இணையத் தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் நேர்காணல் (1)

  “கூட்டாஞ்சோறு” திருமிகு எஸ்.பி.செந்தில்குமார் அவர்கள்,
தம் இனிய துணைவியார், மகள், மகனுடன்.
ஐந்தாம் தமிழாக வளர்ந்து வரும் இணையத்தமிழ்தான், உலகத் தமிழர்களை இணைக்கும் தமிழாக புதிய புதிய சிந்தனைகளோடு வளர்ந்து வருகிறது.

எனவே, இளைய தலைமுறையின் பார்வைக்காக இணையத்தில் சிறப்பாக எழுதிவரும் எழுத்தாளர்களின் அனுபவப் பகிர்வாக இந்தத் தொடர் நம் வலைப்பக்கத்தில் தொடங்கப்படுகிறது. 

சுமார் 20-25 நேர்காணல்களைத் தர எண்ணம்.
தங்களின் கருத்தறிந்து வேண்டியவற்றைச் செய்வோம். நன்றி.

திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் அவர்களைப்பற்றிய 
ஒரு சிறு அறிமுகம்-
எழுத்தாளர் பெயர் – திருமிகு எஸ்.பி.செந்தில்குமார் அவர்கள்.
வலைப்பக்கப் பெயர் – கூட்டாஞ்சோறு
வலைப்பக்க இணைப்பு - http://senthilmsp.blogspot.com/
ஆரம்பித்த ஆண்டு – 2014
இதுவரை எழுதிய பதிவுகள் – 224+
எழுதிய பிரிவுகள் – கட்டுரைகள்
வெளிவந்த நூல் – நம்பமுடியாத உண்மைகள் (தினத்தந்தி -2015)
தற்போதைய பின்பற்றுவோர் எண்ணிக்கை – 114+
தற்போதைய பார்வையாளர் எண்ணிக்கை – 2,59,051+
தமிழ்மணத்தில் இன்றைய தரநிலை - 3
(இவை யாவும் இன்றைய 20-03-2016 முற்பகல் 11.45 மணி நிலவரம்)

இவர் தற்போது 'தினத்தந்தி'யில் ஃப்ரீலான்சராகவும், 'அக்ரி டாக்டர்' என்ற இந்தியாவின் முதல் விவசாய நாளிதழ் மற்றும் 'ஹாலிடே நியூஸ்' என்ற தமிழின் முதல் சுற்றுலா மாத இதழ் ஆகிய இரண்டு பத்திரிகைகளுக்கு இணை ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார். சமீபத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான என்ற ஐந்து மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனை விவசாயிகளுக்கு ஹைதராபாத்தில் விருது வழங்கப்பட்டது. அதில் 'சிறந்த விவசாய பத்திரிகையாளர்' என்ற விருது  இவருக்கு வழங்கப்பட்டது.

இனி திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் அவர்களுடன் …
 (1)  தமிழில் வளர்ந்து வரும் இணையத்தமிழில் நீங்கள் இணைந்த விதம் பற்றிச் சொல்லுங்களேன் -


தொடக்கத்தில் நான் பத்திரிகைகளில் எழுதியவற்றை எல்லாம் கத்திரித்து பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஒரு கட்டத்தில் அந்த பேப்பர் கட்டிங்குகளே ஏராளமாய் சேர்ந்து விட்டன. அதை பாதுகாப்பதே பெரும்பாடாக  இருந்தது. நண்பர்கள், தெரிந்தவர்கள் படித்துப் பார்க்கிறேன் என்று வாங்கிச் சென்ற பல கட்டுரைகள் திரும்பி வரவேயில்லை. நானும் சில தகவல்களுக்காக அதிலிருந்து கட்டிங்குகளை எடுத்துவிட்டு மீண்டும் பாதுகாப்பாக வைக்காமல் பழையப் பேப்பரோடு எடைக்கு சென்றிருக்கின்றன

ஒருநாள் எனது எழுத்துக்களை புத்தகமாக கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் கட்டுரைகளை தொகுத்தபோதுதான் வாரக்கணக்கில், மாதக்கணக்கில், பல்வேறு இடங்களில், பல மனிதர்களை சந்தித்து திரட்டிய அரிய கட்டுரைகள் எல்லாம் என் கையைவிட்டு போயிருந்தது தெரியவந்தது. சிறியதும் பெரியதுமாக 6,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருந்தேன். அதில் 1,000 கட்டுரைகள் அப்போதைய நடப்பு விஷயங்களை வைத்து எழுதியது. அதை தவிர்த்து விட்டு பார்த்தால் என்றைக்கும் ஒத்துவரும் 5,000 கட்டுரைகள் இருக்க வேண்டும். ஆனால், என்னிடம் இருந்ததோ 3,000-க்கும் சற்று கூடுதலான கட்டுரைகள் மட்டுமே. இது என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது

எஞ்சியிருக்கும் கட்டுரைகளையாவது சேமித்து வைப்போம். அதையும் இணையத்தில் சேமிப்போம், அப்போதுதான் நமக்கு தேவைப்படும் போது சுலபமாக எடுக்கமுடியும் என்ற எண்ணத்தில் எனது எழுத்துக்களை சேமித்து வைக்கும் இடமாகவே இந்த வலைப்பக்கத்தை தொடங்கினேன். இப்படிதான் இணைய தமிழில் இணைந்தேன்.   

