வேட்புமனு சரி, அதுஎன்ன விருப்பமனு?


ஜனநாயகத் திருவிழாவில் எத்தனை வேடிக்கைகள்! மற்றும் வேதனைகள்!
வேட்புமனுவை யார் தருவது என்பது, கட்சிகளின் உள்பிரச்சினை. “இது வரை இவர் இருந்தார், இனி இவர் இருக்கட்டும்“ என ஒருமித்த கருத்தை உருவாக்கி, கட்சிக்குள் விவாதித்து, தேவையெனில் போட்டிவைத்து, கட்சியின் சார்பாக ஒரு வேட்பாளரை அறிவிப்பதுதானே சரியான ஜனநாயக முடிவாக இருக்கும்? இதைவிட்டுவிட்டு இப்போது நம் பெரிய கட்சிகள் நடத்தும் வேட்பாளருக்கான “விருப்பமனு” சரிதானா?
எல்லாரையும் “விருப்பமனு” தரச் செய்வதும், அதற்கொரு காப்புத்தொகை (திரும்ப வராது என்று தெரிந்தே) கட்டச் செய்வதும் அதில் பெருந்தொகை வசூலிப்பதும் கட்சிக்குள்ளே கட்சித் தொண்டரையே சுரண்டுவதன்றி வேறென்ன?

இதில் நம் “பெரிய“ கட்சிகளின் பெரிய வசூலைப் பாருங்கள்!

அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 11 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாயும் செலுத்தி விருப்ப மனுவை  பெற்றுக் கொண்டவர்கள் ஏறத்தாழ – 26,174
ஆக அதிமுகவில் நடந்த “விருப்பமனு” வசூல்  சுமார் 30கோடி! (இதில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தமது தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி 7,936 பேர் மனுக் கொடுத்திருக்கும் கூத்தும் அடக்கம்!)

திமுக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 11 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாயும் செலுத்தி விருப்ப மனுவைத் தந்திருப்பவர்கள் ஏறத்தாழ 3000 பேர் (இதிலும் கட்சித் தலைவர், பொருளருக்காக ஏராளமான திமுகவினர் வேட்பு மனுவை விருப்பமனுவாகத் தந்திருக்கிறார்கள். மொத்த வசூல் சுமார் சில கோடிகள்)

இரு “திராவிடக்கட்சி“யிலுமே நல்லநாள், நல்லநேரம், பார்த்து விருப்பமனு அளித்தவர்கள்தான் பெரும்பான்மை என்பதால், “இரண்டும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்” என, நான் காமராசர் அவர்களின் மேற்கோளையிட்டு, “இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒன்றுதானே?” என்ற எனது கேள்விக்கு அய்யா சுப.வீ. அவர்கள் இன்னும் பதில்சொல்ல வில்லை! (நாம் ஒன்றும் பதில்தர வேண்டிய அளவிற்குப் பெரிய ஆள் இல்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம், (அ) “என்னத்தைச் சொல்ல” என மௌனமாக ஒப்புக்கொண்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம்!)


பாஜக இதுவரை 3,500பேர் “விருப்பமனு“ தந்திருப்பதாக அக்கட்சி அறிக்கை!
(பரவாயில்லை இவ்வளவு பேர் இந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்று காட்டுவதற்கு இது நல்ல உபாயம்தான்! சும்மா உளறாதீங்க மக்களே!)


இதுபோலவே, தேமுதிக, பாமக,காங்கிரஸ், தமாகா என முக்கியக் கட்சிகள் பலவும் வேட்புமனு வுக்கான விருப்ப மனுவை வாங்கியுள்ளன! 
(எவ்வளவு முன்பணம் என்பது வெளிப்படையாக அறிவிக்கவில்லை விருப்பமனு எண்ணிக்கையும் தெரியவில்லை.)

