குரங்கு தன் குட்டியின் கையை விட்டு வெந்நீரில் சூடு பார்க்குமே அதுபோல, நாலாந்தரப் பேச்சாளர்களைக் கொண்டு, ஒருமையிலும், கீழ்த்தரமாகவும் எதிர்க்கட்சித் தலைவர்களைத் திட்டவைப்பதோ, ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்கட்சித் தலைவரைப் பிடித்து சிறையில் போடுவதோ அரசியல் அல்ல!
அது
அரசியல் சாயம் பூசப்படும் பச்சையான வெறும் காழ்ப்புணர்ச்சி! தொழில்போட்டியில் வந்த
பொறாமையின் எதிர்விளைவே அன்றி வேறல்ல!
ஒருகட்சியின்
ஆட்சி மாறி வேறொரு கட்சி வருவது கூட வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமேயன்றி அரசியல் மாற்றமல்ல!
கவிஞர்
கந்தர்வன் கவியரங்கில் முழங்குவார் -
“மண் பொய்சொல்வதில்லை, மிதிக்கிறோம்
மரம் பொய்சொல்வதில்லை வெட்டுகிறோம்
மந்திரி பொய்சொல்கிறார் மாலை போடுகிறோம்!
தானா எல்லாம் மாறும் என்பது பழைய
பொய்!
நான் வந்தால் மாற்றுவேன் என்பது
புதிய பொய்!“
திமுக.,
அதிமுக போலும் சுயநலக் கட்சிகளின் “உள்கூட்டு” வெளியில் தெரியாமல் மறைப்பதில் அரசியல்
உண்டு! ஆனால் அதுவும் சரியான அரசியல் அல்ல! அரசியல் என்றால் என்ன என்பதை அறியவிடாமல்
செய்யும் போலிஅரசியல் இது!
இரண்டு
உதாரணங்களை மட்டும் பார்ப்போம் -
(1) மதுவை ஒழிப்போம் என்று கலைஞர் இப்போது சொல்கிறார்.
திறந்துவிட்டதே அவர்தான் என்பதை எல்லாரும் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார். அதிமுக
தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பும் இடம்பெறலாம் என்கிறார்கள் அப்படியிருந்தால் அதுவும்
நாடகமே!
ஏனெனில்,
மதுபான உற்பத்தி நிலையங்களின் உரிமையாளர்கள் இவ்விரண்டு கட்சியிலும் இருக்கிறார்கள்.
அதோடு, யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த இரு கட்சிக்காரர்களின் உற்பத்தியே விற்பனைக்கு
வருகிறது என்பதை இருகட்சிக் காரர்களுமே மறைக்கவோ மறுக்கவோ முடியாது! இதுதான் உண்மை! எனவே
“மதுவை ஒழிப்போம்” என்று இவ்விருவரில் யார் சொன்னாலும், அது பச்சைப் பொய்யாகத்தான்
இருக்குமே தவிர நடத்திக்காட்ட முடியாது!
நான்
1989இல் கல்கியில் எழுதிய கவிதை இது-
கல்விக்கடையைத் தனியார்க்கு விட்டு,
கள்ளுக் கடையை அரசே ஏற்றதில்
நட்டம் என்னவோ நமக்குத் தானே?
(2) உயர்கல்வியை, மருத்துவத்தைத் தவிர அனைத்தையும்
இலவசமாகத் தரத் தொடங்கியதும் இவர்கள் இருவரும்தான்! இந்த இரண்டுமே ஏழைக்கு எட்டாமல்
அதிக விலையாகிப்போனதும் இவர்களால்தான்!
காமராசர்
என்ற பெரியவர் முதல்வராக இருந்தபோது, இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
இதனால், பலலட்சம் குழந்தைகள் பள்ளிக்கூடம் வரத்தொடங்கின. எம்.ஜி.ஆர்.அதையே சத்துணவுத்
திட்டமாக அறிவித்தார். அதுவும்கூட நல்ல பலனைத் தந்ததே என்றாலும் அப்போது தொடங்கியது
“இலவசக் கவர்ச்சி அரசியல்”.என்றே சொல்லவேண்டும்.