(2)  தம் பெயரையே தமது இணைய வலைப்பக்கத்திற்கான பெயராகவும் வைத்திருப்போரே பெரும்பான்மையாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது ஆனால், அந்த வகைக்கு மாறாகத் தங்களின் வலைப் பக்கத்திற்குகூட்டாஞ்சோறுஎனப் பெயரிடக் காரணம் என்ன?

நானும் முதலில் என் பெயரைத்தான் வைத்திருந்தேன். அதில் நான்கு பதிவுகளையும் இட்டிருந்தேன். நண்பர் ஒருவரிடம் 'ப்ளாக்' ஆரம்பித்திருக்கிறேன். படித்துப் பாருங்கள் என்றேன். 'என்ன பெயர்?'  என்றார். எஸ்.பி.செந்தில்குமார் ப்ளாக்'ஸ் என்றேன். ஒரிஜினல் பெயரில் ப்ளாக் ஆரம்பிக்கக் கூடாதுங்க! ஏதாவது 'நிக் நேம்' வைங்க. யாராச்சும் ஒரிஜினல் பெயர் வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? என்றார். சில பெயர்களையும் கூறினார். எல்லாமே ஆங்கிலப் பெயர்களாகவும் கொஞ்சம் கிறுக்குத்தனம் நிறைந்ததாகவும் இருந்தன. அப்போது வலைப்பதிவர்கள் யாரும் எனக்கு தெரியாததால் ஓரளவு இணையம் பற்றி தெரிந்த அந்த நண்பர் சொன்னது வேதவாக்காக பட்டது. இரவோடு இரவாக பெயரை மாற்றினேன்

பெயர் தமிழில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். 'பயணம்' என்று முதலில் பெயர் வைத்தேன். இந்தப் பெயரில் பயணம் பற்றி மட்டும்தான் எழுதமுடியும். எல்லாவகையான பதிவுகளும் எழுத இந்தப் பெயர் சரிவராது என்று மீண்டும் மாற்றினேன். குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஒன்றாக வைப்போம் என்று நினைத்தேன். சென்ற தலைமுறை குழந்தைகள் விளையாடி மகிழ்ந்த 'கூட்டாஞ்சோறு' நினைவுக்கு வந்தது. ஒரு கலவையாக சிறுபிள்ளைத்தனமாக செய்யும் அந்த உணவில் ஒருவித ருசி ஒளிந்திருக்கும். வலைப்பதிவைப் பொறுத்தவரை நாமும் குழந்தைதானே என்று அந்த பெயரையே வைத்தேன். இப்படி மிக மிக அவசரமாக இரவோடு இரவாக வைக்கப்பட்டதுதான் 'கூட்டாஞ்சோறு'.

(3)  அச்சிட்ட நூல்களைப் போலவே, தற்காலத் தமிழ் ஆய்வாளர்ககள்  ஆய்வுச் சான்றாதாரமாக இணையத்தமிழை ஏற்றாலும் அதன் நம்பகத் தன்மை பற்றிய தங்கள் கருத்தென்ன?

இணையத்தமிழை ஆய்வாளர்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேவேளையில் கட்டற்ற இந்த இணைய ஊடகத்தில் மனம் போனபோக்கில் எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை இருப்பதால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியே

பல வலைப்பதிவர்கள் சிரத்தையோடு ஏராளமான நம்பகமான தகவல்களை தருகிறார்கள். பொத்தாம் பொதுவாக எல்லா இணைய தகவல்களையும் நம்புவதற்கு பதில் எழுதிய பதிவரைப் பொறுத்து நம்பகத்தன்மையை கணக்கிடலாம் என்பது என் கருத்து. அதற்கு நிறைய அனுபவமும் வேண்டும்
  
(4)  இணையத்தமிழ் வலைப்பக்கங்கள் தமிழ்ச்சமூக வளர்ச்சிக்கு, உதவுகின்றன என்று நம்புகிறீர்களா? அல்லது வேறு எப்படி இருக்கின்றன?

நிச்சயமாக நம்புகிறேன். இன்றைய தமிழ் சமூகம் தமிழ் மீது சற்று கூடுதல் பற்றோடு மாறியதற்கு சமூக வலைதளங்களும் வலைப்பக்கங்களும் காரணம் என்றே நம்புகிறேன். நான் சிறுவனாக இருந்தபோது பெரும் சபைகளில் தமிழில் பேசுவது அவமானம் கொண்டதாக இருந்தது. இன்று பிற மொழிச்சொற்கள் கலவாது தூய தமிழில் உரையாற்றுபவர்களுக்கு மிகப் பெரிய மரியாதை கிடைக்கிறது. தூயத் தமிழில் பேசுவது ஃபேஷனாக மாறிவருகிறது

