தமிழ்-இந்து சமஸ் அவர்களுக்கு ஒரேஒரு கேள்வி

    தோழர் நல்லக்கண்ணுவை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய ஏன் மறுக்கிறீர்கள்?என்று இரண்டாவது முறையாக, கேட்டிருக்கிறார் திரு சமஸ் 
(டிச-25,பிப்-23 தமிழ்இந்து கட்டுரைகளின் இணைப்புகள் 
இக்கட்டுரையின் இறுதியில் உள்ளன)
     நாம் ஒன்றும் மக்கள் நலக்கூட்டணியின் பிரதிநிதி அல்ல. எனினும், திரு சமஸ் அவர்களுக்குக் குறையாத அளவிற்கு, தோழர் நல்லக்கண்ணுவின் மேல் அன்பும் மரியாதையும் கொண்டவன் என்பதாலும், இந்திய-தமிழ்நாட்டுத் தேர்தல் நடைமுறைகளைப் புரிந்தவன் என்பதாலும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் திரு சமஸ் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

    நம்நாடு உலகிலேயே தலைசிறந்த ஜனநாயக நாடு!
   நூறுகோடிக்கு மேற்பட்ட மக்கள், தங்களின் அடுத்த ஐந்தாண்டுக்கான பிரதிநிதிகளையும் அவர்கள் வழியாக பிரதமர்/முதல்வர், அமைச்சர்களையும் ஒருசில வாரங்களில் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள் என்று உலகே வியந்து பார்க்கிறது!
   மாறாக, அமெரிக்கத் தேர்தல் முறையை உலகறியும். இறுதிச் சுற்றுக்கு ஓராண்டின் முன்னரே தேர்தல்கள் தொடங்கிவிடும்! அதிபரை மையப்படுத்தியே தேர்தலும் அரசும் செயல்படும்! அதன் நன்மையோ தீமையோ அதிபரைத்தான் சேரும்! இந்தியாவில் அப்படி அல்லவே!
  மாநிலத் தேர்தலில் “இவர்தான் முதல்வர் என்றோ நாடாளுமன்றத் தேர்தலில் “இவர்தான் பிரதமர்“ என்றோ முன்னரே அறிவிக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது?
 “இதுதான் எங்கள் கொள்கை, இதையே நாங்கள் செய்யப் போகிறோம். எங்கள் கொள்கை நடைமுறை மீது நம்பிக்கை இருந்தால் ஏற்புடையது என்று நம்பினால் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து, ஆட்சியை ஒப்படையுங்கள்என்று தமிழக அரசியல் வரலாற்றில் வெளிப்படையாக அறிவித்திருக்கும் முதல் கூட்டணி தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் நலக்கூட்டணி!
திரு சமஸ் எழுத்தாளர்
   அதைப் பற்றி அதன் கொள்கைகளைப் பற்றி, அதன் தலைவர்களின் பலம், பலவீனம் பற்றிப் பேசினால், அது மக்களுக்குப் பயனுடையதாக இருக்கும். அதைவிட்டு, “இவரை ஏன் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மறுக்கிறீர்கள்?என்று கேட்பது, அந்தக் கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, “ஆமா.. ஏன் மறுக்கிறார்கள்? இவர்கள் சுயநலம் மிக்கவர்கள், நல்லவர் நல்லக்கண்ணுவை ஏற்க மறுக்கிறார்கள், என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்து என்ன செய்துவிடப் போகிறார்கள்?” என்பதான எதிர்மறைக் கருத்தை மக்களிடையே விதைக்கவே உதவும் என்பதை சமஸ் ஏன் யோசிக்க வில்லை?
  இதுபோலத்தான், முன்னர் ஒருமுறை திரு ரவிக்குமார் எழுதியிருந்த, “ஒரு தலித் ஏன் முதல்வராக வரக்கூடாது?என்னும் கட்டுரையை இப்போது எடுத்துப் போட்டுக் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த நினைத்த சிலருக்கும் சமஸ் அவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது என்றாலும், இது சரிதானா?
  சரி, அப்படியே சமஸ் கூறுவதுபோல மக்கள் நலக்கூட்டணியினர் தோழர் நல்லக் கண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். (அதிலொன்றும் கொள்கை மாறுபாடு வரப்போவதில்லை) என்ன நிகழும்? 
   இந்தத் தொண்ணூறு வயதில் ஊர்ஊராக அலைந்து “நான்தான் முதல்வர் வேட்பாளர், எங்கள் கூட்டணியை நீங்கள் தேர்வு செய்தால் நான் நல்லாட்சி தருவேன்என்று பேசக்கூடிய நிலையில் தோழர் நல்லக்கண்ணு உடல்நிலை இருக்கிறதா?
   