தொகுதிக்கான பிரச்சினைகள் என்னென்ன? அவற்றுக்கான தீர்வுகள் யாவை? என்று அதே தொகுதியில் இருப்பவரைத்தான் கேட்டறிய முடியும். அதனால்தான் வேட்பாளர்கள் அந்தந்தத் தொகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள். இது சரி.
ஆனால், “வெற்றிபெற்ற பிறகு பெரும்பாலும் நம் ச.ம.ஊ. நா.ம.ஊ. யாரும் அந்தந்தத் தொகுதிப் பக்கம் வருவதில்லை” என்னும் உண்மை கண்டுபிடிக்கப்பட்ட(?) பின்னரே, “தொகுதி அலுவலகம்” என்ற ஒன்றை அந்தந்தத் தொகுதியிலேயே திறக்கச் செய்தது ஜனநாயக நெருக்கடி! (அப்பவாச்சும் வருவாகன்னு தான்! ஆனா நாமதான் பாயில நுழையக்கூடாதுன்னா தடுக்குல நுழைஞ்சிடுவமே?)
பலநேரம், மாவட்ட ஆட்சியரோ, காவல் கண்காணிப்பாளரோ அந்தப் பகுதி மொழி அறியாதவராக வந்துசேரும் அவலம் நாட்டில் இன்னும் இருக்கிறது. (இதில் அரசியலும் உள்ளது). அந்த ஊரின் உள்-பிரச்சினைகளை, பண்பாட்டு நிகழ்வுகளை அறிந்த அதிகாரியால்தான் சரியாக அணுகி, தீர்வும் காணமுடியும் என்பதால் இப்படி! ஆனால், எவ்வளவோ சொல்லியும், “இந்திய ஒருமைப்பாடு” எனும் வார்த்தை சொல்லி, இதை உதாசீனம் செய்வதை ஆளும் கட்சிகள் எப்போதும் விடுவதே இல்லை! இது ஒரு புறம் இருக்கட்டும்

   தொகுதிப் பிரச்சினையை நன்கறிந்தவராக, அங்கேயே வசிப்பவராக இருக்கும் உறுப்பினரால்தான் வெற்றிகரமான வேட்பாளராகவும் இருக்க முடியும் என ஒவ்வொரு கட்சியும் நினைப்பது இயல்பானதே!

  இதுபோல, மாவட்டங்களுக்குப் பொறுப்பான மாநிலத் துணை நிர்வாகிகள் அந்தந்தப் பகுதித் தலைவர்களை அறிந்திருப்பதும் அவசியம்.  (அப்படிப் பொறுப்புகளைப் பகிர்ந்து செயல்படுவது எல்லா அமைப்பு / கட்சிகளுக்குமே பொருந்தும்தானே?) 
    அந்தந்தப் பகுதித் தலைவர்கள் அங்குள்ள பெருவாரித் தொண்டர்களை அறிந்திருந்தால்தான் கட்சி/அமைப்பு சரியாக நடைமுறைாகி யிருக்கிறது என்று பொருள். அதுதான் ஜனநாயக முறை 

   அதற்காக, அண்மையில் ஒன்றிரண்டு தேர்தலாக வளர்ந்துவரும் இந்த “விருப்பமனு” முறை வெற்று ஆரவாரமன்றி வேறென்ன?

  இடம் கிடைக்க உறுதியேதும் இல்லாமலே ஆயிரம் ரூபாய்க்குமேல் விண்ணப்பத்திற்காக மட்டுமே செலவுசெய்து, படிக்கும் மாணவரைச் சுரண்டும் கல்வி முறை சரியல்ல எனில் இதுவும் சரியல்லவே? (இதுபற்றி நான் எழுதிய கட்டுரை தினமணியில் வந்தது பார்க்கச் சொடுக்குக-  http://valarumkavithai.blogspot.com/2014/01/blog-post_30.html

தம்மைப் பெரிய கட்சி என்று காட்டிக்கொள்ளவும், தமது கட்சி ஆட்சி வருவதை எவ்வளவு பேர் விரும்புகிறார்கள் என்று பெருமை கூறவும், இதுவே “பெருவாரி மக்களின்” விருப்பம் என்பதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவுமே இந்த “விருப்ப மனு“ முறை தெரிகிறது.

இந்த “விருப்பமனு” முறைகளே இல்லாமல் சரியான வேட்பாளரைத் தலைமைக் குழுவே தேர்வு செய்து அவரை மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்யச் செய்வது ஒன்றுதான் சரியான நடைமுறை. 

வேட்பாளரையே தெரியாதது போல ஏதோ புதுசா வேலைக்கு ஆள் எடுப்பது போல “வேட்பாளர் நேர்காணல்” நடத்துவது யாரை ஏமாற்ற? 
அங்கேயே தொடங்கிவிடுகிறதே சிபாரிசும், பணம் கைமாறுவதும்!