20 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் பேசாத பல சொற்கள் இன்று இயல்பாக வழக்கத்திற்கு வந்துவிட்டன. 'பேருந்து' என்ற தமிழ் சொல்லை முதன்முதலாக பள்ளிப் பருவத்தில் நாங்கள் கேட்டப்போது விழுந்து விழுந்து எல்லோரும் சிரித்தது இன்னும் நினைவிருக்கிறது. அத்தனை கேலிக்குரியதாக தமிழ்ச்சொல் அன்று இருந்தது. இன்று அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. பாமரர்களும் பயன்படுத்தும் சொல்லாக அது மாறியிருக்கிறது. தொடர்ந்து ஆங்கிலத்தையே தூக்கிப்பிடிக்கும் பள்ளிகள், அரசுகள் மத்தியில் தமிழை சமூகத்திற்கு கொண்டு செல்வதில் இணையத்தமிழுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இன்னமும் ஆக்கப்பூர்வமான படைப்புகள் வந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் என் ஆதங்கம்


(5)  நீங்கள் ஏற்கெனவே அச்சு ஊடகங்களில் எழுதிய அனுபவமுள்ளவர். அச்சிதழ், இணைய எழுத்து வேறுபாடு இருக்கிறதா?

நிறைய இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னதுபோல் இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது. எதையும் எழுதலாம் என்ற நிலை உள்ளது. அச்சிதழில் அப்படியில்லை. அங்கு ஒரு படைப்பை எழுதும் போதே சம்பந்தப்பட்ட பத்திரிக்கையின் நெறிமுறைகள் நம் முன்னே வந்து உட்கார்ந்து கொள்ளும். அதற்கு ஏற்ப எழுதவேண்டும். அப்போதுதான் அது பிரசுரமாகும். அப்படி பிரசுரமாகும் படைப்புக்கும் வாசகர்களிடம் அங்கீகாரம் கிடைத்திருக்குமா என்று நம்மால் தெரிந்து கொள்ளவே முடியாது. அபூர்வமாக ஓரிரு கடிதங்கள் வந்து சேரும். பாராட்டி சில தொலைபேசி அழைப்புகள் வரும். அதுவும் அலுவலகத்துக்குத்தான் வரும். பல நேரங்களில் அந்தப் பாராட்டுகள் மறைக்கப்பட்டு விடும். அதேவேளையில் நாம் ஏதாவது தவறாக எழுதியிருந்தாலோ, அல்லது ஏதாவது ஒரு வாசகர் நம் படைப்பை குறை சொல்லி விமர்சித்திருந்தாலோ உடனே நமக்கு சொல்லிவிடுவார்கள். குறை சொன்ன கடிதத்தை கையில் தருவார்கள். அதற்கு விளக்கம் தந்து சம்பந்தப்பட்ட பத்திரிகையை சமாதனப்படுத்த வேண்டும். அங்கு வாசகர்களுக்கும் படைப்பாளிக்கும் இடையேயுள்ள இடைவெளி மிக அதிகம். இருவருக்கும் இடையே பத்திரிகை அலுவலகம் அமர்ந்திருக்கும். அதுவொரு வடிகட்டியாக செயல்படும். பராட்டுகளைஎல்லாம் வடிகட்டி தன்னோடு வைத்துக்கொண்டு, குறைகளை மட்டுமே நமக்கு அனுப்பி வைக்கும். நாம் தவறாகத்தான் எழுதுகிறோமோ என்ற எண்ணம்  நமக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்

ஆனால், இணைய எழுத்து அப்படிப்பட்டதல்ல. இங்கு படைப்பாளியும் வாசகரும் ஒரே தளத்தில் ஒன்றாகவே இயங்குகிறார்கள். படைப்பை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அது குறித்த விமர்சனங்கள் பின்னூட்டங்களாக வந்து விழுகின்றன. இருவருக்கும் இடையே இடைவெளியே இல்லை. நேரடியாக பேசிக்கொள்ளலாம். வடிகட்டிகள் இல்லை. அங்கு நம் எழுத்துக்கு சம்பளமும் சன்மானமும் கிடைக்கிறது. இங்கு இணையத்திற்காக நாம் நம் பணத்தை செலவழித்துதான் பதிவுகளை எழுதுகிறோம். இதன்மூலம் எந்த வருவாயும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து எழுதுவதற்கு உயிர்ப்போடு இயங்க வைப்பதற்கு வாசகர்களின் நெருக்கமும் பின்னூட்டங்களும் மட்டுமே காரணம். அச்சு ஊடகத்தைவிட இணைய ஊடகம் உணர்வுப்பூர்வமானதாகவே உணர்கிறேன்


(6)  குப்பைகளும், ஆபாசங்களும் மிகுந்திருக்கும் இன்றைய இணையச் சூழலில் இளைஞர்கள் இதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?