    சரி, அப்படியே அவர் இல்லாமல், “இவர்தான் எங்கள் வேட்பாளர், நீங்கள் விரும்பும் நல்லாட்சியை இவர் தருவார்“ என்று கூட்டணியினர் பேசும்போது, “அவர் எங்கப்பா? நீங்களா வந்து பேசிக்கிட்டிருக்கீங்க?என்று மக்கள் கேட்க மாட்டார்களா? அல்லது, “ஆமா, இப்படித்தான் அந்த அம்மா இருந்த இடத்தில இருந்துகிட்டே நாடுமுழுவதும் நலத்திட்டங்களைக் காணொளி மூலம் திறந்து வச்சிது, கொடநாட்டுல இருந்துகிட்டு அரசாங்கத்த நடத்துதுனு குத்தம் சொன்னவங்க, இப்ப இவர அழச்சிக்கிட்டு வராம அவரக் குத்தம்சொல்றதுசரியா?”என்றுகேட்பார்களா இல்லையா?
   இது, தோழர் ஆர்என்கேயின் உடல்நலமும் சார்ந்த கருத்து என்பதை சமஸ் ஏன் மறந்தார்? அல்லது “கதாநாயனைக் காட்டி படத்தை விற்கஇதுஎன்ன திரை உலகமா? தேர்தல்! மக்களாட்சியின் மகத்தான தேர்தல்!
   சரி, அப்படியே தோழர் ஆர்என்கே அலையத் தயாராக அவரது உடல் நிலை இருப்பதாக வைத்துக் கொள்வோம்! இதை அவரே விரும்புகிறாரா?  விரும்ப மாட்டார். ஏனெனில் நம்நாட்டுத் தேர்தல் அமெரிக்க பாணியிலான தேர்தலல்ல என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்! உடல்நிலை சரியில்லா நிலையைக் கருத்தில் கொண்டு, எந்தவித எதிர்ப்பும் இல்லாத நிலையிலும் முதல்வர் பதவிகளைத் துறந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்பதை நாடறியும். 
     சுதந்திரம் பெற்றபின் இந்த 65ஆண்டுகளில் இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் ஏதாவது ஒருமுறையேனும் ராணுவ ஆட்சிக்குள்- (அ) அதிபராட்சிக்குள்-தள்ளப்பட்டிருந்ததை நாம் அறிவோம் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கன், பர்மா, பூட்டான், நேபாளம் என எந்த நாடும் இதில் விதிவிலக்கல்ல.இந்தியாமட்டுமே இதில் விதிவிலக்கு!   உண்மைதான்! இதில் ஒன்றும் சந்தேகமில்லை, உலகநாடுகளின் தலைவர்கள் பலரும் நேரடியாக அதிபரைத் தேர்ந்தெடுக்கிறார்கள், பின் அவர் மற்ற அமைச்சர்களை ஆளுநர்களை –உறுப்பினர்களிலிருந்து- தேர்ந்தெடுக்கிறார்.
  நாம் நேரடியாக பிரதமரை, மாநில முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அதிபர் ஆட்சிமுறையை ஏற்கவில்லை என்பதால், இப்படி மக்களின் கண்காணிப்பிலேயே ஒவ்வொரு பிரதிநிதியும்,  அமைச்சர்களும், மாநில முதல்வரும், பிரதரும் மக்களின் தேர்விலேயே வந்து அமர்கிறார்கள்.
  “இந்தியாவில் விகிதாசார தேர்தல்முறை வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுகின்றன. பாஜகவோ அமெரிக்காவில் நடப்பது போன்ற அதிபர் தேர்தல் வேண்டும் என்கிறது. இந்தியாவில் அதுபோன்ற தேர்தல் முறை வந்தால் லட்சியப்பூர்வமான சிறிய கட்சிகள் அழிந்துவிடும். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்கு அமெரிக்க பாணி தேர்தல் முறை ஒத்துவராது”
   –இது தோழர் ஆர்.என்.கே. தன் ரத்தமும் சதையுமாக நினைக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலத் துணைச் செயலர் தோழர் மகேந்திரன் அவர்களின் கருத்து மட்டுமல்ல, இரண்டுகட்சிகளின் -இப்போது நான்கு கட்சிக் கூட்டணித் தலைவர்களின்- தொண்டர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாகும்!
  2000ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனாநாயகக் கட்சியின் வேட்பாளரான அல்கோர் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்கா முழுவதுமாக அதிக வோட்டுக்கள் பெற்றிருந்தாலும் கூட ஃப்ளோரிடா மாகாணத்தில் மட்டும் சொற்ப வோட்டுக்களில் தோற்ற படியால் அந்த மாநில பிரதிநித்துவ வோட்டுக்களின்படி அவர் தோல்வி அடைந்தார். இது அமெரிக்கத் தேர்தல் செய்தி.   வெற்றி பெற்றவர் தனது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக் கொள்வார். மந்திரிகள் பாராளுமனற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் அமெரிக்காவில் கிடையாது. தகுதி, திறமை, அனுபவம் உள்ள எந்தக் குடிமகனாக வேண்டுமானாலும் இருக்கலாம். 
  ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் மந்திரிகளை செனட் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு சோதனை செய்து ஒப்புதல் அளித்த பின் அவர்கள் மந்திரியாகச் செயல் பட அனுமதிக்கப் படுவார்கள். அப்படி அதிபரின் தேர்வு மந்திரி செனட் உறுப்பினர்களினால் ஏகோபித்து நிராகரிக்கப் பட்டால் அதிபர் வேறு நபரை மந்திரியாக மீண்டும் தேர்வு செய்து மீண்டும் பாராளுமன்றத்தின் மெஜாரிட்டி ஒப்புதலைப் பெற வேண்டும். –இது அங்குள்ள  தேர்தல் நடைமுறை! 
       இதைத்தான்  சமஸ் முன்மொழிகிறாரா?
  இந்தியாவில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி தங்களுக்குள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறது. (சிலநேரம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் உறுப்பினரானதும் உண்டு)
  அவர் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தே தனது மந்திரி சபையை அமைத்துக் கொள்கிறார்
    அமெரிக்காவில் 44ஆவது அதிபராகத்தான் ஒரு கருப்பினத் தலைவர் வரமுடிந்தது என்பதையும், இன்னும் கூட ஒரு பெண் அவ்வாறு வரவில்லை என்பதையும் திரு சமஸ் அறிவார், அதோடு, இந்தியக் குடியரசுத் தலைவராக சுதந்திரம் பெற்ற இருபதே ஆண்டுகளில் மூன்றாவது குடியரசுத் தலைவராக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த திரு ஜாகிர் உசேன் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள், அவ்வாறே மூன்றாவது பிரதமராக ஒரு பெண்மணி (இந்திரா காந்தி) தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பதையும் அறிவார். 
 அதுமட்டுமல்ல சுதந்திரம் பெற்றபின்னான 13குடியரசுத் தலைவர்களில் இதுவரை சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் 4பேர் இருந்திருக்கிறார்கள் என்பதும், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஓர்அறிஞர் இங்குதான் குடியரசுத்தலைவராக இருந்தார் என்பதையும அவர் நன்கறிவார். இதெல்லாம் அமெரிக்காவில் முடிந்ததா?
     இங்குள்ள சமூகப் பிரச்சினைகளை நாமறிவோம். நமது பலம்பற்றியும் பலவீனம் பற்றியும் நன்கறிவோம். குடியரசுத் தலைவராக ஒரு தலித்தும்,  பிரதமராக ஒரு பெண்ணும் வந்துவிட முடிகிற இந்தியாவில்தான், சிற்றூராட்சித் தலைவராக ஒரு பெண், அல்லது தலித் தேர்ந்தெடுக்ப்படுவதும் செயல்படுவதும் பெருத்த சவாலுக்கு உரியதாக உள்ளது என்பது நமது பலவீனம். 
  இந்தியாவின் மக்களாட்சியின் பலவீனத்தை நாம் நன்றாகவே அறிவோம். ஆனால், அதற்காக தனிநபரை முன்னிறுத்தி நடத்தும் தேர்தல் முறை நம்நாட்டை ஒருபோதும் முன்னேற்றாது!
 மற்றபடி நம் தேர்தல்-ஜனநாயகத்தில் உள்ள பலவீனங்கள் பற்றித்தான் பேசவேண்டியதும் உள்ளது. பணநாயகம் வளர்ந்துவிட்டதை, பாமர மக்கள் ஊடக வழியாக ஏமாற்றப்படுவதுபற்றி நிறையப் பேசவேண்டும். அதுபற்றிப் பேசவிடாமல், தனிநபரை முன்னிறுத்த என்ன அவசியம் இப்போது என்ன வந்தது?
 முதல்வர் வேட்பாளரை முன்மொழியாமல் தேர்தலுக்குப் போவதையே மக்கள் நலக்கூட்டணியின் “சர்வாதிகாரம்என்கிறார் சமஸ்! 
   யோசித்துப் பார்த்தால், இப்படி இவர் தன் கருத்தைத் திணிப்பதுதான் அந்தக் கட்சிகளின் மீது திணிக்கப்படும் சர்வாதிகாரமாகும். 
 உண்மையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் நம்பிக்கை கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் யாவரும் மக்கள் ஜனநாயகத்தின் மாண்பை உணர்ந்தவர்கள். 
 அதனாலேயே தனிநபர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சாதாரண இரு தோழர்களின் கருத்தை ஏற்கும் மனநிலையைக் கட்சிக்குள் வளர்க்கிறார்கள்! 
 இதைத்தான் அவர்கள் “மத்தியத்துவப் படுத்தப்பட்ட ஜனநாயகம்என்கிறார்கள்! “பாராளுமன்றம் முதல் பாதையோரம் வரைகம்யூனிஸ்டுகள் ஒன்றுபோலப் பேசுவதன் ரகசியமும் இதுதான்! 
  கருத்தை உருவாக்குவது! திணிப்பதல்ல ஜனநாயகம்!
 இப்போது என் ஒற்றைக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் திரு சமஸ்!-
இந்திய மக்களாட்சித் தேர்தல் முறையை, அமெரிக்க அதிபர் தேர்தல் முறைக்கு மாற்ற வேண்டும் என்கிறீர்களா?
-----------------------------------------
பார்க்க–
(ஒர்ரேபொருளில் இரண்டு வேறுவேறு கட்டுரைகள்!(?)

ஏன் உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லை?/ Published: December 25, 2015

முதல்வர் வேட்பாளர்: ஜனநாயகமா, சர்வாதிகாரமா?-- Published: February 23, 2016

65 கருத்துகள்:

  1. நமது மக்களாட்சியின் படி உங்கள் பார்வையில் நியாயம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது ஐயா.. தமைழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர் முறை நடைமுறையில் இல்லை என்றாலும் இந்த கட்சி ஜெயித்தால் இவர் தான் முதல்வர் எனபது உள்ளங்கை நெல்லிக்கனி. எனவே மக்கள் நலக் கூட்டணியும் ஒரு முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் தவறில்லையே.. அது அந்த கூட்டணியின் மீதான நம்பகத்தன்மையைத் தானே அதிகரிக்கும். அதுவும் நல்லக்கண்ணு ஐயா போன்ற தலைவர்களை முன்னிறுத்தினால் நல்லதொரு மாற்றம் வரக்கூடும் அல்லவா.. ஆம் நீங்கள் சொல்வதைப் போல அவர் உடல்நிலை,விருப்பம் உள்ளிட்டவை மிக முக்கிய கருது பொருட்கள்.. ஒரு வேளை இதையெல்லாம் சமாளித்து அவரை முன்னிறுத்துவது வெற்றியைத் தரும் என்பது என் எண்ணம்.. ஒரு வேளை மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் அவருடைய முதல் கோரிக்கை தன்னை முன்னிறுத்துவதாகத்தானே இருக்கப் போகிறது..? ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஐயா.. ஏதோ என் மனதில் பட்டதைச் சொன்னேன்..









    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாக நினைக்க வேண்டாம். நடிகர் திரு விஜயகாந்த், அரசியல் தலைவராவதற்குரிய எந்தத் தகுதியும் இல்லாதவர் என்பதே என் கருத்து. தவறாக இருந்தால் மன்னிக்காதீர்கள், பதில் சொல்லுங்கள்.நன்றி

      நீக்கு
    2. அதையே தான் நானும் சொல்கிறேன்.. தகுதியே இல்லாத நபரை முன்னிறுத்துவதைக்காட்டிலும் சிறந்தவரை முன்னிறுத்துவதில் தவறில்லை தானே ஐயா...

      நீக்கு
    3. எவ்வளவோ சிறந்த ஒருவரையும் விட, பலர்சேர்ந்து சிந்தித்து, பல்லாண்டுகளாக உழைத்து வடிவமைத்த கொள்கையே உயர்ந்தது என்பதே என்கருத்து நண்பா!

      நீக்கு
  2. சொல்லாமலேயே சில நிகழ்வுகள் நடக்குமென்பதை உணராதவரா சமஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தானா எல்லாம் மாறுமென்பது பழைய பொய் அல்லவா?
      நம் முயற்சியும் சிறிதேனும் தேவை ம்மா. நன்றிகள்