இப்போது
பள்ளிப் படிப்புவரை அத்தனை இலவசங்களைப் பெற்றுப் படிக்கும் குழந்தைகளின் உயர்கல்வியில்
அவ்வளவு கொள்ளை நடப்பது ஏன்?
அது
வேறொன்றுமில்லை நண்பர்களே! இந்த உயர்கல்வி நிறுவனங்களில் பாதிக்கும் மேலே நடத்துவதும்
இந்த இரு கட்சிக்காரர்களே! அல்லது இவர்களின் ஆதரவாளர்களே!
ஆக,
“பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசம்” என்று நாம் நினைக்கும் அனைத்தும் உயர்கல்வி நிறுவனங்களை
வைத்திருக்கும் தத்தம் கட்சிக்காரர்கள் சம்பாதிப்பதற்கான வாசல்திறப்பு என்பது புரிகிறதா?
தமிழ்நாட்டளவிற்கு
பொறியியற் கல்லூரிகள், ஆசிரியர்பயிற்சிக் கல்லூரிகள் ஏன், பளபள மருத்துவ மனைகள் வேறெந்தத்
தென்மாநிலத்திலும் இல்லை! ஆகா என்னே வளர்ச்சி என்று வாய்பிளந்து பாராட்டத் தோன்றினால்
உங்களைவிட அப்பாவி
உலகில் வேறுயாருமில்லை என்பேன்.
இவைதான்
இப்போது பணம்-காய்ச்சி மரங்கள் என்பதை இரு கட்சிக்காரருமே உணர்ந்து, தெளிந்தவர்கள்! இவற்றின்
பங்குதாரர்களாக இல்லாத முன்னாள் இந்நாள் அமைச்சரே இல்லை என்பதைப் புள்ளிவிவரம் கேட்டுத்
தெளிவடையலாம்.
பெரிய
கல்லூரி, பள்ளிகளை நடத்துவோர் ஒன்று அரசியல் வாதிகளாகவே இருப்பர் அல்லது ஏதாவது ஒரு
பெரிய கட்சியின் விசுவாசியாகவே இருப்பர்! அல்லது பினாமியாக இருப்பர் என்பதே இன்றைய
தமிழ்நாட்டு நிலைமை!
விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசில நல்ல நிறுவனங்களிடம் அவ்வப்போது பெருந்தொகை நன்கொடை வாங்கி விடுவதும் உண்டு!
பள்ளிப்படிப்பையே
முடிக்காத கல்வி வள்ளல்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பரிணாம வளர்ச்சி
இப்படித்தான் இருக்கிறது!
இதைத்தான்
யாரோ ஒரு நல்ல கவிஞர் இப்படிச் சொன்னார் –
படித்தவன் பாடம் நடத்துகிறான்,
படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்!
எங்கள்
ஊர்க்கவிஞர் தங்கம் மூர்த்தி
இதையே வேறுமாதிரி எழுதினார் –
வயல்களை அழித்து
கல்லூரி கட்டினான்,
நல்ல அறுவடை!
கல்விக்கட்டணக்
கொள்ளை பற்றிய செய்திகள் அவ்வப்போது வருவதும், போவதுமாக இருப்பது ஏன் என்று இப்போது
தெரிகிறதா?
கல்விமுறை
மாற்றம் பற்றிக் கல்வியாளர் பலரும் காட்டுக் கத்தலாகவும் கரடிக்கத்தலாகவும் கத்தியும்
நடக்காத ரகசியம் புரிகிறதா!
இப்படி
–
கல்விக்கடை, மருத்துவக்கடைகளில் இருந்து அரசியல் வாதிகள் வெளியேற்றப்பட்டு, அவை உண்மையான சேவைத் துறை என்பதை நடைமுறைப்படுத்தினாலன்றி, இவை உருப்பட வழியில்லை என்பது மட்டுமல்ல, நம் அரசியலோ நமது எதிர்காலமோ கூட உருப்பட வழியே இல்லை என்பதுதான் நெருப்பாய் எரியும் நிஜம்!
இப்போதைக்கு
எனக்குத் தோன்றிய இரண்டு உதாரணங்களே இவை! மற்றவற்றை உங்கள் கருத்தறிந்து
அவ்வப்போது சொல்வேன்!