உண்மைதான். குப்பைகளும் ஆபாசங்களும் முன்பைவிட இப்போது அதிகமாக மலிந்து கிடக்கிறது. இவற்றை தடை செய்யப்போவதாக அறிவித்த கூகுளே பின்வாங்கி விட்டது. இதை தடுப்பதும் கடினம். ஆனாலும் இளைஞர்களை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்ட முடியாது. பல இளைஞர்கள் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறார்கள். இன்று கல்லூரி பாடங்களுக்கு இணையம் துணை செய்கிறது. பல கல்லூரிகளில் இணையத்தில் இருந்து தகவல் திரட்டுவதே பாடமாக வைக்கப்பட்டு இருக்கிறது

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இறந்தபோதும், சென்னை மழை வெள்ளத்தில் தத்தளித்தபோதும் திரண்ட கூட்டத்திற்கும், கிடைத்த உதவிக்கும் இணையமே பெரும் காரணம். சகாயத்தை அரசியலுக்கு வரச்சொல்லி சென்னையில் நடைப்பெற்ற பேரணிக்கு முழுக் காரணமும் இணையம்தான். இணையம் இல்லாவிட்டால் அப்படி ஒரு பேரணியை நடத்தியிருக்கவே முடியாது. வருங்காலத்தில் இணையம் இன்னும் பல ஆக்கப்பூர்வமான வழிகளில் பயணிக்கும். அதை இளைஞர்கள் செய்வார்கள். அடுத்த தேர்தலில் இணையத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பது உண்மையே!

வருத்தமான நிலை என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் பலர் மீண்டும் சாதிய பெருமைக்குள் சிக்கிக்கொள்வதுதான். ஆணவக்கொலைகளை இணையத்தில் நியாப்படுத்தி வரும் பதிவுகள் நம்மை மீண்டும் பெரியாருக்கு முந்தைய காலகட்டத்திற்கு கொண்டு போய்விடுமோ என்ற அச்சம் மனதில் தோற்றுவிக்கிறது. இளைஞர்களை ஜாதிய மாயையில் இருந்து விடுவிக்கும் பணியையும் இணையத்தில் செய்யவேண்டும். இதுவொரு பினடைவே


(7)  வலைப்பக்கம் எழுத ஆரம்பித்து மூன்றே ஆண்டுகளில் --பத்தாண்டு களுக்கும் மேலாக எழுதிவரும் பலரைப் பின்னுக்குத் தள்ளி-- “தமிழ்மணம்தரவரிசையில் 3ஆம் இடத்திற்கு வந்துவிட்டீர்கள். உங்களால் இது எப்படி முடிந்தது?

ஒரு சிறு திருத்தம். நான் வலைப்பக்கம் எழுதத் தொடங்கியது 2014, நவம்பர் 7-ல் இருந்துதான், சரியாக 17 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. இன்னும் ஒன்றரை வருடங்கள் கூட முழுமையாக பூர்த்தியாகவில்லை.  தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சியை தந்தாலும். அதற்காக நான் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என்பதே உண்மை. அதற்கான பெருமை அனைத்தும் வாசகர்களையே சேரும். இந்த தரவரிசை எப்படி எனக்கு தெரியாமலே மூன்றாம் இடத்துக்கு முன்னேறியதோ அதேபோல் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் தரவரிசையை நான் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை

தரவரிசையில் நிலைத்து நிற்க பின்னூட்டம், மறுமொழி, பரிந்துரை எல்லாமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனக்கு இப்போது இருக்கும் பணிச்சூழலில் நண்பர்களின் பதிவுகளை வாசிக்க மட்டுமே முடிகிறது, அதுவும் மொபைலில்..! கருத்துரை, பரிந்துரை செய்ய முடிவதில்லை. நேரம் கிடைக்கும் போது மட்டும் அவற்றை செய்கிறேன். அதனால் என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களும் குறைந்து கொண்டே வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த நிலை மாறலாம்.     


(8)  தமிழ் வலைத்திரட்டிகளால் பயனுண்டா? வலைப்பக்கங்களில் வருமானத்திற்கு வழியுண்டா?

நான் வலைப்பக்கம் ஆரம்பித்த போது ஒரு பதிவுக்கு 10-லிருந்து 30 பார்வைகள் வருவதே அபூர்வம். இரண்டு மாதம் அதே நிலைதான் நீடித்தது. திடீரென்று ஒருநாள் ஒரு பதிவுக்கு மட்டுமே 135 பார்வைகள் வந்தன. தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுக்கும் அதே எண்ணிக்கை தொடர்ந்தது. இந்த எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் எனது வலைப்பக்கம் தமிழ்மணத்தில் இணைந்ததுதான். அதுமட்டுமல்ல பல வலைப்பதிவர்களை நமக்கு அறிமுகப்படுத்துவதும் வலைத்திரட்டிகள்தான். சமீபகாலமாக வலைத்திரட்டிகள் ஒவ்வொன்றாய் செயலிழந்து வருவது வருத்தத்தை தருகிறது

கூகுள் மனது வைத்தால் தமிழ் வலைப்பக்கங்களிலும் வருமானம் வரும். அந்த நல்ல நாளுக்காகத்தான் பதிவர்கள் காத்திருக்கிறார்கள்