      நீக்கு
  3. ஐயா/அண்ணா, நல்லதொரு அலசல். நீங்கள் சொல்லும் கருத்து மிகவும் சரியே. அதாவது நம்மூரில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்றாலும் ஒரு கட்சி வெற்றிபெரும் என்றால் அந்தக் கட்சியைச் சார்ந்தவர் யார் முதல்வராக வருவார் என்பது தமிழ்நாட்டிற்கே தெரியும் அல்லவா? அந்தத் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தாலும் மக்கள் அறிவதால்தானே அந்தக் கட்சிக்கு ஓட்டு விழுகின்றது. இதற்கு முன்பு ஒரு தேர்தல் சமயத்தில் ரஜனிகாந்த் "மீண்டும் ஜெயலலிதா முதல்வரானால் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது,என்று சொன்னது ஜெயலலிதாதான் முதல்வர் வேட்பாளர் என்று தெரிந்துதானே சொன்னார்? அது போல இப்போது தேதிமுக தலைவர் விஜயகாந்த் முதல்வராக வரலாமா என்றும் நாம் விவாதிப்பதும் முதல்வர் வேட்பாளர் தெரிந்துதானே பேசுகின்றோம். அப்போது நல்லவரான நல்லகண்ணு தலைவர் என்று அறிவித்தலில் தவறு உண்டா ஐயா? மற்றபடி நீங்கள் சொல்லுவது சரிதான் அதாவது திரு நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு வயது 90 என்பதால் உடல்நலம் ஒத்துழைக்க வேண்டும் என்பது மிகவும் சரியே..அது ஒன்றுதான் வருத்தமாக இருக்கிறது அல்லாமல் அவரைச் சொல்லுவதால் அந்தக் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் இல்லையா ஐயா? மற்ற கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் நாம் அறிவோம். இவர்கள்தான் முதல்வர் வேட்பாளர் என்பதும். அப்படியிருக்க மக்கள் நலக் கூட்டணியில் அது பல கட்சிகளின் கூட்டனி என்றாலும் தலைவரை முன்னிறுத்தினால் நமக்கும் ஒரு நம்பிக்கை கிடைக்குமல்லவா? ஓட்டளிக்கவும் தெளிவு கிடைக்குமல்லவா? அந்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா ஐயா/அண்ணா? மற்றபடி நீங்கள் சொல்லும் கருத்துகள் ஏற்புடையதே. எங்கள் கருத்து தவறு என்றால் மன்னிக்கவும் ஐயா/அண்ணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொள்கை முக்கியமா? நபர் முக்கியமா என்றால் என் வாக்கு கொள்கைக்குத்தான். இந்த அடிப்படையில்தான் இந்தக் கட்டுரையே எழுதப்பட்டுள்ளது தவறுஎன்றால் மன்னிக்க வேண்டியதில்லை, தொடர்ந்து விவாதிக்க வேண்டும். தங்கள் கருத்தில் தவறிருப்பதாக நான் நினைக்கவிலலை நன்றிம்மா / நன்றி நண்பரே

      நீக்கு
  4. இந்திய அரசியல் எப்படி மாற்றியமைக்கப்பட்டாலுமே நம் மக்கள் நமது அரசு எதையுமே மாற்ற தயாராக்கமாட்டர்கள் ஐயா.நாம் தான் முயற்சிக்க வேண்டும் நல்ல அரசு மற்றும் அரசியலை உருவாக்க ஐயா.உங்கள் கருத்துகள் என்னை போன்ற பல இளைஞர்களின் கவனத்திற்கு செல்ல வகை செய்யுங்கள் ஐயா.ஆர்வமுள்ளவர்கள் உள்ளனர் ஆனால் வழிகாட்டியும் வழிதுணையும் இல்லாமல் தனது திறமைகளை மறைத்துவிடுகிறார்கள் ஐயா.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தச் சின்ன வயதில் (மாணவராக இருக்குமபோதே) நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, நேரத்தைப் பயன்படுத்தும் உன்போலும் மகள்கள் நிச்சயமாக நம் நாட்டை நல்வழிப்படுத்துவார்கள் என்னும் நம்பிக்கை எனக்கிருக்கிறதும்மா.. அதனால்தான் எழுதிக்கொண்டே இருக்கிறேன்..பேசிக்கொண்டே இருக்கிறேன்..

      நீக்கு
    2. நன்றிகள் பல ஐயா.தொடர்ந்து எழுதுங்க பேசுங்க ஐயா.நீங்கள் என் கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய வார்த்தைகள் அனைத்துமே இன்னும் என் மனதில் உள்ளன.நண்பர்களை தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் இலக்கிய வரலாற்றை படித்தால் நீங்கள் மனிதனாக முடியும் என்று கூறினீர் அல்லவா.மீண்டும் ஒரு வாய்ப்பு தங்களின் சந்திப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா.

      நீக்கு
    3. உண்மைதான் ஐயா. அதனால் தான் கலாம் ஐயா அவா்கள்கூட பள்ளி, கல்லூரி என மாணவா்களிடம் நம்பிக்கையை விதைத்தாா். இன்றைய அரசியலையும், அரசியல்வாதிகளையும் பேசுவதற்கு நடுநிலையான ஊடகங்கள் இல்லை. ஒவ்வொரு ஊடகங்களும் ஏதாவதுவொரு கட்சியைச் சார்ந்தே செயல்படுகின்றன. அந்த வகையில் முகநூல், வலைப்பதிவுகளில் தங்களைப் போன்றோரின் பதிவுகள் நடுநிலையுடையவையாகவும், நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவைப்பதாகவும் உள்ளது வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது. தொடருங்கள் ஐயா. இந்த வலையில் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் விதைக்கப்படுகின்றன.

      எல்லோரும் உலகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, ஒருவரும் தன்னைப் எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைப்பதில்லை என்பாா் டால்ஸ்டாய். இந்த அரசியல்வாதிகளை நாம் மாற்றமுடியாது நம்மை நாம் மாற்றிக்கொள்ளமுயல்வோம் என்பது என் கருத்து நண்பரே.

      நீக்கு
    4. வைசாலி, மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் உன்னிடம் நிறையப் பேசவேண்டும். பேசுவோம். உன் கணினித் தமிழ் அமைப்பு வளர வாழ்த்துகள்.

      நீக்கு
    5. நன்றி நண்பர் குணசீலன், முடிந்தவரை நடைமுறைப் படுத்த முடியாதவற்றை நான் பேசுவதில்லை. இளைஞர்கள் மேல் நம்பிக்கை கொண்டவன் என்பதால் இப்படித்தான் யோசிப்பேன். நன்றி

      நீக்கு
  5. பதில்கள்
    1. அய்யா வணக்கம்.
      குளத்தில் குதிக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது இல்லையா? ஆனால், சாக்கடையைக் கரையில் இருந்தே சுத்தம்செய்ய முடியும் என்றே நினைக்கிறேன்

      நீக்கு
  6. வணக்கம் அண்ணா..உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன். கொள்கை அடிப்படையில் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்து அவர்களுள் ஒருவர் தலைவர் பொறுப்பில் (பிரதமர்/முதல்வர்) அமர வேண்டும் என்றே நம் அரசியலமைப்பு இருக்கிறது. ஆனாலும் ஒருவரை முன்னிறுத்தி hero worship முறையில் வாக்களிப்பதும் நம் நாட்டில் நடப்பது வருந்தத்தக்க விசயம். எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப் போடும் மக்கள் இன்னமும் இருக்கிறார்களே என்பது மிகவும் வேதனையான விசயம். இன்னார் இப்படிப்பட்டவர், இந்த நலத்திட்டங்களைச் செய்தவர், இன்னின்னவற்றிற்கு எதிரானவர், இன்னின்னவற்றிற்கு ஆதரவாளர் என்ற ரீதியில் அலசி தனக்கு எது ஒத்துப் போகிறது என்று யோசித்து வாக்கிடும் அறிவும் மனமும் ஒவ்வொரு பிரஜைக்கும்(எதுக்கு குடிமகன் என்று சொல்லிக்கொண்டு.. :)) வரவேண்டும். ஆனால் இது எப்போது நடக்கும்? நடக்க விடுவார்களா?
    உங்கள் பதிவிற்கு வருகிறேன், திரு.நல்லகண்ணு ஐயா அவர்கள் நல்ல மனிதர், நல்ல தலைவர், சிறந்த கொள்கைகள் உடையவர் என்றாலும் அவரின் உடல்நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதே முக்கியம். திரு.நல்லகண்ணுவிற்கு ஓட்டுப் போடுகிறேன் என்றா மக்கள் யோசிக்க வேண்டும்? இவரிவர் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள், இவை தான் இவர்களின் கொள்கைகள் என்று ஓட்டுப் போடலாமே..தலைவர் X என்றால் என் ஓட்டு உண்டு, Y என்றால் என் ஓட்டு இல்லை என்பது எனக்குச் சரியாகப் படவில்லை. ஆனால் மக்கள் அப்படி நினைத்துப் பயப்படுவதற்கும் காரணம் உண்டு. ஐயோ, 'அவர் வந்துவிடக்கூடாதே என்று சிலரைப் பற்றிய பயம். மற்றொன்று, ஆட்சிபீடத்தில் அமர்ந்ததும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகள் நம் ஊரில் உண்டே! (இங்கு நான் நல்லகண்ணு ஐயாவைச் சொல்லவில்லை என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்) யாரோ ஒருவர் வந்துவிட்டுப் பின்னர் கொள்கைகளைப் பறக்கவிட்டுவிட்டால்.. என்ற பயம்..ஆனால் அதற்கான தீர்வு எனக்குத் தெரியவில்லை...
    நீங்கள் சொல்லியிருப்பது போல அமெரிக்காவில் இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு கறுப்பின அதிபர், இன்னும் பெண் அதிபர் இல்லை.. டெமாக்ரடிக் கட்சியில் பெண்களுக்கு (ஹிலாரிக்கு )சிறப்பிடம் இருப்பது பார்த்து இப்போதுதான் ரிபப்ளிகன் கட்சி விழித்திருக்கிறது போலும்.. டெமாக்ரடிக் விவாதத்திற்கு திருமிகு.நிக்கி ஹேலீ பதில் அளித்தார்...இவர் இந்தியர் என்பது புலம்பெயர்ந்தவர்களை ஈர்க்கும் மற்றொரு விஷயம்.. அவரைப் பேச வைத்து ரிபப்ளிகன் கட்சி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல முக்கியமான இரு விசயங்களைக் கவனித்துள்ளது...
    பின்னூட்டமே பதிவு போல வருகிறதே... :)
    அமெரிக்க அரசியலமைப்புப் பற்றி முழுவதும் அக்குவேறு ஆணிவேராகத் தெரியாது என்றாலும் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். ஒரு இடத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்ட சதவிகித ஓட்டுகளைத தேர்தலில் நிற்பவர் பெற வேண்டும். இந்த சாதி மக்கள் அதிகம் வாழும் இடம், சாதிக்காரனை நிறுத்து என்ற நம்மூரின் பேச்சு இங்கு எடுபடாது. இந்த விஷயம் நம்மூரில் வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். ஆனால் அமெரிக்கத் தேர்தல் முறையை (தனி நபரை முன்னிறுத்தி ) நம் நாட்டிற்குக் கொண்டுவருவது என்பது சரியல்ல, சரியே அல்ல! அது சரியாக நடக்கவும் நடக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்கத் தேர்தல் நடைமுறைகளில் சில நல்ல அம்சங்கள் இருக்கின்றன. இரண்டு முறைக்குமேல் ஒருவர் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது என்பது நல்ல அம்சம்தானே? இங்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே அப்படி வரையறுத்துள்ளன. “நிரந்தர” தலைவராக 40,50ஆண்டுகளாகத் தலைவராக இருக்கும் கட்சிகள்தான் இங்கு அதிகம். அங்கு 4ஆண்டுகள்தான். இங்கு5ஆண்டுகள்.. நல்லதை எடுத்துக் கொள்ளலாம். அல்லதை விட்டுவிட சில நல்ல முடிவுகள் தேவை மா. நீண்ட பின்னூட்டமென்றாலும் நல்ல அலசல். நன்றிம்மா

