவாயில்லையே! பெண்கல்வியை வலியுறுத்தும் சிறுகாவியமாயிற்றே! என்று மகிழ்ந்துபோனேன். அதுவே கொஞ்சம் அதிகமாகி, படித்தபெண்ணும் வீட்டுவேலைகளைத் தவறாமல் செய்யவேண்டும் என்னும்தொனி அதிகரித்து விட்டதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதையும் தாண்டிக் கேள்விபதில் பகுதியிலேயே ஒரு பெண் காலையில் எழுந்து செய்யவேண்டிய வேலைகள் என்னென்ன?’ என்று கோடுபோட்டுத் தருவதை பாரதிதாசனே மன்னிக்கமாட்டார். இதற்குக் காரணம் பாடநூலாசிரியர்தம் மண்டையில் ஊறிய பெண்ணடிமைத்தனமன்றி வேறென்னவாக இருக்கும்?

இல்லாவிட்டால், சிற்றிலக்கியப் பகுதியில், ‘உலாவைப் பாடமாக வைக்கும் போதெல்லாம், ‘வீதிஉலா வரும் அரசனின் அழகைப் பார்த்து, ஏழுபருவப் பெண்களும் ஆசைப்பட்டு  புலம்புவதுதான் உலா என்னும் விளக்கம் மறக்காமல் தரப்படுவதேன்? ‘பேதைப் பருவ’(ஆறுவயது?!) பெண்ணுக்கும் அரசன்மேல் காமம் என்பது கொஞ்சம் அல்ல ரொம்பவே  ஓவரா இல்ல?  ஒருபக்கம் பெண்மைவெல்க’, ‘பெண் கல்வி  என்னும் செய்யுள்கள், மறுபக்கம் பெண்என்பவள் நுகர்பொருளே எனும் கருத்து...ஏன்? (அறிந்தோ அறியாமலோ  ஆம்பளைக்கு  ஏழுபருவம் கிடையாதா சார்?’ என்று அப்பாவியாக்க் கேட்கும் மாணவரிடம் மாட்டிக்கொள்ளும் ஆசிரியர்கள் பாவம்!)

ஆட்சி மாறினால் பாடநூல் மாறும்! உள்ளடக்கம் மாறாது! :2004ஆம் ஆண்டுமுதல்15ஆண்டுகள் பாடநூலாக இருந்த 7ஆம் வகுப்புத் தமிழ்நூலில்  பாரதரத்னா எம்.ஜி.ஆர். என்று 8 பக்கப் பாடம் உள்ளது! அதிலும், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரமும்,  வாலியும் எழுதியுள்ள பாடல்கள் பலவற்றைப் போட்டு  என்று எம்.ஜி.ஆர். பாடி நடித்துள்ளார் என்று பாடம் வைத்தால் பிள்ளைகளின் பகுத்தறிவு வளர்ச்சிக்;குக் கேட்கவா வேண்டும்? வாழ்க அண்ணா நாமம்! வளர்க  பெரியாரின் பகுத்தறிவு! அய்யோ பாவம் கலியாணசுந்தரமும் வாலியும்!

1996வரை இருந்த பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் அப்போதைய முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் மதுவிலக்கில் மனப்புரட்சி எனும் பாடம் இருந்தது! ஆட்சி மாறிய அடுத்த -1997ஆம்- வருடம், அந்தப் பாடம் காணாமல்போய் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் குறளமுதம் வைக்கப்பட்டது! இது ஒரு சிறு செய்திதான், இது போல 1979ஆம் வருட ஆரம்பப் பாடவகுப்பு ஒன்றில், மொரார்ஜி தேசாய் பாடமாக இருந்தார். அவர் மாறியதும், அடுத்தவருடம் அந்தப் பாடம் இல்லை. இது என்ன விளையாட்டு? ஆட்சி மாறினால், தலைவர்கள் மாறுவது அரசியலுக்குப் பொருந்தலாம், பாடம் வைக்கப்படும்போது,  தலைமுறை கடந்த தலைவர்களாக இருப்பவரைத்தானே பாடநூல்களில் இடம்பெறச்செய்ய வேண்டும்? இதுபற்றிய அக்கறை பாடநூலாசிரியர்க்கு வேண்டாமா?