(9)  தங்களின் குடும்பம், பிறதுறை அனுபவம் பற்றிச்  சொல்லுங்கள்
மனைவி, ஒரு மகள், ஒரு மகன் இருவருமே கல்லூரியில் படிக்கிறார்கள். மனைவி இல்லத்தரசி. மகள் சென்னையில் எம்எஸ்சி உளவியல் படிக்கிறாள். மகன் மதுரையில் பிஎஸ்சி விலங்கியல்.  மகளுக்கு பத்திரிகைத்துறையில் ஆர்வம் உள்ளது. பள்ளியில் படிக்கும்போதே விகடன் குழுமத்தின் 'சுட்டி விகடன்' பத்திரிகையில் நிருபராக பணியாற்றியிருக்கிறாள். ஊசிப் போடும் டாக்டராக ஆசைப்பட்டு அது முடியாததால் முனைவர் பட்டம் பெற்றாவது டாக்டராக வேண்டும் என்ற ஆர்வத்தோடு படித்து வருகிறாள். மகனுக்கு பாடி பில்டராக வரவேண்டும் என்ற ஆசை. இப்போதே பல்கலைக்கழக ஆணழகன் போட்டியில் மேடையேறி வருகிறான். கல்லூரி கிரிக்கெட் மற்றும் ஹாக்கி அணியில் விளையாடுகிறான்

பிறதுறைகளைப் பற்றி சொல்வதென்றால், நானும் எனது நண்பர் ரவிச்சந்திரனும் சேர்ந்து சில குறும்படங்களை எடுத்துள்ளோம். அதில் ஒன்று 'மனுஷி'. ஒரு பெண் பருவம் அடைவதில் இருந்து திருமணம் ஆகும் வரை அவள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறாள் என்பதை வைத்து பள்ளி மாணவிகளுக்காக ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுத்தோம். அதற்காக டாக்டர் கமலா செல்வராஜ், டாக்டர் நாராயண ரெட்டி, வழக்கறிஞர் அருள்மொழி, டாக்டர் கவிதா ஃபென் போன்ற பலரையும் பேட்டி எடுத்து 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காண்பித்தோம். அதுவொரு இனிமையான அனுபவம். அதன்பின் சில விளம்பரப்படங்களை எடுத்தோம்

(10)     புதிதாக வலைப்பக்கம் தொடங்குவோர்க்கு நீங்கள் சொல்லும் அனுபவ உரை () வழிகாட்டு உரை என்ன?

நானே இதற்கு புதியவன்தான். எனக்கே இன்னும் வழிக்காட்டிகள் தேவைப்படுகிறார்கள். இருந்தாலும் ஒன்று சொல்கிறேன். எழுதவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களுக்கு இதுவொரு அருமையான களம். பத்திரிகைகளில் எழுதுவது இன்றைக்கும் கடினமான காரியமே. படிக்கும் காலத்தில் ஒரு வாசகர் கடிதமாவது ஆனந்த விகடனிலோ அல்லது இந்தியா டுடேவிலோ வந்துவிடாத என்று ஏங்கியிருக்கிறோம். அதற்காகவே ஏகப்பட்ட கடிதங்களை எழுதியிருக்கிறோம். ஆனால், பத்திரிகையில் வந்ததே இல்லை. ஆனாலும் எழுத்தின் மீதிருந்த காதல் தீரவேயில்லை

அதன் பின்னர், ப்ளஸ் 2 படிக்கும்போது எனது நண்பருடன் இணைந்து கையெழுத்து பத்திரிகை நடத்தினோம். 'ஸ்டென்சில்' என்ற ஒரு பேப்பரில் கையால் எழுதி அதை 'சைக்லொஸ்டைலிங்க்' என்ற முறையில் 50 பிரதிகள் அச்சடித்து, இலவசமாக கொடுப்போம். அதற்கான செலவும் அதிகம். எழுத்து மீது எங்களுக்கு இருந்த ஆர்வத்தை இப்படி தீர்த்துக் கொண்டோம். ஆனால், இன்று ஒரு பைசா செலவில்லாமல் உலகம் முழுவதும் நமது படைப்புகளை கொண்டு செல்ல வலைப்பக்கங்கள் இருக்கின்றன. அதில் எழுதிய பிரபலமான பதிவர்கள் இருக்கிறார்கள். இந்த வாய்ப்பு இன்றைய தலைமுறையினருக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்

தங்கள் பதிவுகளில் அதிகம் பேரை சென்றடையாத அதேவேளையில் அதிகம் மெனக்கெட்ட பதிவுகள் இருந்தால் அவற்றில் ஒரு மூன்றை நம் நண்பர்களின் பார்வைக்குத் தாருங்களேன்

இணைப்பை இங்கு கொடுத்திருக்கிறேன். மூன்றுக்குப் பதில் ஐந்து கொடுத்திருக்கிறேன்

1) பெண்களின் மாதவிலக்குப் பற்றி தெரிந்து கொள்வதற்காக இந்த மனிதர் பட்ட அவமானம். பின் அதற்கு கிடைத்த அங்கீகாரம் என்று
வியக்கவைக்கும் மாதவிலக்கு ஆண்!