வணக்கம் ஐயா.அருமையாக சொன்னீர் ஐயா.அதுவும் மாற்றம் குறித்த கவிதையை சிந்திக்கவும் தலைகுனியவும் வைத்தது ஐயா.என்னுள் இருந்த சில கேள்விக்கு விடைக் கிடைத்தது ஐயா.
பதிலளிநீக்குமது ஒழிக்க முடியாது கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக கொடுக்க இயலாது இது நம் அரசியல் கோட்பாடுகளில் முதன்மையானவை ஐயா.
நன்றி.
அட்டகாசமான பதிவு! இதில் நீங்கள் கல்விக் கடனையும் சேர்த்திருக்கலாம். உயர் தொழில்நுட்ப கல்லூரிகளை கொள்ளையர்கள் (அப்படித்தான் அவர்களை அழைக்கத் தோன்றுகிறது) ஆரம்பிக்கும் முன் ஒரு கூட்டம் நடந்தது. அப்போது கல்லூரி கொள்ளையர்கள் இவ்வளவு கட்டணம் வைத்தால்தான் நம்மால் சம்பாதிக்க முடியும். ஆனால், நம் மக்களால் இவ்வளவு கட்டணம் கட்டமுடியாதே அவர்களுக்கு அவர்களின் சக்தி மீறிய கட்டணமாயிற்றே, நாம் கல்லூரி திறந்து யாரும் வந்து சேரவில்லை என்றால் நமக்கு நஷ்டம்தானே என்று கல்விக் கொள்ளையர்கள் சொல்ல, உடனே அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அதற்கு அரசாங்கமே வங்கி மூலம் கல்விக் கடன்
பதிலளிநீக்குஎன்ற ஒன்றை தரவைத்து பணத்தைக் கறந்து விடுவோம். அதன்பின் அந்த மாணவனையே கடனைக் கட்டும்படி செய்துவிடுவோம். நாம் சொகுசாய் வாழ வசதி இல்லாதவர்களை பலிகடாவாக்குக்குகிரொம், வேண்டுமானால் கடனை வட்டியில்லாமல் கொடுப்போம் என்று முடிவெடுத்தார்களாம். அப்படி அவர்கள் சொகுசுக்காக நாம் ரத்தம் சிந்தி சம்பாதித்த பணத்தை இழக்கிறோம் என்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் பல முறை என்னிடம் கூறியிருக்கிறார். இந்த விவரமெல்லாம் தெரியாமல் பணத்தை கஷ்டப்பட்டு கொண்டுபோய் கொள்ளையர்களிடம் கொடுக்கிறார்களே என்று வருத்தப்பட்டிருக்கிறார். இன்னும் விரிவாக எழுதினால் இதுவே ஒரு பதிவாகிவிடும் என்பதால் முடித்துக் கொள்கிறேன்.
த ம 1
திருமிகு வைசாலிக்கு, மதுஒழிப்பு, கல்விக்கட்டணக் குறைப்பு, மருத்துத்தை குறைந்த கட்டணத்தில் கொடுப்பதெல்லாம் இயலாதென்று நினைக்க வைத்திருக்கிறார்களம்மா, ஆனால் நல்ல தலைமையில் நல்ல ஆட்சி அமைந்தால் இது முடியும்.
பதிலளிநீக்குகூடுதலாகச் சொன்னால் வெளிப்படையாக அரசியல் பேச வேண்டி வரும்.. நீங்களே யோசித்து முடிவெடுங்கள். நன்றி.
திருமிகு செந்தில் அவர்களுக்கு,
உண்மைதான் அய்யா, நினைவிருக்கிறதா - கல்விக்கடன் கட்டாத மாணவர் படங்களை -ஏதோ கிரிமினல்கள் போல - வெளியிட்டார்களே!
அதானியை நம் பிரதமரே வங்கித்தலைவரோடு அழைத்துப் போய் வெளிநாட்டு வணிகத்துக்கு ஏற்பாடு செய்யவிலலையா?