இதே போலத்தான் 1996ஆம் ஆண்டுவரை இருந்த 10ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலின் பின்அட்டையில், “மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா  அவர்களின் பெண்மையைப் போற்றும் ஐந்துவரி வாசகம் இடம்பெற்றிருந்தது! 2010இல் வந்த 6ஆம் வகுப்புச் சமச்சீர்க் கல்வித் தமிழ்ப்பாட நூலின் பின் அட்டையில் கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு விளம்பரம் வந்துள்ளது! (பிறகு ஆட்சிமாற 2011இல் அதுவும் மாறிவிட்டதுங்கோ...!)

பாடாய்ப் படும் பழமரபுக் கதைகள்:  பழமரபுக் கதைகள் நமது பெரும் சொத்து! அதிலிருந்து இன்றைக்குப் பொருந்துமாறு எடுத்தாள்வது எளிதான செயலன்று! பத்தோடு பதினொன்றாக அவற்றைப் பயன்படுத்தும்போது எதிர்விளைவே நிகழும்!
அரிச்சந்திரனைப் பற்றி அவன் தன்னை இழந்து, தன்நாட்டை இழந்து, மனைவி-மக்களை இழந்தும் வாய்மையைக் காப்பாற்றி வரலாறாய் ஆனவன் எனும் பெருமை சொல்லப்படுகிறது. எனக்குத் தோன்றும் சந்தேகம், ‘அரசனின் கடமை மக்களைக் காப்பாற்றுவதா? வாய்மையைக் காப்பாற்றுவதா? என்பதுதான். வாழும் மக்களைக் காப்பாற்றாத அரசன், வாய்மையைக் காப்பாற்றி என்னசெய்யப் போகிறான்? இக் கதை சரியானதா? 
அல்லது பொய்மையும் வாய்மை இடத்த.. குறள் சரியானதா?
என் சிற்றறிவுக்கு எட்டியவரை, குறள்தான் சரி. அதுதான் நடைமுறை வாழ்வியல் பாடம்!

தனக்குக் கற்றுக்கொடுக்காத துரோணாச்சாரிக்கு, குருதட்சணையாக கட்டைவிரலை வெட்டிக் கொடுத்த ஏகலைவன் செயல், ‘குருபக்தி என்றல்லவா போற்றப் படுகிறது! இதை ஆச்சாரியின்  குருத்துரோகம் என்றல்லவா சொல்லித்தந்திருக்க வேண்டும்? ஏனிந்தத் தலைகீழ்ப் பாடம்
இதுபோல, மறுவாசிப்புக்கு உட்படுத்திச் சொல்லித்தரப்பட வேண்டிய பலநூறு பழமரபுக் கதைகள் இன்னமும் அப்படியே சொல்லித்தரப்படுவதால், பழம்பெருமையாலல்ல அழுகிய கருத்துக்களால் அல்லவா எமது மாணவர்கள் அலங்கரிக்கப் படுகின்றனர்? சொத்து இருந்தும் பிச்சையெடுக்கும் எமது இன்றைய இழிநிலைக்குக் அடிப்படைக் காரணம் இதுதான்!

இலக்கணம் என்னும் பெருஞ்சுமை !
 போலப் புரைய ஒப்ப உறழ மான கடுப்ப இயைய ஏய்ப்ப
 நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே  என்னும் நன்னூல் நூற்பா உவம உருபுகள் எனும் பிரிவில் இலக்கணப் பாடத்தில் இடம்பெறுகிறது. இதில் வேடிக்கை என்னவெனில், சொல்லப்பட்ட 12உருபுகளில் ஒன்றுகூட இப்போது வழக்கில்இல்லை. (போல எனும்சொல் எழுத்து நடையில் மட்டுமே வருகிறது) ஆனால், வழக்கில் இருக்கும் உவமஉருபுச் சொற்கள் மாதிரி’ ‘ஆட்டம்’ ‘கணக்கு  முதலானவையே! ஏளிமையாக மனத்தில் நிற்கும் இவற்றை எழுதினால் மதிப்பெண் கிடையாது! மதிப்பெண் வேண்டுமா..  வழக்கில்இல்லாத சொற்களை விழுங்கி செரிக்காமலே வாந்தி எடுக்க வேண்டும்!