2) இனி பூமியில் வாழ வழியில்லை என்று மனைவியோடு தற்கொலை செய்துகொள்ள முயன்ற விவசாயி, இன்று ஒரு விஞ்ஞானியாக மாறி பல புதுப்புது தாவரங்களை உருவாக்குகிறார்
பத்மஸ்ரீ விவசாயியுடன் ஒரு நாள் 


3) ஒரு மரத்தை வளர்ப்பதற்கே திணறும் மனிதர்கள் மத்தியில் பெரிய காட்டையே தனி ஒரு மனிதனாக உருவாக்கியிருக்கிறார் இந்த அசாம்காரர்.
தனி மனிதன் உருவாக்கிய பெருங்காடு!


4) இந்தியாவையே உலுக்கிய அருணாஷான்பாக் பற்றி அவர் கோமாவில் இருந்தபோது எழுதியது.
கருணையை கொலை செய்யமுடியுமா?


5) ஹோம் தியேட்டர்கள் பற்றி ஒரு ஆழமான பார்வை. இசை ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனாலும் அதிகம் கவனிக்கப்படாத பதிவு
வந்தாச்சு 9.2 ஹோம்தியேட்டர்  
 ------------------------------------------------------------------- 
எவ்வளவு பொறுப்பான இயல்பான பதில்கள் பாருங்கள்!
இவரது வெற்றியின் ரகசியம் புரிகிறதா நண்பர்களே!

இனி,  இவரிடம் வேறு கேள்விகள் ஏதும் கேட்கவேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால் கேட்கலாம். அவரிடமே பதிலைக் கேட்டு வாங்கித் தொகுத்து 
இந்த நேர்காணல்களைத் தனி நூலாகவே கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறேன்.

இவரது அதிகம் கவனிக்கப்படாத நல்ல பதிவுகளையும் சென்று பார்த்து, 
இணைய நட்பை இனிதே வளர்க்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சிறப்பாகப் பதிலளித்த திருமிகு எஸ்.பி.செந்தில்குமார் அவர்களுக்கும், பொறுமையாகப் படித்து இணையத்தமிழில் ஆர்வம் வளர்க்கும் உங்களுக்கும் என் நன்றியும் வணக்கமும் – நா.முத்துநிலவன்
-------- மீண்டும் அடுத்தவாரம் அடுத்த எழுத்தாளருடன்………………

37 கருத்துகள்:

  1. எழுத்தின் மீதிருந்த காதல் தீராத என் நண்பருக்கு வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை நாளாக ஏதோ என் கணினியில் சிக்கல். பதில் எழுத முடியாமல் மொத்தமாக எழுதிக்கொண்டிருந்தேன். இப்போதுதான் சரியானது. கருத்திற்கு நன்றி டிடி.

      நீக்கு
  2. புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவில் செந்தில்குமார் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். ஆதிகம் அறியப்படாத பல்வேறு தகவல்களை திரட்டி அற்புதமாக கட்டுரைகளை வழங்குவதில் வல்லவர். அவர் பத்திரிகைத் துறையில் சிகரங்களை எட்டுவார் என்பதில் ஐயமில்லை.பேட்டி எடுத்து வெளியிட்டு பெருமைப்படுத்திய தங்கள் மாறுபட்ட முயற்சிக்கு பாராட்டுக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  3. செந்தில்குமாரின் எழுத்துக்களைப் படித்து வருகிறேன். அயராத அவரது உழைப்பு பிரமிக்கத்தக்கது. ஆழமான எழுத்து. அவரைப் பெட்டிக்குத் தேர்ந்தெடுத்த உங்கள் முடிவும் பெரிதும் வரவேற்கத்தக்கது. இதேபோல் மற்றவர்களின் பெட்டிகளையும் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். -இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  4. மிக நல்ல முயற்சி..
    ஆரம்பமே அமர்க்களம்...எழுத்தை தாண்டிய,எழுதத்தூண்டிய விவரங்கள் அழகு...

    பதிலளிநீக்கு
  5. நல்ல பணி! பேட்டி காண வேண்டியவரை கண்டது மட்டுமல்ல உரிய முறையில் கேள்விகளைக் கேட்டும் தன்னடகத்தோடு அவர் தந்த பதில்களும் அருமை! இருவருக்கும் வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  6. அவருடைய படைப்புகளைப் படித்தே
    அவர் மீது எனக்கு தனிப் பெரும் மரியாதை உண்டு

    அவருடைய பேட்டியைப் படித்ததும்
    அவர் தன்னை இன்னமும் முழுமையாக
    வலைத்தளத்தில் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை
    என்பதை உணர முடிகிறது.