இங்கே கடனைக் கட்டிக் கொண்டிருந்த விவசாயியை அவரது வீட்டிலேயே சென்று அடித்து உதைத்து இழுத்துப் போனார்கள்! சாராய முதலாளி மல்லையா 9ஆயிரம் கோடிக் கடனோடு வெளிநாட்டுக்கு ஓடியது கூட இவர்களைப் போன்ற பெரியமனிதர்களின் நாடகம்தான்! இரண்டும் ஒரே நேரத்தில் நடந்ததே!
சரியான அரசியல் என்னவென்று புரிந்துகொண்டால் இவர்களின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிவிடும் அல்லவா?
இதனால்தான் அரசியல் ஒரு சாக்கடை என்று மக்களையே பேசவைத்து இவர்கள் கூத்தடிக்கிறார்கள்.. மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்லவே!
நல்ல தலைமையையும் ஆட்சியையும் தான் உருவாக்க வேண்டியுள்ளது ஐயா.காத்திருக்கலாம் மாற்றத்திற்காக ஐயா.நன்றி.
பதிலளிநீக்குநாம் ஏமாற்றப்படுகிறோம் என்பது மக்களுக்கு தெரிந்தும் தானே ஐயா இப்படிப்பட்டவர்கள் மக்கள் ஆட்சியில் அமர வைக்கிறார்கள் ...
பதிலளிநீக்குஒவ்வொரு முறை மத்தியில் அமையும் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும்போது தமிழ் நாட்டின் முக்கியமான தேவைகளையும் தீர்க்கப்படாத பிரச்னைகளையும் குறித்த முன் நிபந்தனைகளையும் வைக்காமல் வருமானம் கிடைக்கக்கூடிய துறைகளின் அமைச்சர் பொறுப்புக்களை வாங்குவதிலேயே கவனம் செலுத்தினார் .....கச்சதீவு ...காவிரி நீர்ப்பங்கீடு .....இலங்கை அரசின் ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி அளிப்பது குறித்தெல்லாம் வாய் திறக்கமாட்டார் ...இதைப்பற்றியெல்லாம் ஆட்சியில் இல்லாத போது செய்வதாக பேசிக்கொண்டே வாக்குகளைப்பெற்றுவிடுவார் ....ஈழதமிழர்களைப்பாதுகாப்பேன் என்பார் ....பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்கு வந்தால் விமான நிலையத்திலேயே வைத்து திருப்பி அனுப்புவார் ....பிரச்னை கைமீறிப்போகும்போது மரினாவில் போய் மூன்று மணிநேரம் உட்கார்ந்து விட்டு வருவார்......உயிரையும் கொடுப்பேன் என்பார் பதவியைக்கூடவிட்டுத்தராமல்...... பதவி விலகினால் பிரச்னை தீர்ந்து விடுமா என்று திருப்பி அடிப்பார் ......தனது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில்கூட தமிழ் வழிக்கல்வியை அமுல்படுத்தாமல் உலகத்தமிழ்மாநாடு நடத்துவார் .....
பதிலளிநீக்கு1. பாட நூல்களில் அரசியல் வாதிகள் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும். உயிரோடு இருக்கும் எந்த தலைவரைப் பற்றியும் பாட நூல்களில் தகவல்கள் இடம் பெறக் கூடாது.. அவன் வந்தா இவன் படத்தையும், இவன் வந்தா அவன் படத்தையும் போட்டு சுய புராணம் பாடுனதுல பாட புத்தகங்கள் பிட் நோட்டீஸ் ரேஞ்சுக்கு மாறிடுச்சு.
பதிலளிநீக்கு2. பள்ளிகளில் மீண்டும் தொழில் பாட வகுப்புகளைக் கட்டாயமாக்க வேண்டும். இராஜாஜி சொன்னதைப் போல அல்லாமல் புக் பைண்டிங், லேமினேசன், காகிதக் கவர் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, தையல் என பொருளாதாரம் சார்ந்தும், தன் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் எல்லோருக்கும் பயன்படும் விசயத்தைக் கற்றுத் தர ஒரு பாட வேளையை மட்டுமாவது ஒதுக்க வேண்டும்.