      நீக்கு
    2. ஆமாம் அண்ணா, நானும் சொல்ல நினைத்தேன். எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரைமுறை இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது மக்களாட்சி என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போகிறது..
      உண்மை தான் அண்ணா , நல்லவை சிலவற்றை எடுத்துக் கொள்ளலாம் .

      நீக்கு
    3. நல்லவை எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். எனக்கும் அமெரிக்கர்களின் திட்டமிடல், மற்றவரை மதிக்கும் பண்பு, ஒழுங்கு மிகப்பிடிக்கும் அந்த நாட்டின் அரசியலும் அதைத் தீர்மானிக்கும் பெருமுதலாளிகளும் செய்யும் தவறுகளுக்காக அம் மக்களை நான் ஒருபோதும் இழிவாக நினைத்ததில்லை மா. நாடு என்பது மக்களெ அன்றி அந்நாட்டின் பெருமுதலாளிகளோ, மலைகள் காடுகளோ கட்டடங்களோ இ்ல்லை என்பதே என்கருத்து

      நீக்கு
  7. நாலாவது தூண் ஒன்று இருக்கிறது என்பதை தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துகிறார் சமஸ்..
    த.ம் 3

    பதிலளிநீக்கு
  8. மிகச் சிறப்பான கட்டுரை...
    திரு. நல்லக்கண்ணு அவர்கள் ரொம்ப நல்ல மனிதர். அவரை முன்னிறுத்தினால் நல்லதுதான்... ஆனாலும் தாங்கள் சொல்வது போல் அவரின் வயதையும் பார்க்க வேண்டும்... இந்த நிலையில் அவரால் அலைய முடியாதுதான்... நாம் இன்னும் அம்மா - ஐயா எனத்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

    மக்கள் நலக் கூட்டணி எங்கே வலுப்பெறுமோ என்றுதானே நம்மவர்கள் அதை அதிமுக-பி அணி என்கிறார்கள். எங்கே விஜயகாந்த் அந்தப் பக்கம் போய்விடுவாரோ (இவரை முதல்வர் வேட்பாளர் என்றோ / பிடிக்கும் என்றோ இதைச் சொல்லவில்லை) என்றுதானே அவரையும் போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    நாங்கள் வெற்றி பெறுவோம் என சாதிக்கட்சிகள் எல்லாம் தனித்தனியே முதல்வர் வேட்பாளருடன் களம் இறங்குவது கேலித்தனமான செயல்தானே...

    எல்லாரும் ஒன்று சேர்ந்தால் அராஜக அரசை வெளியேற்றலாம்... ஆனால் நாம் சேருவோமா... நாம் தமிழ் நண்டுகள் அல்லவா?

    இதையெல்லாம் பார்க்கும் போது மக்கள் நலக் கூட்டணி இவர்தான் முதல்வர் வேட்பாளர் (நல்லக்கண்ணு ஐயாவாக கூட இருக்கட்டுமே) எனச் சொல்லி களம் இறங்கட்டும்...

    மிகச் சிறப்பான கட்டுரை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் எளிதுதான்-
      ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
      படவில்லையெனில் படவேண்டியதுதான்...

      நீக்கு
  9. அருமையான கட்டுரை ஐயா
    ஊடகங்கள் தனது கருத்து என்ற பெயரில்
    ஒவ்வா கருத்துக்கள் பலவற்றை விதைத்துத்தான் வருகின்றன

    பதிலளிநீக்கு
  10. அற்புதமான கட்டுரை அய்யா!
    கம்யூனிச சித்தாந்தம் கொண்டவர்கள் எல்லோரும் கொள்கைதான் முக்கியம் முதல்வர் வேட்பாளர் முக்கியம் இல்லை என்று சொன்னாலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் இங்கு மிக முக்கியம்.
    சமீபத்தில் மக்கள் மனதில் என்ன இருக்கிறது? என்பதை அறிய ஒரு நிறுவனம் கள ஆய்வு மேற்கொண்டது. மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அந்த நிறுவனம் சார்பாக நானும் கள ஆய்வு மேற்கொண்டேன்.
    அதில் வந்த முடிவுகள் ஆச்சரியமாக இருந்தது. இங்கு எல்லாமே முதல்வர்தான் கருணாநிதியா ஸ்டாலினா என்ற குழப்பத்தில் தி.மு.க.விற்கே வாக்குவிகிதம் சரிகிறது, அதற்கு வாக்களிப்பது பற்றி முடிவு செய்யவில்லை என்கிறார்கள். இங்கு முதல்வர்தான் பிரதானம்.
    இதைப் பற்றி தனிப் பதிவே எழுதலாம் என்றிருக்கிறேன்.
    த ம 8

    பதிலளிநீக்கு
  11. உங்கள் ஆய்வும் அதுதரும் அதிர்ச்சியும் சரிதான் நண்பரே! ஆனால், முதல்வர் என்பவர்தான் முதல் தொண்டர் எனும் அளவில் இருந்தால் சரிதான். அப்படி இருக்க முடியாது எனும் நிலையில், நாயக அரசில் நஞ்சு கலக்கத்தானே செய்யும்? வரலாற்று மாற்றங்களில் தனிநபர் வகிக்கும் பாத்திரத்திற்கு ஒரு பெரும் முக்கியத்துவம் உண்டுதான். ஆனால், அதை மாற்றவேண்டும் என்பதால்தான் நம் தேர்தல் முறை அதிபர் தேர்தல் முறையாக இல்லாமல் உள்ளது. ஆனாலும் இங்கு நடக்கும் அனைத்தும், ஊடகங்களோடு சேர்ந்து கொண்டு, அய்யா...அம்மா...என்றே அரற்றுவதால் வரும் கேடு இந்த ஆட்சியோடு தொலையவேண்டும் என்பதே என் அவா. முன்பு கலைஞர்படப் பின்னணியில் கலைஞர் படம் போட்ட அரசு அழைப்பிதழைக் கையில் வைத்துக்கொண்டு, கலைஞர் படம் போட்ட பேட்ஜை சட்டையில் குத்திக்கொண்டு கலைஞர் பேசியதைப்போலப் பலமடங்கு இப்போது பெருகி, பிணஊர்வலம் போனாலும் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள் போல என இந்த வியாதி பெருகியதை எப்போது எப்படி மாற்றுவது? எனினும் தங்கள் கட்டுரையும் வரவேண்டும். அதுதான் “நூறுபூக்கள் மலரட்டும்” என்பதும் ஆகும்!

    பதிலளிநீக்கு
  12. ஆரோக்கியமான கலந்துரையாடல்... தொடரவேண்டும். எதற்குமே ஒற்றை முடிவு என்பது கிடையாது. நல்ல முடிவை நாம் தான் உருவாக்க வேண்டும். எப்படியும் ஒரு நல்ல மாற்று தேவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல முடிவுகளைக் கனவு காண்போம், கனவு காண்போரை ஒன்று சேர்ப்போம்...(தூங்கிவிடாமல்)
      அதுதானே நம் முழுநேர வேலை நண்பரே?

      நீக்கு
  13. அன்புள்ள் முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு

    வணக்கம். ஒரு நாட்டின் நலனுக்கு கொள்கையே முக்கியம் என்பதை மறுக்கமுடியாது. 100 விழுக்காடு உடன்படுகிறேன். அதே சமயம் தலைவர் பதவிக்கு வருகிறவர்கள் உண்மையில் மக்களிடத்து இறங்கி உழைக்கக் கூடியவர்கள் ஆக இருக்கவேண்டும். மதிப்புமிகு நல்லக்கண்ணு அவர்கள் தலைமைக்கு முழுத் தகுதி உடையவர் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் அவரின் வயது உடல் நிலை குறித்து யோசிக்கவேண்டும். அதேபோன்று தமிழகத்திற்கு இரு திராவிட கட்சிகளாலும் துளி பலனும் நிரந்தரமாக் விளையவில்லை என்பதும் உண்மை. மக்களின் நிரந்தரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அவர்கள் ஒருபோதும் முயல்வதில்லை. அண்ணாவோடும் காமராசரோடும் எம்ஜியாரோடும் முடிந்துவிட்டது.

    இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து இருக்கும் கட்சிகளின் உண்மையான நிலைப்பாடுகளையும் அக்கட்சிகள் மக்களுக்குத் தெளிவு படுத்தவேண்டும். அக்கட்சிகள் தனித்தனியாக எண்ணிப பார்க்கும் நிலையில் பெரிதாக மக்கள் பிரச்சினைகளில் தீர்வுகளை உண்டாக்கியும் விடவில்லை. ஒரு வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கப்படும் நிலையில் சரியாக செயல்படவில்லை எனும் நிலையில் உடனே நாங்கள் ஆட்சியை விட்டு விலகிவிடுகிறோம் என்று உறுதி அளிக்கவேண்டும். மேலும் அவர்கள் தமிழக மக்கள் எல்லோருக்கும் அவர்கள் உண்மையான ஆட்சியாளர்களாக இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். தங்கள் கருத்தின் முதல் பத்தி முழுவதிலும் மற்றும் இரண்டாவது பத்தியின் இரண்டாவது பகுதியிலும் நான் உடன்படுகிறேன். அதை இவர்களிடம் எதிர்பார்க்கலாம் என்றே நானும் எதிர்பார்க்கிறேன். இதற்குமுன் இப்படிக் கொள்கை அடிப்படையிலான கூட்டணி தமிழகத்தில் உருவாகவிலலை என்பதால் எதிர்பார்ப்பும் அதிகமாகிறது, நல்லது நடக்கட்டும். நடக்கவேண்டும்.

      நீக்கு
  14. வணக்கம் அய்யா
    மேலைநாட்டு கலாச்சாரத்தைப் புகுத்தியதைப் போல நம் நாட்டிற்கே உரிய தேர்தல் முறையிலும் மேலை நாட்டு தேர்தல் முறையைப் புகுத்தப் பார்க்கிறார்களா! நம் நாட்டில் ஒருமித்த கருத்துகள் கொண்ட தலைவர்கள் அமைவது அரிது. அதையும் மீறி இன்று மக்கள் நலக் கூட்டணி உருவாகியிருக்கிறது. இவர்களின் ஒற்றுமையைக் குழைப்பதற்கே பலரும் முயல்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. இன்று மீடியாக்கள் நடுநிலை செய்தி வழங்குவதை மறந்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆதிக்க சக்திகளின் கைப்பாவையாகவும் மாறியிருக்கிறது. இது தவறான அணுகுமுறை. இருநாட்டு தேர்தல் முறையையும் விளக்கி கருத்தை நிலை நாட்டி இறுதியில் ஒற்றைக் கேள்வியோடு முடித்திருப்பது மிகவும் கவர்ந்தது அய்யா. நல்லவர்க்கே நம் ஓட்டு எனும் மனநிலை மக்களிடையே வர வேண்டியது நம் நாட்டிற்கு உடனடி தேவையாக இருக்கிறது என்பதைச் சிந்திக்க வைக்கும் கட்டுரைக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுரையை உள்ளபடி உள்வாங்கி, பாராட்டியும் எழுதிய பாண்டியனுக்கு ஒரு த.ம.வாக்குப் போடலாம் னா, விவேகானந்தரோடு வெகுநாளாக விடுப்பா? தொடர்ந்து எழுதுங்கள் பாண்டியன். (என்ன இருந்தாலும் இங்கிருந்தபோது நிறைய எழுதினீர்கள் என்று சொன்னால் தவறாக நினைக்கமாட்டீர்களே? எந்தச் சூழலையும் வென்று படைப்பாக்கிப் பழகுங்கள்)

      நீக்கு
    2. மீண்டும் தங்களுக்கொரு குறிப்பு - உங்கள் பதிவில் இடுகிறேன் பா(வா)ருங்கள்.

      நீக்கு
    3. அவசியம் படிக்கிறேன், எழுதுகிறேன் அய்யா. தூண்டுபவர்கள் (நம் நண்பர்கள்) இல்லாததால் சுடர்விளக்கு பிரகாசிக்க தவறியது உண்மை தான் அய்யா. இனி முயன்றவரைப் பதிவிடுவேன். ஊக்கத்திற்கு நன்றிங்க அய்யா.

      நீக்கு
  15. இன்றைய நிலையில் கொள்கையோ திறமையான மனிதரோ தமிழ் நாட்டின் தலை எழுத்தை தீர்மாணிக்க முடியாது. காரணம் அதிகாரம் நடுவன் அரசிடம் மட்டுமே குவிந்துள்ளது. திமுகவோ அதிமுகாவோ யார் வந்தாலும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிதான் தமிழ் நாட்டின் தலையெழுத்தை தீர்மாணிக்கும். இவ்விரு கட்சிகளும் அல்லது மற்ற எந்த கூட்டு கட்சியும் ஆட்சிக்கு வ்ந்த பின் மத்தியில் ஆளும் கட்சிக்கு சல்யூட் அடிக்கின்றன. காரணம், வரிவருவாயில் நடுவன் அரசு கொடுக்கும் பங்கு அளவைப் பொருத்தே இங்கு நிதிநிலை ஆரோக்கியம் உள்ளது. ஆகையால் மத்தியில் ஆளும் கட்சிக்கு சல்யூட் அடித்தாக வேண்டும். கூடங்குளம், கெயில், இலங்கை தமிழர், கடசத்தீவு, மீனவர் பிரச்னை, காவிரி தண்ணீர் பிரச்னை முல்லைபெறியாறு என்று தமிழ் நாட்டின் அனைத்துப் பிரச்னைகளும் ம்த்தியில் ஆளும் கட்சியினால் தான் சரி பண்ண முடியுமே ஒழிய திமுகாவினாலோ அல்லது அதிமுகாவினாலோ வேறு எந்த தமிழக கட்சியினாலும் சரிபண்ண முடியாது. யார் வந்தாலும் அனைத்து கஷ்டங்களும் அப்படியேதான் இருக்கும். காங்கிரஸோ அல்லது பிஜேபியோ இந்த பிரச்னைகளை தீர்க்க ஆவலாய் இல்லை. மாறாக, இவைகளை ஊதி பெரிதாக்க என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்வார்கள். இப்போதிருக்கிற நிலையில் தமிழ் நாடு இலங்கையால் தாக்கப்பட்டாலும் இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அனுவுலை வெடித்தாலும் ஒன்றும் செய்ய மாட்டார்கள். மின்ப்ற்றாக்குறையை இவர்கள் நினைத்தால் முற்றிலும் நீக்க வெளி மானிலத்திலிருந்து கொண்டுவர முடியும். இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை நமக்கு கொடுத்தால் போதும். ஆனால் செய்ய மாட்டார்கள். கடந்த டிசம்பர் மழை பேரழிவின்போது இராணுவத்தில் உள்ள பேரிடர் மீட்பு பிரிவு சென்னையில் இரண்டு நாடகள் சுற்றி திரிந்துவிட்டு திரும்பி சென்றுவிட்டாகள். ஹெலிகாப்டர் ஒரு சில இடளிகளில் மட்டும் உணவு விணியோகித்து விட்டு முழு பட்டணத்தையும் கைவிட்டார்கள். கடலூர் மற்றும் சுற்று வட்டார் பகுதிகளுக்கு, மிக அதிமகாக பாதிக்கப்பட்ட பகுதிகள் இவை, போகவே இல்லை. ,இதுதான் தமிழ் நாட்டின் நிலமை. நேப்பாளில் பூகம்ப்ம் வந்தபோது உடனிடியாக ஆயிரக்கண்க்காக பலவிதங்க்ளில் உதவிய மத்திய அரசு இங்கு ஆபத்திற்கு உதவ காலம் எடுத்துக்கோள்கிறது. இந்த நிலைஹ்யில் போனால் தமிழ் நாடு மற்றோரு ஈழமாகும் என்பதில் ஈயமில்லை. இதை திமுகாரவோ அதிமுகாவோ த்டுக்க திராணியற்றவர்கள். காங்கிரஸோ அல்லது பிஜேபியோ வந்தால் ஒருவேளை நல்லது நடக்கும். ஂஅம், ஒருவேளை. நிச்சயமில்லை. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. நிலத்தடி நீர் கொக்கே கோலாவுக்கு விற்கப்படும். மண்ல்கோள்ளை அமோகமாக இனி எப்போதும்போல நடக்கும். டாஸ்மாக் இன்னும் பெருகி நாட்டை குட்டிச்சுவராக்கும். அரசை நடத்த பணம் ஏது? வரி வருமாணம் (அடுத்த எலகஷனுக்கு) பதுக்கக்கூட போதவில்லையே! பணம் இல்லாமல் கட்சி நடத்த முடியாது. எலக்ஷன் நிற்க முடியாது. எந்த கட்சியாக இருந்தாலும் சரி! ஆக,ஊழல் அவசியம் என்பதே எதார்த்தம்! முடிவாக, இந்த எலக் ஷனால் எவ்வித பயனுமில்லை. யாருக்கும்!