    இது நல்ல முயற்சி.தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அமர்க்களமான ஆரம்பம் ஐயா. நண்பர் செந்தில் குமார் அவர்கள் பேட்டியுடன் தொடங்கியது சிறப்பு. அவருக்கு எனது பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. புதுமையான உபயோகமான பதிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. வலைப்பூவின் பெயரை நம் இளவயது மலரும் நினைவுகளுடன் சம்பந்தப்பட்ட கூட்டாஞ்சோறு என்று இனிய தமிழில் பெயர் அமைத்தமைக்கு முதல் பாராட்டு செந்தில் அவர்களுக்கு. இயற்கை, தொழில்நுட்பம், நாட்டு நடப்பு என எல்லாம் கலந்த கலவையுள்ள தளத்துக்கு இப்பெயர் சாலப்பொருத்தம். பதிவர் விழாவில் இவரை நேரில் சந்தித்து உரையாடியது மறக்க முடியாத இனிய சம்பவம். கேள்விகளுக்குப் போலித்தனம் ஏதுமின்றி மனதில் பட்டதை அப்படியே சொல்லியிருக்கும் விதம் அருமை. குறைந்த காலத்தில் 3 என்ற தரவரிசை பெறுவது இவர் கட்டுரைகளின் தரத்தைக் காட்டுகிறது. இவருடைய எல்லாப்பதிவுகளையும் ஒன்று விடாமல் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். நேரப்பற்றாக்குறை காரணமாக சிலவற்றை மட்டுமே படித்திருக்கிறேன். மேலே குறிப்பிட்டிருக்கும் பதிவுகளை கண்டிப்பாக வாசிப்பேன். இணையத் தமிழை வளர்க்கும் ஒரு முயற்சியாக எழுதுபவர்களின் பேட்டியை எடுத்துப் போடுவது நல்லதொரு முயற்சி. அண்ணன் முத்துநிலவன் அவர்களுக்கு நன்றி! செந்தில் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  10. நண்பர் திரு எஸ்.பி.செந்தில்குமார் அவர்களின் பதில்கள் அருமை நல்லதொரு விடயத்தை தொடங்கிய கவிஞருக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
  11. அறிஞர் எஸ்.பி.செந்தில்குமார் பற்றி அறியக்கிடைத்தது
    தங்கள் கொடை
    பயனுள்ள பதிவு
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  12. அருமையான முயற்சி ஐயா. இந்த தொடா்பதிவின் வழி அறிந்த வலைப்பதிவா் பற்றிக்கூட அறியாத பல செய்திகளை அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

    நன்று. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  13. Thanks for introducing a man whose writting will go beyond the the time limit.welldone Senthilkumar.Thanks to Muthunilavan sir.

    பதிலளிநீக்கு
  14. அய்யா தங்களின் புதிய முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது. அதில் முதல் நேர்காணலாக என்னுடைய பேட்டியை இடம்பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி! பின்னூட்டத்தில் பாராட்டிய அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    இந்த முயற்சியின் மூலம் பல பதிவர்களை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ள முடியும். தொடருங்கள். ஆவலோடு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான முயற்சி! தொடக்கமே அசத்தலாக உள்ள‌து. இதை ஆரம்பித்து வைத்திருக்கும் உங்களுக்கும் அழகாய் பதில்களை சொல்லியிருக்கும் சகோதரர் செந்தில்குமாருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. கூட்டஞ்ச்சோறு எஸ். பி. செந்தில்குமார் அவர்களின் பதில்கள் அருமை.
    இது ஒரு புதிய முயற்சி. தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  17. மிரட்டியிருக்கிறார்!..என் போன்ற அரிச்சுவடிகளுக்கு ஊக்கமாக இருக்கிறார்.!

    பதிலளிநீக்கு
  18. மிக மிக நல்ல பாராட்டக் கூடிய முயற்சி.....பாராட்டுக்கள் தலைவரே.....

    பதிலளிநீக்கு
  19. நல்ல முயற்சி,நண்பரின் பதில்கள் அசத்தல் ,காத்திருக்கிறேன் அடுத்த பதிவரின் பேட்டிக்கு!

    பதிலளிநீக்கு
  20. நண்பர் செந்தில்குமார் அவர்களின் உழைப்பு அனைவருக்கும் வியப்பினை ஏற்படுத்தக் கூடியது ஐயா
    தங்களின் வலை வழி நேர்க்காணல் அருமையான முயற்சி ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  21. நண்பர் செந்தில்குமார் அவர்களுடைய பணி பெரிதும் போற்றுதற்குரியது. இணையத்தமிழ் வளர்ச்சியில் எழுத்தாளர்களின் வரிசையில் முதல் ஆளாக மிகப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுத்துள்ள முத்துநிலவன் ஐயாவுக்குப் பாராட்டுகள். நண்பர் செந்தில் எழுதிய பல கட்டுரைகள் சேமிக்கப்படாமல் போனது பெருவருத்தம்தான். ஆனால் மனம் தளராது தொடர்ந்து எழுதி இன்று பல அரிய தகவல்களைத் தரும் பெட்டகமாக அவருடைய வலைத்தளம் இருப்பது பெருஞ்சிறப்பு. அவருடைய பணி தொடர்வதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. சகோதரர் முத்துநிலவனுக்கு இணையத்தில் சிறப்பான முறையில் எழுதிவரும் எழுத்தாளர்களின் தரமான படைப்புகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினை பார்வையாளராய் நுழைந்திருக்கும் என் போன்றோரின் நன்றி உரித்தாகட்டும்

    பதிலளிநீக்கு
  23. கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான செந்தில்குமார் சாரின் பதில்களும் அருமை அய்யா...