இதுதான், பெரும்பாலான இலக்கணப் பாடங்கள் இன்றைய மாணவர்க்குச் சுமையாக இருக்கக் காரணம்!
 இதற்கென்று பாடநூல் குழுவினர் கடுமையாக உழைத்தாக வேண்டும். இலக்கண மரபும், இன்றைய வழக்குச் சொற்களின் பொருளறிவும் மிகுந்த  முக்கியமாக மாணவர் நிலையில் யோசிக்கத் தெரிந்த-- எதார்த்த அறிஞர்களை அழைத்துப் பயன்படுத்த வேண்டும்! இல்லையேல், இலக்கணம் வெறும் மனப்பாடச் சுமையே எனும் கருத்தை மாற்ற இயலாது!

 இதேபோல, வழக்குச் சொற்களைக் கொச்சைச் சொற்கள்’  என்று சொல்லும் (ஏழாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் பக்:74) பண்டிதத் தனம் மாறியாக வேண்டும். பேச்சுமொழி வேறு, எழுத்து மொழி வேறு. இரண்டும் அதனதன் போக்கில் வளரும். 
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்…’ என்று வழக்கிற்கு முக்கியத்துவம் தந்து இலக்கணம் படைத்த தொல்காப்பியன் ஒன்றும் முட்டாளல்ல! மிகப்பெரிய மொழியறிஞன்! வழக்கிற்கு முக்கியத்துவம் தராத இலக்கணம் மொழிவளர்ச்சிக்கு உதவாது என்பதைப் பாடநூல் தயாரிக்கும் அறிஞர் மனத்தில் கொண்டு  இலக்கணப் பகுதி அமைக்கக் கடுமையாக உழைக்க வேண்டும்,  சிந்தித்துப் பாடப்பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வைக்கவேண்டும்.

நிறைவாகச் சில சொற்கள்
 பாடநூல்கள் அடுத்த தலைமுறைக்கானவை என்னும் அக்கறையுடன், நமது தமிழின்  விழுமியங்களுடன் இன்றைய வாழ்வின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளும் மொழிப் பயிற்சிகளுடன் சமகாலப் போட்டி உலகில் நமது மாணவர்கள் வெற்றிபெறும் கூர்மையுடன் இருக்கவேண்டும்.

சமச்சீர்க் கல்வி ஒரு நல்ல முயற்சிதான். அதிலாவது இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்பதே நம் நியாயமான எதிர்பார்ப்பு! புதியபாடநூல் தயாரிப்பாளர்கள் இதைச் செய்வார்கள் என்று எதிர்பார்ப்போமாக.
---------------------------------
ஆதாரம்:  1991-2010வரையான 6,7,8,9,10 வகுப்புகளின் தமிழ்ப்பாட நூல்கள் -நன்றி- த.நா அரசு பாட நூல் கழக வெளியீடு. 

8 கருத்துகள்:

  1. பாடநூல்கள் என்பது ஆட்சியாளர்களை மகிழ்விக்க. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற வாக்கியம் இல்லாமலேயே பாடநூல் கலைஞர் ஆட்சியில். இன்று ஆலயதரிசனம் . திரைமறைவில் . ஹிந்தி எதிர்ப்பு ஆட்சி பிடிக்க மத்திய அமைச்சராக ஹிந்தி ஆதரவு.பிரதமராகும் அம்மாவுக்கு ஹிந்தி தெரியும். முரசொலிக்கும் தெரியும். எளிய மக்கள் உயிர்த்தியாகம் செய்தவர்கள் !! சுயநல இரட்டைவேடம் ஏன்?

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    தமிழ்ப்பாட நூலில் தமிழின் நிலையை மிக விரிவாக ஆராய்ந்து அளித்த கட்டுரையை அரசு கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் தவறுகளைத் திருத்த முன்வர வேண்டும். செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    நன்றி.