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, ஐவர் அணியை ஓரங்கட்டியதற்குச் சொல்லபட்ட காரணங்களில் முக்கியமானது “வேட்பாளர்களாக விருப்பமனுக் கொடுத்திருப்போர் இவர்களை அணுகிப் பணம் கொடுத்தது, சிபாரிசு வேண்டியது” என்பதும் ஒன்று என்கிறார்களே? இது உண்மையெனில்-

திமுகவில் உள்ள கோஷ்டிகளில் யார்யார் வேட்புமனுவை நிராகரிக்கச் செய்வது எனும் போட்டியில் அடிதடியே நடந்ததாகச் சொல்வது உண்மையெனில் –
இந்த “விருப்பமனு” தொடக்கமே தவறுகளின் தொடக்கமாகிவிடுகிறதே!

எனவே, விருப்பமனு எதையும் வாங்காமல்-
மக்களை நன்கறிந்த தொண்டர், தொண்டர்களை நன்கறிந்த தலைவர்கள் என்பதன் வழி மக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் தலைவர் கள்தான் வேட்புமனுவை யார் தருவது என்று முடிவுசெய்ய வேண்டுமே தவிர இப்படி இதையும் வசூல் செய்யும் முறையாக மாற்றுவது ஜனநாயகத் தேர்தல் முறைக்கே எதிரானது என்பது என் கருத்து.

   தேர்தல் செலவின் தொடக்கமாக “விருப்பமனு” கட்டணத்தைக் கருதி, ஒவ்வொரு வேட்பாளரின் தனிச்செலவில் தொடங்கி, கட்சிகளின் பொதுச் செலவிலும் இதைச் சேர்த்து,  தேர்தல் ஆணையம் கணக்குக் கேட்க வேண்டும் என்பதே என் கோரிக்கை.

   விருப்ப மனுவைத் தொண்டர்களிடம் வாங்காமல், தொண்டரைச் சரியாக எடையிட்டு, தொகுதிக்கான வேட்புமனுவை தொண்டருக்குக் கொடுக்கும் கட்சியே ஜனநாயக நடைமுறைகளை நடைமுறைப் படுத்தக் கூடியதாக இருக்கும். என்ன சரிதானே?

இதைச் செய்யும் கட்சிக்கே 
நான் வாக்களிப்பேன்.

அப்ப நீங்க?
--------------படங்களுக்கு நன்றி கூகுளார் -----------

15 கருத்துகள்:

 1. அப்படி ஒரு கட்சி இருக்காண்ணே...

  பதிலளிநீக்கு
 2. தேர்தலில் போட்டியிடுவது என்னவோ பொதுநலச்சேவைக்காக என இன்னுமா நினைத்துக்கொண்டடிருக்கின்றீர்கள்...
  அய்யா..அது முதலீடாகி பலநாள் ஆச்சே?
  வந்தா மலை..போனா....?
  கதைதான்...

  பதிலளிநீக்கு
 3. இவ்வளவு கோல்மால்களும் மக்களுக்கு கண்கூடாகவே தெரிகின்றது அப்படியிருந்தும் இந்தக் கட்சிகளை விட்டு வெளியே வர முடியவில்லையே ஏன் ?

  நாம் அரசியல்வாதிகளை குறை சொல்வதைவிட குற்றத்தின் தொடக்கம் மக்கள் என்பதே எனது குற்றச்சாட்டு கவிஞரே...

  ஜெயலலிதா ஒரு நடமாடும் நகைக்கடை என்பது மக்களுக்கு தெரியும் மீண்டும் அவருக்கே வாக்களித்தால் என்னதான் இவர்கள் புரிந்து கொண்டார்கள் எனபது எனக்கு புரியவில்லை.

  அதற்காக தி.மு.க நியாயத்தராசு என்று நான் சொல்ல வரவில்லை எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே...

  பதிலளிநீக்கு
 4. இதை செய்யும் கட்சிக்கோ தங்களின் வாக்கா?
  அப்பொழுது தாங்கள் ஓட்டே போடப் போவதில்லையா-

  பதிலளிநீக்கு
 5. அரசியல் பதிவு இது
  கருத்து சொல்ல ஆசைதான்...
  இருப்பினும் அரசியல்
  வேண்டாம் என்றே நானிருக்கிறேன்...
  இதுவே என் கருத்துரை....

  பதிலளிநீக்கு
 6. ஆஹா நீங்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லி இருக்கிறீர்கள்...

  பதிலளிநீக்கு
 7. கீதா - இருக்கும்மா...செய்தித்தாள் பாருங்கள்.

  செல்வா, நிஜாமுதீன் - இதைத்தான் சமூகத்தின்
  சீரழிவுக்கட்சிகள் எதிர்பார்க்கின்றன, நல்லோரை ஒதுக்கிவிட்டு நாடாள..
  நீங்கள் இதை வரவேற்கிறீர்களா?