    பதிலளிநீக்கு
  16. நீண்ட பின்னூட்டத்திற்கு முதலில் நன்றியும் வணக்கமும். தாங்கள் சொல்லும் பிரச்சினைகள் தமிழ்நாட்டு அரசால் மட்டும் தீர்க்கக் கூடியவை அல்லதான், என்றாலும் மாநில அரசின் வரம்பிற்குள் செய்யவே தில் உள்ள அரசு தேவை! அதற்காக மத்திய அரசின் கட்சியே ஆளும் மாநிலங்கள் எல்லாம் எல்லா வசதிகளையும் பெற்றுவிடுவதில்லையே? வாதாடவும் தேவையெனில் போராடவும் கூடிய வலுவான அரசு தேவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அடுத்து, மதுவை ஒழித்துவிட்டு இனி அரசு நடத்த முடியாது என்பதையும் நான் ஏற்கவில்லை. தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளையைச் சரியாகத் தடுத்தாலே முடியும் என்று நம் நண்பர்கள் வைத்த முன்மொழிவை நீங்கள் படிக்கலயா? மனம்இருந்தால் மார்க்கமுண்டு. அதைநோக்கி முதலில் சிந்திக்கவும், இயன்றால் புதிய அரசு ஒன்றைக் கொண்டுவரவும் ஆலோசிப்பதில் தவறில்லையே? நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தில் வரும் தேர்தலில் தமிழக பிரச்சனைகள் பற்றி பேசும் போதும் சிலர் இலங்கை தமிழர் பிச்சனை என்றும், இலங்கை நாட்டு தமிழர்களை இங்கே கொண்டுவருகிறார்கள். இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகள் நிலைமை தமிழகத்தில் எவ்வளவு மிக கேவலமாக உள்ளது என்பது யாவரும் அறிந்ததே.
      தமிழகம் இலங்கை தமிழர்களை வைத்து மனித வகை முகாம்கள் நடத்துகிறர்கள்
      இலங்கை தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகளிளின் பிழைப்பு என்று இலங்கை தமிழர்கள் மிகவும் கிண்டல் கேலி செய்கிறார்கள். உண்மை தானே. மறுக்க முடியாது!
      தமிழகத்திலிருந்து இலங்கை தமிழர்கள் என்று பெயருக்கு அடித்து விடுவதை விட்டு, நடை முறை சாத்தியமான தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரச அதிகாரத்தில் செய்ய கூடிய நல்ல வாழ்கை அமைத்து கொடுக்க முயற்சி செய்யவும்.

      நீக்கு
  17. அமெரிக்க தேர்தல் நடைமுறைகள் இந்தியாவின் பன்முகப்பட்ட மக்கள் தொகுதிக்கு ஏற்றதல்ல என்பது என் ஆழ்ந்த சிந்தனையாகும்.சரியாகவே நமது அரசியல் முன்னோர்கள் நமக்கென்று தனித்த நடைமுறையை உருவாக்கியுள்ளனர்.அதன் பலவீனங்களைக் களைந்து மேம்படுத்துவதே நமது கடமையாகும்.தங்கள் வாதங்கள் எனக்கு ஏற புடையவையே்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..அதுதான், இந்தியாவின் பன்முகப்பட்ட தன்மையைப் புரிந்துகொண்ட தலைமை தேவை. தன்னை முன்னிறுத்தும் தலைமை அல்ல. நன்றி அய்யா எங்கே ரொம்ப நாளாகக் காணோம்? அய்யா நலம்தானே? எழுதுவதும் குறைந்துவிட்டதா?

      நீக்கு
  18. தோழர் நல்லக்கண்ணு அவர்கள் நேர்மையானவர், முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்பதெல்லாம் இருக்கட்டும். நீங்கள் சொல்லுவது போல நமது ஜனநாயக நடைமுறையில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துவது என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று. நீங்கள் சொல்லுவது போல வயதான அந்த பெரியவரை முன்னிறுத்திதான் வெல்ல வேண்டும் என்பது மக்கள் நலக் கூட்டணியின் கொள்கைகளுக்கே இழுக்கான ஒன்று. முதலில் இந்த கூட்டணியே முரண்பாடான ஒன்றாக இருக்கிறது. கொள்கைகளை அடிக்கடி மாற்றி கூட்டு சேர்ந்து பதவி பிடித்தவர்கள் எல்லாம் இன்று கூடி இப்படி ஒரு கூட்டணி அமைத்து உள்ளனர். மாற்று அரசியல் தேவைதான்! ஆனால் இதுதான் மாற்று என்பதில் எனக்கு உடன்பாடில்லை. சமஸ் இப்படி முன்னிறுத்தி இருப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை! விரிவான கட்டுரைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொள்கைளை மாற்றிக் கூட்டணிசேர்நதவர்கள் என்பது இவர்கள் மீதான சரியான குற்றச்சாட்டாகப் படவில்லை அய்யா,இதுபற்றி விரிவாகத் தனியே எழுதுவேன்.நன்றி

      நீக்கு
  19. மிகச் சரியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை என்பதற்கு தொடர்ந்து நிகழும் கட்டுரை மீதான விவாதங்களே சாட்சிகளாக இருக்கின்றன. தோழர் நல்லகண்ணு அவர்களை ஏன் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தக் கூடாது என்ற கேள்விக்கு உங்களின் பதில் ஏற்புடையதே. களத்தில் இறங்கிச் செயல்படும் வயதைக் கடந்து நிற்கும் அப்படியான தலைவர்களின் வழிகாட்டல்களைப் பெற்று செயல்பட்டாலே ஒரு நல்ல அரசை கொண்டு செலுத்த முடியும். முதுமையில் இயலாமைகளை எதிர்த்து நிற்பது அத்தனை சுலபமல்ல. முன்பு ஒருமுறை கருணாநிதியின் வயதைக் குறித்து ஞானி எழுதிய கட்டுரைக்கு வந்த கொந்தளிப்புகள் தான் இந்தக் கேள்வியின் தொடர்ச்சியாய் நினைவுக்கு வருகிறது. இதைக் கடந்து பார்த்தால்
    1.சின்னங்களைப் பார்த்து வாக்களித்த காலம் போய் என்ன இலவசமாகக் கிடைக்கும் என்பதே வாக்காளனின் மனநிலை ஆகிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்ன, இன்ன செய்வோம் என்று சொல்வதற்குப் பதிலாக இன்ன, இன்ன தருவோம் என்பதை வாக்குறுதிகளாக கடந்த காலங்களில் திராவிடக் கட்சிகள் கொடுக்க ஆரம்பித்து அதற்கு மக்களும் பழகி விட்டார்கள். அதைக் கடந்து கொள்களைக் கவனித்து வாக்களிக்கும் மனநிலைக்கு முதலில் படித்தவர்கள் வர வேண்டும். அதற்கான ஆயத்தத்தை மக்கள் நலக் கூட்டணி இன்னும் ஆரம்பிக்கவில்லை. இன்னும் கூட்டணியை வலுப்படுத்த சிலரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதில் தவறில்லை. அதேநேரம் மக்களிடம் தங்களின் நிலைப்பாட்டைக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். காரணம், இலவசம் என அறிவித்த அதே திராவிடக்கட்சிகள் இப்போது போஸ்டர் யுத்தத்தை கோடிகளில் ஆரம்பித்து விட்டன. இந்தக் கோடிகளை சமாளித்து வெற்றி என்ற நிலையை எட்டாவிட்டாலும் அவர்கள் எதிர்கொள்ள தயங்கும் கூட்டணியாக இருப்பதை மக்களிடம் விரைவாகக் கொண்டு செல்ல வேண்டும்.
    2. கொள்கைக்காக, சுயநலங்களுக்காக, எதிர்பார்ப்புகளுக்காக எனச் சொல்லி தேர்தலுக்குப் பின் கழைந்து ஓடுவது நம் கூட்டணி கட்சிகளுக்கு கைவந்த கலை. இத்தனை காலமும் ஏதோ ஒரு காரணத்தால் இணைந்து அதை அடுத்த தேர்தல் காலம் வரை கொண்டு செலுத்த முடியாமல் ஓராண்டோ, இரண்டாண்டோ முடிவதற்குள் விலகிச் சென்ற அல்லது அப்படி செல்ல முடியாமல் செயல்படாமல் இருந்த கட்சிகள் தான் இப்போது இணைந்து கொள்கை அளவில் இணைந்திருக்கின்றன. அது கடைசி வரை நீடிக்கும் என்பதற்கான உறுதியை வாக்காளர் மனதில் நிலைப்படுத்த வேண்டும்.
    3.இவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று இல்லாத நிலையில் ஒருவேளை ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இப்பொழுது வைத்திருக்கும் கொள்கைகள் நெகிழாமல் இருக்க வேண்டும். அதற்கான உத்ரவாதம் வழக்கமாக வாக்காளனுக்குத் தரப்படும் நாமமாக இருக்கக் கூடாது.
    3. பலமான கூட்டணி, கொள்கை அளவில் நாங்கள் இந்த அணியில் தொடர்ந்து இருப்போம் என்று முந்தைய தேர்தல் கூட்டணியில் அறிவித்தவர்கள் அதன் பின் அங்கு விலகி வரச் சொன்ன காரணங்களோடு இப்போதும் ஆட்சி அதிகாரங்களுக்காக விலகி விடக் கூடும். சில நாட்களுக்கு முன்பு கூட மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் ஒரு தலைவர் இரு திராவிடக்கட்சிகளுடன் சுமுக உறவே இருப்பதாய் சொன்னதாய் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
    இவை போன்ற எழுந்து நிற்கும் கேள்விகளுக்கான விடைகளை தெளிவாக மக்கள் நலக் கூட்டணி வாக்காளர்களிடம் வைக்கும் பட்சத்தில் மட்டுமே அது ஒரு மாற்று அரசியலுக்கான ஆரம்பமாக இருக்கும். நமக்கு புரட்சி அரசியல் தேவையல்ல!
    இந்திய அரசியல் அமைப்பு தேர்வு முறை குறித்த உங்கள் கருத்தே என் கருத்தும். ஆட்சியாளர்களிடம் இன்னும் கொஞ்சமேனும் அச்ச உணர்வு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நன் ஜனநாயக தேர்தல் முறை தான். ஆனால் அது பணநாயகமாக மாறிப்போனது தான் நம் துரதிருஷ்டம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி கோபி. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உங்கள் குறிப்புகளைக் கணக்கில் கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது. நானும் தொடர்ந்து எழுதுவேன் நன்றி