    த.ம.1

    பதிலளிநீக்கு
  3. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று எதிர்பார்ப்போம் ஐயா

    பதிலளிநீக்கு
  4. உங்கள் ஆதங்கமும் கோபமும் புரிகிறது அண்ணா. சிலப்பதிகாரம், அரிச்சந்திரன், பெண்ணடிமைத் தனம் பற்றி எனக்கும் உங்கள் கருத்தே! வீட்டு வேலைக்கு ஆள் வைக்கவிடாத மனிதர்களையும் அறிவேன் அண்ணா.. நிறையச் சொல்லத் தோன்றினாலும் தட்டச்ச முடியவில்லை.
    உங்கள் கட்டுரையைப் படித்துக் கற்றுக் கொண்டதால் நான் என் பிள்ளைகளுக்கு மெய்யெழுத்து வரிசை வர்க்க எழுத்துகள் சொல்லித்தான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். பெரியவனுக்கு நன்றாகத் தெரியும், இளையவன் கற்றுக்கொண்டிருக்கிறான். நான் உச்சரித்துக் காட்டிப் பழக்கியிருந்தாலும் உங்கள் கட்டுரை படித்தபின் ஒற்றல், வருடல் என்றும் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  5. அருமை ஐயா.நான் தாங்கள் எழுதிய முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே என்ற புத்தகத்தை ஆவலோடு படித்துக் கொண்டு இருக்கிறேன்.ஒவ்வொரு கணமும் தங்களின் கருத்தோடு பயணிக்கும் போது கேள்விகள் எழுகின்றன ஐயா.புத்தகம் முழுவதும் முடித்ததும் தங்களிடம் என் கருத்தைப் பகிர்கிறேன் ஐயா.சில இடங்களில் நான் கேட்க நினைத்த பல கேள்விகளை தாங்கள் கேட்டு உள்ளீர் அதை குறித்து நான் மகிழ்கிறேன் ஐயா.அதற்கான விடைக்கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள் ஐயா.விரைவில் இதுக் குறித்து என் கேள்விகளை தங்களிடம் கேட்கிறேன்.

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. ஐயா/அண்ணா மிக மிக அருமையான விரிவான அலசல். தமிழ்ப்பாடநூல் பற்றி. அரிச்சந்திரன் கதை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் எல்லாம் தமிழ்ப்பாடநூல்களில் படித்துத் தமிழில் மயங்கினோமே அல்லாமல் கருத்தில் அல்ல. ஏனென்றால் நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் கருத்துகள்தான் எங்களதும். அதே போன்று ஏகலைவன் கதையும் உடன்பாடில்லை. மெய்யெழுத்து வரிசை, வர்கம் அறிவோம் என்றாலும் அதன் விளக்கம் இப்போது தங்களிடமிருந்துக் கற்றுக் கொண்டோம். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. காலத்துக்கு ஒவ்வாத கருத்து என்று சொல்லி பழைய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்களை நிராகரிக்க முடியாது. சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்று குறிப்பிடுவதில் தவறு இல்லை. அது அந்தபு படைப்பாளியின் நம்பிக்கை என்றுதான் மாணவர்கள் எடுத்துக்கொள்வார்கள். உங்கள் கையில் புத்தகத்தைக் கொடுத்தால் குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதை ஆகிவிடும். ஒருசில குறைகள், அரசியல் தலையீடுகளை மீறி பாடப் புத்தகங்கள் ஓரளவு நன்றாகவே இருந்துவருகின்றன. ரொம்பவும் பழமைவாதமோ, அல்லது பழமையை ஒரேயடியாகப் புறக்கணிப்பதோ இல்லாமல் பேலன்ஸ் சரியாகவே இருக்கிறது. இன்றைய தமிழைச் சொல்லித் தருகிறேன் என்று வடிவேல் வசனத்தைச் சொல்லித்தர முடியுமா? வழக்கில் இல்லாவிட்டாலும் 12 உவம உருபுகள் மரபு இலக்கியங்களைப் புரிந்துகொள்ளத் தேவைதான்.

    சரவணன்

    பதிலளிநீக்கு
  8. தம்பி!நீண்ட நாளாக என் நெஞ்சில் நிலவிய கருத்துகளை அப்படியே வடித்து எழுயுள்ள உங்கள் பதிவு கலங்கரை விளக்கு போல அமைந்துள்ளது!உங்களைப் பாராட்ட சொற்கள் இல்லை!ஒன்று மட்டும் என்னால் சொல்லமுடியும் உங்களை என் உடன் பிறாவாத் தம்பியாக நான் பெற்றது பெரும் பேறு என்பதே!இனி வரும் எதிர் காலத்திலாவது தங்களைப் போன்றவர் தமிழ் பாட நூல் குழுவில் இடம் பெற வேண்டும் எவ்வளவோ எழுத வேண்டும்! தட்டச்சு செய்ய இலவில்லை!

    பதிலளிநீக்கு