    நல்ல பணி...

    தங்களுக்கும் செந்தில் சாருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. நண்பர் செந்தில் அவர்களை பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  25. சிறப்பான கருத்துக்களுடன் நேர்காணல் அருமை ...

    வாழ்த்துக்கள் ஐயா ...

    பதிலளிநீக்கு

  26. ‘இணையத் தமிழ் வளர்க்கும் எழுத்தாளர்’ என்ற புதிய தொடரை தொடங்கியதற்கும், இந்த தொடரின் முதலில், 17 திங்களுக்குள் தமிழ்மண தரவரிசைப்பட்டியலில் மூன்றாம் இடத்தை எட்டியிருக்கும் நண்பர் திரு S.P.செந்தில்குமார் அவர்களை பேட்டிகண்டு அவரது பெட்டியை வெளியிட்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்! சிறப்பாக பதிலைத்தந்த திரு S.P.செந்தில்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  27. வழக்காமான ஒன்றைச் செய்யாமல் மாறுபட்டு செய்வது என்பதே உவப்பானது. அதிலும் இப்படியான புதுமைகள் இன்னும் சிறப்பு. வலைப்பதிவர்களின் இன்னொரு பரிமாணம் பற்றி அறிய நல்ல வாய்ப்பு. நேர்காணல்களை பத்திரிக்கைகளில் விரும்பி வாசிப்பேன். இப்பொழுது உங்களின் வலைப்பக்கத்தில்!தொடருங்கள் சார். வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  28. அண்ணா, விதம் விதமா யோசிக்கிறீங்களே :)
    பிரமாதம் அண்ணா! You are a great inspiration!
    சகோ S.P.செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  29. வலையுலகில் நேர்காணல் - நல்ல புதுமையான முயற்சி.ஆசிரியர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    பத்திரிக்கையாளர் S.P.செந்தில் குமார் அவர்களது வலைத்தளம் பற்றியும், அவரது எழுத்து ஆர்வம் குறித்தும் இந்த நேர்காணல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  30. பேட்டி மிகவும் அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  31. வெகு நாட்களுக்குப் பிறகு நண்பர் செந்தில்குமார் அவர்களது பேட்டியைப் படித்தது
    மனதிற்கு இனிமை. மனம் நிறை வாழ்த்துகள்.ஐயா.

    பதிலளிநீக்கு
  32. செய்திக்கருவூலம் செந்தில்குமார் பேட்டி மூலம் மேலும் பல செய்திகளை அறிந்தோம். நண்பர்களை அறிமுகப்படுத்தும் தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  33. செந்தில் ஒரு முன்னோடிப் பதிவர்
    நிறய விசயங்கள் அவரிடம் இருந்து புதியவர்கள் எடுத்துக்கொள்ளலாம்
    அண்ணா புதுகை விழாவில் ஜோதிஜி அருகே இருந்த இவரை பார்த்தும் பேச முடியவில்லை. விழா ராணுவ ஒழுங்குடன் நடந்ததுதான் காரணம்.

    நல்லவேளை பேசவில்லை பேசியிருந்தால் செந்தில் நலமா என்றுதான் துவங்கியிருப்பேன், ஆள் வேற அஜீத் ரேன்ஜில் இருப்பதால் இப்படி நிகழ்திருக்க வாய்ப்பு இருக்கு

    நல்லவேளை இப்போதான் தெரியும் தலை சீனியர் என்று ..

    நல்ல முயற்சி விரைவில் நூலக வரட்டும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  34. தமிழ்வலையுலகில் சிறிய காலத்தில் முன்னணியில் எல்லோருக்கும் முன்னோடியாக இருக்கும் ஓர் அருமையான பதிவர் எழுத்தாளர் என்று சொல்லலாம் நம் அருமை நண்பர் சகோ செந்தில்குமார் அவர்களை. நாங்கள் தொடர்ந்து வாசிக்கும் வலைத்தளம் அவரது வலைத்தளம். பல அற்புதமான, புதிய தகவல்களைத் தருபவர். அழகாக எழுதுபவர். இங்கு பதில்களும் அப்படியே!

    கீதா : நான் அவருடன் உரையாடுவது உண்டு. சந்தித்ததும் உண்டு பதிவர் விழா தவிர. அவர் பெற்ற விருதைப் பார்த்துப் பூரிப்படைந்தேன் அவரைச் சந்தித்த போது. மிகவும் இனிமையாகப் பழகுபவர். பத்திரிகையாளர் அல்லவா அந்த அனுபவம் அவருடன் உரையாடினால் நன்றாகவே தெரியும்.

    அவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள். ஆரம்பமே அட்டகாசம் தங்கள் முயற்சி வெற்றியடையவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  35. அவரது குடும்பம் பற்றியும், குழந்தைகள் பற்றியும் இன்னும் பிற செய்திகளையும் இதன் மூலம் அறிய முடிந்தது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அருமையான பேட்டி ! வாழ்த்துகள் இருவருக்கும் :)

    பதிலளிநீக்கு