      நீக்கு
  20. இன்றைய அரசியல் சூழலில் மக்கள் நல கூட்டணி ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயமில்லை. திராவிட ஆட்சிகளால் மக்கள் மூச்சுத்திணறி முட்டு சந்தில் செய்வதறியாது நின்ற நிலையில் தான் வராது வந்த மாமணியாக இந்த கூட்டணி உருவாகி உள்ளது. இதில் யார் முதல்வர். ஏன் அ வை வைக்காமல் ஆ வுக்கு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள் என்பதெல்லாம் விஷமத்தனமான பிராச்சாரம் என்பது என் கருத்து. இந்த கூட்டணி சிதறு தேங்காயாக மாறாதா என்ற எதிர்பார்ப்பின் விளைவுதான். யார் முதல்வர் என்ற பொருளையே விவாதமாக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்பது தான் என் வேண்டுகோள். நபர்கள் முக்கியமானவகளாக இருக்கலாம். இங்கே செயல் திறன் தான் முக்கியம் பெற வேண்டும். நம் தேர்தல் அமைப்பில் தேவ கவுடா, சந்திரசேகர் கூட பிரதமராக முடியும், மஞ்சி ராம் முதல்வராக முடியும் என்பது தான், நம் ஜனநாயகத்தின் வலிமையாக நான் கருதுகின்றேன். தேர்தலுக்கு முன்பே தனி நபர் துவக்கி விட்டால், அவர்கள் தங்கள் இருப்பை உறுதி செய்வதற்காக எந்த நிலைக்கும் செல்வார்கள் என்பதை நம் அரசியல் வரலாறுகள் உணர்த்தி வந்துள்ளன. அண்ணாவுக்கு விறகு நெடுஞ்செழியன் தான் என 100 சதவீத கட்சியினரும் நம்பியிருந்த சூழ்நிலையில் கருணாநிதி தலைமையை பிடித்த வரலாறெல்லாம் நம் கண் முன் உள்ளது. தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி தேர்வு செய்வதன் மூலம் ஜனநாயக பண்புகள் அங்கே நிலை நிறுத்தப்படுகின்றான. என் வேண்டுகோள் எல்லாம் ரவிகுமார் போன்றவர்களெல்லாம் தங்கள் சுய விருப்பங்களை நேரங்கெட்ட நேரத்தில் வெளிப்படுத்துவதென்பது அவர்களின் நோக்கத்தின் மீது சந்தேக நிழல் விழுவதை எந்த விதத்ததிலும் மறைத்துவிட முடியாது. இந்த நேரத்தில் நம் நோக்கம் ஒரு மாற்று அணியை கட்டி எழுப்பி முன்னெடுத்து செல்வதாக இருக்க வேண்டுமென்பது தான் என் வேண்டுகோள். நன்றி. வணக்கம். - கிருஷ்.ராமதாஸ், துபாய் [பெரம்பலூர்].

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “யார் முதல்வர் என்பதையே விவாதப் பொருளாக்காமல், செயல்திறன் தான் முக்கியம்” - என் விவாதத்தின் மையப் பொருளை உள்வாங்கி, நீண்ட சிறந்த ஒரு பின்னூட்டத்தையும் அளித்தமைக்கு நன்றி நண்பரே. எழுத்துகளைப் போலவே இயங்குவதும் வாழ்வதும் முக்கியமென்று நினைப்பவன் நான். தொடர்ந்து விவாதங்களைக் கவனித்து, நல்ல கருத்துகளைத் தொடர்ந்து வழங்கிட வேண்டுகிறேன். நன்றி.

      நீக்கு
  21. சுவையான பதிவும் சூடான விவாதங்களும் அருமையாக உள்ளன!எந்த கட்சியும் எந்த கூட்டணியும் ஏற்புடையன அல்ல!கடந்த கால வரலாறு நன்கு அறிந்தவன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்தகால வரலாற்றை என்னிலும் நன்குணர்ந்தவர்கள் தாங்கள் என்பதை அறிவேன் அய்யா. எனினும், கூட்டணிக்கும் தேர்தல்காலத் தொகுதி உடன்பாட்டுக்கும் இன்னும் நம் நாட்டில் நிறையப் பேருக்கு வேறுபாடு தெரியவில்லை, அல்லது தெரிந்துகொள்ளுமளவிற்கு அந்தக் கூட்டணிகள் தெளிவுபடுத்தவிலலை என்றே நினைக்கிறேன். தங்கள் கருத்துரைக்கு நன்றி அய்யா.

      நீக்கு
  22. முன்பு 67 தேர்தலின் போது
    "இவருக்கும் அவருக்குமே ஆயிரம்
    கொள்கை முரண் உண்டு இவர்கள் கூட்டணியை
    எப்படி ஏற்றுக் கொள்வது " என்கிற கேள்வி வந்த போது

    வீட்டுக்குள் பாம்பு நுழைந்து விட்டது
    முதலில் கையில் கிடைக்கிற கம்பைக் கொண்டு
    பாம்பை அடித்துத் துரத்துவோம்

    யார் கம்பு என்னும் சண்டையை பின்னர்
    வைத்துக் கொள்வோம் என
    கூட்டணியினர் சொன்னதைப் போல..

    இன்றைய நிலையில் இரு கழகங்களுமே
    தமிழகத்தை சீரழித்தன, இனியும் சீரழிக்கும்
    என நடு நிலையாளர்கள் சிந்திக்கத்
    துவங்கியிருக்கிற வேளையில்...

    மிக லேசாக மக்கள் நலக் கூட்டணி
    நம்பிக்கை ஏற்படுத்திப் போகும் பட்சத்தில்
    இதுபோன்ற "புத்திசாலித் தனமாக"
    திசைதிருப்பும் "சம்ஸ் " அவர்களின் கட்டுரையை
    நானும் படித்தேன்.

    ஆதற்கு தங்கள் விரிவான, ஆழமான
    அலசலுடன் கூடிய கட்டுரை வாயிலாக
    சொன்ன பதிலும் எழுப்பியுள்ள கேள்வியும்
    மிகச் சரிதான்

    மிகச் சரியான நேரத்தில் மிகச் சரியான
    பதிவினைத் தந்தமைக்கும், தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போலும் நடுநிலையாளர்கள் கவலைகொள்ளும் அளவிற்கு அந்தக் கட்டுரை இருந்ததால்தான் அய்யா, நான் அதற்கு மறுப்பெழுத வேண்டி நேர்ந்தது. மற்றபடி நான் பெரிதும் மதிக்கும் நல்ல எழுத்தாளர் சமஸ். அவரைப் போன்றோர் இன்னும் சிந்தித்து, கழகங்களின் கலகங்களைத் தோலுரிக்க வேண்டிய நேரத்தில் “சேம்சைட் கோல்” போடுவதுதான் எனக்கும் அதிர்ச்சியானது.
      கிட்டத்தட்ட கவிதைபோலும் வடிவத்தோடு, நறுக்குத் தெறித்தாற்போல் தாங்கள் சொன்ன கருத்துகள் அருமை அய்யா, வாழ்த்துக்கும் வார்த்தைக்கும் நன்றி, வணக்கம்