3. 3.தாய் மொழியில் பயிலுதல் வேறு. மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்ளுதல் வேறு என்பதை உணர்த்தும் வகையில் தாய்மொழிக் கல்வியை கட்டாயமாகவும், பிற மொழிகளை சிறப்புப் பாடமாகவும் கொண்டு வரலாம், சிறப்பு மொழிப் பாடம் என்பது உயர் கல்விக்கு கட்டாயமில்லை என அறிவிப்பதன் மூலம் தாய்மொழிக் கல்வியை முன்னிலைப்படுத்தி வைத்திருக்க முடியும்.
4. வட்டார அல்லது மாவட்ட அளவில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இருவரும் கலந்து பங்கு கொள்ளும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி அவர்களுக்கிடையேயான அடிப்படை இடைவெளியை குறைக்கலாம். இதை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரியின் வழிகாட்டலுக்கு விட்டு விடலாம்.
இப்படி நிறைய தோன்றுகிறது, எழுதிக் கொண்டே போனால் பின்னூட்டமாக இருப்பதற்கு பதில் கட்டுரையாக ஆகி விடும்!
சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குமக்களுக்கு நன்மை தரும் விசயங்களை இலவசம் ஆகக வேண்டும்.உயர் கல்வி,மருத்துவம் உட்பட. பல கதைகள் புளுகி மக்களை ஏமாற்றி அனுபவித்த கூட்டம் இப்போது அவர்கள் உரிமையை பெறுவதை தடுக்க பார்க்கிறது.இவர்கள் உழைக்காமல் அறுவடை செய்தார்கள், இப்போது தந்திரம் செய்து தடுக்க பார்கிறார்கள். இவர்கள் தொப்பை தடவி இத்தனை நூற்றாண்டு காலம் இலவசம் அனுபவித்து வருவது சரியா? இன்றும் இட ஒதுக்கீட்டை பல இடங்களில் கண் துடைப்பாக செய்து வருவது சரியா? உச்ச நீதி மன்றம்,உயர் கல்வி எல்லாம் ஒரு கூட்டத்தின் கையில் தான் இன்றும். இவர்கள் அங்கு இருப்பதால் தகுதி பெருகி விட்டதா? இவர்களின் பாரபட்சமான அனுகுமுறையாலே நாடு இன்றைய நிலையில் உள்ளது. அநீதி செய்யும் அந்த கூட்டத்தில் பலரும் தண்டனை பெறுவதில்லை. எவ்வளவு விசித்திரம்.எங்கு பணம் அதிகாரம் உள்ளதோ அங்கு அவர்கள் மட்டுமே. யார் ஆட்சி செய்தாலும் எளிய மக்கள் பயன் பெற வேண்டும். ஏனெனில் மக்கள் எசமானர்கள். நடப்பது மக்களின் ஆட்சி. மக்கள் அதை மறந்து போகின்றனர்.நமக்கு வேலை செய்ய நம்மில் ஒருவரை ஊழியனாக தேர்வு செய்கிறோம் என்ற உணர்வு வர வேண்டும். இது ஒன்றும் அம்மா அய்யா ஆட்சி அல்ல. மக்கள் தெரிவு செய்தவர்கள். ஊழியன் எப்படி வானாளாவிய அதிகாரம் பெற்றான்? இப்படி அகந்தை பெருகி மமதை கொண்டு சக மனிதனை இழிவு செய்து யார் ஆட்சி செய்வதையும் தடுக்க வழி வேண்டும்
50, 60 வருடங்களாய் நாட்டைக் கெடுத்து குட்டிசுவர் பண்ணிவிட்டார்கள். 5000 ஏரிகளை தூற்று நகரத்தை வளர்த்ததில் அது தண்ணீரில் மூழ்கியது. இந்த ஏரி குளங்கள் எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டு விட்டு அதனைச் சுற்றியும் சென்னையை உருவாக்கியிருந்தால் இப்போது சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் வரை பரவிய இயற்கை எழில் சூழ்ந்த ஒரு நகரமாய் இருந்திருக்கும். எல்லாவற்றையும் கெடுத்தாச்சு. இனி ஒன்றும் செய்ய இயலாது.
பதிலளிநீக்கு