  கில்லர்ஜி - குற்றத்தின் தொடக்கம் மக்களல்ல நண்பா!
  மக்கள்தான் அதன் இறுதிப்பாதிப்பாளர்கள்

  கரந்தையார், மதுரையார் - நீங்கள் கூட இப்படி அப்பாவியாக
  இருந்தால் சாதாரண மக்கள் எங்கே முன்னேற?

  அஜய் சுனில்கர் - இதுதான் நம் மக்களின் சிக்கல். அரசியல்
  இல்லாமல் எதுவும் கிடையாது.ஆனால் அந்த
  அரசியலை அயோக்கியர்கள் பார்த்துக் கொள்வார்கள்
  என்று நாம் ஒதுங்கிவிடுவது! முதல்வன் படத்தில்
  மணிவண்ணன் பேசும் சில வசனம் நினைவில்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயையோ நானும் இவங்க சொன்னதத்தானே சொல்லிருக்கேன்...இப்பதான் இதை வாசிக்கறேன்...கருத்து போட்டுவிட்டுத்தான் மற்ற கருத்துகளை வாசிக்கும் பழக்கம் என்பதால்...

   இருக்குதா அப்ப...கண்டிப்பா பார்க்கிறேன்...அண்ணா..

   நீக்கு
  2. அன்ணா நீங்க இப்படி எழுதினதுனால ஓட்டுப் பெட்டியை யாரோ அமுக்கிட்டாங்க போல...அஹஹஹஹ் காணவில்லையே...மீண்டும் வந்து பார்க்கிறேன்..

   கீதா

   நீக்கு
 8. முதலில்லாமல் சம்பாதிப்பது அரசியல்தானே தம்பி!

  பதிலளிநீக்கு
 9. ஹஹஹஹ்... அண்ணா அப்ப நீங்க வாக்குப் போடப் போவதில்லை என்பதை விட முடியாதே...அப்படி ஒண்ணு இருந்தா சொல்லுங்க அண்ணா கண்டிப்பா நான் அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுகிறேன்..ஒருவேளை நீங்க நோட்டா வைச் சொல்லுகின்றீர்களா அண்ணா..ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 10. அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே...என்ற சினிமா வசனம் நினைவுக்கு வருகிறது.
  வாக்காளர்கள் இவர்களைப் புறக்கணிக்க ஆரம்பித்தாலே மாற்றம் ஏற்படும்!

  பதிலளிநீக்கு
 11. ஜனநாயகம் என்றால் ஜனங்களுக்காக ஜனங்களைக்கொண்டு ஜனங்களால் ஆளப்படுவது என்று பொருள்.
  நடப்பதோ கட்சிக்காக கட்சித்தோண்டரைக்கொண்டு, கட்சியாட்களால் ஆளப்படுவதே இன்றைய நடைமுறை!
  ஜனங்களுக்காகவுமில்லை. ஜனங்களாலுமில்லை. ஜனங்களைக்கொண்டுமில்லை. முன்னேறிய நாடுகளில் ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் நம் நாட்டில் அது என்றோ தோற்று விட்டது. பார்டியோகிரேசி என்பதுதான் நிகழ்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ள முடிந்தவர்கள் மட்டுமே இங்கு முன்னேற முடியும். முதலாளிகளும், மேலை நாட்டு வாணிப நிருவணங்களும், கட்சி தலைவர்களும் (தொண்டர்கள் அல்ல!) மட்டுமே இங்கு வாழ முடியும். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படை வாதம் இங்கு அடிப்பட்டு போகிறது. எல்லோரும் சமம் என்ற சட்ட வாதமும் நசுங்கிப்போகிறது. பின்பு, நிலைத்திருப்பதோ, காட்டு மிராண்டிகளின் மிரட்டல் ஆட்சிகள்தான். இந்த நிலை நீடித்தால் இந்தியா என்ற ஒன்று சீக்கிரம் காணாமல் போகும். பணக்காரர்கள், வாணிப நிருவணங்கள் அது நிகழாதவாறு தடுக்க கடும் முயற்சி செய்கிறார்கள். இதனால் அடிமைத்தனமே மிஞ்சும். இனி நெருக்கடியில் ஜனங்கள் கிடந்து உழல்வார்கள். ஆனால் எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு உண்டு. இதுதான் நம் நம்பிக்கை!

  பதிலளிநீக்கு