      நீக்கு
  23. தாங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரிதான் அண்ணா. கொள்கைதான் முக்கியமே தவிர முதல்வர் யார் என்பது முக்கியமல்ல. ஆனால் தமிழ்நாட்டில் துரதிருஷ்டவசமாக தனிநபர் வழிபாடு காலங்காலமாக வேரூன்றிவிட்டது. முதல்வர் அம்மாவா கலைஞரா என்பதைப் பொறுத்தே மக்கள் வாக்கை முடிவு செய்கிறார்கள். ஸ்டாலின் என்றால் திமுக வாக்கு சரிகிறது என்று செந்தில் அவர்கள் கூறியிருப்பதும், இதைத் தான் உறுதிப் படுத்துகிறது.
    அமெரிக்காவைப் பொறுத்தவரைத் தனிநபரை முன்னிறுத்தித் தான் தேர்தல் நடைபெறுகிறது என்றாலும், அவர்கள் ஊடகங்கள் மூலம் மக்கள் முன் நடத்தும் ஆரோக்கியமான விவாதம் மூலமே வெற்றி வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்பது என் கருத்து. அவர்களின் வெளிநாட்டுக்கொள்கை என்ன? உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அவர்கள் சொல்லும் தீர்வு என்ன? யார் தலைவராக வந்தால் நம் நாட்டைச் சிறந்த முறையில் வழிநடத்துவார் என்பதையெல்லாம் மக்கள் உன்னிப்பாகக் கவனித்துச் சுயமாகச் சிந்தித்துத் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கு மக்கள் நூறு சதவீதம் கல்வியறிவு பெற்றவர்களாகவும், விழிப்புணர்வு பெற்றவர்களாகவும் இருப்பதால் இது சாத்தியம் ஆகிறது. நம் நாட்டுக்கு இது ஒத்துவராது.
    நீங்கள் சொல்லியிருப்பது போல நல்லகண்ணு நல்ல தலைவர் தாம். ஆனால் நாட்டை நிர்வகிக்க கூடிய பொறுப்புக்கு இவர் வயதும், உடல்நலமும் ஒத்துவருமா என்பது சந்தேகமே. நம் நாட்டில் சாதாரண எழுத்தர் வேலைக்கே அறுபது வயது, ஓய்வு பெறும் வயதாக இருக்கும்போது, நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய முக்கிய பொறுப்புகளில் அமரக் கூடியவர்கள் எண்பது வயதைத் தாண்டியவர்களாக இருக்கலாமா? தேர்தலில் நிற்பவர்களின் அதிக பட்ச வயது அறுபது எனச் சட்டம் திருத்தப்பட வேண்டும். இச்சட்டம் அமலுக்கு வந்தால், நம் அரசியல் தலைவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர், பேரன் பேத்திகளோடு விளையாட வீட்டுக்குப் போய்விடுவார்கள்.
    சமீபத்திய சென்னை வெள்ளத்தின் போது கண்ட இளைஞர் எழுச்சி அரசியலிலும் வரவேண்டும் என்பது என் கனவு. பழம் தின்று கொட்டை போட்ட ஊழல் அரசியல்வாதிகளையும், அவர்தம் குடும்ப வாரிசுகளையும் ஓரங்கட்டி, ஊழலில்லாப் புதுயுகம் காண இளைஞர் ஒருவர் தலைமையில் புதிய அணி புறப்பட வேண்டும். அது எந்நாளோ?
    அமாவாசை இருள் கவ்வியிருக்கும் தமிழக அரசியல் வரலாற்றில், எங்கேனும் நம்பிக்கை நட்சத்திரம் சுடர் விடாதா என ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்!
    சிந்திக்க வைத்த பதிவுக்கு மிக்க நன்றியண்ணா! த.ம வாக்கு 12.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப மகிழ்ச்சிம்மா. உங்களைப் போலும் விழிப்புடன் உள்ள பெண்கள் வேகமாக அரசியல் பேசும்போது நான் தழுதழுத்த குரலில் அதை வரவேற்பவன். அவ்வை பேசாத அரசியலா? இப்போதெல்லாம் 50விழுக்காடு இடஒதுக்கீடு தந்தும், பெண்கள் அதைப் பயன்படுத்த முடியாத சூழலை உருவாக்கியவர்கள்தான் அதனைப் பயன்படுத்தப் போகிறார்கள்! நிற்க. உங்களின் கிண்டல் சார்ந்த நடை அழகும்மா. நீண்ட, தெளிவான தங்கள் பின்னூட்டம் எனது கட்டுரையின் பெரும் பயன் என்று மகிழ்கிறேன். நன்றி தொடரட்டும் தங்கையின் குரல்

      நீக்கு
  24. அடையாள அரசியல்தான் இந்த நாட்டின் சாபக்கேடு. தனிநபர்கள் ஆதிக்கம் திமுக குடும்பத்தை பலப்படுத்தியது. ஊழலை உச்சமாக்கியது. தனிநபர் முன்னிருத்தல் எம்ஜீஆர் என்ற பிம்பம் பாட்டாளி வர்க்கத்தின் சிந்தாந்ததை அவர்கள் விளிம்பு நிலை வாழ்க்கையை மறக்கடித்து பல ஆண்டுகள் ஓடியது. மக்களாட்சி என்பதன் எதிர் கருத்தாக்கம் தான் தனிநபர் அரசியல். தனிநபர் பாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் அதே நேரத்தில் தன் சொந்த நலனை முழுவதுமாக கட்சிநலனாக முன்னிருத்துபவர்கள். அப்படி இருக்கும் போது சமஸ் அவர்கள் நீங்கள் சொல்லுவது போல ஒரு கருத்து திணிப்பை யாருக்காக செய்கிறார் என்று தொியவில்லை. நபர் அரசியலால்தான் நாடு பாதாளத்திற்கு சென்றுள்ளது. என்பதை புரியவைக்கும் விதமாக உங்கள் கட்டுரை அமைந்துள்ளது. நன்றி தோழர் நிலவன் அவர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கு நன்றி கவி! நீங்களெல்லாம் பொது மேடையில் அரசியல் பேசும் வாய்ப்பும், திறனும் வாய்த்த போதும் எழுதுவதில்லையே எனும் குறை எனக்கு உண்டு. (அதனால்தான் இலக்கியமே படித்த நான் பொறுக்க முடியாத சூழலில் நேரடி அரசியல் பேச நேர்கிறது) வாருங்கள் கவி! அவ்வப்போது உங்கள் வலைப்பக்கத்திலும், என்போன்ற நண்பர்களின் வலைப் பக்கங்களிலும் உங்கள் தெளிவார்ந்த கருத்துகளைப் பகிர்ந்து வழிகாட்டுங்கள். இணைந்து தெளிவோம்!

      நீக்கு
  25. அன்புள்ள அய்யா

    வணக்கம்.உங்கள் பதிவையும் அதற்கு வந்திருக்கிற கருத்துகளையும் வாசித்தேன். உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறேன். காரணம் ஒரு சமுகத்தின் மீதான அக்கறையோடு அதனை நன்முறையில் வடிவமைக்கவேண்டும் என்கிற சிந்தனையையும் அப்படியான சிந்தனைகளைக கொண்டிருக்கிறவர்களையும் ஒன்று திரட்டும் வகையிலான ஒரு நலமான தரமான விவாதத்தை,தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். அதில் நானும் பங்கு எடுத்து சிறு கருத் துரைத்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியானது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. அய்யா,
    ஒரு பெரும் கருத்துப்பரிமாற்றத்திற்கு வித்திட்ட தங்களின் பதிவிற்கு நன்றி. சித்தந்தங்களைப் புரிந்துகொண்டு வாக்களிக்கும் அளவிற்கு நமது மக்கள் இன்னும் தெளிவு பெறவில்லை என்பது என்னுடைய கருத்து. இந்த தேர்தலைப் பொருத்தமட்டில் மக்களின் விழிப்புணர்வு பெரிதும் பலப்பட்டிருக்கிறது என்பது உண்மை. சித்தாந்தங்களின் அடிப்படையில் வாக்களிக்கும் அளவிற்கான புரிதல் எதிர் வரும்காலங்களில் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதுவரையில் வழிநடத்திச் செல்பவர் இன்னார் என்கின்ற அறிமுகம் அவசியம் என்றே நான் கருதுகிறேன். ஆனால் திரு நல்லகண்ணு அவர்களின் வயது குறித்து எனக்குத் தயக்கம் உண்டு. யாரேனும் ஒரு இளைஞரை முன்னிலைப்படுத்தும் அளவிற்கு இக் கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படுமா என்பது சந்தேகமே. இதன்படி பார்க்கையில் முதல்வர் வேட்பாளர் குறித்து தற்போது அவர்களின் நிலைப்பாடு மிகச் சரியே. ஆயினும் வாக்கு வங்கி குறித்த தவறான கணிப்பில் விஜயகாந்த் போன்றவர்களை அங்கீகரித்துவிடுவார்களோ என்ற அச்சமே எனக்கு மேலோங்கி உள்ளது.
    மேலும் அன்புமணி அவர்களின் முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தலைப் பற்றி ஒரு தனிப்பதிவிடவும். பின்னூட்டங்கள் வாயிலாக நமது அறிவுள்ளங்களின் கருத்துகளைக் கேட்போம். சீமான் இத்தகைய அலசலுக்குத் தகுதி அற்றவர் என்பது என் தனிப்பட்ட கருத்து. இதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என என்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் அய்யா.
    முதலில் தொடர்பில் இல்லாமல் போனதற்கு மன்னிக்கவும். நான் இருக்கும் இடத்திலும் வேலையிலும் அடிக்கடி இணையம் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
    எப்போதாவது ஒருமுறை பதிவிடுவதும், மறுமுறை வந்து பின்னூட்டமிடுவதுமாய் இருக்கிறது நிலைமை.

    முதலில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்காமல் இருப்பது மக்களிடம் நம்பகத்தன்மையை இழக்கச் செய்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பதவிக்கு அடித்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. நல்லக்கண்ணு பெரும்பாலான நடுநிலையாளர்களின் தேர்வு. அவரது வயதைக் கருத்தில் கொண்டு வேறு தலைவர்களை அறிவிக்கலாம். மகேந்திரன் ராஜா போன்றோர்களை, ஏன் தங்களைப் போன்ற நாடறிந்தோர்களை முன்னிறுத்தலாம். அது கூட்டணிக்கு பலமே தவிர நிச்சயமாய் பலவீனம் அல்ல.
    இந்தக் கூட்டணியில் கம்யூனிஸ்ட்கள் தவிர யாருக்கும் பெரிதாய் கொள்கைகள் இல்லை.
    கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து யாரை முன்னிறுத்தினாலும் அது கூட்டணிக்கு பலமே தவிர பலவீனம் அல்ல.
    கொள்கை சித்தாந்தம் என்றெல்லாம் சமாதானம் சொன்னாலும் , மற்றக் கூட்டணிக்கட்சித் தலைவர்களிடம் முதல்வர் ஆசை இருப்பதும் , ஒருமித்த கருத்தொற்றுமை இல்லாததும் தான் காரணம் என்பது என் போன்ற பலரின் எண்ணம். " இவர்களிடம் ஒத்துமை இல்லப்பா" என்ற மக்களின் மனப்பான்மையை எப்படி மாற்றப் போகிறீர்கள்?கம்யூனிஸ்ட்கள் சேர்ந்து முதல்வர் பதவிக்கு தகுதியற்ற சிலரின் செல்வாக்கை உயர்த்திவிடப் போகிறீர்கள் என்ற என் போன்றோரின் பயம் தங்களுக்கு நியாயமாகத் தெரியவில்லையா?
    என்றும் அன்புடன்
    சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  28. இன்றைய நிலைப்பாடு என்ன அய்யா?

    பதிலளிநீக்கு